
நான் மனநலனைப் பற்றி எழுதுவதைப் படித்து வந்தவள் நாற்பது வயதான வினிதா. உறவுகளில் விரிசல், அவற்றுக்கான தீர்வுகளைப் படித்ததால் வந்தார். சகோதரன் சுந்தரம் பற்றி ஆலோசிக்க முடிவு செய்ததாகக் கூறி, விவரிக்கத் தொடங்கினார்.
நாற்பத்து நான்கு வயதான அண்ணன் சுந்தரம் ஒரு ஆடை வடிவமைப்பாளர். சில மாதங்கள் வருமானம் அமோகமாக இருக்கும், அதுவே மந்தமாக இருக்கும் போது, மனைவி கேஷவியிடம் சிடுசிடுவென இருப்பார், வீட்டினரைக் கோபித்துக் கொள்வாராம். சுந்தரத்தின் சொற்களினால் கண்ணீர் வடிப்பார்கள்.
கேஷவிக்கு அடிக்கடி ஒற்றை (ஒருபக்க) தலைவலி வரும். மருத்துவமனைக்குச் சென்றபோது பரிசோதித்து உடலில் எல்லாம் சரியாக இருப்பதாகக் கூறினார்கள். இதை வினிதா கேட்டதும் கேஷவியுடன் நான் எழுதுபவற்றைப் பற்றிப் பகிர்ந்து, அழைத்து வந்தாள்.
வினிதா விவரித்தாள். பல வருடங்களாகச் சுந்தரம் கோபித்துக்கொள்வது குடும்பத்தில் எல்லாருக்கும் வேதனை தந்தது. சுந்தரத்திடம் சொல்லத் தைரியம் வரவில்லை. காஷ்வியின் பெற்றோர் வேலைச்சுமை எனப் புறக்கணிக்க, மாமனார் மாமியார் மிக ஆதரவாக இருப்பதால் காஷ்வி அவர்களிடமே பகிர்ந்து கொள்வாள். மேலும் விவரிக்கச் சொன்னதும், வினிதா தொடர்ந்தாள்.
சிறுவயதிலிருந்து வினிதாவும் சுந்தரமும் அதே ஆரம்பப் பள்ளிக்கு ஒன்றாகப் போவார்கள். பின்பும் இருவரின் பள்ளிக்கூடமும் ஒன்றுக்கொன்று அருகிலிருந்ததால் சேர்ந்து செல்வது தொடர்ந்தது. அவர்களின் தந்தை மிகக் கண்டிப்பானவர். மதிப்பெண் எண்பதுக்குக் குறைந்தால் கையால், பெல்ட்டால் அடித்துவிடுவார். அம்மா தடுக்க முயன்றால் அவளையும் அடித்துவிடுவார். பள்ளிக்குச் செல்லும்போது வேதனையைப் பகிர்ந்து கொள்வார்கள்.
இருபது வயதில் வினிதாவிற்கு கல்யாணமானது. அபரிமிதமான பாசம், ஆதரவான கணவன் என்று அமைந்ததில், சுந்தரத்திடம் பகிர்வது படிப்படியாக முழுமையாக நின்றுவிட்டது.
சுந்தரம் அவளிடம் பகிர்வதும் திடுதிப்பென்று நின்றது. மணவாழ்வில் கவனம் செலுத்தியதில் வினிதா இதைப்பற்றிச் சிந்திக்கவில்லை.
கடந்த காலத்தை நினைவூட்டி, வினிதா சொன்னாள், அவர்களின் தந்தை சுந்தரத்திற்குப் பெண்பார்க்க வினிதாவைக் கூட வரச்சொன்னார். வினிதா கணவனுடன் சந்தோஷமாகச் சென்றாள். பத்தாவது படித்திருந்த கேஷவி அனைத்து பாரம்பரியங்களையும் அறிந்து பின்பற்றுவதால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. முடிந்தது. வனிதா சந்தோஷமானாள்.
அது நீடிக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு பழையபடி வனிதாவிடம் பகிர்வதைச் சுந்தரம் மீண்டும் தொடங்கினான். வினிதா இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு தடுமாறினாள். செயலற்ற நிலையானது.
வீட்டு விசேஷங்களில், சம்பிரதாயங்களில் சுந்தரம்-கேஷவி நெருக்கம் இல்லாததை வினிதா கவனித்தாள். இரு பிள்ளைகள் பிறந்தன, அந்த நிலைமை மாறியிருக்கும் எனக் கருதினாள்.
ஆனால் சுந்தரத்தை கேஷவி ஏதேனும் கேட்டால், அவளைப் பார்ப்பதற்குப் பதிலாகப் பக்கத்தில் உள்ளவரைப் பார்த்துப் பதிலளிப்பதைக் கவனித்தாள்.
வினிதா தன் மனநிலையை அறிய செஷன்கள் தொடர்ந்தது. தனது மணவாழ்க்கையில் திருப்தி இருந்தது. கணவன் ஆதரவும் மாமியாரின் வாத்ஸல்யமும் மனநிறைவும் தர, தாம் வாழ்க்கையில் அமைதி அடைந்ததை சுந்தரமிடம் பகிரத் தோன்றவில்லை.
சுந்தரம் பல முறை அவளிடம் கேட்க, வினிதா தன் திருப்தியான மணவாழ்வை விவரிக்கும் முன்பே சுந்தரம் கோபித்துக்கொண்டு சென்றுவிடுவது அவளை வாட்டியது. வினிதா தன்மேல் பழியை ஏற்றுக்கொண்டாள். விளைவு, தன் வீட்டில் சுமுகமாக இருந்தபோதிலும் அவளுக்குள் மனக்கலக்கம் நிலவியது.
செஷன்களில் சுந்தரம் பகிர்வதை ஆராய்ந்தோம். தான் கேஷவி-சுந்தரம் இடையில் வருவதாக வினிதாவிற்குத் தோன்றியது. சுந்தரத்தைப் புரிய வைக்கப் பயந்ததால் வழி தெரியவில்லை என்றாள்.
சுந்தரம் பகிர்வதை நிறுத்தவோ, தடுக்கவோ மனம் வராததை செஷன்களில் எடுத்துக்கொண்டோம். இந்த வேண்டாத பகிர்வினால் தான் சுமந்திருக்கும் துன்புறுத்தல்களையும் விளைவுகளையும் வினிதா பூர்ணமாக அடையாளம் கண்டாள். மனச்சுமையின் பிரதிபலிப்பாக, சிறுசிறு உடல் உபாதைகளுக்கு ஆளாவதை உணர்ந்தாள். தான் சொல்ல வந்ததைச் சுந்தரம் மறுப்பதனால் தலைவலி வருவதைக் கண்டுகொண்டு, தனக்கு உள்ளூரே நேர்வதை மாற்றி அமைக்க வழிகளை ஆலோசித்தோம், செய்ய ஆரம்பித்தாள். பல்வேறு வழிகளை வகுத்து, செயல்பாட்டில் கொண்டு வந்ததும் இன்னல்கள் மறைந்ததை அடையாளம் கண்டாள்!
சுந்தரம் தான் பகிர்வதைக் கேட்டுக் கொள்ளாதது ஒருவகை நிராகரிப்பு என்று இருந்திருக்கலாம். அவன் கோபத்தால் தம்மைத் தண்டிப்பது வன்முறை என்று புரிந்துகொண்டாள்.
சுந்தரம்-கேஷவி தம்பதியர் உறவில் எந்த நெருக்கமும் ஏற்படாததைப் பற்றிப் பகிர்ந்தாள்.
செஷனில் கேஷவியின் பங்கேற்பு ஆரம்பமானது. அக்னி சாட்சியாகத் திருமணம் நடந்ததால் கேஷவி விலகவோ, விவாகரத்து தேடவோ சிந்திக்கவில்லை. இதை விவரிக்கும் போது கேஷவிக்குக் கண்ணீர் பெருகியது. மனக்கலகத்தைப் பகிர்ந்ததால் மனம் லேசானதாகக் கூறினாள்.
கேஷவியின் மீண்டெழும் தன்மை, தாக்குப்பிடிக்கும் திறன் அறிந்துகொள்ளக் கல்யாணத்திற்கு முன்புள்ள வாழ்வுமுறையை விவரிக்கப் பரிந்துரைத்தேன். பலவற்றை விவரித்தாள். எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடன் கையாளுவதே அவளுடைய கருவியானது. நேர்மறை எண்ணத்துடன் இடைஞ்சல்களைச் சந்திக்கச் செய்தது. சமீபகாலமாக இது சிறிது சிறிதாக மாறுவதை உணர்வதாகக் கூறினாள்.
வினிதா தன் முன்னேற்றத்தை விவரித்த பின் கேஷவியும் தன்னுடைய தலைவலியைப் பற்றிக் கூறினாள். அவைத் தோன்றும் சுழல், உள்ள நபர்கள், நேர்ந்த உணர்வுகள், தலைவலியின் பாதிப்புகள் இவற்றை அவள் குறித்துக்கொண்டு வர்ணிக்க செஷன்கள் பல தேவைப்பட்டது. இதிலிருந்து தன் தத்தளிப்பின் பிரதிபலிப்புதான் தலைவலி என அறிந்தாள்!
இருவரின் விவரிப்பிலிருந்து சுந்தரம்-கேஷவி உறவில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் புரிந்தது. சுந்தரம் கூட வெளியே போகும்போதும், அவன் கோபப் பட்டு அவளை உதாசீனப் படுத்துவான். கேஷவி நீளமான கூந்தலை நன்றாக வாரி, பின்னலிட்டு, பூ வைத்துக்கொள்வது சுந்தரம் ரசிப்பதில்லை. தள்ளி நடப்பான், என்றைக்கும் புகழ மாட்டான். மனவலிமையுடன் கேஷவி தன்னைச் சமாதானம் செய்து கொள்ளுவாள், இது அவளுக்குச் செஷன்களில் புரிய வந்தது.
செஷனில், ஒருவரின் கோபத்தினால் நாம் நடுங்கிப் போவதால், அந்தக் கோபம் வெற்றி பெறுகிறது, நாம் வெடவெடத்துப் போவது அவர்களை அப்படியே மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டுகிறது என்று இருவரும் புரிந்துகொண்டார்கள்.
இருவரும் சுந்தரம் கோபப்படும் போது, அந்த கோபம் தம்மை என்ன செய்கிறது என்பதைச் சாந்தமாக அவனிடம் தெரிவிக்கத் தொடங்கினார்கள். தன் உணர்வை சுந்தரத்திடம் சொல்கையில் சுந்தரம் கேட்காமல் நகர்ந்து போனாலும், தன்னால் இது செய்ய முடிகிறது என்று தோன்றியது, தன்னம்பிக்கை பிறந்தது. கேஷவியின் தலைவலி மறைந்தது.
அதேபோல வினிதா சுந்தரத்திற்குத் தெளிவாகப் புரியவைத்தாள்.
கேஷவி சில காலமாகச் சுந்தரத்தின் ஒரு நடத்தை தனக்கு வியப்பாக இருப்பதைப் பகிர்ந்தாள். அதாவது, எதிர்வீட்டு ரதி, சொந்த தொழில் செய்பவள். சுந்தரம், அவள் வருவதையோ போவதையோ பார்க்க நேர்ந்தால் வித்தியாசமாக மாறுவதைக் கண்டாள். இதன் காரணம் எனக்குப் புரிந்தது. செஷனுக்கு சுந்தரம் வரவேண்டும் என்றேன். வர மறுத்துவிட்டார்.
எதிர்வீட்டு ரதி வினிதாவின் ஸ்நேகிதி. வினிதாவிடம் அவளை அழைத்துவரப் பரிந்துரைத்தேன். ரதி வந்தாள். வெளிப்படையாகப் பேசினாள். சில வருடங்களுக்கு முன்னால், சுந்தரம் இவள் மேல் காதல் கொண்டதாகப் பகிர்ந்தாள். காதல் சிறகு விரிந்து பறந்தது. சுந்தரம் தன் மனதை அவளிடம் கொட்டினார். பல கடிதங்கள் எழுதினார். அப்போது தான் வினிதாவிடம் பகிர்வது ரத்து செய்தார்.
சுந்தரம் ரதியிடம் இவ்வாறு அலங்காரம் செய்யக்கூடாது, எப்போது வீடு திரும்ப வேண்டிய நேரம் என்று சட்டங்கள் விதிக்க, ரதி அவற்றை நியாயம் இல்லாதது என்று மறுத்தாள். சுந்தரம் பல்லைக் கடித்துப் பார்ப்பது, கண்களை உருட்டுவது, கடிதங்களில் சுளீர் சொற்கள் உபயோகிப்பதும் அச்சத்தைத் தந்ததாக ரதி கூறினாள்.
அந்த அவதியை ஏன் சகித்துக் கொள்ள வேண்டும் என்றதால் விலகிவிட்டாள் ரதி.
நான்கு வாரத்தில் சுந்தரத்திற்குக் கல்யாணமானது. ரதி தன் மனதிற்குப் பிடித்தவரை மணந்து சந்தோஷமாக இருப்பதைக் கூறினாள். நிகழ்வுகளில் சுந்தரத்தைச் சந்திக்க நேர்ந்தாலும் மேலோட்டமாகப் பேசிச் செல்வதாகக் கூறினாள்.
கேஷவியின் ஊகம் சரியாக இருந்தாலும் இந்தத் தகவல்களை நாங்கள் அவளிடம் பகிரவில்லை. ரதியின் பிரிவினால் நேர்ந்த வடுவைச் சுந்தரம் சுமந்திருந்ததின் தாக்கம் கேஷவி மேல் எதிர்மறை உணர்ச்சிகள். சுந்தரத்திற்கு உணர்வுகளின் பக்குவம் குறைவே.
இதை நிவர்த்தி செய்யச் சுந்தரம் தயார் நிலைக்கு வராததால் மாற்றி வழி அமைத்தோம். கேஷவிக்குப் பிடித்த சிலவற்றைத் தேர்வுசெய்தோம். மாமனார், மாமியாரிடம் உரையாடி கேஷவிக்குப் பிடித்தவாறு ஸ்லோகம் வகுப்பு, ஓரிரு நாட்கள் இரண்டு மணிநேரம் ஆர்வ ஊழியர் பணி எனச் செய்யத் தொடங்கினாள்.
மனைவியின் மாற்றத்தைக் கவனித்து சுந்தரம் இரண்டு ஸெஷன் மட்டும் எனக் கட்டளை போட்டு வந்தார். ஒரு இழை மாறுதல் தென்பட, ஸெஷன்கள் ஒரு வருடமாகப் போய்க்கொண்டு இருக்கிறது. நடத்தையில் சில மாற்றங்களை காஷ்வி வினிதா கவனித்து வருகிறார்கள்.
ஏமாற்றம்
கொந்தளிக்கும் கோபமாகி
உறவுகளை அவமதிக்கும்,
எட்டாததையே
நினைத்துக் கோபித்து வாடும்!
******************************************
