Tamil Nadu: Woman dies after delivery, kin allege negligenceகடைசி நிமிடம், இவ்வளவுதானா, இதற்காகவா இத்தனை போராட்டங்கள்!

பார்வதியும், சாம்பசிவமும் ரொம்ப சந்தோஷமாக குடும்பம் நடத்தினர். பிரவீன், சுனிதா என்று இரு குழந்தைகள். பாராட்டி சீராட்டி வளர்த்தனர். சாம்பசிவம் கடல் கடந்து குடும்பத்தை விட்டுப் பிரிந்து, கஷ்டப்பட்டு, கடலாறு மாதம் நாடாறு மாதம் என்று சொத்துக்களை சம்பாதித்தார். சொத்துக்களை மட்டுமா சம்பாதித்தார்! சொந்தங்களையும் சம்பாதித்தார். அண்ணன், தம்பிகள், அவர்களுடைய மனைவிமார்கள், குழந்தைகள் என்று எல்லோரும் இங்கேயே தங்கி விட்டனர். பெரிய குளிரூட்டப்பட்ட வீடு, நிறைய சாதனங்கள்,  வெளியே செல்ல வசதியான கார். கேட்கவா வேண்டும்? யாருக்கும் இதை விட்டுப் போக மனம் வரவில்லை.  பட்டாளங்களுடன் கும்மாளம்.

சுனிதா கல்யாணத்தின்போது அவளுக்கு வாங்கிய மாதிரியே நகைகளும் வாங்கிக் கொண்டதுதான் அதிகப்படி.

‘மதினி நான் இந்த சேலை வாங்கிக் கொள்ளட்டுமா’ என்று நாத்தனார் ஜெயம் கேட்க,

 தம்பி மனைவி அனிதா ‘எடுத்துக்கொள் எனக்கும் இதே மாதிரி இரண்டு வாங்கிக் கொண்டு வா’ என்று இலவசமாக சம்மதிக்க, ‘ஊரான் வீட்டு நெய்யே பெண்டாட்டி கையே’

என்று இப்படியாக உட்கார்ந்து உட்கார்ந்து சாம்பசிவனின் சொத்து கரைந்தது. இவ்வளவு அவ்வளவு என்று சொத்திற்கு அளவே இல்லை.  ‘குந்தித் தின்றால்  குன்றும் குறையும்’ அல்லவா?

பணம் குறையக் குறைய மனிதர்களும் குறைய ஆரம்பித்தனர். தங்களுக்கு வேண்டியதை சேர்த்துக் கொண்டு ஒவ்வொரும் ஒவ்வொரு காரணம் சொல்லி நழுவி விட்டனர். பிரவீன் அம்மாவோடேயே இருந்தாலும் ‘மனைவி சொல்லே மந்திரம்’ என்று இருந்து விட்டதால் தன் தங்கையைக் கூட அருகில் விடவில்லை. கல்யாணத்தின் போதே அவளுக்குத்தான் எல்லாம் கொடுத்தாகி விட்டதே என்பது அவனது சராசரியான வாதம். சாம்பசிவமும் அதிக நாட்கள் கடலிலேயே இருந்ததால் அந்த காற்று அவருக்கு முடிவைத் தந்தது. தந்தை இறந்த அன்று வந்த சுனிதா அம்மாவிற்கு இரண்டு புடைவைகளும், இரண்டு இரவு உடையும் வாங்கிக் கொடுத்தாள். அம்மாவும் வெளியில் எங்கும் செல்லாததால் இரவு உடையையே அணிய ஆரம்பித்தாள்.    

பார்வதி நன்றாக இருந்த பொழுது வந்து கொண்டு இருந்த மனிதர்கள் யாரும் இப்போது அவளைப் பார்க்கக்கூட வரவில்லை. சுனிதாவின் வேலை, வீட்டு பொறுப்பு சேர்ந்ததாலும், பிரவீன் மற்றும் அவனது மனைவியின் நடவடிக்கையாலும் சுனிதா அம்மா வீட்டிற்கு வருவதையேக் குறைத்துக் கொண்டு விட்டாள்.

அந்த வருடம் சுனிதாவின் மகன் விஜய்யின் பிறந்த நாள். வருடாவருடம் பாட்டியைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளும் அவன் அன்று பரீட்சை இருந்ததால் போகவில்லை. பார்வதியின் உடல் நிலையும் சரியாக இல்லாததால் ஃபோனில் அவனை வாழ்த்தி விட்டு ‘எப்போதும் போல 100 ரூபாய் ஆசீர்வாதம் எடுத்து வைத்துள்ளேன், வந்து வாங்கிக் கொண்டு போ’ என்று சொன்னாள்.

இதன் பிறகு இரண்டு நாட்கள், பார்வதி அடங்கி விட்டாள். ‘ஆண்டாண்டு அழுதாலும் மாண்டார் மீண்டு வருவாரோ!’ அங்கே வந்த சுனிதா கடைசியில் அம்மாவிடம் மிஞ்சியது இரண்டு புடவைகளும் அவள்  வாங்கிக் கொடுத்த அடிக்கடி போட்டு கிழித்த இரண்டு நைட்டியும்தான் என்று தெரிந்து கொண்டாள். அம்மாவின் நினைவாக இவைகளையும் விஜய்க்குத் தரவேண்டும் என்று எடுத்து வைத்திருந்த 100 ரூபாய் தாளையும் நான் எடுத்துக் கொள்ளட்டுமா என்று கேட்டு அவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து விட்டாள்.

இதுதானா வாழ்க்கை! ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே!’