இது ஒரு ஆங்கிலப் படம் பெயர் “FEDORA”. ” பெடோரா”.. சத்தியம் தியேட்டரில் பார்த்தது. எனக்குத் தெரிந்த ஒருவர் அங்கு வேலையில் இருந்தார். அவருக்கு போன் செய்து இந்த படத்துக்கு 6 டிக்கட் வேண்டும் எடுத்து வைக்கவும் என்றேன். “நேரே வந்தே வாங்கிக் கொள்ளலாம் கும்பலே இல்லை வேறு ஏதாவது படம் டிக்கெட் வேணுமா? கமல் படம் புல் ஹவுஸா ஓடுது அதுக்கு வேண்டுமா” என்றார். ” இல்லை இந்தப் படம் தான் வேண்டும். நண்பர்களை நேரே தியேட்டருக்கு வரச்சொல்லி விட்டேன் “. என்று சொல்லிவிட்டுச் சென்றேன். நிறைய சீட் காலியாக இருந்தது. தப்பு செய்து விட்டோமோ, கமல் படம் போயிருக்கலாமோ .. என்று படம் ஆரம்பிக்கும் வரை தோன்றியது. நல்ல வேளை, நல்ல, மிக வித்தியாசமான படத்தை தவிர விட்டிருப்போம் என்று பேசிக் கொண்டோம்..
அதன் டிரைலர் இதோ:
ஒரு அழகான பெண் ஓடிப்போய் ப்ளாட்பாரத்துக்கு வந்து கொண்டிருக்கும் வண்டியின் முன் குதித்து தற்கொலை செய்து கொள்வதோடு படம் தொடங்கியது. டைடில் ஓடும்போது அது நடந்து விடும். பின்னர் பெரிய வரிசையில் நிறைய பேர் நின்று இறுதி அஞ்சலி செய்வதில் படம் தொடங்கும். பின்னர் ஒரு 50/55 வயது கதாநாயகனின் கோணத்தில் கதை நகரும்.
இறந்தது, “பெடோரா” என்னும், மிக மிகப் பிரபல நடிகை. அவள் அழகுக்கும், நம்ப முடியாத இளமைக்கும் பெயர் போனவர். இரண்டு முறை நடிப்பிலிருந்து திடீர் என்று விலகியவர்.
பல வருடங்களுக்கு முன் எல்லோரும் பிரமிக்கும் இளமையும் அழகும் கொண்ட, திரை உலகில் கோலோச்சிவந்த அவள் திடீரென்று ஒருநாள் நடிப்பதை நிறுத்திவிட்டு யாரும் காணமுடியாதபடி, அவளின் சொந்தமான, ஒரு தீவில் அரண்மனை போன்ற வீட்டில், வெளி உலகிலிருந்து யாரும் நுழைய முடியாதபடி வாழத் துவங்கினாள். அவளோடு, ஒரு டாக்டர், வேறு இரண்டு பேர் ஒரு பெண், ஒரு நர்ஸ், காவலாளி என்று ஒரு குறுகிய வட்டம் மட்டுமே இருந்தனர். அந்த கதாநாயகனின் ப்ளாஷ் பேக், அவ்வப்போது சில நிகழ்கால நிகழ்வுகள் என்று கதை நகரும். அதைப் பார்ப்போம்.
பெடோரா – மிக மிக மிகப் பெரிய, அழகான.. எல்லாவற்றிற்கும் மேல் இளமையாக கோலோச்சி வந்த நடிகை. அவளது இளமைக்காக ஒரு டாக்டர், அழகுக் கலை நிபுணர் (beautician / dietician), நர்ஸ் என்று ஒரு கூட்டமே வேலை செய்து கொண்டிருந்தது. அவளுக்கு ஒரு மகள் இருப்பாள். அவளை வெளி உலகுக்குத் தெரியாது. அவள் ஒரு ஹாஸ்டலில் இருப்பாள். யாருக்கும் தெரியாமல் போய் பார்ப்பாள். எத்தனை வசதிகள் செய்து கொடுக்க முடியுமோ செய்தி கொடுப்பாள். ஏராளமான பொருட்கள் வாங்கிக் கொண்டு போவாள். ஆனால் ரகசியமாகத்தான். அவளோடு எங்கும் செல்ல மாட்டாள். அந்த முறை அன்போடும், ஆசையோடும் .. “அம்மா…. ” என்று கட்டிக் கொண்டு எங்கேயாவது போக வேண்டும் நீ என் அம்மா என்று என் நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்று கெஞ்சுவாள். “முடியவே முடியாது. ஏன் என்று இப்போது உனக்குப் புரியாது. ” என்று சொல்லுவாள். பெண் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு உள்ளே போய் விடுவாள். அவளுக்கு மகள் இருப்பது வெளி உலகுக்குத் தெரியாது.
ஒருமுறை அவளுக்கு முகத்தில் அழகுக்காக ஏதோ ஒரு கலவையைத் தடவி ( new variety of facial packing) வெகு நேரம் கழித்துக் கத்திரிக்கோல் கொண்டு இதை எடுப்பார்கள். அதை செய்யும் போத அந்த டாக்டரின் முகத்தை மட்டும் காட்டுவார்கள். அந்த எக்ஸ்பரஷன்… சூப்பர். என்னமோ தப்பு என்று தெரியும். அவளுக்கும் என்னமோ தப்பு என்று தெரியும். கண்ணாடியில் பார்த்துவிட்டு பெரிதாகக் கத்திக் கதறுவாள். முகம் ஒருமாதிரி வெந்து கோரமாக மாரி இருக்கும். இந்த முகத்தை ஒருவரும் பார்த்து விடக்கூடாது, தன் அழகான, இளமை முகம் மட்டுமே மக்கள் மனதில் நிற்க வேண்டும் என்று உடனே கண்காணாத தீவுக்குப் போய் விடுவாள்.
அவள் ஏன் அவ்வளவு முன்னணி நக்ஷத்திரமாக இருந்த போது விலகினாள், என்ன ஆயிற்று என்பது யாருக்கும் தெரியாத புதிர்.
கதையின் நாயகனுக்கு பலத்த சந்தேகம். என்னமோ வெளி உலகுக்குத் தெரியாத ரகசியம் இதில் இருப்பதாக எண்ணி அந்த தீவுக்குப் போக எண்ணி அங்கே போய் ஒரு ஹோட்டலில் தங்கி முயற்சிக்கிறான். அவன் பெரோடாவிடம் மிக நெருக்கமாக பழகிய காலம் உண்டு. அவள் மிகப் பிரபலமாக இருந்த காலத்தில் அவளோடு சில நாட்கள் ஒரு ரிசார்ட்டில் யாருக்கும் தெரியாமல் தங்கி இருக்கிறார்கள். எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று எண்ணுகிறான்.
ஒருநாள் ஒரு காரில் பெரோடாவை ஏற்றிக் கொண்டு ஒருவன் வருவான். அவன் கீழே இறங்கி வெளியே வருவதற்குள் அவள் வேக வேகமாக அவன் கண்ணில் படாமல் ஒரு கடைக்குப் போய் கடைக் காரனிடம் ஒரு பாக்கெட் போதை மாத்திரை, மருந்து என்று ஏதோ கேட்பாள். சிறு வாக்கு வாதத்துக்குப்பின் கொடுப்பான். பணம் கேட்கும் போது “இப்போது இல்லை, இந்த வாட்ச்சை வைத்துக் கொள், பின்னர் தருகிறேன்” என்று மிக விலைமதிப்பு மிக்க வாட்ச்சை கழட்டுவாள். அவன் “பணம் இல்லை என்றால் பாக்கெட் இல்லை” என்று பிடுங்கி உள்ளே வைத்து விடுவான். அவளை தொடந்து அங்குவந்த நாயகன் “பெடோரா, நீ எப்படி இருக்கிறாய்? என்னை நினைவு இருக்கிறதா? ” என்று கேட்பான். ஒரு உணர்ச்சியும் இல்லாமல் ” கொஞ்சம் பணம் கொடுக்க முடியுமா? ” என்று கேட்பாள். பணம் பெற்றுக் கொண்டதும் அதைக் கொடுத்து அந்த பாக்கெட்டை வாங்கிக் கொண்டு. யாரையோ பார்த்து பயந்து ஓடுவாள். அந்த ஆள் அவளை கட்டாயப் படுத்தி காரில் ஏற்றிச் சென்று விடுவான்.
வேறு ஒருநாள் அந்தத் தீவிலிருந்து வெளியே போட்டில் வந்த ஒருவரிடம் ஒரு பைலைக் கொடுத்து “இதில் ஒரு கதை இருக்கிறது. பெரோடாவிடம் நடிக்கச் சொல்லி பேச வந்திருக்கிறேன் என்கிறான்.” அவன் பதிலேதும் சொல்லாமல் அதை எடுத்துக் கொண்டு போய் விடுகிறான்.
அடுத்த நாள் அந்த ஹோட்டலுக்கு போன் வந்து அவனை அழைக்கிறார்கள்.
இங்கு பயங்கர பாதுகாப்பு… சக்கர நாற்காலியில் இருந்த ஒரு வயதான பெண் முகத்தில் சல்லாத்துணி அணிந்து கொண்டு வருவாள் அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கட்டளையாக ஏற்று எல்லோரும் செயல் படுவார்கள். அவள்தான் பெரோடாவுக்கு எல்லாமாக (care taker) இருப்பவள். இது திரை உலகுக்குத் தெரியும்.
“உங்கள் படத்தில் பெடோரா நடிக்க மாட்டாள். இந்தக் கதையின் முடிவில் இவள் ரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருக்கிறீர்கள். அது சரி இல்லை அவளுக்குப் பிடிக்கவில்லை” என்று சொல்வாள்.
அப்போது மாடி பால்கனியில் இருந்து பெடோரா “இல்லை இல்லை அது நல்ல முடிவு. எனக்குப் பிடித்த முடிவு” என்று உரக்கச் சொல்வாள்.
அந்த வயதான பெண். “அவளை உள்ளே அழைத்துக் கொண்டு போங்கள்” என்று கட்டளை இடுவாள். பின் அவன் பக்கம் திருப்பி. “நீங்கள் போகலாம்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் விடுவாள்.
இவன் இறுதி அஞ்சலி செலுத்தும் வரிசையில் நிற்கும் போது அவனுக்கு இந்த நிகழ்வுகள், நினைவில் ஓடும். அவன் வரிசையை விட்டு தனியாக ஒளிந்து கொள்வான். நடுவில் அமர்ந்திருக்கும் வயதான பெண் வெளி கதவை மூடச் சொல்வாள். இதுவரை வந்தவர் வெளியேறிய உடன். மறை விலிருந்து அவனை வெளியே அழைப்பாள். “ஏன் ஒளிந்திருக்கிறீர்கள். என்ன காரணம் ?
“என்ன நடக்கிறது. இறந்தது பெடோராவாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன். என்ன மேக்கப் செய்தாலும் கைகளில் சுருக்கம் இருக்கும். இங்கு இல்லை.”
“நீங்கள் சரி. நான்தான் பெடோரா. என்னுடைய வெந்து போய் விகாரமாகிப் போன முகத்தைக் காட்ட விரும்பாமல் நான் உடனே விலகி விட்டேன். இளமையான, அழகான பெண்ணாகவே எல்லார் மனதிலும், நினைவில் நிலைக்க நினைத்தேன்.”
“உங்களைப்போலவே உள்ள இவள் யார்? “
” இது என் மகள். இவர் இவளின் அப்பா” என்று பக்கத்தில் உள்ள வரைக் காட்டுவார்.
“நான் இப்படி ஆனது பற்றி கேள்விப்பட்டு என் மகள் வந்தாள். என்னிடம் கோபித்துக் கொண்டு போனவள் என்னை க் கட்டிக்கொண்டு அழுது ஆறுதல் சொன்னாள். நாங்கள் உலகத்தின் பார்வையில் இருந்து விலகி வாழத் தொடங்கினோம். சில ஆண்டுகளுப்பின் எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் போவதாக பரிசளிப்பும் கமிட்டி முடிவு செய்தது. நான் பரிசு வாங்கக்கூட போகவில்லை. வரமுடியாது என்று சொல்லிவிட்டேன். அதன் தலைவர் இங்கேயே வந்து பரிசைத்தர விளைந்த போது, என்ன செய்வது என்று தெரியாத போது, என் மகளை விட்டு அதை வாங்க வைக்கலாம், முகத்தை துணியால் மூடிக் கொண்டு வாங்க அனுப்பினேன். புகைப்படம் எடுத்தபோது காற்றால் துணி விலகி எடுக்கப் பட்ட படம் எல்லா இதழிலும் வெளி வந்தது. “பெடோரா இன்னும் இளமையாகவும், அழகாகவும் இருக்கிறாள்” என்று ஒரே பேச்சாக மாறியது. நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கியது. இப்போது தான் இந்த எண்ணம் வந்தது . அவளையே பெடோரா என்று நடிக்க வைத்தேன். இந்த வயதில் இவ்வளவு இளமையா, அழகா என்று என் வயதையும், இவள் அழகையும் இணைத்து ஆச்சரியப்படத் தொடங்கி வாய்ப்புகள் குவிந்தது. அவளும் இந்த இடத்தை விட்டு வெளி உலகில் சந்தோஷமாக இருந்தாள். “
“பின் என்ன ஆயிற்று? “..
” அவள் மேல் ஒரு நடிகருக்கு ஆசை உண்டானது. இவளுக்கும் பிடித்துப் போனது. வெளி உலகக் கணக்குப்படி இவளின் பாதி வயதுதான் அவனுக்கு. பெரிய கேவலமாகும் பெயர் கெட்டுப் போகும் என்று தடுத்தேன். அன்று முதல் பெடோரா என்ற பெயரையே வெறுத்து தன் பெயரை உபயோகிக்க ஆசைப்பட்டாள். பொய் வெளிப்பட்டால் எவ்வளவு அவமானம். அவளிடம் பேசினேன் உனக்கு எவ்வளவு புகழையும் பெருமையையும் நான் வாங்கிக் கொடுத்தேன். அதை ஏன் கெடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டேன். அது எனக்கு இல்லையே பெடோராவான உனக்குத் தானே என்று அழுதாள். மீண்டும் வெளி உலகில் இருந்து விலகினோம். இவள் போதைக்கு அடிமை ஆனாள். விபரீதமாக நடக்களானாள். டாக்டர் மூலம் சிகிச்சை அளித்தோம். (இத்தனையும் காட்சிகளாகக் காட்டப்படும். வெறும் பேச்சாக இல்லை).
அப்போதுதான் நீங்க ஒரு கதை கொண்டு வந்தீர்கள், படம் எடுக்க. அப்போது வெளியில் அவளைப் பார்த்துவிட்டு நான் என்று நினைத்து அவளிடம் பேசினீர்கள். இப்போ எல்லாம் முடிந்து விட்டது. நல்ல புகழையும், செல்வாக்கையும், செல்வத்தையும், ஏன் என்னையும் விட்டு விட்டு போய்விட்டாள். அதுவும் நீங்கள் கொண்டுவந்த கதையின் முடிவில் சொல்லியிருந்தபடி தற்கொலை செய்துகொண்டு” என்று சொல்லி கண் கலங்குவாள்.
அவனும் கண் கலங்கி விட்டு விலகு வான்.
பின்னர் மீண்டும் அவள் உடலுக்கு அஞ்சலி செலுத்த பெரிய வரிசையில் ரசிகர்களும், திரை உலகத்தவரும் வருவார்கள். அதில் அந்தப் பெண் காதலித்த அந்த மனிதனும் வருவான். கண் கலங்கி மலர் வளையம் வைத்து விட்டு நகர்வான்.
பின்னர் நம் கதாநாயகனின் குரலில் “சில மாதங்களுக்குப் பின், பெடோராவின் பாதுகாவலராக இருந்த (நிஜமான பெடோரா) இறந்த செய்தி பத்திரிகையில் வந்தது” என்று படம் முடியும்.
இந்த கருத்தை (plot) வைத்து ஏன் தமிழில் யாரும் படம் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.
முழுப் படத்தையும் பார்க்க விரும்பும் நண்பர்களுக்காக இதோ:
