இந்த மாத சிறந்தகதை
பாவமன்னிப்பு சு விஜய் (நடுகல் ஏப்ரல் 2025)
ஒரு ஐம்பது நூறு கதைகளை கையில் ஒப்படைத்து இதில் மூன்று மட்டும் என்றார் அன்பு நண்பர். சவாலாகிப் போனது. ஒரு உண்மையைச் சொல்லட்டுமா! ஒப்படைக்கப்பட்ட எல்லா கதைகளுமே ஒரு லெவல் தான். இருப்பினும் அங்கே இங்கே என்று அமர்ந்து, ஊக்கத்துடன் படித்ததில் என்னை மிகவும் கவர்ந்த கதைகள்…..
பாவமன்னிப்பு– சு விஜய் – (நடுகல்- ஏப்ரல் 2025)
அதாவது சர்ச்சில், ஃபாதரும், அந்தக் கடவுளும் சாட்சியாக, கதை மாந்தர் மேரி தானே முன்வந்து, மனமுவந்து நிகழ்த்தும் அந்த கன்ஃபெஷன் தான் மையப் புள்ளி. இதுவே கதையின் ஆரம்பமும் முடிவும் எனக்கூடும். இந்த கன்ஃபெஷனின் அசலான கருத்தாக்கம் (concept) தான் நம் முன் நிற்கிறது. ஆம், நிஜத்தில், யார் குற்றவாளி? நிகழ்வு நடந்தபோது பேசாமடந்தையாக இருந்ததே, மேரி தான் இழைத்த குற்றமென நினைக்கின்றாள், அசல் குற்றமிழைத்தது தாய் சூசெனாக இருப்பினும். “மேரி என்ன பாவம் செய்திருப்பாள் என்று சூசெனால் யூகித்தறிய முடியவில்லை”. ஆம் நம்மாலும் தான். எல்லாவற்றையுமே, சீட்டு நடத்திவந்த காலம் முதல், எல்லாவற்றையுமே, முறையாக அடுக்கிட்டுச் சொல்லும் பெண்ணின்(மேரி) குணாதிசயம் என்னதைச் சுட்டுகிறது? குழந்தைகளைச் சாதாரணமாக எடை போடாதீர்கள். அவர்கள் சாமானியர்கள் அல்லர். கிரகித்துக் கொள்வது இது என்று நாமொன்று நினைக்க அவர்களது பார்வை வேறொன்றாக அமைந்து விடுவது கண்கூடு.
மாற்றம் – ஆனந்தகுமார் – (ஆனந்த விகடன் 23.04.25)
இன்றைய தலைமுறை பற்றியும் அவற்றுள் ஒரு ஜோடி, வேறு வழியுன்றி கருவைக் கலைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை எதிர்கொள்ளும் அவலநிலை(MTP) பற்றிய கதை. “அன்று நடந்தது எங்களுக்குள் முதல் முறை இல்லையென்றாலும், அன்று கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து விட்டோம்” இதைவிட நாசூக்காக நடந்து முடிந்ததை விவரிக்க இயலுமா? கலைவாணி இளைய தலைமுறையைப் பிரதிபலிக்கிறாள். பெயறற்ற ஆன்டி நீண்ட நாளாகியும் குழந்தைப் பேறில்லாததை நிவர்த்தி செய்ய வந்திருப்பவர். இரு துருவங்கள் எனலாமா? இரண்டு பெண்கள் அருகருகில் இருந்தால் பேச்சுக்கென்ன! பேசியதில் உண்மை வெளிவர, ஆன்டியின் நிலமையை அறிகிறாள், கலை. தனக்கு முன் மருத்துவரைக் கண்ட ஆன்டியின் கையறு நிலையைப் பொறுத்து தனக்கு வந்தது, வரப்போவது, இவற்றை ஆட்கொள்ளும் விதம், போன்றதை நிர்ணயிக்க அவை உதவுகின்றன, கலைக்கு. எவ்வாறு? படித்துக் காணீர்!
கூண்டுக்கிளி – ஜூனியர் தேஜ் (கதிர் 06.04.2025)
மூன்றாவதில், கிளிஜோசியருக்கு முக்கிய பங்கு! கூண்டுக்கிளியை அவர் அன்புடன் உபயோகப்படுத்திக் கொள்ளும் விதத்தை இணைத்தபடி கதை நகர்கிறது. அகல்யாவுக்கு இதைப் பார்ப்பதில் ஆனந்தம். மெள்ள நகர்ந்த கதை அகல்யாவின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் வெகு இயல்பாக அறிமுகப்படுத்துகிறது. அவளுக்கு “இன்றைக்கும்” ஒரு பெண் பார்க்கும் படலம். வந்தவர்களைப் பற்றி ஒரே வார்த்தை — எதையும் பொருட்படுத்தாது எந்த எதிர்வினையுமாற்றவில்லை அவர்கள்! “சொல்லாத்தான் நினைக்கிறேன்” படத்தில் தகப்பனார் சுப்பையா பெண் பார்த்து முடித்தவுடன் கூறும் வசனம் தான் நினைவுக்கு வந்தது. அகல்யா முடிவுக்கு வந்து விட்டாள். அவளுக்குத் தெரியும் இவர்களையெல்லாம். “வழக்காமாகப்” பெண் பார்க்கும் பார்ட்டியே. தங்களது சொத்து சுகங்களை வெளிப்படுத்திக் கொள்ள வாய்ப்பைத் தேடும் பலருள் ஒருவரே, அவ்வளவு தான். அவள் முடிவு, தெரிந்தது தானே!
ஆக, அறிமுகம் உங்களைப் படிக்கத் தூண்டும் என்ற நம்பிக்கையுடன்….
எஸ் சிவகுமார்

நன்றி எஸ். சிவக்குமார் யா.
மகிழ்ச்சி 😊
LikeLike