காந்தியின் இறுதி 200 நாட்கள்

120 ஆண்டுகள் வாழ விரும்பிய ஆத்மா. வாழ்வேன் என நம்பிக்கையுடன் பலரிடம் கூறி பாரத நாட்டை வலம் வந்த ஆத்மா. 120 ஆண்டுகள் உடல் நலமுடன் வாழ அலோபதியை மறுத்து இயற்கை வைத்தியத்தையும் இயற்கை உணவு உண்பதையும் இறுதி நாள் வரை கடைப்பிடித்த ஆத்மா அந்த மகாத்மா.
அதே மகாத்மா தனது 78 வயதிலேயே மரணத்தை தான் வணங்கிய இராமனிடம் வேண்டியதற்கு காரணமாக இறுதி நாட்களில் என்ன நடந்திருக்கும்?
பலர் அறிந்திருக்கலாம். ஆனால் எனக்கு “காந்திஜியின் இறுதி 200 நாட்கள்” என்ற நூலைப் படிக்கும் வரை தெரியாது.
ஓய்வு பெற்ற IAS அதிகாரி திரு. V. இராமமூர்த்தி இந்து நாளிதழில் தொடராக எழுதியதை திரு. சி. இலக்குவன் 896 பக்கங்களில் தமிழில் மொழி பெயர்த்து நூலாக்கியுள்ளார்.
திரு. இராம மூர்த்தி கல்கத்தாவில் பிறந்து கராச்சியில் வளர்ந்தவர். வாழ்வின் பின் பகுதியை மதுரையிலும் சென்னையிலும் கழித்தவர். குழந்தைப் பருவத்திலிருந்து காந்தியின் மீது ஈர்ப்புகொண்ட இவர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் கலை இலக்கிய ஆய்வாளராகவும் இயங்கிக்கொண்டிருந்தவர்.
காந்தியின் மீது கொண்ட ஈர்ப்பால் காந்திஜியின் வாழ்க்கையில் கடைசி 200 நாட்களின் நிகழ்வுகளையும், அக்காலகட்டத்தில் அவர் பேசிய எழுதியவற்றையும் தொகுத்து அவை குறித்த தனது சிந்தனைகளையும் கலந்து குழைத்து ஒரு காவியத்தன்மை வாய்ந்த நூலை நமக்கு அளித்திருக்கிறார்
1947-ம் ஆண்டு ஜுலை 15-ம் நாள் செவ்வாயன்று நூலின் வாயிலாய் மகாத்மாவுடன் நம் பயணத்தை தொடங்குகிறோம். டெல்லியில் துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த அந்த நாள் முழுக்க வருகை தந்தவர்கள்–காந்திஜி அவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்கள், தெரிவித்த கருத்துகள் போன்ற விவரங்கள் தரப்படுகின்றன. அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று நகரும் பயணத்தின் இறுதி நாளான 1948-ம் ஆண்டு ஜனவரி30-ம் நாள் வெள்ளியன்று மகாத்மா நெஞ்சில் பாய்ந்த இரவைகளை ஏந்தி ஹே ராம் என கூறியபடியே சாயும் வரை நாமும் அன்றாடம் அவர் சென்ற இடங்களுக்கெலாம் உடன் செல்கிறோம். அவர் சந்தித்து பேசியவர்களின் அருகில் நாம் நிற்கிறோம். தினசரி தியாணத்தில் அவர் முன் பாடப்படும் மும்மத பாடல்களை நாம் கேட்கிறோம். அவர் ஆற்றிய உரையின் சுருக்கத்தை நாம் அறிகிறோம். அவர் தினசரி அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து அன்றைய கடிதங்களுக்கு எழுதும் பதில்களை எட்டிப் பார்த்து படிக்கிறோம்.
காந்திஜியின் வாழ்க்கைதான் நமக்கு அவர் விடுக்கிற செய்தி. இந்த எளிய வாக்கியத்தை அவரே திரும்பத் திரும்பப் பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லுகிறார்
1947 ஆகஸ்ட் 15 நாட்டின் விடுதலைப் திருநாள் .அன்று காந்திஜி எங்கிருந்தார்? புதுடில்லியின் மகிழ்ச்சி ஆரவாரங்களுக்கு அப்பால் வெகுதொலைவில் கல்கத்தாவின் தென்கோடியிலுள்ள பெலியகட்டாவில் ஹைதாரி மாளிகையில் இருந்தார். வன்முறைக் களமான அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுடன் இருந்தார்.அவருடைய வாழ்நாட்பணி அமைதிப்பணி அன்றும் தொடர்ந்தது.மனிதகுலத்தக்கு மீண்டும் நம்பிக்கை ஊட்டியது.
பதிப்புரையில் கூறியபடி காந்தியடிகளின் இறுதி நாட்கள் அவருக்கோ அல்லது அவர் வெகுவாக நேசித்த இந்திய துணைக் கண்டத்து மக்களுக்கோ மகிழ்ச்சி தரவில்லை. மதவெறி தன்னுடைய உயிரையும் பலி கேட்கும் என்பதை அவர் எதிர் பார்த்திருந்தார்.
நாடு விடுதலையான தினத்திற்கு முன்னரும் பின்னரும் நடைபெற்ற நிகழ்வுகள் அவரை ஆழமான முறையில் துன்புறுத்தியிருந்தன.
அவர் விரல் அசைத்தால் மொத்த பாரதமும் எழுந்து நின்ற நாட்களை பார்த்த மகாத்மா, சுதந்திர இந்தியாவில் தனக்கு நெருக்கமான தலைவர்களே தன் பேச்சை கேட்பதில்லையே என்ற வருத்தம் அவர் பேச்சுகளில் வெளிப்படையாக தெரிகிறது.
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபட்ட அவர் சுதந்திரம் கிடைத்தவுடன் ஒருவரை அடுத்தவர் வெட்டி சாய்ப்பதும், சொத்துகளை தீயிட்டு அழிப்பதும் வேதனை அளித்தால், அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டுவது தன்னுடன் பயணித்த தலைவர்கள் என்று அறிந்த பொழுது அவர் மரணிக்க விரும்பியதில் ஆச்சரியம் இல்லை.
இறுதி நாள் வரை தன் கொள்கைகளை கடுகளவும் தளர்த்திக் கொள்ள வில்லை. உண்மை வெல்லும் ஶ்ரீராமன் நல்வழி காட்டுவான் என்பதில் உறுதியாக இருந்தார். கொள்ளப்படுவதற்கு சில தினங்களுக்கு முன் பிர்லா மாளிகையில் பேசிக் கொண்டிருந்த பொழுது வீசப் பட்ட குண்டிலிருந்து தப்பினார். மரணம் மகாத்மா எதிர் பார்த்த ஒண்று.
பாமரனாகிய எனக்கு வாழ்நாள் முழுதும் போராடிய ஒருவர் சுதந்திர இந்தியாவை அவர் விரும்பிய படி காணாமல் மனக்குறையோடு மறைந்து விட்டாரே என்ற ஆதங்கம் நூலை படித்த உடன் தோன்றுவதை தவிர்க்க இயலாது.
இந்நூலில் காந்திஜியின் கடைசி 200 நாட்கள் துல்லியமாக ஆவணப்படுத்தப்படுகின்றன.
