வீணை காயத்ரி

ஈமனிசங்கர சாஸ்திரியின் ராக ஸ்வரூபமும், பாலச்சந்தரின் creativityயும், சிட்டிபாபுவின் வேகமும், கே வி மகாதேவனின் கவர்ச்சியும் கொண்ட வீணை இசைக்கு சொந்தக்காரர்.
குழந்தை மேதை (child prodigy) வீணை காயத்ரியின் அப்பா ஜி. அஸ்வத்தாமா (தெலுங்கு திரைப்படத்துறையில் இசையமைப்பாளர்),அம்மா கமலா அஸ்வத்தாமா (வீணைக் கலைஞர்).வசந்த ஷோபா என்ற பெயரும் காயத்ரிக்கு உண்டு. தனது பெற்றோரிடம்,அப்புறம், டி எம் தியாகராஜனிடம் (சங்கீத கலாநிதி விருது பெற்ற பாடகர் மற்றும் வாக்கேயக்காரர்) சங்கீதப் பயிற்சி.
முதல் மேடைக் கச்சேரி 1968ஆம் வருடம் – தியாகராஜ விழாவில், திருவல்லிக்கேணியில் நடந்தது. அப்போது வயது 9.
1973ஆம் வருடம், அவரின் 13ஆவது வயதில் ஒரு முதுநிலைக் கலைஞராக அனைத்திந்திய வானொலி, காயத்ரிக்கு அங்கீகாரம் தந்தது சிறு வயது ஸ்கர்ட் உடையுடன் சிறுமியாக, அன்றைய வானொலி பத்திரிகையில் படத்துடன் இவரது நிகழ்வு பதிவானதை, அதே உடையில் அவரின் கச்சேரியும் . கேட்டிருக்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இவரை, இவரின் இசையை மிகவும் பிடிக்கும். தமிழக அரசால் அதன் இசை, நுண்கலை பல்கலைக் கழகத்தின்முதலாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அவர் தமிழக அரசு இசைக் கல்லூரிகளுக்கான இயக்குநராகவும் அரசு இசைக் கல்லூரியின் முதல்வராகவும் இருந்துள்ளார். ஜெ , இவரின் வீணை இசையை மிகவும் கேட்டு ரசித்ததுடன், அவரிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவாராம்.
புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் மற்றும் அற்புத குரலுக்கும் சொந்தக்காரர். பல ஆன்மிகப் பாடல்கள் உள்ளிட்ட ஆல்பம் வெளியிட்டுள்ளார்.
எங்கள் வீட்டிற்கு இருமுறை வந்து இருக்கிறார். ஒரு நாள் முழுவதும் இருந்து, எங்களுடன் உணவு அருந்தி, காஃபிடிஃபன் என்று சாப்பிட்டு, மாலை, காமாக்ஷி கோயில் மற்றும் அவரின் நிகழ்வு என்று கழிந்த காலம் வசந்தகாலம. எனக்கும், எனது மகனுக்கும் நன்றி கூறி எனக்கு தனது கைப்பட கடிதம் எழுதி உள்ளார்.
புதுப்புது ராகங்கள், பாலமுரளி, ஜெயலலிதா, ஜி கே வெங்கடேஷ் மற்றும் இளையராஜா பற்றிய தகவல்கள் அவரது பேச்சில் இடம்பெறும்.
கூட்டத்துக்கு வாசிக்காமல், நிம்மதியாக அம்பாள் முன் வாசிக்க வேண்டும் என்று ஒருநாள் கேட்டார், காஞ்சிபுரம் என் இல்லம் வந்து, மாலை காமாக்ஷி சந்நிதானத்தில், சுற்றி 8 பேர் இருக்க, குறைந்த வெளிச்சத்தில் 1-½ மணி நேரக் கச்சேரி – அல்ல, இசை சமர்ப்பணம் – ஒவ்வொரு தந்தியிலும் காமாஷி கண்களில் தெரிந்தாள் என்று கூறலாம். அவருக்கு மட்டுமல்ல, கேட்ட எங்களுக்கும் மஹா பாக்யம்.
40 வயதிலேயே முட்டுவலி அதிகம் என்று சொல்வார்கள். அப்போதிருந்தே, வெகு சில கச்சேரிகள் மட்டும் ஒத்துக் கொண்டார்கள். இசைக் கல்லூரி பொறுப்பு ஜெ மறைவிற்குப் பின் பல சர்ச்சைகள் – அவரின் பதில்கள் – அப்புறம் விரக்தி என ஒதுங்கிவிட்டார். மகள்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள் என்று தகவல்.
திரையில் ஜி கே வெங்கடேஷ் மற்றும் இளையராஜா இசை அமைப்பில் வெளிவந்த பல பாடல்களில் இவரது வீணை இசை இருக்கும். அந்தப்புரத்தில் ஒரு மகாராணி, கண்ணன் ஒரு கைக்குழந்தை, வீணை மீட்டும் கைகளே போன்ற பல ஹிட் பாடல்களில் இவரது வீணை இசை தூக்கலாக இருக்கும்.
வீணையில் வித்தியாசத்தைக் கொண்டு வந்த பன்முக வித்தகி காயத்ரி என்றால் மிகைஆகாது.
