TYPES OF KARMA YOGA AND WAY OF PRACTICE | Karma Yoga | Benefits | Effects
கடந்த அத்தியாயத்தில் கர்ம யோகத்தைச் செயல்படுத்த சரியான அணுகுமுறை அவசியம் என்பதைப் பார்த்தோம். வாழ்க்கைக்கு வேண்டிய சரியான அணுகுமுறையைப் பெற, புத்தியின் வயத்தில் இருக்கும் அறிவாற்றலின் செயல்பாடுகள் தார்மீக வழியில் எந்தவித எதிர்மறை சிந்தனைகளாலும் பாதிக்கப்படாது, சீரமைக்கப்பட்ட ஒரு நிலையைப் பின்பற்ற வேண்டும். அதாவது ஒரு பொருளைப் பற்றி நமக்கு இருக்கும் சிந்தனையில், மாற்றம் கொண்டு வர வேண்டும். இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஆங்கிலத்தில் ‘freewill’ என்று சொல்லப்படும் சுயேச்சையாக செயல்படும் தன்மை மனிதனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. விலங்குகளின் வாழ்க்கை ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள ஒன்று. அவை தாமே சுயமாக எந்த முடிவும் எடுக்க முடியாது. மனிதனால் மட்டுமே அனுபவங்களிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தன் எண்ணங்களையும், செயல்பாடுகளையும் சீர்படுத்திக்கொள்ள முடியும்.

சுயமாகச் சிந்தித்து தன் செயல்பாட்டைத் தானே தேர்வு செய்யக்கூடிய ஒரு திறன் ஒருவருக்கு இருக்கும்போது, சுயநல நோக்கிலும் அவர் தேர்வு செய்யலாம்; அல்லது சுயநலமற்று மற்றவருக்காக வாழவும் முடிவு செய்யலாம். இதைத்தான் ஸ்ரீகிருஷ்ணர் ‘தே அதிகாரஹா அஸ்தி’ என்று சொல்கிறார். சாதரணமாக, நாம் தோல்வியையோ அல்லது பிரச்னைகளையோ சந்திக்கும்போது, மற்றவர்களைக் குறை கூறுவது வசதியான ஒன்று. நம் செயலில் ஏதேனும் தவறு நேர்ந்திருக்கிறதா என்று சீர்தூக்கும் தன்மை பலருக்கு இருப்பதில்லை. நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரம், செயலைச் சரிவரச் செய்யும் பொறுப்பையும் நமக்குத் தர வேண்டும். மாறாக, இப்போதிருக்கும் இளைய சமுதாயத்தினர் தம் உரிமையைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் உரிமைகள் பொறுப்போடு சேர்ந்து வரும் என்பதை அவர்கள் உணருவதில்லை. இந்த உரிமைகளைப் பற்றிய உணர்வும் அதைச் செயல்படுத்தக்கூடிய பொறுப்பும் ஒன்று சேரும் பொழுது தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை சரியான அணுகுமுறையில் உபயோகிக்கும் பக்குவமும் வரும். இது தான் கீதையில்
மூன்றாவது அத்தியாயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறும் பாடம்.

ஸ்ரீகிருஷ்ணர் ஞான யோகத்தைப் பற்றி பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில் விளக்கினார். கூடவே கர்ம யோகத்தைப் பற்றியும் சொன்னார். யுத்த களத்திலிருந்து எல்லாப் பொறுப்புகளையும் துறந்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த அர்ஜுனனுக்கு இப்போது யுத்த களத்தில் இருந்து ஓட ஒரு வழி கிடைத்தது. ஸ்ரீ கிருஷ்ணரிடம் ஞானம் கர்மத்தை விடச் சிறந்தது என்றால், ‘நான் ஏன் யுத்தம் செய்ய வேண்டும்? எல்லாவற்றையும் துறந்து ஞானத்தைத் தேடி நான் ஏன் போகக் கூடாது?’ என்று வினவுகிறான்.

கிருஷணர் இதற்குப் பதிலாக இவற்றைக் கூறுகிறார்:
வாழ்க்கையில் செயல்படாமல் எந்த மனிதனும் முக்தியை அடைந்துவிட முடியாது. நாம் செய்யும் கர்மங்கள் நமது மனத்தூய்மைக்கு வழி காட்டும். சம்சார பந்தங்களில் இருந்தும் அவற்றோடு வரும் பிரச்னைகளில் இருந்தும் இவற்றை விட்டு விலகி ஓடுவதால் மட்டுமே விடை கிடைத்து விடாது.

மனிதனுக்கு உதவுவதற்கென்றே ஸ்ரீகிருஷ்ணர் இரண்டு விதமான வாழ்க்கை நெறிகளைப் பற்றிக் கூறுகிறார். குடும்பத்துடன் பொறுப்புகளையும் பிரச்னைகளையும் எதிர்கொண்டு வாழ்வது – இதனை கிருஷ்ணர் பிரவ்ருத்தி மார்க்கம் என்கிறார்; மற்றது, எல்லாவற்றையும் துறந்து, எந்தப் பொறுப்புமின்றி, தனக்காக வாழாமல், இந்த சமூகத்திற்காக, மற்றவர் நலனுக்காக வாழும் வாழ்க்கையை நிவ்ருத்தி மார்க்கம் என்கிறார்.

துறவு என்பது தான் என்ற எண்ணத்தைத் துறப்பது; மனத்தில் ஏராளமான ஆசைகளை வைத்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு துறவு என்பதும், செயல்பாட்டைக் குறைப்பது என்பதும் எளிதான செயலல்ல. நிறைவேறாத ஆசைகளுடன் துறவு மேற்கொண்டாலும், அது பல பிரச்னைகளுக்கு முன்மாதிரியாக இருக்கும். மனத்தளவில் ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் அழித்தால் அன்றி, உண்மையான துறவு ஏற்படுவதில்லை. இதனால், இந்திரியங்களை அடக்கி, அவற்றை சரியான பாதையில் வழி நடத்த மனத்திற்கு மட்டுமே முடியும். இவ்வாறு மனத்தை புத்தியின் உதவியுடன் தனது கட்டுக்கோப்பில் வைத்திருக்க நமக்கு உதவுவது, கிருஷ்ணரின் கர்ம யோகம்.

நமது தர்ம சாத்திரங்கள் குடும்பத்தில் இருந்துகொண்டு தார்மீக வாழ்க்கையை மேற்கொள்வதையே வலியுறுத்துகின்றன. ஒரு குடும்பஸ்தனுக்கு சமூகத்துடன் உறவை ஏற்படுத்திக் கொடுத்து தன்னால் ஆன உதவிகளை இந்த சமூகத்திற்குச் செய்ய வழிவகுப்பது இந்த தார்மீக வாழ்க்கை முறை தான். இதன் மூலம், இந்திரியங்கள் மூலம் வரும் ஆசைகளையும் ஒரு மனிதனால் தீர்த்துக் கொள்ள முடியும்; இந்த சமூகத்திற்கு வேண்டிய நற்பணிகளையும் செய்ய முடியும். ஒரு குடும்பத்தானுக்கு செல்வம் சம்பாதிக்கவும் வசதிகளை மேம்படுத்தி தரமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளவும் கர்ம யோகம் உதவுகிறது..

கர்ம யோகம் என்பது இந்திரியக் கட்டுப்பாட்டிலிருந்து துவங்கும். சாதாரண வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள மனிதரிடமும் பொருள்களிடமும் எளிதில் பற்று ஏற்படும். இந்திரியங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒருவன் எந்தச் செயலையும் பற்றின்றி செய்யக் கற்றுக் கொள்கிறான். நமது செயல்கள்
பற்றற்ற நிலையில் செயல்படும்போது உறவுகள் மற்றும் பொருள்கள் மீதுள்ள பற்றும் போய் விடும். இதுவே நான், எனது என்ற நிலையில் இருந்து மாறி, எல்லாம் அவன் செயல் என்று பார்க்க வைக்கும்.

ஸ்ரீகிருஷ்ணர் கர்ம யோகத்தை நான்கு விதமாகப் பார்க்கிறார். ஏற்கனவே நாம் மூன்று விதமான கர்மங்களைப் பார்த்தோம். சாத்துவீக கர்மம், ராஜசீக கர்மம் மற்றும் தாமச கர்மம். கிருஷ்ணர் சாத்துவீக கர்மத்தை மிக உன்னதமான செயலாகப் பார்க்கிறார். சாத்துவீக குணத்தினர் எதையும் மற்றவர்க்குக் கொடுக்கும் இயல்பினர். தனக்காக வாழாது பிறருக்காக வாழ்பவர். இவர்களது ஆன்மீக வளர்ச்சியும் துரிதமாக இருக்கும்.

ராஜசீக குணத்தினர் நான் மற்றும் என் குடும்பம் என்ற வட்டத்திற்குள் இருப்பவர்; இவர்களது செயல்களில் சுயநலமும் கலந்திருக்கும்; ஆன்மீக வளர்ச்சி சிறிது குறைவாகவே இருக்கும். இதனை மத்யம கர்மா என்பர்.

தாமச குணத்தினர், தனக்கும், தன குடும்பத்திற்கும் ஏதேனும் செய்ய வேண்டுமெனில், அதற்காக மற்றவரை அழிக்கவும் தயங்க மாட்டார். இதனை அதம கர்மா என்பர். ஆன்மீக வளர்ச்சி என்பது இங்கு இல்லை; மாறாக, ஆன்மீகப் பின்னடைவே ஏற்படும்.

கிருஷ்ணர் இதனால் ஒரு கர்ம யோகி என்பவன், சாத்துவீக கர்மங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; ராஜச கர்மங்கள் இருந்தாலும், மெல்ல அவற்றைக் குறைக்க வேண்டும். தாமச கர்மங்கள் அறவே கூடாது என்கிறார்.

இதனுடன் நமது தர்ம சாத்திரங்கள் ஐந்து விதமான கர்மங்களை அனைவருமே செய்ய வேண்டும் என்கின்றன. இவற்றை முறையே தேவ யஞம், பித்ரு யஞம், பிரும்ம யஞம், மனுஷ்ய யஞம் மற்றும் பூத யஞம் என்ற தார்மீக வழிகளைக் கூறுகின்றன. இந்த ஐந்து மகா யஞங்களும் எல்லா மனிதருக்கும் பொது. இவை சமூக மேம்பாட்டிற்கும், ஒழுக்கமான வாழ்க்கை முறைக்கும் வழி வகுக்கும்.

தேவ யஞம் என்பது பிரார்த்தனைகளுடன் தத்தம் மத வழிபாட்டு முறைகளுக்கு ஏற்ப செய்யும் செயல்கள் அல்லது நடவடிக்கைகள்.

பித்ரு யஞம் என்பது நமது பெற்றோகளுக்கும் முன்னோர்களுக்கும் நாம் செலுத்தும் மரியாதை மற்றும் வண்ணக்கங்கள். செல்வத்தைத் தேடி ஓடிக்கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு இவற்றுக்கெல்லாம் நேரம் இருப்பதில்லை. இதற்காக எப்படியாவது சமயம் ஒதுக்க வேண்டும். இதைச் செய்தாலே, முதியோர் இல்லங்களும் காப்பகங்களும் குறையும்.

பிரும்ம யஞம் அல்லது ரிஷி யஞம் என்பது நமது வேத நூல்களை வணங்குவது மற்றும் போற்றிப் பாதுகாப்பது பற்றியது. வேத பாராயணம் மற்றும் புராணங்களைப் படித்து அறிவது முதலிய செயல்களே இவற்றை நமக்குத் தந்த அந்த ரிஷிகளுக்கு நாம் காட்டும் வந்தனமாகும்.

அடுத்து வரும் மனுஷ்ய யக்னம் என்பது சமூக சேவை என்பதே. இல்லாதவருக்கு உதவுவது, அன்னதானம் செய்வது, முதியோர் மற்றும் அநாதை இல்லங்களுக்குச் சென்று சேவை புரிவது இதன் கீழ் அடங்கும். நம் முன்னோர்கள் சமூக சேவையையும் ஒரு யஞமாகத் தான் பார்த்தார்கள்.

கடைசியில் வருவது, பூத யக்னம். நமது சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதும், செடி கொடிகளை வளர்த்து விலங்குகளுக்கும் பாதுகாப்பு தருவதுமே பூத யஞமாகும்.

இந்த ஐந்து விதமான யஞங்களும் எல்லா மனிதரும் கட்டாயமாகச் செய்ய வேண்டுபவை. இப்படிப்பட்ட செயல்பாடுகள் ஒவ்வொரு மனிதனும் சமூகத்திற்கும் தன் நாட்டிற்கும் பங்களிப்பவனாக மாற்றும். இன்று இருப்பதைப் போல நுகர்வோர் சமூகமாக இருக்காது. இப்படிப்பட்ட மனிதன் சமூகத்திற்கே ஒரு வரமாக மாறுகிறான்.

ஆன்மீக ரீதியாக முதிர்ச்சியடைந்தவர்கள் கர்ம யோகத்தை இறைவனுக்குச் செய்யும் யஞமாகப் பார்ப்பார். இவர்களுக்கு, வாழ்க்கையே ஒரு வந்தனத்திற்கு உரிய விஷயமாகி விடும். இத்தகைய பக்திமானுக்கு எதை உண்டாலும், அது இறைவனுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நிவேதனமாக மாறும்; நடக்கும் நேரமெல்லாம் இறைவனுக்குச் செய்யும் பிரதக்ஷிணமாகும்; செய்யும் வேலை இறைவனுக்குச் செய்யும் பூஜை ஆகும். காணும் உலகம் இறைவன் வியாபித்து நிற்கும் அவனது சொரூபம். இத்தகைய மனோபாவமே செய்யும் எல்லாச் செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் பக்குவத்தைக் கொடுக்கும்; அதோடு, அந்தச் செயலின் பயன், இறைவனது வரப்பிரசாதமாக மாறி விடும்.

எவன் ஒருவன் இந்த மனோபாவம் இன்றி இறைவனை நினைக்காமல், தான் தனது என்ற எண்ணத்தோடு செயல்படுவானோ, அவன் உணரும் பந்தங்கள் பற்றாக மாறி அவனை வதைக்கும். பூஜனமாகச் செய்யப்படும் செயல் பற்றிலிருந்து விடுதலை அளிக்கும்; பந்தத்தோடு செய்யப்படும் செயல் பற்றுக்குள்ளே ஒருவனை இழுத்து சம்சார சாகரத்தில் தள்ளும். அதாவது பக்தி இல்லாமல் செய்யப்படும் செயல் பந்தம் ஏற்படுத்தும்; பக்தியோடு செய்யப்படும் செயல் யஞமாக மாறி பற்றிலிருந்து விடுவிக்கும்.

வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றி சிறப்பாகவும் ஒழுக்கத்துடனும் வாழ நமக்கு ஸ்ரீகிருஷ்ணர் தந்த கையேடு கர்ம யோகம் என்றால் மிகையில்லை. சுவாமி சின்மயானந்தர் கூறியதை இங்கு நினைவு கூர்தல் மிகவும் அவசியம்: ‘இறைவன் நமக்குத் தந்திருப்பது அவன் நமக்களித்த பரிசு. அவனது பரிசை நாம் என்ன செய்வோம் என்பது பகவானுக்கு நாம் அளிக்கும் பரிசு.’

***************