நல்லா சாப்பிடுங்க
அமெரிக்காவில் மகன் வீட்டில் இருக்கிறேன். புளோரிடாவில் என் மகன் வசிப்பது ஒரு ரிடையர்மெண்ட் கம்யூனிடியில். இங்கே சுமார் நானூறு வீடுகளுக்கு மேல் உள்ளன. ஒவ்வொன்றும் குறைந்தது கால் ஏக்கரில் நாலாயிரம் சதுர அடிக்குக் குறையாமல்! இளைஞர்களும் இங்கே வசிக்கிறார்கள் என்றாலும் பெரும்பாலும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களே வசிக்கும் இடம் இது .
ஓய்வு பெற்ற பின் அமைதியையும், இதமான சூழலையும் விரும்பி வந்திருப்பவர்கள் இந்தப் பகுதிவாசிகள் . நாலாவது வீட்டில் அப்படி ஒரு அமெரிக்க தம்பதியினர் உள்ளனர். அவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். 70 வயதிருக்கும். மனைவிக்கு 66 வயது. 3 குழந்தைகள். எல்லோரும் அமெரிக்காவில் வேறு வேறு நகரங்களில் வசிக்கிறார்கள்.
என் மகனுடன் நல்ல நட்பு பாராட்டிப் பழகும் அவர்கள் சென்ற வாரம் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அது ஒரு ஞாயிறு மாலை. நான்கு மணிக்கு வந்தவர்கள் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று “ஓ… it is time for Dinner. We have to go” என்றார் அவர். மணி 6 ½ தான் இருக்கும். கிளம்பி விட்டார்கள். பிறகு என் மகன் சொன்னான் சென்ற தலைமுறை அமெரிக்கர்கள் பலரும் ஏழு மணிக்குள் இரவு உணவை முடித்து விடுவார்கள் என்று.
நம் ஊரிலும் இப்படித் தான். முன்பெல்லாம் இரவு ஏழு மணிக்குள் சாப்பிட்டு விடுவார்கள். என்னுடைய சின்ன வயதிலெல்லாம் பார்த்திருக்கிறேன், இரவு ஒன்பது மணிக்குள் அனேகமாக எல்லோர் வீட்டு விளக்கும் அணைந்து உறங்கப் போய் விடுவார்கள். இது ஒரு நல்ல ஆரோக்கியமான பழக்கமாகத் தான் இருந்திருக்கிறது.
ஜைனர்கள் சூரியன் மறைவதற்குள் மாலை உணவு உட்கொண்டு விடுவார்கள்.பல கிராமங்களில் எட்டுமணிக்குள் வீட்டு விளக்குகள் அணைந்தே விடும். கோவில்கள் எல்லாம் கூட எட்டுமணிக்கு மேல் சாத்தப்பட்டு விடும்.அது ஒரு காலம். நேரப்படி உணவு, உறக்கம் என்பதே நோயில்லாத வாழ்வின் ஆரம்பம்.
வயதானவர்களுக்கும், ஓய்வு பெற்றவர்களுக்கும் இதெல்லாம் சாத்தியம். எங்களால் முடியுமா என்று இளம் வயதினர் நினைக்கலாம். எல்லாமே ஒரு பழக்கம் தான். நேரப்படி உணவு, உறக்கம் என்பது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதைப் புரிந்து கொண்டு விட்டால் எதையும் பழகிக் கொள்வது கஷ்டமில்லை.
காரணமில்லாமல் கோபமும் அழுகையும் ஆற்றாமையுமாக இருந்தால் என் பாட்டி சொல்வாள், “உனக்கு பசி தான். உட்கார்ந்து ஒரு பிடி சாப்பிடு” என்பாள். அவள் சொன்னபடி சாப்பிட்டு விட்டால் எல்லாம் ஒரு நிதானத்திற்கு வந்து விடும்.பரீட்சை சமயத்தில் மறு நாள் என்ன கேள்வி வருமோ என்று நீண்ட நேரம் கண் விழித்துப் படித்தால் தாத்தா சொல்வார் “பேசாம போய் தூங்கு. காலம்பற கண் முழிச்சா, தானே படிச்சதெல்லாம் ஞாபகத்துக்கு வந்துடும்.” உண்மை. காலையில் தூங்கி எழுந்த பின் எல்லாம் தெளிவாக, தைரியமாக இருக்கும்.ஆக உணவும் ,தூக்கமும் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம்.
“மருந்தெனவேண்டாவாம்யாக்கைக்குஅருந்தியது
அற்றது போற்றி உணின்” என்கிறார் வள்ளுவர்.
சாப்பிடும் உணவைக் கவனித்து சரியான இடைவெளியில் உணவு அருந்தி விட்டால் உடலுக்கு வேறு மருந்தே தேவை இல்லை என்பது பொருள்.
நம் நாட்டுப் பழக்கங்கள், குறிப்பாக வீட்டுப் பழக்க வழக்கங்கள் பல நல்ல வாழ்க்கை முறைகளை சொல்லித் தந்திருக்கின்றன. அதில் உடல் ஆரோக்கியம், மன நலன் இரண்டுமே இணைந்திருந்தன.
அந்தக் காலத்தில் நாம் வாழும் இடத்திற்கும் சீதோஷ்ணத்திற்கும் ஏற்ற உணவுப் பழக்கங்கள் இருந்தன. அவற்றை நம் வீடு சொல்லிக் கொடுத்தது. நம் தாய்மார்கள் பின் பற்றினார்கள்.இப்போது எல்லாரும் எல்லாவற்றையும் சாப்பிட ஆசைப்படும்,சாப்பிடும் காலமாக இருக்கிறது. ஆசைக்கு ,நாவுக்கு,ருசிக்கு சாப்பிடுவது வேறு.ஆனால் வாழ்க்கை முறையையே மாற்றி, ருசிக்கும், வெளித் தயாரிப்பு உணவுகளுக்கும் அடிமையாகிப் போனால், உடல் மறுக்கிறது. ஆரோக்கியம் கெடுகிறது.
ஔவையார் நல்வழியில் வேடிக்கையாக நம் வயிற்றைப் பற்றி இப்படி ஒரு பாடல் எழுதி உள்ளார்.
“ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் – ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது”
“நம் வயிறு ஒரு நாள் சாப்பிடாமல் இரு என்றால் கேட்காதாம்.சரி இரண்டு நாளைக்கு சேர்த்து சாப்பிடு விடு என்றாலும் ஒப்புக் கொள்ளாதாம். என் கஷ்டம் உனக்கு தெரிகிறதா வயிறே! உன்னோடு எப்படி வாழ்வது” என்னும் பொருள் கொண்ட இந்தப் பாடல் நகைச்சுவைக்காக எழுதப்பட்டது என்றாலும் , வயிறு கொள்ளும் அளவு உண்பதுதான் நல்லது என்பதை உணர்த்துகிறது இந்தப் பாடல்.
தூக்கத்தையும் கூட நம் முன்னோர் நன்றாக அனுபவித்திருக்கிறார்கள்.
திருப்பாவையில் “ஓங்கி உலகளந்த” என்னும் பாசுரத்தில் ஆண்டாள் சொல்கிறாள், “பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப” என்று.
கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் மலரின் இதழில் வண்டு மெய் மறந்து தூங்கும் காட்சி மனதில் ஓடும். தூக்கம் அவ்வளவு இன்பமாம்.
கம்பர் ஒரு நாட்டின் அமைதியும் ஆனந்தமுமே தூக்கத்தில் தான் என்கிறார்.கோசல நாட்டைப் பற்றிச் சொல்ல வந்தவர்,
“நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி;
தாரிடை உறங்கும் வண்டு; தாமரை உறங்கும் செய்யாள்;
தூரிடை உறங்கும் ஆமை; துறையிடை உறங்கும் இப்பி;
போரிடை உறங்கும் அன்னம்; பொழிலிடை உறங்கும் தோகை”
கோசல நாட்டில் “சங்குகள் நீரிலும், எருமைகள் நிழலிலும், வண்டுகள் மலர் மாலைகளிலும், திருமகள் தாமரையிலும், ஆமைகள் சேற்றிலும், சிப்பிகள் நீர்த் துறையிலும், அன்னங்கள் வைக்கோல் போரிலும், மயில்கள் சோலையிலும் உறங்குமாம்.
ஒரு நாட்டின் அமைதியை வர்ணிக்க அந்த நாட்டில் உறக்கம் எப்படி இருக்கும் என்று சொல்கிறார்கள் என்றால் உறக்கம் ஒவ்வொரு உயிருக்கும் எவ்வளவு முக்கியம் என்பது புரியும்.
ஆக உடம்பும் தெம்பாக மனதும் பலமாக இருக்க வேண்டும் என்றால் சாப்பாட்டையும் தூக்கத்தையும் கவனிக்க வேண்டும் என்பது புரிகிறது.
சின்னக் குழந்தை முதல் எல்லா வயதினரும் சொல்லும் “Stress”, “மன அழுத்தம்” என்கிற வார்த்தைகள் முன்பெல்லாம் இல்லை. சைகாலஜிஸ்ட்டும் தூக்க மாத்திரைகளும் அதிகம் இருந்ததில்லை.
அப்போதும் பிரச்சனைகளும், வாழ்க்கைச் சுமைகளும் இல்லாமல் இல்லை. ஆனால் அவற்றையெல்லாம் கையாள உடலிலும் மனதிலும் பலம் இருந்தது. மனமும் உடலும் ஆரோக்கியமாக இருந்தது. காரணம் நேரத்திற்கு நல்ல சாப்பாடு குறைவில்லாத ஆழ்ந்த உறக்கம்.
நல்லா சாப்பிடுங்க!
ஜோரா தூங்குங்க!
| மாலன் பெருமிதம்! ஐம்பதாண்டுக்கும் மேற்பட்ட இலக்கியப் பயணத்தில் ஐந்து பேரின் படைப்புகளுக்குத்தான் முன்னுரை எழுதித் தந்துள்ளார் தி.ஜானகி ராமன். இருவர் அவரது நெருங்கிய நண்பர்களான எம்.வி.வெங்கட்ராம், ஆர். வெங்கட்ராமன். மற்ற இருவர் அவரது சக தில்லி வாசிகளாக இருந்த இந்திரா பார்த்தசாரதி, ஆதவன். இதில் எந்த வகையிலும் இடம்பெறாத ஐந்தாவதாக ஒருவருக்கும் அவரது முதல் சிறுகதை தொகுப்பிற்கே முன்னுரை அளித்து கெளரவித்துள்ளார் தி.ஜா. அந்த பெருமைக்குச் சொந்தக்காரர் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலன். சென்னையில் தனக்கு அளிக்கப்பட்ட பாராட்டு விழாவில் இத்தகவலை அவர் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார். முதல் நாவல் வெளியான மறுநாளே தில்லியிலிருந்து , ‘அருமையாக வந்திருக்கிறது. நல்ல படைப்பு’ என்று தி.ஜா. தனக்கு கடிதம் எழுதியதையும் மாலன் நினைவு கூர்ந்தார். தகவல்: : பா முத்துக்குமரன் |
