கொஞ்சம் புரிஞ்சுக்குங்க பாஸ்

நான் பி.எஸ்.என்.எல்லில் கணக்கதிகாரியாக பணியில் இருந்தபோது வேலை நிமித்தமாக அடிக்கடி குடும்ப நல நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிவரும். எல்லாம் எங்கள் ஊழியர்களின் இரண்டு சம்சாரங்கள் வழக்கில் சாட்சி சொல்லி சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜுகள் கொடுக்கத்தான். அதாவது ஊழியர் இறந்த பிறகு இரண்டு சம்சாரங்களும் எல்லா சலுகைகளும் எங்களுக்குத்தான் வர வேண்டும் என்று வழக்கு தொடர்வார்கள். சம்பந்தப்பட்ட கணக்கதிகாரி என்ற முறையில் நான்  நீதிமன்றத்தில் ஆஜராகி அலுவலக ரெகார்ட்ஸ்படி உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்ல வேண்டும்.

இப்படி அடிக்கடி நீதிமன்றம் செல்லும்போதெல்லாம் பெற்றவர்களின் கவலை படர்ந்த முகங்கள்தான் என் பார்வையில் படும். அவர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும்.

அதில் சிலர் தங்கள் ஆதங்கத்தைக் கொட்ட ஆள் கிடைக்க மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் நின்றிருப்பார்கள். நான் எந்தவித சலனமும் இல்லாமல் கடமைக்காக நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து தாமாகவே வந்து புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்.

“பாருங்க சார்.. கல்யாணமாகி ஒரு வருஷம்தான் ஆகுது.. அதுக்குள்ள டைவர்ஸ்னு வந்து நிக்கறா என் மக.. இவ்வளவுக்கும் பெரிய விஷயமெல்லாம் இல்லை.. ஏதோ சாதாரண விஷயம்.. அதுக்கு ரெண்டுபேரும் பயங்கரமா சண்டைபோட்டு.. பாருங்களேன்.. இங்க வந்து நிக்கறாங்க..”

“நீங்க எதுவும் எடுத்துச் சொல்லலையா?”

“ஏன் சொல்லாம? நானும் என் வீட்டுக்காரரும் நிறைய பேசினோம்.. மாப்பிள்ளைய பெத்தவங்களும் பேசிப்பார்த்தாங்க.. ஆனா என் மகளும் மருமகனும் எதையுமே காதுல போட்டுக்கலை. சரிப்பட்டு வராது.. பிரிஞ்சே ஆகணம்னு பிடிவாதமா இருக்காங்க.. எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியலை.”

இப்படி விவாகரத்து கோருபவர்களெல்லாம் சட்ட ரீதியாகக் கூறுவது..

“Separation by mutual consent”

எனக்கு இதுதான் புரியவில்லை..

அவர்களுக்குள் Mutual consent இருந்தால் பிறகு எதற்கு separation?

ஒருமுறை விசித்திரமானதொரு அனுபவம்..

“இன்னும் முறைப்படி கல்யாணமே ஆகலை சார். அந்தப் பையன் வெளிநாட்டுல இருக்கறதுனால என் மகளுக்கு விசா அப்ளை பண்ண வசதியா மூணு மாசம் முன்னால ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. அடுத்த மாசம் முறையா கல்யாணம் வெச்சிருக்கோம். சத்திரம்லாம்கூடப் பார்த்தாச்சு. இந்த மூணு மாசத்துல என் பொண்ணும் அந்தப் பையனும் அடிக்கடி வீடியோ காலுல பேசியிருக்காங்க.. இப்ப என்னடான்னா ரெண்டுபேருக்குள்ள.. ஏதோ சொன்னாங்களே.. ஆ.. வைப் இல்லையாம். சரிப்பட்டு வராதாம். அதனால கல்யாணம் கேன்சல்னு சொல்லிட்டாங்க. இப்ப அந்த ரெஜிஸ்டர் மேரேஜை செல்லுபடியாகாம செய்ய இங்க வந்திருக்காங்க.. கொடுமையைப் பார்த்தீங்களா.. கல்யாணம்னு ஒண்ணு ஆகாமலே டைவர்ஸ்..”

இந்த அனுபவங்களெல்லாம் என் மனதை வட்டமடித்துக் கொண்டிருந்தன.

2013ம் ஆண்டு..

கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் கோடை நாடக விழாவுக்காக நான் ஒரு நாடகம் எழுத வேண்டும்.

உப்புசப்பில்லாத காரணங்களுக்காக இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் விவாகரத்து முடிவை மையமாக வைத்து “சூப்பர் குடும்பம்” என்று ஒரு நாடகம் எழுதுனேன். எங்கள் ஸ்டேஜ் க்ரியேஷன்ஸ் குழு அந்த நாடகத்தை அரங்கேற்றி அந்த வருடத்திற்கான சிறந்த நாடகம் விருதைப் பெற்றது. எனக்கு சிறந்த கதாசிரியர், வசனகர்த்தா விருது கிடைத்தது.

எதற்காகச் சொல்கிறேன் என்றால் இந்தக் காலத்தில் விவாகரத்து கோரும் பல இளைஞர்கள் கூறும் காரணங்கள் எல்லாமே ரொம்பவே சுலபமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளக்கூடியவைதான். ஆனால் அவர்களின் ஈகோ மனம் திறந்து பேசவிடாமல் அவர்களைத் தடுத்து விடுகிறது. இதனால் மேலும் மேலும் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இரண்டு பக்கமும் வார்த்தை ஏவுகணைகள் கிளம்பி வாக்குவாதங்களாக உருவெடுத்து இறுதியில் நீதிமன்றத்தில் விவாகரத்து என்ற பூகம்பமாக  வெடிக்கிறது.

குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை வருடா வருடம் கூடிக்கொண்டே போக இதுதான் காரணம்..

இளைஞர்களின் இந்தப் போக்குக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தோமேயானால் கணவன் மனைவிக்கிடையே சரியான புரிதல் இல்லாததுதான் என்பது தெளிவாகும். அதாவது ஒருவர் மனதை இன்னொருவர் புரிந்துக் கொள்ளாததுதான்.

கணவன் மனைவிக்கிடையே சரியான புரிதல் இருந்து மனம் ஒப்பிவிட்டால் பிரச்சனைகள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் ரொம்பவே குறைவு என்று ஒரு சர்வே கூறுகிறது.

புரிதலைப் பற்றி சொல்லும்போது நான் பார்த்த ஒரு காணொளி நினைவுக்கு வருகிறது.

வயதான தம்பதிகள்.

சிவராமன் லலிதா என்று வைத்துக் கொள்ளுங்களேன். சிவராமனுக்கு எழுபத்தைந்து வயது. லலிதாவுக்கு கிட்டத்தட்ட எழுபது.

இவர்களுக்கு ஒரே மகள். திருமணமாகி வெளிநாட்டில் இருக்கிறாள்.

சிவராமன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இளம் தம்பதிகள் விக்னேஷும் நந்தினியும்..

சிவராமன் தம்பதியர் தனியாக இருப்பதையறிந்த விக்னேஷும் நந்தினியும் வேலை நாட்கள் போக ஞாயிற்றுக்கிழமை காலை அவசியம் சிவராமன் வீட்டுக்குச் சென்று அவர்களுடன் குறைந்தது ஒரு மணி நேரம் பேசிவிட்டு வருவார்கள்.

அப்போது லலிதா அவர்களுக்கு டீ தயார் செய்துக் கொடுப்பாள்.

ஒவ்வொரு முறை சிவராமன் வீட்டுக்குப் போகும்போதும் விக்னேஷ் ஒரு விஷயத்தை கவனித்தான்.

டீ தயார் செய்யப்போகும் லலிதா டீத்தூள் இருக்கும் பாட்டிலை சிவராமனிடம் கொண்டு வந்து நீட்டுவாள். அவரும் அதை வாங்கி பாட்டில் மூடியைத் திறந்து கொடுப்பார். லலிதா அதை வாங்கிக் கொண்டு போவாள்.

விக்னேஷுக்கு இதைப்பார்த்து மனது சங்கடப்பட்டது..

பாவம் லலிதா.. பாட்டில் மூடியைக்கூடத் திறக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் சிவராமன் சாரைத் தொந்தரவு பண்ணுகிறாள்.

இது அவன் மனதை உருத்தினாலும் அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை.

விக்னேஷும் நந்தினியும் அன்று ஷாப்பிங் மாலுக்குச் சென்றிருந்தார்கள்.

அங்கு ஒரு கடையில் அவர்கள் மேய்ந்துக் கொண்டிருந்தபோது விக்னேஷின் பார்வையில் ஒரு பொருள் படுகிறது.

அது வேறு எதுவுமில்லை.. பாட்டில் மூடி ஓப்பனர்..

அவனுக்கு லலிதா டீத்தூள் இருக்கும் பாட்டில் மூடியைத் திறக்க முடியாமல் சிவராமனை தொந்தரவு பண்ணுவது நினைவுக்கு வந்தது.

உடனே அதை வாங்கிவிட்டான்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை சிவராமன் வீட்டுக்கு அவர்கள் போனபோது லலிதா வழக்கம்போல் டீ தயாரிக்க சமையலறைக்குச் சென்றாள்.

அவள் பின்னாலேயே சென்ற விக்னேஷ் பாட்டில் மூடி ஓப்பனரை நீட்டி..

“ஆண்டி.. இனிமே நீங்க பாட்டில் மூடியைத் திறக்க கஷ்டப்பட வேண்டாம். அங்கிளையும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். இதை மூடி மேல வெச்சு லேசா திருப்பினாலே போதும். திறந்துரும்”

என்று அங்கிருந்த ஒரு பாட்டில் மேல் ஓப்பனரைப் பொருத்தி மூடியைத் திறந்து காட்டினான்.

லலிதா தலையாட்டி அதை ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டாள்.

ஏதோ தன்னாலான உதவியை செய்துவிட்ட மனநிறைவு விக்னேஷுக்கு.

சமையலறையிலிருந்து ஹாலுக்கு வந்து சிவராமனுடன் பேச ஆரம்பித்தான்.

அப்போது லலிதா டீத்தூள் பாட்டிலுடன் அங்கு வந்து வழக்கம்போல் சிவராமனிடம் நீட்டினாள். அவரும் அதை வாங்கி மூடியைத் திறந்து கொடுத்தார்.

இதைப்பார்த்த விக்னேஷுக்குக் கோபமாக வந்தது..

“சே.. இந்த வயசானவர்களே இப்படித்தான். ஏதாவது நல்லது பண்ணினா எடுத்துக்க மாட்டாங்க. அவங்க இஷ்டப்படிதான் பண்ணுவாங்க.. மத்தவங்க சொன்னதைக் கேட்க மாட்டாங்க.. பிடிவாதம்..”

மனதில் பொறுமினான்.

ஒரு கட்டத்துக்குமேல் பொறுக்க முடியாமல் மறுபடியும் சமையலறைகுள் நுழைந்தான்..

“ஆண்டி.. அதான் ஓப்பனர் வாங்கிட்டு வந்திருக்கேனே.. அதை எப்படி உபயோகப்படுத்தறதுன்னும் சொல்லிக் கொடுத்தேன். நீங்களும் தலையாட்டிக்கிட்டே வாங்கிட்டீங்க. மறுபடியும் எதுக்கு பாட்டில் மூடியைத் திறக்கச் சொல்லி அங்கிளைத் தொந்தரவு பண்ணினீங்க?”

கொஞ்சம் காட்டமாகவே கேட்டான்.

லலிதா அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின் மெதுவாக..

“இந்த பாட்டில் மூடியை என்னாலயே திறக்க முடியும்”

இதைக்கேட்டு விக்னேஷுக்கு அதிர்ச்சி..

“என்ன சொல்றீங்க? உங்களாலயே திறக்க முடியும்னா அப்ப ஏன் எப்பவும் அங்கிள்கிட்ட பாட்டிலைக் கொடுக்கறீங்க?..”

”இன்னும் அவர் என்னைவிட பலசாலியா இருக்கார்னு அவருக்கு உணர வெக்கத்தான்.. இந்த உணர்வு அவர் மனசை உற்சாகமாக்கிடும்.. மனசு சந்தோஷமாயிருந்தாலே தனிமை, உடம்பு உபாதைகள் இதெல்லாமே பெரிசாத் தெரியாது.. இதேமாதிரி எனக்கு நம்பிக்கை தர மாதிரி சிலசமயம் அவரும் நடந்துப்பார்.. அது எனக்கு நல்லாவேத் தெரியும்.. நாங்க இருக்கப்போறது இன்னும் எத்தனை நாள்னு சொல்லமுடியாது.. இருக்கறவரைக்கும் இப்படி மன ஆரோக்யத்தோட இருக்கணும்.. இந்த புரிதல்தான் எங்க நாட்களை ஓட்டிட்டிருக்கு.. விக்னேஷ்.. கணவன் மனைவிகிடையே சரியான புரிதல் இருந்தா வாழ்க்கைல மனக்கசப்பே வராது.. இந்தக்காலம் மாதிரி விவாகரத்து கேஸ்களும் இருக்காது”

லலிதா சொல்லி முடித்ததும் விக்னேஷுக்கு மலைப்பாக இருந்தது. கூடவே அவனும் நந்தினியும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வாழ்க்கைப் பாடமாக உணர்ந்தான்.

லலிதா சொன்னதுபோல் இந்தக்காலத்து இளம் தம்பதிகள் ஆரம்பத்திலிருந்தே இந்தப் புரிதலை ஏற்படுத்திக் கொண்டால் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு எதிர்காலத்தில் வேலை இருக்காதோ?

ஹும்.. பேராசைதான்.. இருந்தாலும் நடக்கவேண்டும் என்று உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்ளலாமே..