
ஒரு மைல் கல்
வர்ணாஸ்ரம் தர்மத்தில் வானப்ரஸ்தம் என்று ஒரு வார்த்தை உண்டு. அறுபது வயதுக்குப் பிறகு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடும் சொல் அது.
அறுபது வயதில் அனேகமாக பலரும் ஓரளவுக்கு வாழ்க்கையின் பெரும் பகுதிக் கடமைகளை முடித்தவர்களாகி விடுகிறார்கள். திருமணமாகி பிள்ளைகள் பெற்று அவர்கள் வளர்ந்து அவர்களுக்கும் பலர் திருமணம் செய்து பேரன் பேத்தி கூட எடுத்திருப்பார்கள். ஓரளவு பணம் சேர்த்து சொந்த வீடு சேமிப்பு என்று செட்டிலாகி இருப்பார்கள். குழந்தைகள் இல்லாதவர்களுக்கும் இது பொருந்தும். வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் ரிடையர் ஆகியும் இருப்பார்கள். ( பெண்களுக்கு ஏது ரிடையர்மென்ட் என்கிற மைண்ட் வாய்ஸ் கேட்கிறது) சொல்ல வந்த விஷயம் அதுவல்ல.
அந்தக் காலத்தில் இந்த பருவத்தைத் தான் வானப்ரஸ்தம் என்றார்கள். குடும்பப் பொறுப்புக்களைத் துறந்து கணவனும் மனைவியும் காட்டுக்குச் செல்லும் காலம். கிட்டத்தட்ட துறவறம் மாதிரி என்று சொல்லலாம். இந்தக் காடு, துறவறம் எல்லாம் இந்த காலத்துக்கு செட் ஆகாது என்றாலும் அறுபது வயது என்பது பொறுப்புக்களைக் கைவிடும் காலம் என்பது மட்டும் உண்மை தான்.
இன்றைய காலகட்டத்தில் அறுபது வயது என்பது ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி ஒரு செகண்ட் இன்னிங்ஸ் போல. காரணம், பிள்ளைகள் நகர்ந்து விடுகிறார்கள். பெரும்பாலும் பெற்றோரை எதிர்பார்ப்பதில்லை. நாமாகப் போய் சேர்ந்து கொண்டால் தான் உண்டு. ஓரளவுக்குப் பணம் இருக்கிறது. ஆரோக்கியமும் நன்றாக இருக்கிறது. நேரம் நிறைய இருக்கிறது. இந்தப் பருவத்தை, அதாவது அறுபது வயது தாண்டிய பருவத்தைப் பலரும் மறுபிறவி எடுத்தாற் போல உற்சாகமாக வாழத் துவங்குகிறார்கள்.
தனக்குப் பிடித்ததை எல்லாம் செய்ய, இள வயதில் விட்டுப் போன, அனுபவிக்க முடியாத பலவற்றை வேக வேகமாக அனுபவிக்க ஆரம்பிக்கின்றனர். குழுவாகப் பயணம் செய்வது, நிறைய கேளிக்கைகளில் நேரம் செலவழிப்பது, பிடித்த உண்வகங்களுக்குச் செல்வது,க்ளப்,பார்ட்டி என்று கலந்து கொள்வது, கோயில் உறவினர் இல்லங்கள் என்று பயணம் செய்வது, வெளிநாடுகளுக்கு செல்வது, பிள்ளைகளுடன் சென்று தங்கி இருப்பது இப்படிப் பல.
இப்படி ஒரு ஐந்து வருடங்கள் ஓடி விடுகின்றன. பிறகு சில பல ஆரோக்கிய அச்சுறுத்தல்கள், மன உளைச்சல்கள் மெதுவாகத் தலை தூக்குகின்றன. இந்த பாதிப்பில் இன்னும் ஒரு ஐந்து வருடங்களும் ஓடி வாழ்க்கை எழுபதில் நிற்கிறது. அடுத்தது என்ன என்று கொஞ்சம் தடுமாற்றம் வருகிறது.
இது எல்லோருக்கும் நடப்பதில்லை. கொஞ்சம் கற்பனையாகத் தோன்றுகிறது என்று தோன்றலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? மேலே சொன்ன எல்லா விஷயங்களையும் அறுபதுக்குப் பின் அனுபவிக்கலாம். ஆசைப்படலாம். அதில் தவறில்லை. அதற்கு நமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அதே நேரம் அறுபது வயது என்பது உடலும் மனமும் கொஞ்சம் தளரும் நேரம் என்பதும் உடல், மன ஆரோக்கியத்தில் நிறைய கவனம் செலுத்த வேண்டும் என்பதும் நமக்குப் புரிய வேண்டும். அதனால் தான் இந்த பருவத்தைப் பொறுப்புகளைத் துறந்து தள்ளி இருக்கும் காலம் என்றார்கள்.
அறுபது வயது என்பது எல்லாம் முடிந்து விட்ட காலமா, இனி மேல் என்னால் எதுவும் முடியாதா என்கிற எண்ணம் வேண்டாம். சொல்லப் போனால் அறுபது வயது தாண்டி தான் மனமும் உடலும் பொறுப்பு குறைந்து ரிலாக்ஸ் ஆகிறது என்பது தான் உண்மை.
இந்தக் காலத்து வானப்ரஸ்தம் எப்படி இருந்தால் நமக்கு நல்லது தெரியுமா? மனதளவில் குடும்பத்தில் இருந்து சற்றுத் தள்ளி இருக்கப் பழக வேண்டும். குறிப்பாக பிள்ளைகளின் குடும்பத்தில் இருந்து அது மகனோ மகளோ. அவர்களின் வாழ்க்கையில் தலையிட்டு, கோப தாபப் பட்டுக் கொண்டு, விமர்சனம் செய்து கொண்டு, அதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி, இவை போன்றவற்றைத் தவிர்த்து விடுதல் நமக்கும் சரி, அவர்களுக்கும் சரி, நல்லது தான்.
பிறகு என்ன தான் செய்வது என்கிற கேள்வி வரும். இந்த செகண்ட் இன்னிங்ஸில் நமக்கென்று ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்த திசையில் நம் நேரத்தை செலவிடுவது உத்தமம்.
ஓய்வு பெற்ற பலர், சில அதிகாரிகள், பொறுப்பான உத்தியோகத்தில் இருந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். புத்தகங்கள் எழுதுவது, சில அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதில் குழுவாகச் செயல்படுவது, தோட்டம் அமைப்பில் ஆர்வம் கொள்வது, கோவில் பொறுப்புகள் இப்படி அவரவர் இயல்புக்கு ஏற்றபடி தங்கள் நேரத்தை வடிவமைத்துக் கொள்வார்கள். இந்த விஷயத்தில் ஆண்கள் தங்களுக்கேற்ற பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அளவிற்கு, பெண்கள் புதுப் பாதையை தேர்ந்தெடுப்பதில்லை என்று தோன்றுகிறது. அதனாலேயே மீண்டும் குடும்பப் பிரச்சினைகள் மன உளைச்சல்கள் ஆரோக்கியக் குறைச்சல் என்று கஷ்டப்படுகிறார்கள்.
நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இது தான். அறுபது வயது என்பது ஒரு மைல் கல். அதற்குப் பின் நாம் நூறு வயது கூட நன்றாக வாழலாம்.
ஆனால் அதற்கான பாதையை, ஓய்வான பாதையை, மனமும் உடலும் அமைதியாகப் பயணிக்க கூடிய பாதையைப் புரிந்து கொண்டு தேர்ந்தெடுப்பது நமக்கு நல்லது.
பிடித்த பிடிகளை விட்டு விட்டுக் காட்டில் கனிகளைப் புசித்துக் கொண்டு வாழும் மனநிலையோடு உடலாலும், மனதாலும் எல்லோருக்கிடையே வாழக் கற்றுக் கொண்டு விட்டால் இந்தக் கால வானப்ரஸ்த வாழ்விலும் நிம்மதியாக வாழலாம்.

60 முதல் 70 வரையான காலத்தை ஆசிரியர் சொன்னபடி ஒருவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், அதைத் தொடர்ந்து வரும் காலம் வானப்ரஸ்தமாக இல்லாமல் ‘மான’ப்ரஸ்தமாக மாறிவிடும். அதாவது தன்மானம் சிதைந்து போகும் அளவுக்கு சூழ்நிலைகள் அவரைப் பாடாய்ப் படுத்தி விடும் என்பது உண்மை.
LikeLike