மந்த்ரா- பைரப்பா (கன்னடம்)
ஆங்கில மொழிபெயர்ப்பு- டாக்டர் ராமசுவாமி & சாந்தகுமாரி

இது புகழ்வாய்ந்த கன்னட எழுத்தாளர் பைரப்பாவின் புதினம். 2012-ல் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அருமையான புதினம் ஆனால் படிக்க நல்ல பொறுமையும் புரிதலும் வேண்டும். முழுக்க முழுக்க ஹிந்துஸ்தானி சங்கீதத்தைப் பற்றிய 685 பக்க நாவல்! ஒரு புகழ்வாய்ந்த சங்கீத மேதையின் கதையாகப் பின்னப்பட்டுள்ளது. சங்கீதம் பற்றிய பலவிதமான விளக்கங்கள். இந்த நூலை எழுதுவதற்காக அன்னார் வட இந்தியாவில் சில ஆண்டுகள் தங்கி இவ்விசையின் நுணுக்கங்களைப் பற்றி அறிந்து கொண்டார் என அறிகிறோம். எப்படிப்பட்ட முனைப்பு இருந்தால் இப்படி ஒருவர் செய்திருப்பார் என்பதே பிரமிக்க வைக்கிறது. இது போலவே இஸ்லாமியரின் வாழ்வு முறைகளைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு முஸ்லிம் நண்பரின் குடும்பத்துடன் ஆறு மாதங்கள் தங்கி இருந்தாராம். (திரை- ஆவரணா எனும் சர்ச்சைக்குட்பட்ட நாவல்). வியக்கத்தக்க மனிதர்.
சரி. முதலில் மந்த்ரா என்றால் என்ன? நானும் தடுமாறினேன். விளக்குவதற்கு ஹிந்துஸ்தானி இசையில் தேர்ந்த ஒரு நண்பரும் இல்லை. பின் புத்தகங்களைப் படித்து அறிந்து கொண்டவற்றை எளிமையாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது கதைக்கு மிகவும் முக்கியம்! ஏழு ஸ்வரங்களைக் கொண்ட மந்த்ராவானது கீழ் சுருதியில் ஒலிப்பது. அடித்தளமான ஆதார நாதமாக விளங்குவது எனலாமா? ஒவ்வொரு ராகத்திலும் மந்த்ரா பிடிபட்டுவிட்டால் இசைக்கலைஞனின் சங்கீதத் தேடல் பூர்த்தியானதாகக் கருதப்படும்.
கதைக்குள் போகலாமா?
மோஹன்லால் என ஒரு சங்கீத வித்வான். மிகவும் அற்புதமாகப் பாடுபவர். அவரிடம் கற்றுக்கொண்ட மது எனும் ஒரு சிஷ்யை அமெரிக்காவில் இருக்கிறாள். அவள் கணவன் விக்ரமிற்கு இவரிடம் பெரும் மதிப்பு. இவருடைய இருண்ட மறுபக்கம் அவன் அறியாதது. சிஷ்யையும் அவர் இதை மறந்து போயிருப்பாரென எண்ணுகிறாள். தனது திருமணத்திற்கு முன்பான அவருடனான உறவினை அவள் மறக்க முயல்கிறாள். ஆனால் அந்த குருவோ இப்போதும் கணவன் ஊரிலில்லாத சமயங்களில் அவளுடன் தனிமையில் இருக்க விரும்புகிறார். அவள் அதிர்ச்சியுறுகிறாள். தனக்குத் திருமணம் ஆகிவிட்டதால் இனி அவர் தன்னைத் தொந்தரவு செய்ய மாட்டார் என எண்ணுகிறாள். ஆனால் இன்னும் சங்கீதத்தை அவள் கற்று உயரங்களுக்குச் செல்ல வேண்டும் எனும் ஆவல் அவளிடம் உண்டு. அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார் மோஹன்லால். குருவிற்குப் பின்பாட்டுப் பாட வேறு யாராவது வந்துவிட்டால் தன்னை விட்டு அவர் விலகிவிட்டார் என்று உணர்ந்து கொள்கிறாள்.
இவ்வாறு செல்லும் கதை மோஹன்லாலின் முந்தைய வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. அவர் ஒரு மஹாராஜாவின் சிஷ்யராக இருந்தபோது எவ்வாறு ஒரு பெண்ணுடன் இருந்தார்; பின் மும்பை வந்ததும் ஒரு படிப்பறிவற்ற ஏழைப்பெண்ணை மணந்து கொண்டது, உடனேயே, இன்னொரு பெண்ணையும் மணம்புரிந்து கொண்டது என அவருடைய பல பலவீனங்கள் சுட்டப்படுகின்றன. இவற்றினூடே ஒரு நாட்டிய மணிக்கு, அவளுடைய நடனத்திற்குப் பாடுபவராகவும் சில ஆண்டுகளைக் கழிக்கிறார் மோஹன்லால். சாதாரணமாகப் பாடகர்கள், அதுவும் முன்னணியில் இருக்கும் மோஹன்லால் போன்றோர் நாட்டியமாடுபவர்களுக்குப் பாடித் தங்கள் புகழைக் கெடுத்துக் கொள்ள மாட்டார்கள். மோஹன்லால் ஒரு நெறிமுறையற்ற வாழ்க்கை வாழ்பவர். அங்குமிங்கும் தாவுவதே அவருடைய வழக்கம்.
அதுவுமில்லாமல், அவர் பாடும்போது அருமையான படைப்புகளைக் கண்டு ரசித்து அவரைப் புகழும் கூட்டமும் உண்டு. இப்படியாக வாழ்க்கைப்படகு சுழன்றடித்துச் சென்று கொண்டிருக்கிறது.
தான் வளர்ந்து சங்கீதம் கற்ற இடத்திற்குச் சென்று ஒரு குருகுலம் ஆரம்பிக்க எண்ணுகிறார் மோஹன்லால். இதற்காக அவரது கடைசி இசை நிகழ்ச்சி ஏற்பாடாகிறது. தான் கண்டுபிடித்த ஓம்காரா எனும் ராகத்தைப் பாட எண்ணுகிறார். ஆனால் மந்த்ராவை எட்ட அவரால் முடியவில்லை. என்ன முயன்றும் கடைசிவரை இயலவில்லை. விரக்தியில் மனமுடைந்து போகிறார். ஜனக்கூட்டம் கலைந்து போகத் தொடங்குகிறது.
இதற்கிடையே கணவனிடம் உண்மையைக்கூறி விவாகரத்து பெற்று இந்தியா திரும்பிவிட்ட மதுமிதா பல இடையூறுகளுக்கிடையே நன்கு முயன்று சங்கீதத்தை மேம்படுத்திக் கொள்கிறாள். மோஹன்லாலின் வீழ்ச்சி அவளுடைய எழுச்சியை உறுதிப் படுத்தும் என ஒரு நண்பர் கூறுவதாகப் புதினம் முடிவுறுகிறது.
இதனை நான் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாகப் படித்தேன். இசையுலகின் தகிடுதத்தங்கள் ஒருபுறம் அருவருப்பையே உண்டு பண்ணின. இசை உயர்வானது; சத்தியமானது; ஆனால் அதற்காக எதையும் இழக்கத் தயாராக இருக்கும் ஒரு சாரர், எதை வேண்டுமானாலும் குரு தட்சிணையாகக் கேட்கும் குரு! என்னவொரு முரண்பாடு. இருப்பினும், சிறிது சிறிதாகப் படித்து முடித்தேன். உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. முந்தைய தலைமுறையினரான நம்மால்தான் அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலவில்லையோ எனத் தோன்றுகிறது.
இந்த நாவலுக்காக ஆசிரியருக்கு சரஸ்வதி சம்மான் பரிசு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
