புத்தகம் : தாயுமானவர் பாடல் தொகுப்பு ( Sacred Hymns of Thayumanavar)
தமிழ் உரையும் ஆங்கில மொழி பெயர்ப்பும்
Meanings in Tamil and English Translation
தொகுத்தவர் : பேராசிரியர் சு.ந. சொக்கலிங்கம், எம்.ஏ
வெளியிட்டோர் : பழனியப்பா பிரதர்ஸ் இரண்டாம் பதிப்பு (2009)
543 பக்கங்கள், விலை ரூ.290
இந்தப் பகுதியை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரியும், இங்கே நாம் அறிமுகப்படுத்தும் நூல்களில், பழையன, புதியன என்ற பாகுபாடு இல்லை. எந்த நூலைக் கையில் எடுக்கின்றேனோ, அதனை மற்ற வாசக நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துவதே நோக்கம்.
இந்த நூல் 2009 இல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்த பழைய நூல்தான். ஆனால், தமிழ் இருக்கும் வரை உயிரோடு இருந்து மனதை ஒருமுகப்படுத்தி ஆற்றுப்படுத்தும் நூலாக என்றென்றும் உயிர்ப்புடன் இருக்கும் நூல்.
நான் மனதில் சற்று பாரத்தோடும் தனிமையைத் தேடும் நிலையிலும் நாடிப் போவது பழந்தமிழ் ஆன்மீக நூல்களைத்தான். அந்த வரிசையில் எனக்கு மிகவும் நெருக்கமானது இந்த தாயுமானவர் பாடல் தொகுப்பு.
இந்நூலை நமக்கு அளித்திருப்பவர் பேராசிரியர் சு.ந. சொக்கலிங்கம். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பிள்ளையார் குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தமிழறிஞர் இவர். பல நூல்களைப் படைத்துள்ள இவர், மொழிமாற்ற நூல்கள் பலவும் உருவாக்கியி ருக்கிறார். இவரைப் போன்ற தமிழ் அறிஞர்களின் அரும்பணியால்தான் தமிழ் என்றும் தழைக்கின்றது.
பக்தி, ஞானம், யோகம் ஆகிய மூன்றையும் ஒருங்கே தம்முட் கொண்டு வாழ்ந்த அருள்நெறிக் காவலர்களுள் தாயுமானவர் தலையாய தவப்புதல்வர் ஆவார். முக்திக்கு இட்டுச் செல்லும் சீரான பாதையைக் காட்டும் பாடல்களை இயற்றியவர் தாயுமானவர். சந்தமும் இனிமையும் கலந்த அவருடைய செந்தமிழ்ப் பாடல்கள் தமிழின்பமும் வடசொல் நயமும் இழைந்தோடி பக்தி, ஞான, யோக நெறிகளை நன்கு வகுத்துக் காட்டுகின்றன. இந்த கனிவு மிக்க பாடல்களைப் படித்தாலும், அருகில் நின்று கேட்டாலும், நினைத்தாலும், பேரின்பம் பயக்கும் என்பது நிச்சயம்.
உதாரணத்திற்கு ஒரே ஒரு பாடலை இந்நூலிலிருந்து உங்களோடு பகிர்கிறேன் :
கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம் ;
கரடிவெம் புலி வாயையும் கட்டலாம்;
ஒரு சிங்க முதுகின் மேல் கொள்ளலாம்
கட்செவி எடுத்து ஆடலாம்;
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும்
வேதித்து விற்று உண்ணலாம்;
வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்.
சந்ததமும் இளமையொடு இருக்கலாம்; மற்று ஒரு
சரீரத்தினும் புகுதலாம்;
சலம் மேல் நடக்கலாம்; கனல் மேல் இருக்கலாம்;
தன்நிகரில் சித்தி பெறலாம்;
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறம் அரிது;
சத்து ஆகி என் சித்தமிசை குடிகொண்ட அறிவு ஆன
தெய்வமே ! தேஜோ மயானந்தமே !
இந்நூலைப் படிப்பவர் அனைவருக்கும் தாயுமானவரின் அருள் உறுதியாகக் கிட்டும்.

