பரமன் ரொம்பவும் கவலையில் மூழ்கியிருந்தார். தலைவலி பின்னி எடுத்தது. உடனே முடிவெடுத்தார். அவரின் குடும்ப டாக்டரின் கிளினிக்கிற்கு விஜயமேற்கொண்டார்.
டாக்டருக்கு பரமன் குடும்பம் பற்றிய விவரமெல்லம் நன்கு தெரியும். டாக்டர் அந்த காலத்து மனிதர். ரொம்ப சிம்பிள் டைப். அவரின் லெட்டர் பேட் புக் கூட அவர் தன் சொந்த செலவில் பிரிண்ட் பண்ணுவார். மெடிக்கல் ஷாப் கிளினிக் பக்கத்தில் வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. முதலில் இரண்டு ரூபாய் டாக்டர் என்று பெயர் வாங்கியவர். பின்னர் விலைவாசி ஏற ஏற , ஐந்து , பத்து என்றாகி இப்போது இருபது வாங்கிக் கொண்டிருக்கிறார். கண்ணைப் பார்த்து, நாடி பிடித்தே ஒருவரின் வியாதியைப் புட்டு புட்டு வைக்கும் திறன் படைத்தவர். அந்த வட்டாரத்தில் டாக்டரின் ராசி ரொம்ப பிரபலம்.
‘உங்களுக்கு வந்திருக்கிறது தலைவலி அல்ல. வெறும் கவலைத் தான். ஸ்ட்ரஸ் மட்டும். உங்க பையன் பிளஸ்-2ல் நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கி, நீட் பரிட்சையிலும் நல்ல ரேங்க் வாங்கினா நல்ல மெடிக்கல் காலேஜேல் சீட் கிடைக்கும்னு உங்க விருப்பம். ஆனா என்ன நடக்குமோன்னு ஒரே கவலை, டென்ஷன். எக்சாம் ரிசல்ட் வர்ற வரைக்கும் இப்படித் தான் தலைவலி வந்து வந்து போகும். இந்த கவலையைத் தூக்கி மூலையிலப் போட்டு வச்சா உங்க தலைவலி பறந்தேப் போயிடும். ஆனா, மனசு அப்படி கவலையைத் தூக்கி வீச முன் வருமா ?. யோகா மெடிடேஷன்னு போய் வாங்க. எல்லாம் நல்லதே நடக்கும்னு நினைங்க ‘.
‘ஆனா டாக்டர் !. வேற எதாவது குறைபாடு இருக்குமா?. வைட்டமின், தைராயிட் இப்படி என்னனோமோ ?. எனக்கும் வயசாயிட்டுருக்கு இல்லையா ?’. பரமன் வினவினார்.
‘சரி. உங்க ஆசையை ஏன் கெடுக்கணும். ஒரு சில டெஸ்ட் எழுதி குடுக்கிறேன். ரிபோர்ட்டோடு வாங்க’.
டாக்டர் சொன்ன மாதிரியே டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாம் நார்மலாகத் தான் இருந்தன .
பரமனின் மகன் மதன் நீட் தேர்வில் தேர்வாகி நல்ல காலேஜில் சேர்ந்தும் விட்டான். பரமன் தலைவலி இல்லாமல் நிம்மதியாக இருந்தார் ஒரு ஐந்து வருடங்கள் வரை.
‘டாக்டர், இப்பவும் திரும்ப திரும்ப அப்பப்போ தலைவலி வருது ‘ என்றவாறே டாக்டரிடம் வந்தார் பரமன்.
டாக்டர் வியந்தார்.
‘என்ன ! , இப்ப தான் பையன் டாக்டர் படிப்பு முடிக்கப் போறான். இப்போ என்ன கவலை உங்களுக்கு?’.
‘இல்ல டாக்டர். இப்ப எனக்கு கவலை ஜாஸ்தி ஆய்டிச்சி. படிப்பு முடிச்சு நல்ல வேலை கிடைக்குமா? . கிளினிக் வச்சா ஜனங்க வருவார்களா.?. இவன் கூட படிச்ச பிரண்ட்ஸ் எல்லாம் பெரிய IT கம்பெனியில சேர்ந்து லட்சம் லட்சமா வாங்கறாங்க. ஒருத்தன் வெளிநாடு அமெரிக்கா போய்ட்டான். இன்னொருத்தன் சொந்த வீடு கூடக் கட்டிட்டான். மேரேஜ்-ம் ஆகப் போவுது. இதெல்லாம் நினச்சா தலைவலி வந்திடறது. இவன் எப்போ எப்படி எங்கே செட்டில் ஆவப் போறானோ?. என்னப் பண்றது.?’
‘இருந்தாலும் நீங்க கொஞ்சம் ஓவரா தான் திங்க் பண்றீங்க. இனிமே அதெல்லாம் அவன் லைஃப் . நீங்க உங்க லைஃப் மாத்திரம் பார்த்தாப் போறுமே . ஒண்ணு பண்ணுங்க. எனக்கும் என்பது மேலே வயசாகுது. என்கிட்டே அவன் ஜூனியர் டாக்டரா இந்த கிளினிக்-ல இருக்கட்டும். அப்புறம் அவனே நடத்தட்டும். சரியா ?. ஆனா ஒண்ணு !.’.
பரமன் கொஞ்சம் உள்ளூர சந்தோஷப்பட்டாலும் ‘ஆனா’ கொக்கி போடுகிறாரே ! என்று நினைத்தார்.
டாக்டரே தொடர்ந்தார்.
‘வேற ஒண்ணுமில்ல. நா இந்த கிளினிக்ல ரொம்ப கம்மியா பீஸ் வாங்கிறேன். நீங்க இருநூறு முந்நூறுன்னு எக்கச்சக்கமா எல்லாம் வாங்கக் கூடாது. எனக்கு ஜனங்களுக்கு சேவை பண்றது தான் முக்கியம். இதுக்கு சம்மதமென்னா ஓகே’.
பரமன் சிந்திக்க ஆரம்பித்தார். ‘மகன் மெடிக்கல் படிக்க வங்கியில் அம்பது லட்சம் கடன் வாங்கியது, அதுக்கு கட்ட வேண்டிய EMI மனதில் படமெடுத்து பயமுறுத்தியது. இவர் மாதிரி 10 , 20 பீஸ் வாங்கினா எப்போ EMI கட்டி முடியறது ?. சினிமாவில வேணுமின்னா அஞ்சு ரூபா டாக்டர் சாத்தியமாகலாம். நிஜத்தில் ?. இல்ல, நான் ஆயுசு முழுக்க கடன்காரனா இருந்து போக வேண்டியது தானோ? ‘.
பரமன் திரும்ப கவலைப் பட ஆரம்பித்தார். ஆமாம், இது வெறும் கவலை அல்ல . நிஜமான கவலைத் தான்.
