அந்த நிறுவனத்தில் தொழிலாளிகளுக்கும் அக்கம்பக்கம் வசிக்கும் நபர்களுக்கும் மருத்துவகம் ஒன்று வைத்திருந்தார்கள். வாரத்தில் இருமுறை ஸெக்யாக்ட்ரிக் சோஷியல் வர்கர் பொறுப்பில் நான் ஆலோசித்து வந்தேன். வருவோரைப் பற்றி நிறுவனத்தில் யாரிடமும் பகிர மாட்டேன் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது.
அதனால்தான் ஐம்பது வயதான இந்தரின் மகன்கள் உபேந்தர், அமித் இருவரும் என்னை ஆலோசிக்க வந்தார்கள். அவர்களின் தந்தை நிறுவனத்தின் சமூகப்பணித்துறையின் (CSR) தொண்டு சேவைகளைக் கண்காணிப்பவர். தந்தை சிறப்பாகச் செய்வதைப் பற்றிக் கேள்விப்படும் போதெல்லாம் இவர்களும் அவர்களின் தாயாரான நீலீமாவும் மகிழ்ச்சி கொள்வதைக் கூறினார்கள்.
அதே CSR துறையில் ரீமா என்றவளும் இருந்தாள். பல்வேறு சமூகச் சேவைத் திட்டங்களை வடிவமைத்து அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பது அவள் பொறுப்பு. மேலதிகாரியான இந்தரிடம் சமர்ப்பிப்பது பொறுப்பானது.
அமித் சொன்னான், அலுவலகத்தில் எல்லோரும் இந்தரின் வேலைமுறையைப் பற்றி அறிவார்கள். சம்பந்தப்பட்ட சமர்ப்பித்தல் நேரம் தவறாமலும் பிழையின்றியும் இருக்க வேண்டும். ரீமா இதற்கு நேர்மாறாகச் செயல் படுகிறாள் எனத் தந்தை சொல்வதை உபேந்தர், அமித் கேட்டதுண்டு. இப்படியும் இருப்பார்களா என அடிக்கடி தந்தை வியந்து கூறியதாகவும் பகிர்ந்தார்கள். போகப்போக, இது மாறி, இப்படி இயங்குவது நல்லது என இந்தர் பேச ஆரம்பித்ததும் திடுக்கிட்டார்கள். கவலையுற்றார்கள்.
குடும்ப நிலையையும் இப்போதைய இன்னல்களையும் வர்ணிக்கப் பரிந்துரைத்தேன். அதிலிருந்து குடும்பத்தின் இணைப்பு, பிணைப்பு தெரிந்து கொண்டு, உறவை மேம்படுத்த உதவுவதற்காகவே.
நீலீமா ஃபைன் ஆர்ட்ஸ் மேற்படிப்பு பட்டதாரி. அருகில் உள்ள கல்வி நிறுவனத்தில் துறை அதிகாரி. கல்லுரியுடன் பள்ளிக்கூடம் ஒன்றையும் நடத்தி வந்தார்கள். சனிக்கிழமைகளில் உற்சாகத்துடன் நீலீமா அங்குக் கற்றுத்தரப் போவதை மகன்கள் மகிழ்ந்து கூறினார்கள்.
இந்தக் காலகட்டத்தில் இருபத்தி ஏழு வயதான உபேந்தர் வேலையில் சேர்ந்தார். மூன்று வருடமாயிற்று. அமித்தும் ஆறு மாதங்களாக வேலையில் சேர்ந்திருந்தான். சிறுவயதிலிருந்தே இருவரும் சலனமற்ற முறையில் ஆண்-பெண் நண்பர்களுடன் பழகுவதைப் பற்றி விவரித்தார்கள். தந்தையின் நடத்தையில் மாற்றத்தைக் கவனித்த பிறகு பெண்களிடமிருந்து விலகியிருப்பதாகக் கூறினார்கள்.
இக்கட்டான நிலை, யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத தவிப்பு அதிகரித்தது. இதற்கு ப்ரோஃபெஷனல் தீர்வு பெற விரும்பியே என்னை அணுகினார்கள்.
உபேந்தர், அமித் தங்களுக்குத் தர்மசங்கடம் ஏற்படுத்தும் பல சூழ்நிலைகளை வர்ணித்தார்கள். வீட்டினர் ஏதேனும் சுறுசுறுப்பாகச் செய்ய முயன்றதும் இந்தர், “ஆராம் ஸே” என ரீமா சொல்வதை உபயோகித்து, ரீமா சொல்வதைப் போல “நிதானமாகச் செய்” என்பார். ஏதோவொன்று எடுத்துச் சொல்லும் போதும், ரீமாவை உதாரணமாகக் காட்டுவது வழக்கமாகியது.
இதெல்லாம் கேட்கையில் மறு வார்த்தை பேச முடியவில்லை என்றார்கள். அவர்களின் இந்த நிலையை ஸெஷனில் எடுத்துக் கூர்ந்து கவனிக்கச் செய்தேன். உள்ளூரத் தவிப்பு கொந்தளிப்பு அடையும் நிலையானதென்று உணர்ந்தார்கள். மேலும் எல்லோரும் இந்தர் சொல்வதைக் கேட்டு மௌனம் சாதிப்பதால் தன் அறிவுரை வரவேற்பு பெற்றது என எண்ணி அதையே மீண்டும் மீண்டும் அவர் செய்வதும் இப்போது புரிந்தது.
சொல்லாததால் மனம் கனத்து அப்பா மீது வெறுப்பு படரத் தொடங்கியதை அடையாளம் கண்டார்கள். உன்னிப்பாகக் கவனித்ததில் தந்தை ரீமாவைப் புகழ்வதும், தாயாரை இழிவு படுத்துவதும் ஏற்றுக்கொள்ள இருவர் மனமும் மறுத்தது. இந்தத் தெளிவு வர, அண்ணன் தம்பி வியந்தார்கள்.
தந்தையிடம் பகிர வேண்டிய அவசியத்தை ஸெஷன்களில் புரிந்து கொண்டார்கள். உணர்வுகளைத் தந்தையிடம் பகிர்ந்தால் நிலைமையை மாற்ற முடியும் என நம்பினார்கள்.
நடைமுறையில் இதைச் செய்வதற்கு இருவரும் தந்தை , மகன் என்ற பாத்திரத்தில் உரையாடி (ரோல் ப்ளே) தெளிவு பெற்றார்கள். ஒரு பக்கம் சொல்லவேண்டிய பொருள் தெளிவு அடைந்தது. இன்னொரு பக்கம் இருவருக்குள் பந்தம் மேம்படத் தெளிவு பிறந்தது. தந்தையிடம் உரையாடல் துவங்கினார்கள்.
இதன் இடையே தந்தை இந்தர் என்னைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் நிறுவனத்தின் CSR நடவடிக்கைகளில் ஒன்றான நான் நடத்தும் மனநலப் பயிற்சிக்குத் தேதி நிர்ணயிக்கவே. சந்திப்பின் முடிவில் என்னைத் தனிப்பட்ட முறையில் ஆலோசிக்க நேரம் வேண்டும் என்றும், வேலை செய்யும் இடத்தைத் தவிர்க்கவும் வேண்டினார். அதேபோல செய்து தந்தேன்.
அரைமணி நேரத்திற்கு முன்பாகவே வந்து விட்டார். வாழ்வில் அவலநிலையிலிருந்து வெளிவர முடியுமா எனத் தேடுவதற்காக என்றார் இந்தர்.
பல வருடமாகக் கடுமையாக உழைப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன் என்றார். தன்மேல் எந்த எதிர்மறைச் சொல்லும் வராமல் இருக்க, வீட்டிற்கும் வேலையிலும் உழைத்தேன் என்றார்.
இந்த அணுகுமுறையை வீட்டிலும் வேலையிலும் யாருமே புரிந்து கொள்ளாதது வருத்தம் என்றார். நான் விளக்கம் அளிக்கச் சொன்னபோது, ஏதேனும் சரியில்லையென்றால் சத்தம் போடுவேன், பயந்து மறுபேச்சு வராது என்றார். பயனற்ற யுக்தி!
துறை ஊழியரான ரீமாவின் அணுகுமுறையைப் பின்பற்றியதிலிருந்து விடுதலை பெற்றேன் என்றார்.
இந்தர் கடுமையாக உழைக்கையில் பனித்துளி போல் ரீமா எல்லாவற்றையும் லேசாகச் செய்துவிடுவது புதுமையான அனுபவமாகப் பார்த்தார். போகப்போக இது ரீமா மீதான ஈர்ப்பாக மாறியது. தனக்குச் செய்வதையும் உதவுவதையும் பார்த்து, மறைமுகமாக அலுவலகத்தில் அவளை அவருடைய வேலைத் துணைவி எனக் கூறுவதை வரவேற்றார். மறுக்கவில்லை.
மகன்களின் முகம் வாடுவதைப் பார்த்த ரீமா அவர்கள் தேவையில்லாமல் உணர்ச்சிவசப் படுவதாகப் பலமுறை சொல்ல, இந்தர் நம்ப ஆரம்பித்தார்.
நடப்பது ஏதோ சரியில்லை என்று நீலீமா புரிந்து கொண்டிருந்தாலும், இந்தர் தானே உணர்ந்து சரிசெய்து கொள்ளட்டும் என்று மௌனம் காப்பதைப் பார்த்து வியந்து போனேன் என்று ஒப்புக்கொண்டார். நீலீமா பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவள். பாரம்பரியமான பழக்கங்களின் இடையே நாகரீகமும் கலந்திருந்தது. அவற்றின் அடையாளமாக, நீளமான கூந்தல், அதை ஜடை போடுவது, மூக்குத்தி, கொலுசு இவையெல்லாம் இந்தர் ரசித்திருந்தவையே!
ரீமாவின் நவீன பாணி அலங்காரங்கள் தன்னைத் தடுமாற்றத்தில் மூழ்கியது என்றார். அவள் சுறுசுறுப்பாக இருப்பதில்லை, முன்னேற்பாடு அவள் அகராதியில் இல்லை என்றார். எதையும் அடுக்கி ஒழுங்காக வைக்கும் வழக்கமும் இல்லை.
ஈர்ப்பு, அவளின் செய்முறையா- பெண்- நவீன நடத்தையா என்று காரணங்களை ஸெஷனில் ஆழ்ந்து பார்க்கச் செய்தேன். இதற்கு உரையாடலுடன் பிப்லியோதெரப்பியெனும் குறிப்பிட்ட புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளைப் படித்து அவற்றைத் தன் சூழலுடன் ஸெஷனில் பார்வையிடும் முறையை உபயோகித்தோம். தன் இயல்பு நிலையை விட்டுவிட்டு ஈர்ப்புப் படுவது இந்தருக்குப் புரியத் தொடங்கியது.
அதிகபட்சம் உறவாடும் சிலரைத் தேர்ந்தெடுக்கச் சொன்னேன்: நண்பர்கள், சக ஊழியர்கள், தம் பிரிவில் வேலை செய்யும் தொழிலாளிகள், வீட்டு நபர்கள் என்று. மூன்று வாரத்திற்கு இவர்களிடமெல்லாம் தாம் சொல்லும் சொற்கள், காட்டும் உணர்வுகள், தன் மனநிலை இவற்றைக் குறித்துக் கொள்ளும்படி பரிந்துரைத்தேன்.
இத்துடன், இல்லற வாழ்வில் குறைகளைக் கணிக்கச் செய்தேன்.
இதை நேர்த்தியாக இந்தர் செய்ய, பின்னர் தன் நடத்தை, உணர்வு, சிந்தனை இவற்றின் கலவையைக் கணக்கிட்டதும் திடுக்கிட்டுப் போனார். இதைப் பற்றி மேலும் ஸெஷனில் எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, இந்தரை ரீமாவுடன் பேசிப் பழகும் போது உடல்-மனதில் நேருவதையும், சூழலையும் மேலும் மூன்று வாரங்களுக்குக் கவனித்துக் குறித்துக் கொண்டுவரச் சொன்னேன்.
ஸெஷனில் இரண்டையும் ஒப்பிட்டுப் பகிர இந்தரைப் பரிந்துரைத்தேன். பல செஷன்களுக்கு இது நீடித்தது.
முதலில் தன் தரப்பு நியாயத்தை வலியுறுத்திச் சொன்னார். இந்தரின் புரிதலை மேம்படுத்த, அவரை ஒவ்வொரு நாளின் சம்பவங்கள் நேர்கையில், சூழலையும் அங்கு உள்ளவரின் உறவு பற்றியும் நிகழ்வையும் ஓரிரு வரியில் வர்ணிக்கச் சொன்னேன்.
தன் கட்சியை மட்டுமின்றி மற்றவரின் பக்கமும் பார்க்கத் தொடங்கியதில் நேர்ந்தது மாற்றம். இத்தனை வருடங்களில் செய்தவற்றைப் பற்றித் தெளிவு பிறக்க ஆரம்பித்தது.
உதாரணத்திற்கு, கோபப் படும்போது, அவரிடம் தர்க்கம் செய்யாமல் மனைவி மகன்கள் மௌனம் காத்தார்கள். தன் வழி சரியென நினைத்துக் கொண்டார். குடும்பத்தினரின் தவிப்பைக் கவனிக்க மறுத்ததை உணர்ந்தார்.
ரீமா அலட்சியமாக இருந்ததை பற்றிக் கொண்டார். இந்தரின் இவ்வழிகளைத் தவிடு பொடி ஆக்கியதில் அவளிடம் வசீகரமானது. நடந்தது இதுதான் என்ற புரிதல் பிறந்தது.
வேறுபட்ட அனுபவத்தை அடக்க முடியாமல், அலுவலகத்தினர் ரீமாவிற்கு வேலைத் துணைவி என்ற பட்டத்தைச் சூட்டினார்கள் என்று புரிந்து கொண்டார். இது அவளைப் புகழ்வது அல்ல என்று அடையாளம் காணப் பல செஷன்கள் சென்றன.
இந்த நிலைக்கு வந்த பிறகுதான், இந்தர் எந்த அளவிற்கு அவருக்காக நீலீமா தன் சுய அடையாளத்தை மாற்ற முயன்றாள் என்பதை உணர்ந்தார். இதனால் அவர்களிடையே ஏற்பட்ட இடைவெளியும் புரிந்தது.
பிறகே மகன்களின் நிலையை நினைவு கொண்டார். மகன்கள் சிறு தவறு செய்தாலும், இந்தர் அறுவறுப்புடன் சத்தம் போடுவார். மொத்தத்தில் மகன்களின் பதில் இப்போது அடையாளம் கொண்டார். வேதனைப் பட்டார்.
மூவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இந்தர் மற்றும் அவர் மகன்களுடன் ஸெஷன்களைத் தொடர்ந்தேன். பல வாரங்களுக்குப் பின்னர், நீலீமாவையும் வரவழைத்தேன்.
தீர்வுப் காண பல மாதங்கள் ஆயின. ஸெஷன்கள் முடிந்த இரு மாதங்களுக்குப் பிறகு உபேந்தர் அமித் வந்து, வீட்டில் அமைதி நிலவுவதையும், ரீமா வேலை ஊழியர் மட்டுமே என்று இருப்பதாகவும், குடும்ப பந்தம் நெருங்கியதாகவும் கூறினார்கள்.
எல்லா வயதிலும்
மனச் சஞ்சலங்கள் நேரலாம்!
ஈர்ப்பை அடையாளம் கண்டுகொண்டால்
மனத் தெளிவு பெறமுடியும்!
***”**********”**********”**********”******
