Madurai Somasundaram | Spotify

1972 ஆம் ஆண்டில் வெளிவந்த தெய்வம் படத்தில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் பாடிய  மருதமலை மாமணியே முருகையா என்ற  பாடல் அன்றும் இன்றும் பட்டி தொட்டி எல்லாம் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. தயாரிப்பாளர் தேவர் , மற்றும் வாரியார் சுவாமிகள்  கூறியவுடன் ,  இந்தப் பாடலை மதுரை மீனாட்சி அம்மன், வடபழனி முருகன் பாதங்களில் வைத்து அதற்குப்பின் படத்திற்காக பாடினார்.

மகா மேதை

மகா வித்வான்

சரஸ்வதியின் அருள் பெற்றவர்

அவரின் ராக சங்கதிகளும் பிருகாக்களும் தனித்தன்மையானது.நிரவல், கற்பனா ஸ்வரம் ஆகிய பகுதிகளும் அவருக்கென தனிப் பாணியை வர்ணிக்கும்.

குடும்பத்தில் 10வது பிள்ளையாகப் பிறந்த பரமசிவம் தான் பின்னாட்களில் பிரபலமான மதுரை சோமு அவரகள். சேஷ பாகவதர், அபிராம சாஸ்திரி மற்றும் சித்தூர் சுப்ரமண்யம் பிள்ளை ஆகியோரிடமிருந்து கற்ற சோமு அவர்கள்,  சித்தூர் சுப்பிரமணியம் பிள்ளை  வீட்டிலேயே 14 ஆண்டுகள் தங்கி இசைப் பயிற்சி பெற்றார்.

முதல் கச்சேரி 1934 ஆம் ஆண்டு திருச்செந்தூரில். இவர் வாய்ப்பாட்டில் மட்டுமல்லாமல், மிருதங்கம், கஞ்சிராவும் வாசிப்பார். 

1944ஆம் வருடம் சென்னை ஆர் ஆர் சபாவில் இவர் பாடியதைக் கேட்ட மிகப் பெரிய வித்வான், பலமுறை சபாஷ் என்று கூறி பாராட்டினாராம். அவர் டைகர் வரதாசாரியார்.

தமிழக அரசின் அரசவைக் கவிஞர், பத்மஶ்ரீ , தமிழ் இசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர், திருவாவடுதுறை ஆதினம் வழங்கிய சங்கீதச் சக்கரவர்த்தி எனப் பல பெருமைகள் கொண்டவர்.

மாதுலிகா, ஓம்காளி, வசீகரி, சோமப்பிரியா போன்ற புது ராகங்களை உருவாக்கியவர்.

தன்னுடைய இளமைக்காலத்தில் இவர் தண்டால், பஸ்கி போன்ற உடற்பயிற்சிகளைச் செய்துவந்தார் பக்திப் பாடல்களை பாடுவதற்கு மூச்சைப் பிடித்து பழகுதல், தலைகீழாக நின்று பாடிப் பயிற்சி செய்தல் என்ற கடுமையான பயிற்சிகளை செய்தார் 11 ஆவது வயதிலிருந்து இப்படி செய்ததால் தான் இவரால் 8 மணி நேரம் கழித்து செய்ய முடிந்தது.. பல கச்சேரிகளில்  இவர் 4 மணி நேரம் 5 மணி நேரம் கச்சேரி செய்து ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார்.

இவரை பிரபல எழுத்தாளரும் பேச்சாளருமான திரு  மீ ப சோமு அவர்கள் சங்கீத பயில்வான் என்றே அழைப்பாராம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைக் கல்லூரியின் தலைவராக மற்றும் மதுரை சென்னை, தஞ்சைப் பல்கலைக்கழகங்களின் இசைத்துறையில் பாடத்திட்டக் குழுவிலும் பணியாற்றினார்.

சோமுவின் குரலில் இருந்து வரும் நாத அலைகள் அவர் எவ்வளவு தலை சிறந்த நாதோபாசகர் என்பதை நிமிஷத்துக்கு நிமிஷம் பறை சாற்றும். ஊசிப் பிரயோகங்களைத் தொடர்ந்து உலக்கைப் பிரயோகங்கள் வரும். திடீரென்று கைகளை நாதஸ்வர வித்வான் மாதிரி வைத்துக் கொண்டு ராஜரத்தினத்தை கண்முன் கொண்டுவந்துவிடுவார். என்பார் இசை விமர்சகர் சுப்புடு. 

1944 45 வருடங்களில் விகடனில் வெளிவந்த ஆடல் பாடல் பகுதியில்  பற்றிய மதுரை சோமு அவர்களை பற்றிய தகவல்கள் வந்திருக்கின்றன. விகடன் அவரைப் பற்றி எழுதும்போது,

வித்வத் சபையில் பாடிய இளம் வித்வான்களில் சோமசுந்தரத்தின் பாட்டு எல்லாருடைய விசேஷ கவனத்தையும் கவர்ந்திருக்கும். ஸ்ரீ சோமசுந்தரத்துக்கு வெகு அபூர்வமான சாரீரம் வாய்த்திருக்கிறது. அதில் பேசும் துரித கால பிர்க்காக்கள் அழுத்தமும் அழகும் கொண்டு நம்மை பிரமிக்கச் செய்துவிடுகின்றன. அத்துடன் அவருக்குச் சிறந்த ஞானமும் விசேஷ மனோதர்மமும் இருப்பதும் அன்றைய கச்சேரியில் தெரிந்தது. இந்த வசதிகளையெல்லாம் அவர் பாகுபாடாகப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறார்.

 அவருடைய ராக ஆலாபனைகளெல்லாம் விசேஷபாவத்தோடும் சிறந்த கல்பனைகளோடும் பிரகாசிக்கின்றன. உதாரணமாக, அவர் ஆலாபனை செய்த கல்யாணியையும் ஷண்முகப்பிரியாவையும் சொல்லலாம். நடநாராயணி கல்யாண வசந்தம், அஸாவேரி போன்ற அபூர்வ ராகங்களையும் அவர் மிக்க திறமையோடு ஆலாபனை செய்ததைப் பாராட்ட வேண்டும். கீர்த்தனைகளையும் அவர் வெகு கச்சிதமாகப் பாடுகிறார். சுருங்கக் கூறினால், ஒரு பெரிய வித்வானுக்கு வேண்டிய எல்லா யோக்யதாம்சங்களும் இவரிடம் இருப்பதைக் காண்கிறோம்.

1973 ஆம் வருடம் தஞ்சையில் முருகன் கோவிலில் தனது குருநாதர் உடன் கச்சேரி செய்தார். 

குருநாதர் அவர்களிடம்  உனக்கு பிடித்த ராகத்தில் பாடல் ஒன்று பாடு என்று கூறவும் சண்முகப்பிரியா ராகத்தில் பாடினார்.  அதனை கேட்டு ரசித்து பாராட்டிய குருநாதர்  சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை தனது கைகளாலே அருகில் இருந்த  பிளாஸ்டிக்கில் இருந்து,  காபி எடுத்துக் கொடுத்தாராம்.  சோமு அவர்களின் கண்கள் கண்ணீரில் நனைந்தது.  இதுதான் குருநாதருடைய கடைசிக் கச்சேரி ஆனது.

சோமுவின் வாழ்வில் நடந்த இரு மறக்க முடியாத நிகழ்வுகள்.

சம்பூர்ண ராமாயணம் படம்  தயார் ஆனபோது,  ராவணனாக நடித்த டி கே பகவதி அவர்களுக்கு ஒரு பாடல். வீணைக் கொடியுடைய  வேந்தனே என்ற பாடல் கே வி மகாதேவன் அவர்களுடைய இசையில்,  மதுரை சோமு அவர்களைப் பாட வைத்தார்கள்.  மிக அருமையாக வந்திருக்கிறது என்று அனைவரும் சோமுவைப்பாராட்டினார்கள். ஆனால்

ஒலிப்பதிவு ஆன பிறகு அதற்கு வாய் அசைக்கும் போது,  திரு டி கே பகவதி அவர்கள் சோமு அவர்களின் குரலில் என்னால் வாய் அசைக்க முடியவில்லை என்று கூற அந்தப் பாடல் திருச்சி லோகநாதன் அவர்களின் குரலில் மீண்டும் ஒலிப்பதிவானது. 

 

மிகவும் கஷ்டமான அந்தப் பாடலை பாடிய சோமு,  தன் பாடல் திரையில் இடம் பெறவில்லை என்று  வருத்தப்பட்டு ஸ்டுடியோவில் அமர்ந்திருந்ததைப் பார்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சோமு  அவர்களிடம் அண்ணே நான் உங்கள் ரசிகன்,  எனக்காக சில பாடல்கள் நீங்கள் பாருங்கள் என்று  கூற,  குழந்தையாய் மாறிய சோமுவும் பாடல்களைப் பாடினார்கள்.

 

அதைப் பாராட்டிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தனது கழுத்தில் அணிந்து இருந்த 8 பவுன் தங்க சங்கிலியை அப்படியே சோமுவின் கழுத்தில் அணிவித்துவிட்டார்.  உணர்ச்சி மிகுந்து கண்ணீரில் நனைந்த சோமு அவர்கள் சிவாஜியை கட்டி தழுவி நன்றி தெரிவித்தார் அது மட்டுமல்ல அடுத்து வந்த பல்வேறு நிகழ்வுகளில், இசை நிகழ்ச்சிகளில் சிவாஜியின் இந்த வள்ளல் தன்மையைக் கூறி கூறிப்பெருமை அடைந்தார்.

 

 (யுத்த நீதிக்காக லால்பகதூர் சாஸ்திரி அவர்களிடம் 500 பவுன் நகை 1960களில் கொடுத்தார் சிவாஜி கணேசன்.  அதே போல தமிழ்நாட்டில் மூன்று கோயில்களில் யானையை தானமாகக் கொடுத்தார் அதை கேள்விப்பட்ட காஞ்சி பெரியவர் அவர் பெற்றோரை அழைத்து நன்றி கூறிப் பாராட்டினார்.  நடிகர் திலகம் இதுபோல வெளியில் தெரியாமல் செய்த  கொடைகள் ஏராளம்.  விளம்பரம் விரும்பாமல் இருந்ததால், அரசியல் காரணங்களால் அவரின் கொடைகள் வெளியில் வராமல் போனது. )

 

இன்னொரு நிகழ்வு – நடிகர் தங்கவேலு இல்லத்தில். தண்ணீர் விட்டோ வளர்த்தோம் , ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ , ஆசையே அலைபோலே, வாராய் நீ வாராய் என்ற காலத்தால் அழியாத பாடல்கள் தந்த  கந்தர்வக் குரலோன் திருச்சி லோகநாதன், நடிகர் தங்கவேலு வீட்டில் நவராத்திரி விழாவில் பாடினார். அப்புறம் மதுரை சோமு பாட . அவர் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த திருச்சி லோகநாதன், விறுவிறுவென மதுரை சோமு அருகே சென்றார். ‘பிரமாதம்’ என்று சொல்லி, கையில் இருந்த வெற்றிலைப் பெட்டியை அன்பளிப்பாகக் கொடுத்தார். அது வெள்ளி வெற்றிலைப் பெட்டி. ஒரு கலைஞனாக இருக்கவேண்டுமெனில், ஒரு ரசிகனாகவும் இருக்கவேண்டும் என்பதை உணர்த்தினார்.

ஆத்மார்த்தமான சங்கீதத்தை அர்ப்பணித்தவர் மதுரை சோமு அவர்கள் என்றால் மிகையாகாது.  நீல மணி,  கானடா,  சிந்துபைரவி, சுப பந்துவராளி போன்ற ராகங்களில் இவர் பாடப் பாட ரசிகர்கள் மயங்குவது மட்டுமல்ல கண்களில் கண்ணீருடன்   ரசித்து மகிழ்வார்கள்.  பெற்றோர் ஆசியால்,அப்படி ரசித்து மயங்கியவர்களில் நானும் ஒருவன் என்று எளிமையுடன் கூறிக் கொள்கிறேன். 

 அடுத்த மாதம் சந்திப்போம்.