குலசேகரபாண்டியன்
சரித்திரம் பல எழுச்சிகளைச் சந்தித்திருக்கிறது. பல வீழ்ச்சிகளைச் சந்தித்திருக்கிறது. சாம்ராஜ்யங்களை வழங்கியிருக்கிறது. விழுங்கியுமிருக்கிறது. பாண்டியநாட்டின் பொற்காலக் கதை எப்படிப் போகிறதென்று பார்ப்போம்.
கி பி 1268: வெற்றி ஒன்றையே பார்த்த ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், தனது முடிவு நெருங்குவதை உணர்ந்தான். சிலவருடங்களுக்கு முன்னரே, தனது மகன் குலசேகரனை பாண்டிய நாட்டின் பட்டத்து இளவரசனாக்கியிருந்தான். தம்பி வீரபாண்டியனும், பாண்டியநாட்டின் ஒரு பகுதியை ஆண்டுகொண்டிருந்தான். அனைத்து இளவரசர்களையும் அழைத்துச் சொன்னான்: “பாண்டிய முத்துக்களே! என் கதை முடியும் நேரம் வந்துவிட்டது. நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாண்டிய சாம்ராஜ்யத்தை உன்னத நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும்” என்று கூறினான். கோரினான். இளவரசர்கள் அனைவரும் உறுதி அளித்தனர். சுந்தரபாண்டியன் மகிழ்ச்சியுடன் உயிர் விட்டான்.
அவனுடன் தனது வாழ்க்கையை முழுவதும் சேர்ந்து கழித்திருந்த தம்பி வீரபாண்டியன் துக்கித்து நின்றான். இளவரசன் குலசேகரனிடம், “மகனே குலசேகரா, நீ மதுரையில் முடிசூடி, அண்ணன் விட்டுச்சென்ற இந்த வளநாட்டைப் பொன்னாடாக்கு” என்று ஆசி கூறினான்.
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்ற பட்டப்பெயருடன் கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை அரசாண்டான். சிற்றப்பன் வீரபாண்டியன், தம்பி விக்கிரமபாண்டியன் இருவரும் பாண்டிய நாட்டின் மற்ற பகுதிகளை ஆண்டனர்.
கி.பி. 1274: தந்தை சுந்தரபாண்டியன், முதலில் சேர நாட்டுத் தாக்குதலில் வென்றது போல, குலசேகரனும் சேரநாட்டைத் தாக்கினான். பாண்டியப் படைகள் விரைந்தது. சேரநாட்டின் மீது படையெடுத்துச் சென்று, வேனாட்டைத் தாக்கி, அந்நாட்டில் உள்ள கொல்லத்தை வென்று அதனைக் கைப்பற்றிக் கொண்டான். அதனால் இவன் ‘கொல்லம் கொண்ட பாண்டியன்’ என்னும் பட்டப்பெயர் பெற்றான்.
கி பி 1284: ஈழ நாட்டின் மீது குலசேகரன் பார்வை படிந்தது. ஆரியச் சக்கரவர்த்தி என்ற படைத்தலைவன் தலைமையில், பெரும்படை ஒன்றை இலங்கைக்கு அனுப்பிவைத்தான். அப்படைத்தலைவன் ஈழத்தின் பல பகுதிகளைப் பேரழிவிற்கு உள்ளாக்கி, நகரங்களைக் கொள்ளையிட்டுச் சுபகிரி என்னும் நகரில் இருந்த பெருங்கோட்டையைக் கைப்பற்றினான். இறுதியில், அந்நாட்டில் உள்ள பெருஞ்செல்வங்களையும், புத்தரது பல்லையும் கைப்பற்றிக் கொண்டு வெற்றியுடன் பாண்டிய நாட்டிற்குத் திரும்பினான். புத்தரின் பல்லை, ஈழ நாட்டார் புனிதப் பொருளாகக் கருதி வந்தனர். பாண்டியரோடு போர் புரிந்து, அப்பல்லைப் பெறுவதற்கு இயலாத நிலையில் இருந்தான் ஈழநாட்டு மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகு. நாட்டுமக்களும், மந்திரிகளும் மன்னனிடம் “பாண்டியன் நமது செல்வங்களைக் கவர்ந்தான். பல வீரர்கள் உயிர்களைக் கவர்ந்தான். இவைகள் அனைத்தையும் கூட நாங்கள் பொறுத்துக்கொண்டோம். ஆனால், புத்தரின் பல், புராதனமானது. எங்கள் உயிருக்கும் மேலானது. அதை எப்படியாவது மீட்டு வரவேண்டும்” என்று முறையிட்டனர். ஈழ மன்னன் முடிவெடுத்தான்.
பாண்டிய நாடு புறப்பட்டான். விலையுயர்ந்த பொருட்களைக் காணிக்கையாக எடுத்துக்கொண்டு மதுரைக்குப் பயணித்தான். குலசேகரபாண்டியனைப் பணிந்து நட்புரிமை கொண்டான். குலசேகரன் மகிழ்ந்தான். ஈழமன்னன் புறப்படும் நேரம் வந்தது. குலசேகரனும், விலையுயர்ந்த கொற்கை முத்துக்களை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தான். இலங்கை அரசன் ”பாண்டிய மன்னா! எங்கள் உயிருக்கு மேலான புத்தரின் பல்லை எங்கள் நாடு ஆயிரம் வருடங்களாகப் போற்றி வணங்கி வருகிறது. அதை எங்களுக்குத் தந்து அருளவேண்டும்“ என்று இறைஞ்சினான். மனம் நெகிழ்ந்த குலசேகரன், புத்தர் பல்லை இலங்கை மன்னனுக்குக் கொடுத்தான்.
கி பி 1279: போசளர், மட்டும் சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திரன் இருவரையும் சுந்தரபாண்டியன் தோற்கடித்தது நாம் அறிந்ததே. மீண்டும் பல வருடம் கழித்து, மீண்டும் இருவரும் சேர்ந்து பாண்டியனை எதிர்க்கத் துணிந்தனர். போசளர் ராமநாதனையும், மூன்றாம் ராஜேந்திர சோழனையும், போரில் குலசேகரன் ஒருசேர தோற்கடித்தான். அத்துடன் தமிழ்நாட்டில் இருந்த போசளர் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. சோழன் பெயர் சரித்திரத்திலிருந்து மறைந்தது.
இவனது ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாடு உயர்நிலையில் இருந்தது. வெனிஸ் நாட்டு வழிப்போக்கனான மார்க்கோ போலோ, பாரசீக நாட்டைச் சார்ந்த இசுலாமிய வரலாற்றாசிரியர் வாசாப் என்பவரும் இவனுடைய காலத்தில் பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தனர்.
சோழ நாடு, கொங்கு நாடு, தொண்டை நாடு ஆகிய நாடுகள் இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. இவனுக்கு முன் அரசாண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியனது ஆட்சியில் பாண்டியப் பேரரசின் கீழ் அடங்கியிருந்த எல்லா நாடுகளும் இவனது ஆட்சிக் காலத்திலும் இருந்தது. அங்ஙனமே சடையவர்மன் சுந்தர பாண்டியனைப் போலவே இம்மாறவர்மன் குலசேகரபாண்டியனும் எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ குலசேகர பாண்டியன் என வழங்கப்பெற்றான். மேலும் இவன் தன் பேரரசிற்கு உட்பட்டிருந்த நாடுகள் எல்லாம் அமைதியாக இருத்தல் வேண்டித் தன் தம்பிமார்களான மாறவர்மன் விக்கிரமபாண்டியன், சடையவர்மன் குலசேகரபாண்டியன் ஆகியோரை அந்நாடுகளில் அரசப் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சி செய்து வருமாறு ஏற்பாடு செய்தான்.
குலசேகரன் அரசவையில் தகியுத்தீன் அப்துர் ரகுமான் என்பவர் முதன்மை மந்திரியாக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல் பட்டினம், பிடான், மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக அப்துல்லா வசாப் எனும் அரபிய வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் வருகை புரிந்த பயணி மார்க்கோ போலோ உலகின் புனிதம் வாய்ந்த நகராக குறிப்பிடுகிறார்.
இனி ஒரு சிறப்பான சரித்திரத் தகவலைச் சொல்லவேண்டும். நீங்கள் இதுவரை படித்த மன்னன் குலசேகரப்பாண்டியன் தான் தமிழகத்தின் கடைசிப் பேரரசன்! தமிழகத்துக்கு விபரீத காலம் வரும் நாள் வரப்போகிறது. அந்த விபரங்கள் இனி தொடர்வதற்கு முன்னர், ஒரு முக்கியமான விருந்தாளி ஒருவர் (உங்கள் ஊகம் சரிதான். அது இத்தாலியப் பயணி மார்கோ போலோ தான்) கதையைச் சொல்லியாக வேண்டும். அது விரைவில்.

உலக வரலாற்றில்தான் எத்தனை விந்தைகள்!
LikeLike