
- குடற்படும் முடையைக் கண்டு குறுநரி தின்று மான்தேர்க்
கடற்படை இயக்கங் கண்டே கள்ளத்தாற் கிடப்ப யாரும்
திடன்பகை யின்மை யாலே செவிகொய்வான் வால்கொய் வானாய்
உடற்புறம் போர்த்த புன்தோல் உரித்திட்டங் கொருவன் கொன்றான் .
[முடை=மாமிசம்; மான்=குதிரை; திடன்பகை=வலிமையான பகை]
இதில் கூறப்படும் நரியின் கதை பின்வருமறு:
ஓரிடத்தில் குடல்மாமிசத்தைக் கண்டு தின்று கொண் டிருந்த ஒருநரி, பக்கத்தில் குதிரை தேர்ப்படைகளுடன் ஒருசேனை செல்வதைக் கண்டது. ”இங்கே சேனை செல்வதால் யுத்தம் நிகழும்; அங்ஙனமாயின் நமக்கு அதிகமான மாமிசம் கிடைக்கும்; போர்முடியும்வரை நாம் இவ்விடத்தில் இருக்க வேண்டும்; நாம் இப்படியே திரிந்தால் நம்மை எவரும் அடித்துத் துரத்துவார்கள் செத்தபிணம்போல் கிடந்தால் ஒருவரும் கவனிக்க மாட்டார்கள்; பின்னர் எழுந்து சண்டையில் மாய்ந்த பிணங்களைத் தின்னலாம்,” என்று கருதி அங்கே இறந்ததுபோல் கிடந்தது;
ஆனால் அது நினைத்தபடி அங்கே சண்டையொன்றும் நிகழவில்லை. போரிடவேண்டிய அளவுக்கு வலிமையான பகை இல்லாததால் அப்படை வேற்றிடம் சென்றுவிட்டது; அச்சமயத்தில் வழிப்போக்கன் ஒருவன் அங்கு வந்தான். அந்நரியைக் கண்டு அஃது இறந்தது என்று நினைத்தான். “இதன் செவி முதலியவை நமக்கு எதற்கேனும் உபயோகப்படும்,” என்று தீர்மானித்து உடனே அதன் செவியையும் வாலையும் கொய்து தோலையும் உரித்துச்சென்றான். அந்நரி உயிர் துறந்தது,” என்பதாகும்.
12.நாட்டில் நாம்உரைக்கப் பட்ட முழைநரி அனைய நீரார்
ஈட்டிய பொருள்கள் தம்மை ஈதலும் துய்த்தல் தானும்
மாட்டிலர் அகழ்ந்து பார்க்கீழ் நிலம்கொள வைப்பர் மாதோ!
பாட்டரும் மக்கள் யாக்கைப் பயன்கொளாக் கழிப்பர் அன்றே,
[முழை=குகை; துய்த்தல்=அனுபவித்தல்; மாட்டிலர்=செய்யார்]
இந்த நாட்டில் நம்மால் சொல்லப்பட்ட குகையில் வாசம் செய்யும் நரியைப் போன்ற தன்மையை உடையவர்கள் தாம் சம்பாதித்த செல்வங்களைப் பிறர்க்குக் கொடுத்தலும், தாம் அனுபவித்தலும் செய்யார். பூமியின் கீழே தோண்டி., அந்தப்பூமியானது தனக்குச் சொந்தமாகக்கொள்ளும்படி, தாம் தேடிய பொருள்களைப் புதைத்து வைப்பர். மாந்தராகப் பிறந்ததன் பயனை அடையாமல் வீணே தம் வாழ்நாளைக் கழிப்பார்கள்.
13.உண்டலோடு உறங்கல் அச்சம் இணைதலும் ஒருங்கு நாடின்
மண்திணி உலகில்வாழும் மாக்களும் விலங்கும் ஒப்பாம்
கண்டதொன்று உண்டு நல்ல அறங்களைப் பிடித்த நீரார்
பண்டிதரே ஏனை மாக்கள் பசுவினும் கடையர் அன்றே,
[ திணி-வலிமைபொருந்திய]
வலிமை பொருந்திய இம்மண்ணுலகத்திலே உணவை உண்ணுதலும், நித்திரை செய்தலும், பயப்படுதலும், மருவுதலும், ஒருசேர ஆராய்ந்து பார்த்தால், இவற்றை அனுபவித்தலிலே இங்கு வாழ்கின்ற மனிதர்களும் மிருகங்களும் சமமாம், ஆனாலும் இவற்றிலே நாம் விசேஷமாக ஆராய்ந்து அறிந்தது ஒன்றுண்டு. அது யாதெனில் நன்மையாகிய தருமங்களைப் பற்றிய தன்மையுடையவர்கள் மனிதர்களுக்குள்ளே பல கல்விகளைக் கற்ற அறிவும் உடையவராவர். மற்றைய மனிதர்கள் ஐந்தறிவுள்ள மாட்டைக் காட்டினும் கீழானவரே ஆவர்.
உலகத்தில் உண்ணல், உறங்கல், பயப்படுதல், புணர்தல், ஆகிய தொழில்கள் மிருகங்களுக்கும் உண்டு மனிதர்க்கும் உண்டு; இவற்றை ஆராயுமிடத்து மனிதரும் மிருகங்களும் ஒரே தன்மையர் ஆவர்; அப்படியிருக்க மனிதர் எதனால் உயர்த்திக் கூறப்படுகின்றார்கள் என்றால், ஐந்து அறிவுடனே ஆறாம் அறிவாகிய மனமும் உடைத்தாயிருத்தல் பற்றியே ஆகும். மனத்தைக்கொண்டு நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து நன்மைகளைச் செய்தால்தான் ஒருவன் ஆறறிவுடைய மனிதனென்று சொல்லப்படுவான், அங்ஙனம் செய்யாதவன் பகுத்தறிவற்ற ஐயறிவுயிராகிய மிருகமேயாவான். இதனாலேயே ஆசிரியர், ”அறங்களைப்பிடித்த நீரார் பண்டிதர் ஏனைமாக்கள் பசுவினுங்கடையர்,”என்று கூறினார்.
- கடிமணக் கோல மாதர் காளைக்குக் காட்டி மீள்வர்
நடுவுஇடப் பட்டது எல்லாம் நயப்புறக் கேட்டு நாய்கன்
கெடியெனக் கூறி யாங்கே உணர்தலிற் கேட்டு வந்த
உடையதும் ஒருங்கு கொண்டே விடையமும் கடிவித் திட்டான்.
[கடிமணக் கோலம்=வாசனை மிகுந்த மணக்கோலம்; நடுவு=மூவுலகங்களில் நடுவில் உள்ள மண்ணுலகம்; நாய்கன்=வணிகன்; கெடியென=பயம் உடையதென; விடையமும்=நிலையற்ற உலகப்பொருள்; கடிவித்திட்டான்= நற்கதியடைந்தான்]
சுகுமாரன் எனும் வணிகன் ஒருவன் இருந்தான். அவன் துறவியாகப் போய்விடுவான் என்று ஒரு முனிவர் சொன்னார். அவனுடைய தாய் அதைக் கேள்விப்பட்டார். அங்ஙனம் போகாதிருக்கும் வண்ணம் அழகுள்ள முப்பத்திரண்டு மாதர்களை அவனுக்கு மணம் செய்துவைத்தார். அப்பெண்கள் அவனுக்கு கல்யாணக் கோலத்தை, தினந்தோறும் காட்டினார்கள். அவனைக் கலந்து அவன் மனத்தை மகிழச்செய்து, திரும்பிச் செல்வாராயினார்.
இப்படிச் செல்கின்ற காலத்திலே ஒருநாள் தபோதனர் ஒருவர் அவன் வசிக்கும் மாளிகைக்கருகிலுள்ள ஜினாலயத்திலிருந்து [ஜைனர் ஆலயத்திலிருந்து] நடுராத்திரியில் அவனுக்குக் கேட்கும்படி தேவ மானுட நரகலோக ஸ்திதிகளையும், பத்மகுலம் என்னும் விமானவிசேஷத்தையும் பற்றி உரைத்தனர்; அவர் அவ்வாறு சொல்லும்போது இம்மண்ணுலகில் கொடுக்கப்பட்ட மாயா சம்பந்தமான காரியத்தையெல்லாம், நன்மையாக, அவன் கேள்விப்பட்டான். அந்தவணிகன், இந்த உலக வாழ்வானது பயமுடையதாம் என்று, முனிவர் சொல்லியபடி, அறிந்ததால், தனக்கு நிலையான உடைமைப்பொருளாகிய ஞானத்தை மனத்தில் கொண்டு, நிலையற்றதாகிய உலகப்பொருளையும், மனத்தில் நீக்கித் துறவுபூண்டு நற்கதியடைந்தான். ஆதலால் அறிவுடையார் நிலையற்ற இவ்வுலகப் பொருள்களைத் தள்ளி நிலைத்த பொருளாகிய ஞானத்தைத் தேடவேண்டும்.
- இளமையும் வனப்பும் நில்லா இன்பமும் நின்ற அல்ல
வளமையும் வலிதும் நில்லா வாழ்வுநாள் நின்ற வல்ல
களமகள் நேசம் நில்லா கைப்பொருள் கள்வர் கொள்வார்
அளவிலா அறத்தின் மிக்கது யாதுமற்று இல்லை அன்றே,
[வனப்பு=அழகு; வளமை=செல்வம்; வலிது=உடல் வலிமை; களமகள்=மனைவி;
உலகத்தில் மனிதர்களுக்கு இளமைப் பருவமும், அழகும் நிலைநிற்கமாட்டா. பலவிதச் சுகங்களும், நிலைபெற்றனவல்ல. செல்வத்தின் வளப்பமும், உடல்வலிமையும் நிலைபெற மாட்டா. வாழ்கின்ற நாள்களும், நிலையில்லாதன. மனைவியின் அன்பும் நிலைநிற்கமாட்டா. கையிலுள்ள செல்வத்தைக் கள்வர் திருடர் அபகரிப்பார்கள். ஆதலினால், தருமத்தைக்காட்டிலும் சிறந்தது நிலைபெற்றது, வேறு எதுவும் இல்லை, எனவே அறத்தைத் தேடவேண்டும்.
