2,128 Indian Old Man Black Stock Photos - Free & Royalty-Free Stock Photos from Dreamstime

    “நம்ம ஊருக்கு சாமியார் வந்திருக்காரு…. சாமியார் வந்திருக்காரு….” என கத்திக் கொண்டே அந்த சிறுவன் அந்த தெரு முழுவதும் சுற்றி சுற்றி வந்தான்.

    அது ஒரு சிறிய கிராமம். மொத்தம் ஐந்து தெருக்கள். ஒவ்வொரு தெருவிலும் 20 வீடுகள் இருந்தால் அதிகம். 100 குடும்பங்கள் இருக்கும் அழகான கிராமம். நகர வாசனை சிறிதுமற்ற சந்ததியற்ற இடம். அங்கு இருக்கும் அனைவருமே சினிமாவில் வருவது போல சாதி சண்டை எல்லாம் போடாமல் அமைதியாக வசிப்பவர்கள். ஊருக்கு வெளியே ஒரு பெரிய அரசமரம். அருகில் ஒரு பாழடைந்த மண்டபம். அரசமரம் என்றாலே பிள்ளையாரும் இருப்பார் அல்லவா ? ஆம் ஒரு அழகான கருங்கல்லால் ஆன பிள்ளையார் அழகான தொந்தியுடன் இருந்தார். குளத்தருகில் உள்ள படிக்கட்டும் பிள்ளையாரை சுற்றியுள்ள மேடையும்தான் ஊர் மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு இடம் .மாலை ஆனால் இருபது பேருக்குக் குறையாமல் கூடி வம்பளப்பார்கள். அது அரசியல், சினிமா கிசுகிசு என நேரம் போவதே தெரியாமல் போய்க் கொண்டிருக்கும்.

திடீரென்று இந்த சின்னப் பையன் சாமியார் வந்தாச்சு என  உரக்கக் கூவிக்கொண்டே வருவதைப் பார்த்து அந்த ஊர் மணியக்காரர் கோவிந்தன் பிள்ளை தான் அவனைப் பார்த்து “டேய்… நில்லுடா ,கொஞ்சம் ஓடாம இங்க கிட்ட வந்து சொல்லு, எங்க வந்தி ருக்காரு எந்த ஊரு சாமியார் ? நீ பாட்டுக்கு பஸ் ஓட்டிக்கிட்டே போறியே… கொஞ்சம் விவரத்தை சொல்லு..” என்று அந்த பையனைப் பிடித்துக் கொஞ்சம் சத்தமாகவே கேட்டார். அந்தப் பையனும், “ஆமா ஐயா நம்ம பிள்ளையார் கோவில் பக்கம் அந்த மண்டபம் இருக்குல்ல… அங்க தான் அவர நான் பார்த்தேன்… ஒரு காவி வேட்டி ஒரு துண்டு, கையில் ஒரு தடி, நீளமான தாடி, முடி வச்சுக்கிட்டு நெத்தியில பெருசா பட்டையா துன்னூறு பூசிக்கிட்டு கண்ணைப் பார்த்த பயமா இருக்கு ஐயா..” என்றான் மூச்சு விடாமல்.

   கோவிந்தன் பிள்ளைக்கு ஒரே ஆச்சரியம். இந்த ஊருக்கு ஒரு  டிவிகாரங்க, நியூஸ்காரங்க எவனும் வரமாட்டார்களே… இந்த சாமியார் எங்க இருந்து கிளம்பி இம்புட்டு தூரம் வந்தார்… ஒருவேளை போலி சாமியாரா இருக்குமோ ? சேச்சே… போலி சாமியார் எல்லாம் சிட்டிக்குத் தான் போவாங்க…  அங்கதானே பணப்புழக்கம் அதிகம் இருக்கும்.  ஏமாறுகிறவர்களும் அதிகம். இங்க  வெளியூரிலிருந்து ஒரு பையன் வரமாட்டானுங்க… இப்ப என்ன புதுசா ஏதோ ஒரு சாமியார்… ரொம்ப அதிசயமா இருக்கே…. இதுல ஏதாவது வில்லங்கம் இருக்குமோ ? என பலவிதமான எண்ணங்கள் அவர் மனதில் ஓடியது. உடனே துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு விடு விடு என நடையைக் கட்டினார். அந்த மண்டபத்திற்கு அருகில் நெருங்கும்போது ஊரே கூடி இருந்தது.  இவர் அங்கு சென்றதும் எல்லோரும் அவருக்கு மரியாதை நிமித்தம் வழிவிட்டு நின்றனர்.

   அவரும் உள்ளே போய் அந்த பாழடைந்து மண்டபத்தைப் பார்த்தார். ஆம் அந்த சிறுவன் சொன்னது போல உண்மையிலேயே ஒரு சாமியார். நீண்ட வளர்ந்த வெண்மையான தாடியுடன் கையில் ஒரு தடியை ஊன்றி அமர்ந்திருந்தார். இடுப்பில் ஒரு காவி வேட்டி. மேல் துண்டு. தலைமுடி நீளமாக இரு பக்கமும் தொங்கியது. நெற்றி முழுவதும் பட்டையாக விபூதி. நடுவில் ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு குங்குமம். கண்களில் ஒரு தீட்சண்யம். ஒரு அறுபது வயது இருக்கும். பார்ப்பவர்களை மறுபடியும் பார்க்கத் தூண்டும் தோற்றம். அவர் ஆடாமல் அசையாமல் அந்த மண்டபத்தின் நடுவில் அமர்ந்திருந்தார். கூடியிருந்த கிராமத்தினர் அனைவரும் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இவர் போய் அவர் முன் நின்று தொண்டையைக் கனைத்தார். சாமியாரிடம் எந்த அசைவும் இல்லை. நிமிர்ந்து இவரைப் பார்க்கவும் இல்லை. நேராக வெறித்துப் பார்த்தபடி இருந்தார்.

    “இந்தாங்க சாமி… எதுக்கு இந்த சின்ன பனங்குடி கிராமத்துக்கு வந்திருக்கீங்க?…  யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களா சாமி ?” என்று அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டார் மணியக்காரர் கோவிந்தன் பிள்ளை. அப்போதும் அவரிடம் இருந்து பதிலே இல்லை.  பொறுமை இழந்து அந்த கிராமத்தினர் ஒவ்வொருவராக கலைந்து போக ஆரம்பித்தனர். அவரவர் வேலையை பார்க்க வேண்டுமே… இந்த சாமியாரையே பார்த்துக் கொண்டிருந்தால் சோற்றுக்கு என்ன பண்ணுவது ? வேலையைப் பார்க்க வேண்டாமா ? சலிப்புடன் எல்லோரும் அவரவர் வேலையை பார்க்கக் கிளம்பிவிட்டனர். அமைதியான மணியக்காரருக்கும் கோபம் வந்துவிட்டது. “ஏன் சாமி நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்…. பதிலையே காணோம்..” என்று சிறிது சத்தமாகவே கேட்டார். ஒரு பலனும் இல்லை அதே நிலைமையில்தான் இருந்தார்.

அந்த சாமியார் பக்கத்தில் இருந்தவர் மணியக்காரரிடம் சொன்னார், “ஐயா நாம இப்போ போயிட்டு அப்புறம் வரலாம்.. இவர் கண்ண திறந்து கொண்டே தியானம் பண்ணுகிறார் போலும்.. வாங்க ஐயா நாம போவோம்” என்று இழுக்க மாட்டாத குறையாக கோவிந்தன் பிள்ளையை இழுத்துக் கொண்டு சென்றார். அவருக்கு உள்ளூர பயம் மணியக்காரருக்கு கோபம் தலைக்கேறி ஏடாகூடமாக ஏதாவது செய்து விடுவாரோ என்று. உண்மையிலேயே பெரிய சாமியாராக இருந்தால் அவர் கோபத்திற்கு இந்த கிராமம் ஆளாகி விடுமோ என்று கவலைப்பட ஆரம்பித்தார். வேறு வழி இன்று இருவரும் மௌனமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.

   ஒரு குறும்புக்காரப் பையன் அவர் அருகில் சிறு சிறு கற்களை வைத்து விட்டு சிரித்து விட்டுப் போனான். வாயால் வண்டி ஓட்டிக்கொண்டே வீடு வீடாக சாமியார் வருகையைச் சொன்ன சிறுவன் அடுத்த தெருவுக்குள் நுழைந்து மீண்டும் சாமியார் வந்திருக்காரு என்று சத்தம் போட ஆரம்பித்தான். தன் மகளுக்குத் தலை வாரிக்கொண்டிருந்த ரஞ்சிதம் “என்னடா சாமியாரா ? எங்க ? நீ பார்த்தாயா ?” என்று அவனைப் பார்த்து கேட்டாள். “ஆமாம்மா… நம்ம ஊரு பிள்ளையார் கோவில் பக்கத்துல இருக்குற மண்டபத்துல இருக்காரு… எல்லாரும் அவரை பார்த்துட்டு திரும்பறாங்க… நீங்க போலயா ?” என்றான். “ஆமா அது ஒன்னுதான் குறைச்சல்… இங்க சோத்துக்கே சிங்கி அடிக்க வேண்டி இருக்கு… இதுல சாமியார் வேற… என்று அலுத்துக் கொண்டே தன் பெண் தலையை அழுத்தி வாரினாள்.

   “ஆ… ஏம்மா… இப்படி பண்ற ?” என்று வலி தாங்க முடியாமல் அழ மாட்டாத குறையாகக் கேட்டாள் அந்த சிறுமி. ரஞ்சிதம் தன் இயலாமையும், ஆற்றாமையையும் ஒருசேர அவள் தலையில் காட்டினால்  அந்த சிறுமி தாங்குவாளா பாவம்… வலியில் கத்தினாள். மீண்டும் முதுகில் ஒரு அடி கொடுத்து, “போடி வேற வேல இல்ல… எனக்கு வேலைக்குப் போகணும்… உனக்கு சீவி சிங்காரிக்க ஏதடி எனக்கு நேரம் ?” என்று சொல்லிக் கொண்டே விருட்டென்று எழுந்து வேலைக்குக் கிளம்பி விட்டாள். அந்த சிறுமியும் அழுது கொண்டே உள்ளே போனாள். அங்கு இருக்கிற பஞ்சாயத்து யூனியன் ஸ்கூலுக்கு போனா ஒருவேளை சோறாவது கிடைக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டே கிழிந்த பாவடையுடன் பள்ளிக்கூடம் போகத் தயாரானாள். பசி வயிற்றைக் கிள்ளியது. அம்மா வைத்திருந்த கஞ்சியைக் குடித்துவிட்டு வெளியே இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

    மக்கள் எல்லோரும் அந்த சாமியாரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். இந்த பத்து வயது சிறுமிக்கும் ஆவல். நாமும் போய் பார்த்தால் என்ன ? சாமியார்னா யாரு ? அவருக்கு என்ன தெரியும் ?  அங்கிருந்த ஒரு வயதான பெண்ணைப் பார்த்து, “சாமியார்னா யாரு பாட்டி ?” என்று கேட்டாள் அந்த சிறுமி. “சாமியார்னா ஒரு சாமி… கோயில்ல சிலை எல்லாம் இருக்கும்ல… இவர் உசுரோட இருக்கிற சாமி” என்றாள்.  “அப்படின்னா நாம ஏதாவது கேட்டா கொடுப்பாரா ? என்றாள். போ.. போயி வேலையப் பாரு என அதட்டி விட்டு அங்கிருந்து சென்றாள் அந்த வயதான பெண்மணி. இந்த ரஞ்சிதத்தின் மகள் பொன்னிக்கு ஒன்றும் புரியவில்லை. பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் எல்லோருடன் சேர்ந்து சாமியாரைப் பார்க்க முடிவு செய்து அவர்களுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.

    ஆனால் அந்த மண்டபத்தை சுற்றி நான்கு பேர் நின்று கொண்டு சாமியார் கிட்ட ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அவர் எதற்குமே பதில் சொல்லாமல் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தார். அவரின் உருவத்தைப் பார்த்தவுடன் பொன்னிக்கு பயம் வந்துவிட்டது. விறுவிறுவென தலை தெறிக்க பள்ளிக்கூடத்தை நோக்கி ஓடினாள். அதற்குள் மணி அடித்து விட்டதால் எல்லா பிள்ளைகளும் வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டனர். மூச்சிரைக்கு ஓடி வந்து பொன்னியும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள். நல்லவேளை வகுப்புக்குள் வந்துவிட்டோம் என அவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

வழக்கம்போல டீச்சர் வகுப்பிற்குள் நுழைந்த உடனே எல்லோரும் எழுந்து வணக்கம் சொன்னார்கள். பொன்னிக்கு மனசு முழுக்க அந்த  சாமியார் நினைவுதான். அவரைப் பார்த்ததில் இவளுக்கு பயம் அதிகரித்திருந்தது. அவர் முகமே சுற்றி சுற்றி வந்தது.. பொன்னி எப்போது பள்ளி முடியும், அம்மாவிடம் போய் இந்த சாமியாரைப் பற்றி சொல்லணும் என்று எண்ணினாள். மாலை வழக்கம் போல் அவள் வீடு திரும்பும் போது அவள் அம்மாவே அவளைத் தேடி பாதி தூரம் வந்துவிட்டாள். பொன்னிக்கு நம்ப முடியவில்லை. அம்மா தன்னை ஒருநாளும் கூட்டிப் போக வராது, இன்னிக்கு மட்டும் என்ன திடீர்னு என்னைக் கூட்டிப் போக வந்திருக்காங்க என்று ஆச்சரியப்பட்டாள். இவளைப் பார்த்ததும் அவள் அம்மா ரஞ்சிதம் இவளைக் கட்டிக்கொண்டு ஓவென்று கதறினாள்.

  அவள் அம்மா சாமியாரைப் பார்த்த விஷயமும் அவர்தான் பொன்னியின் அப்பா என்றும் பொன்னிக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்.