நெருநல் உளனொருவன்-2

Safe Driving For The Ghats - Things To Keep In Mind - Tamil DriveSpark

“ ஏம்பா டிரைவர் ஸ்டெப்னி இருக்கில்ல.. சீக்கிரம் மாத்து” என்றேன்.

“ இதோ மாத்தறேன் “ என்று சொல்லிவிட்டு டிக்கியைத் திறக்க இறங்கினான்.

பின்னால் திரும்பிப் பார்த்தேன்.. நடராஜன் மடிமேல் வெள்ளைத் துணியால் கட்டுப் போடப்பட்ட தாமஸ் தலை சாயந்திருந்தது. கண்களை மூடியபடி இருந்த நடராஜனை நான் எழுப்ப விரும்பவில்லை. சென்ற இரவு எங்கள் யாருக்குமே தூக்கம் கிடையாது.

இரண்டு நாட்கள் முன்புதான், மறுபடியும் லீவு எடுத்துக் கொண்டு தாமஸ் சென்னை சென்று திரும்பினான்.  அவன் குழந்தைக்கு “பாப்டிஸம்” நிகழ்ச்சி. பெயர் சூட்டுவிழா. ஆண் குழந்தை.  . பேரென்ன என்று கேட்டோம் . “ஜெரோம்” என்று சொன்னான். இப்போது போல அப்போதெல்லாம் மொபைல் இல்லாததால் புகைப்படம் எதுவும் அவன் எடுத்து வரவில்லை. உற்சாகம் குறைந்து காணப்பட்டான். என்னடா என்று கேட்டால்

“ஹேய் ஐ மிஸ் மை லிட்டில் ஜெரோம்” என்று சொல்லிவிட்டு அகன்றுவிட்டான்.

அன்று இரவு படுக்கையில் படுத்தபடி முனகிக் கொண்டு இருந்தான். காலையில் ஹை ஃபீவர் . வாந்தி எல்லாம். பல்கலைக்கழக மருத்துவர்கள் அவனை மதுரை மருத்துவ மனையில் சேர்க்கச் சொல்லிவிட்டனர். பலகலைக்கழகத்தின் தொடர்பிலுள்ள மிகப் பெரிய தனியார் மருத்துவமனை. அங்குதான் சேர்க்கப்பட்டான். லீவ் சொல்லிவிட்டு நானும் அவனோடு இருந்தேன். அன்று இரவு ஒன்பது மணி வரை மருத்துவ மனையில் அவனோடு இருந்தேன்.

“லாட் ஆஃப் ப்ளூயிட் லாஸ் “ என்று சொல்லி ட்ரிப்ஸ் ஏற்றினார்கள். இரண்டு முறை பாத்ரூம் செல்லவேண்டி இருந்தது. நான்தான் உடன் சென்று உதவி செய்தேன். மிகத் தளர்ந்து போயிருந்தான். இரவு முழுக்க இங்கேயே தங்கிவிடுகிறேன் என்றால் “வேண்டாம் நீ ஹாஸ்டல் போய்விடு “ என்றான். அங்கிருந்து 13 கிலோமீட்டர் என் ஸ்கூட்டரில் திரும்பிவந்தேன்.

என்னோடு உடன் இருந்த நண்பர்களுக்கு விஷயத்தை தெரிவித்து விட்டு பத்து மணி அளவில் உறங்கச் சென்றேன். விடுதியிலிருந்து மறுநாள் காலை தாமஸைப் பார்க்கப் போகலாம் என்று நாங்கள் ஐந்து நண்பர்கள் தீர்மானித்தோம்.

இரவு பதினோரு மணிக்கு யாரோ கதவைத் தட்டினார்கள். மருத்துவ மனையிலிருந்து ஃபோன் வந்திருப்பதாகவும் என்னைப் பேச அழைப்பதாகவும் சொன்னார்கள். செக்யூரிட்டி அறையிலிருந்த தொலைபேசியில் பேசினேன்.

“ஹலோ “

“ தாமஸ் என்கிற பேஷண்ட் கூட இருந்த அவர் ஃப்ரெண்ட் வி வி, சுப்பிரமணியன் நீங்கதானே “

“ ஆமாம் சொல்லுங்க”

“ நான் டியூட்டி டாக்டர் குமரேசன் பேசறேன். ஐயாம் சாரி டூ செ மிஸ்டர் தாமஸ் இஸ் நோ மோர் . ஹி பாஸ்ட் அவே டென் மினிட்ஸ் பேக் . காப்பாத்த முடியல. பாடி ரிசீவ் பண்ண நீங்களோ அல்லது அவங்க உறவுகாரங்களோ உடனே வாங்க. உங்க புரொஃபசர் கிருஷ்ணசாமி அவருக்கும் இன்ஃபார்ம் செய்துவிட்டோம்.”

“டாக்டர் என்ன சொல்லறீங்க ?நான் தாமஸை பாத்துட்டு இப்பத்தான் ஹாஸ்டலுக்குத் திரும்பினேன். நம்ப முடியல.. “ போனில் என்னால் மேலே பேச முடியல. தொலைபேசித் தொடர்பும் தூண்டிக்கப்பட்டு விட்டது.

இதற்குள் பல்கலைக்கழகத்தின் அலுவல் அறை திறக்கப்பட்டு அங்கிருந்த தொலைபேசி மூலம் முக்கியமான பலரை சீனியர் சூப்பரின்டெண்டன்ட் தொடர்பு கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானம் செய்யத் தொடங்கினர். என்ன நடந்தது என்று அப்போது எனக்குத் தெரியாது.

தனியாக இருக்கப் பிடிக்காமல் விடுதியில் நண்பர்களோடு இருந்த என்னை காலை ஆறு மணி அளவில் புரொஃபசர் எஸ். கே . அழைப்பதாக வாட்ச்மேன் வந்து சொன்னான், எங்கள் டிபார்ட்மெண்ட் லெக்சர் ஹாலில் எங்கள் வகுப்பு மாணவ மாணவியர் பலரும் வந்து அமர்ந்திருந்தனர். எல்லோர் முகத்திலும் சோகம் அப்பிக் கிடந்தது.

புரொஃபசர் எஸ். கே . உள்ளே நுழைந்தார்.

“ ஸ்டூடண்ட்ஸ் வி ஆர் சாரி டூ இன்ஃபார்ம் தெ சேட் டிமைஸ் ஆஃப் மிஸ்டர் தாமஸ்.  . மாணவராக இங்கே தங்கி படிக்கும் போது இந்த துர்மரணம் நிகழ்ந்ததால் பலகலைக்  கழகத்திற்கு சில கடமைகள் உண்டு. தாமஸ் வீட்டாரோடு தொடர்பு கொண்டு செய்தியைத் தெரிவித்த போது, “பாடியை” உடனே சென்னைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யச் சொன்னார்கள். இறுதி சடங்குகள் அங்குதான் செய்யப் போகிறார்கள். ஆம்புலன்ஸ் கிடைக்க நேரம் ஆகும் என்பதால் நாங்களே ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்துள்ளோம். இன்னும் அரைமணி அளவில் அந்த டாக்ஸியில் தாமஸ் உடல் சென்னைக்குக் கொண்டு செல்லப்படும்.

“பாடியை”த் தனியாக காரில் அனுப்ப முடியாது, இங்கிருந்து பாடியுடன் யாரேனும் செல்லவேண்டும். டாக்ஸி டிரைவர் தனியாக சென்னைவரை பாடியை வைத்துக் கொண்டு போகமுடியாது என்று சொல்லிவிட்டான். மருத்துவனை மற்றும் போலீஸ் சர்டிபிகேட் இருக்கிறது. அதை கையில் வைத்துக் கொண்டு யாரேனும் கூடச் சென்றால்தான் போகும் வழியில் “செக் போஸ்ட்” களில் தடை ஏதும் இன்றி வண்டி செல்ல முடியும்.

ஐ ஹாவ் அ ரெகுஸ்ட் டூ மேக். அவர் வகுப்பைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் காரில் உடன் செல்லவேண்டும். என்றார்.

தாமஸுக்கு நெருங்கிய நண்பன் நான் என்பது மட்டுமன்றி அங்கு இருந்தவரில் நான் ஒருவன்தான் சென்னையைச் சேர்ந்தவன்.

நான் போகிறேன் என்று முன்னே வந்தேன். என்  நண்பர்கள் “ விவிஎஸ் தனியாகப் போகவேண்டாம் துணைக்கு நாங்கள் செல்கிறோம்” என்று இன்னும் இருவர் முன்வந்தனர்.

?இரண்டு பேர் போகத்தான் இடமுண்டு. விவிஎஸ் பிளஸ் இன்னும் ஒருவர்” என்று புரொஃபசர் சொன்னவுடன் மதுரைக் கல்லூரியைச் சேர்ந்த நடராஜன் வந்து காரில் எறிக்கொண்டான். தாமஸ் தலையை மடியில் வைத்துக் கொண்டு பின் சீட்டில் அமர்ந்துவிட்டான்.

“சார் ! பஞ்சர் ஒட்டியாச்சு .பக்கத்துல பெட்ரோல் பங்க் போகணும் சார்! அப்படியே ஏதாவது சாப்பிட இங்கயே வாங்கிடனும் .. பாடியை வச்சுக்கிட்டு ஊருக்கு உள்ள போனா பிரச்சனை போலீஸ் தடுப்பான். நாம் ஹை வேஸ்ல போயிடலாம்” என்றான்.

பெட்ரோல் பங்கில் வண்டி நின்றதும் நானும் கீழே இறங்கினேன். அப்போதுதான் நாங்கள் வந்த டாக்ஸியை சரியாகப் பார்த்தேன். நம்பர் பிளேட்டிலிருந்து எல்லா இடங்களிலும் அங்கங்கே பெயிண்ட் போயிருந்தது, கதவு கண்ணாடி எல்லாம் லொட லொட. நாலு டயரும் மொட்டை. உள்ளே இருக்கும் சீட் கவரில் பல பகுதிகள் கிழிந்து கிடந்தன. எங்கள் வீட்டில் வண்டி உண்டு. நானும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவன். எனவே கார்கள் பற்றி ஓரளவு தெரியும். இந்த அசாதாரண சூழலில் , நான் காலையில் கிளம்பும் போது இவற்றையெல்லாம் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் அப்போதே சொல்லியிருப்பேன். சென்னை வரை இந்த வண்டி போகுமா என்பதே கேள்விக் குறி ! போனாலும் பெரிய ரிஸ்க் என்னடா இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே என்று மனம் எண்ணியது. ஆனால் அந்த வயதில் இதையெல்லாம் எதிர்கொள்ளும் துணிச்சலும் இருந்தது.

“ஏம்பா டிரைவர்! முத்து தானே ஒங்க பேரு “

“ஆமாம் சார் ! என்ன சொல்லுங்க?”

“ முத்து இந்த வண்டிய எப்படி செலக்ட் பண்ணி எடுத்துட்டு வந்தீங்க. பாத்தாலே தெரியுது.. அவ்வளவு கண்டிஷன் இல்ல.. நாலு டயரும் சரி இல்ல. ஸ்டெப்னியும் பழசு.. போக முடியுமா?”

“சார் ! நீங்க சொல்றது கரெக்ட் .. ஆனா வேற வண்டி எதுவும் கிடைக்கல .. எஸ் கே ஐயா சொன்ன அப்புறம் ஒரு மணி நேரம் வண்டி தேடினேன் சார்.. ஒருத்தனும் “பாடி” எடுத்துட்டு போக ஒத்துக்கல .. வண்டி வராதுன்னு சொல்லிட்டான் ஆம்புலன்ஸ் இல்ல. பாடிய ஒரு மணி நேரத்துல எடுத்துட்டு சென்னைக்குப் புறப்படனும் அப்படின்னு ஐயா சொல்லிட்டாரு .. நான் யூனிவர்சிட்டி டிபார்ட்மெண்ட் டிரைவர்.. கெடச்ச வண்டிய எடுத்துட்டு கெளம்பிட்டேன் பாத்துக்கலாம் .. நாம நல்ல காரியம்தான் செய்யுறோம் ஐயா ! ஆண்டவன் பாத்துப்பான். போய் உட்காருங்க..சார் ”

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நடராஜன் எதுவும் பேசாமல் ஆயாசத்துடன் தலையை சாய்த்து அமர்ந்திருந்தான். வண்டி ஓடத் தொடங்கியது.

திருச்சியை அவுட்டரில் விராலிமலைப் பாதையில் கடந்தோம். விழுப்புரம் திண்டிவனம் செங்கல்பட்டு மதுராந்தகம் என்று தாம்பரம் வருவதற்குள் நான்கு இடங்களில் வண்டியை நிறுத்தி பஞ்சர் போட வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போ மாதிரி இல்ல. அப்ப ஒரு பஞ்சர் ஒட்டவே அரை மணி ஆயிடும். அதுமட்டுமல்ல; பஞ்சர் ஆனதும், இறங்கி டயரை மாற்றி பிறகு அருகிலுள்ள பஞ்சர் கடை தேடிப் போகவேண்டும்.

தாம்பரம் வரும்போது எட்டுமணி நேரம் ஆகிவிட்டது. அதாவது மாலை மூன்று மணி ஆகிவிட்டது. சாலைப் போக்குவரத்து அதிகமாகிவிட்டது. தாம்பரம் கடக்கும் போது  இரண்டு போலீஸ் வண்டிகள் எங்களைத் தடுத்து நிறுத்தின.

தாமஸ் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். செல்வாக்கு உள்ள உறவினர்கள் உண்டு. ஒருவர் போலீஸில் உயர் பதவியில் இருப்பவர். காலை ஆறு மணிக்கு மதுரையில் இருந்து கிளம்பிய வண்டி இன்னும் சென்னை வந்து சேரவில்லை என்றதும் அவர்கள் போலீஸ் உதவியை நாடியுள்ளார்கள். எங்கள் வண்டி நெம்பர் தெரியும் என்பதால், டிரேஸ் செய்து தாம்பரத்தில் பிடித்துவிட்டார்கள். பிறகு முன்னும் பின்னுமாக எங்களுக்கு வழி காட்டிக் கொண்டே அவர்கள் செல்ல, கீழ்ப்பாக்கத்திலுள்ள தாமஸ் வீட்டை அடைந்தோம். வழி நெடுக தெருக்காரர்களின் கூட்டம். வீடு முழுக்க உறவினர் கூட்டம்.

கலைந்த தலை கலங்கிய கண் கசங்கிய ஆடை பசித்த வயிறு  என்று நாங்கள் இறங்கினோம். முதல் மாடியில் தாமஸ் வீடு. பாடி அங்குதான் எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி சடங்கு செய்ய ஆயத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. பெரிய ஹாலில் நாடு நாயகமாக வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில் தாமஸ் உடல் கிடத்தப்பட்டது.

இறுகிய முகத்துடன் நின்றிருந்த தாமஸின் தந்தை எங்களிடம் ஏதோ கேட்கத்  தொடங்கினார். ஆனால் அதற்கு முன் , அழுது வீங்கிய கண்களோடு இருந்த அவன் தாய் ( தாமசோடு என்னை ஒரு முறை பார்த்தவர்) எங்களைப் பார்த்துச் சொன்னாள்.

“அதெல்லாம் அப்புறம் ! நீண்ட கடுமையான பயணம் செய்து வந்திருக்கிறீர்கள் களைத்திருப்பீர்கள் .. முதலில் கை கால்  முகம் கழுவிக் கொண்டு வாருங்கள். உள்ளே கேக் பிஸ்கட் உள்ளது சாப்பிடுங்கள்”

நான் நெஞ்சுருக நின்றேன். இத்தனை பெரிய இழப்புக்கு நடுவே அந்தத் தாயுள்ளம் எங்கள் வயிற்றுப் பசியை நினைவில் கொண்டு உபசரித்ததே ! ( இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் அந்த நினைவு என்னை நெகிழ வைக்கின்றது}

வெளியே ஹாலில் கூட்டம் எங்களுக்காகக்  காதிருந்தது.

பாதிரியார் என்னிடம் “ யூ ஆர் அ குட் சமாரிடன் .. உங்கள் நண்பனுக்கான இறுதி யாத்திரையில் நீங்கள் செய்த பணி அற்புதமானது. பரமபிதாவின் அருள் உங்களுக்குக் கிட்டுவதாக ! அமரனாகிவிட்ட தாமஸின் கடைசி நேரங்களில் நீங்கள்தான் அவர் உடன் இருந்து சேவை செய்தீர்கள் எனறு அறிகிறோம்.அதைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசுங்கள். எங்களுக்கு ஆறுதலாக இருக்கும்” என்றார்.

என்ன பேசினேன் என்று நினைவில்லை. பிறகு நான் ஏற்கனவே ஒருமுறை சந்தித்து இருந்த அவன் தாயையும் மனைவியையும் பார்த்து ஆறுதல் சொன்னது நினைவிருக்கிறது.

தாமஸ் மறைந்த முதலாண்டு நினைவு தினத்தன்று நான் அவன் வீட்டுக்குச் சென்று அவனது தாய் தந்தையரைப் பார்த்தேன். அவர்களுக்கு அது பெரும் ஆறுதல். மிக இள  வயது கொண்ட தாமஸின் மனைவிக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயத்திருப்பதாகச் சொன்னார்கள். அவள் தன் பெற்றோர் வீட்டில் இருக்கிறாள் . போய்ப் பார்த்து வாழ்த்து சொல்லுங்கள் என்று முகவரியும் தந்தார்கள்.

பல மாதங்கள் அந்த முகவரி எழுதப்பட்ட காகிதத் துண்டு என் பர்ஸில் இருந்தது. ஏனோ நான் சென்று பார்க்கவே இல்லை.

(தொடரும்)