முதல் நாள், முதல் ஷோ
தியேட்டர் அனுபவங்கள் இளம் வயதில் வித்யாசமானவை. அதுவும் பிரபல நடிகர் நடித்த படங்களின் ‘முதல் நாள், முதல் காட்சி’, நினைவில் நிற்பவை! என் அனுபவத்தை உங்களிடம் சொல்வதற்கு முன், ‘மதிநிறை அழகனை’ உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்;
திருச்சியில், அப்போது வயலைத் தூர்த்து மாரீஸ்(கள்) முளைத்துகொண்டிருந்த காலம். ரம்பா, மீனா பிறக்கவில்லை. கலையரங்கம் கௌரவர்’களுக்கான இடமாக இருந்தது.
ராக்ஸி, வெலிங்டன் என்ற இரட்டை தியேட்டர்களில், ஒன்றில் புது படமும் மற்றொன்றில் சுமார் படமும் போடுவார்கள். ஒன்று ஹவுஸ்புல் ஆனதும், விதியே, என்று பக்கத்து தியேட்டருக்குத் தாவுவார்கள். வாழ்வே மாயம் போன்ற படங்களைப் பார்த்துட்டு, தாய்குலங்கள் கர்சீப்..பும், கம்பலையுமாகச் சிவந்த கண்களுடன் வெளியே வரும் காட்சியைக் காணலாம்.
பழமையான முருகன், இன்னும் இளமையாக, பி.யு.சின்னப்பாவை காட்டிக் கொண்டிருக்க, இளமையான சிவக்குமார் ராமகிருஷ்ணா’வில் பெல்பாட்டத்தில் ஜெயசித்ராவை துரத்திக்கொண்டிருப்பார்.
வியாபார விஷயமாக திருச்சி வந்தவர்கள், பிளாசா’வில் புரியாத ஆங்கிலப் படத்தின் ஓரிரு அசந்தர்ப்ப காட்சிகள் முடிந்ததும், வெளிநடப்பு செய்து சொந்த ஊருக்குப் பஸ் பிடிப்பார்கள். ‘கெயிட்டி’யில் விடலைப் பையன்கள், தெருவுக்குத் தெரியாமல் ‘பாபி’ பார்த்தார்கள்.
நிற்க, மதி’யைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன்.
‘மதிநிறை அழகன்’ என் கிளாஸ் மேட். அவன் பெயரை இரண்டு துண்டாகப் பிரித்தாலும், அதன் அர்த்தத்திற்கும், அவனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
கல்லூரி என்ற ஒன்று இருப்பதே வாழ்க்கையை அனுபவிப்பதற்கான கடவுளின் கொடை என்று நம்புபவன். ஆரம்ப நாட்களில், கல்லூரி சீனியர்களின் சுற்றி வளைப்பைக் கண்டு அசராமல், இரண்டு, மூன்று லோக்கல் தாதா’களின் பெயர்களைச் சொல்லி அவர்களைச் சிதற விட்டவன்.
‘மக்கள் திலகத்’தின் ஹார்ட்கோர் ரசிகன்! அதுவும் தலைவர் படத்தை முதல் நாள், முதல் ஷோவாக, பார்ப்பதை தன் தலையாயக் கடமையாகக் கொண்டவன்.
திருச்சியில், பொதுவாக ‘நடிகர் திலகத்தின் படங்கள் பிரபாத், ராஜா’விலும் , மக்கள் திலகம் படங்கள் பேலஸ் மற்றும் சென்ட்ரல் தியேட்டர்களிலும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும்.
இந்த இரண்டு இமயங்களின் படங்களை, என் போன்று சாதாரணர்கள் பார்க்க, குறைந்த பட்சம் 25 நாட்கள் கடக்க வேண்டியிருக்கும். அதற்கும் சைக்கிள் பாஸ் அல்லது லேடீஸ் டிக்கெட்டிற்காக அக்கா, தங்கைகளின் உதவியை நாட வேண்டியிருக்கும்.
மதி போன்றவர்கள், அதற்குள் பத்து முறையாவது பார்த்திருப்பார்கள். அதுவும், லெக்ச்சரர் வராத leisure period’களில், முதல் நாள், முதல் ஷோ’வின் ஆரவாரத்தை மதி வர்ணிப்பதே அழகு!
படத்தின் காதல் காட்சிகளைச் சொல்லும் விதமே தனி. வாத்தியாரின், ஒவ்வொரு அசைவுகளையும் அக்குவேர், ஆணிவேர் ஆகச் சொல்வான். கிளாஸ் மொத்தமும் சுற்றி அமர்ந்து வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும்!
‘மதி’க்கு என்னால் ஆக வேண்டிய காரியம் ஒன்று இருந்தது. அதுதான் அஸைன்மெண்ட்ஸ். பொதுவாக ஞாயிறு, அந்தி சாயும் நேரங்களில் அவனது மெய்காவல் படையை வீட்டுக்கு அனுப்புவான். அதாகப்பட்டது, எட்டிலிருந்து பத்தாங்கிளாஸ் படிக்கும் பையன்கள்.
“அண்ணன் உடனே வாங்கியாரச் சொன்னாரு” என்று கழுத்தில் கத்தி வைத்து வாங்கிப் போவார்கள். அதைக் காப்பியடித்து எழுதுவதற்குக் கூட அவனது ஜவுளிக் கடையில் ஒரு பையனை வைத்திருந்தான் என்று கேள்வி..
எனது நெடுநாளைய கனவான, வாத்தியார் படமொன்றை முதல்நாள், முதல் ஷோ பார்க்கவேண்டுமென்ற ஆசையை ஒரு நாள் மதியிடம், தயங்கி, தயங்கிச் சொன்னேன்.
அவன், ஏதோ பெரிய ஜோக் ஒன்றைக் கேட்டாற்போல் அதிர சிரித்து விட்டு,
“மவனே நீயெல்லாம் முதல் பெஞ்சில உட்கார்ந்துகிட்டு புரொபசர் கேள்வி கேட்டவுடனே, கைதூக்கிறதுக்குத்தான் லாயக்கு. சும்மா நினைச்சுக்காதே, அப்படியே 100 பேர் தோள்ல, அசால்ட்டா படுத்துகிட்டே நகர்ந்து போய் கவுண்டர்ல கையைவிட்டு டிக்கெட் வாங்கணும். தயிர்சாதம் சாப்பிடற நீ அந்த வேலைக்குச் சரியா வர மாட்டே” என்றான் அலட்சியமாக.
ஊரெங்கும் ‘உரிமைக்குரல்’. போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். ‘மதி’, பத்து நாட்களுக்கு முன்பாகவே, ‘MGR ரசிகன்’ போன்ற சினிமா புஸ்தகங்களைக் கிளாஸ்..க்கு கொண்டு வந்து போட்டு, பில்டப் கொடுத்து எங்களை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான்.
படம் ரிலீஸ் ஆன, அந்தத் திருநாளும் வந்தது.
என் கிளாஸ்மேட் வாசு காலை ஆறு மணிக்கே வீட்டுக்கு வந்துட்டான்.
“இன்னிக்குக் காலேஜ் கிடையாது. யாரோ ‘பிசிக்ஸ் ப்ரொபசர் திடீர்னு போயிட்டாராம்.. பாவம்”
” ஓ! அப்படியா !!”
“அது சரி, உடனே கிளம்பு”
“எங்க? அங்கெல்லாம் நான் வரல”
“ஏய் லூசு, அங்கில்ல, இன்னிக்கு ‘உரிமைக்குரல்’ படம் ரிலீஸ், முதல் நாள் ரசிகர் ஷோக்கு, ரெண்டு எக்ஸ்ட்ரா டிக்கெட் மதி வைச்சிருக்கான். ஒன்னுல நான் போறேன், இன்னொன்னுல நீ வர்..ரையானு சொல்லு, லேட் ஆகும்னா, கணேச்சுவை கூட்டிப் போறேன்”
உடனடியாகக் கிளம்பி ஓடினேன்
தியேட்டர் வாசலில், மக்கள் திலகம், ஆந்திரா கட்டுக் கட்டி, பல ஆள் உயரத்துக்கான கட்டவுட்’டில் மிளிர, அதற்கு உபசரிப்புகள் பெரிய அளவில் நடக்க, ‘ரீல் பெட்டி’ ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தியபடி வந்தான் மதி.
என்னைப் பார்த்து, “நீ வரமாட்டேன்னு நினைச்சேன்” என்றான் நக்கலாக.
டிக்கெட் இல்லாதவர்கள் கேட்டில் மோத, என்னை அலேக்காகக் கவ்வி உள்ளே கொண்டுபோனான்.
படம் துவங்க, ஒரே கோலாகலம்!
மக்கள் திலகம், முகம் காட்டாமல் ரேக்ளா வண்டியில் சாட்டையுடன் ஒரே தாவலில் ஏற, கால்களை மட்டும் காண்பித்த கேமரா, கொஞ்சம் கொஞ்சமாக முழு உருவத்தையும் காட்ட, அதே சமயம் அந்த ரேக்ளா குதிரை, இரட்டை கால்ளையும் உயர்த்தி வானில் பறப்பது போல் எழும்ப, ஜனம், மகிழ்ச்சியில் தன்னிலை மறந்து, டிக்கெட்களையும், காசுகளையும் திரைமீது வீசியது.
“நேத்து பூத்தாளே ரோசா மொட்டு” என்று வாத்தியார் சீண்ட, ஜோடியாக நடித்த லதா இளமையுடன் சிணுங்க, ரசிகர் கூட்டம் கிறங்கியது. நம்பியார் அவர்கள், குரலை உயர்த்த, கூட்டம் அடங்கியது. ‘விழியே கதை எழுது’ மன்னர் உடையில் வர, கூட்டம் மயங்கியது. மற்றபடி வசனம் ஒரு வரி கூடக் காதில் விழவில்லை. அதைப் பற்றி யாரும் கவலைப்படவும் இல்லை. பக்கா செலிபிரேஷன்ஸ்! தன் ஹீரோவுக்காக அன்பை அள்ளிப் பொழியும் ரசிகர் கூட்டம்!
மதிக்கு, மதியம் லஞ்ச் ‘பத்மா’வில் சிறப்பித்தோம். எனக்கு வேலை இருக்குடா, என அவன் கிளம்ப, நாங்கள் மீதி நேரத்தைக் காவிரி அணை முக்கொம்பில் செலவழிக்க முடிவெடுத்தோம்..
மறுநாள் காலை, கிளாஸ் ரூம் நுழைந்ததுமே நல்ல வரவேற்பு!
“என்னடா ‘உரிமைக்குரல், முதல் ஷோ..வா? என்று சுற்றி வளைத்தார்கள்.
“என்ன மதி சொல்லிட்டானா?” எனக்குப் பெருமை பிடிபடவில்லை.
“ஆமா, நேத்திக்கு மத்யானமே கிளாஸ்..ல, சொன்னானே!”
“கிளாஸ்? அதுதான் கிடையாதே, ‘பிசிக்ஸ் ப்ரோபஸர்’……என்று இழுக்க அனைவரும் சிரித்தார்கள்.
என்னையும், வாசுவையும், கிளாஸ் கட் அடிக்க வைத்து, சினிமாவிற்குக் கூட்டிப் போகிறேன் பாரு! என்று, மதிநிறை அழகன் செய்த சதி என்று பிறகு தெரிந்தது.
அதனால் என்ன? அந்த வாய்ப்பு இல்லையெனில், வாத்தியார் படம், ‘முதல் ஷோ’ போய்ப் பார்க்கும் பாக்கியம் வாய்த்திருக்காது, என்றே தோன்றுகிறது..
வாழ்க்கை என்னும் சிலை, அனுபவம் என்ற உளி’யால் செதுக்கப்படுகிறது.
அச்சிலையை அலங்கரிக்க இது போன்ற தருணங்கள் தேவையானதுதானே?
