முத்துச் சிப்பி (இரு பாகங்கள்) - எல். கைலாசம், Buy tamil book Muthu Chippy (two Parts) online, L.Kailasam Books, கட்டுரைகள்

  1. நின்றன வல்ல வாழ்நாள் நிதியமும் நின்ற வல்ல

சென்று சென்று அணுகி நாளும் சினவரன்‌ சொன்ன நன்னூல்

ஒன்றிய மனத்த ராகி ஊதியம்‌ கொள்வர்‌ நல்லோர்‌

அன்றெனில் அதனைக்‌ காணா ஆதனே போலும் அன்றே.

 

[நிதியம்=செல்வம்; சினவரன்=கடவுள்; ஊதியம்=ஞானம்; ஆதன்=மூடன்]

 

நாம் வாழ்கின்ற நாள்கள் எல்லாம்‌ நிலைபெற்றனவல்ல.  நாம் தேடி வைத்துள்ள செல்வங்களும் நிலைத்தனவல்ல. எனவே  இவற்றின்‌ நிலைமையை உணர்த்த நல்ல அறிவுடையவர்கள்  நாள்தோறும் கடவுள்‌ கூறியிருக்கும்  நல்ல அறங்கள் கூறும் நல்ல நூல்களில்‌   மனத்தினைச் செலுத்தி அவற்றின் வழியிலே சென்று ஞானமாகிய பயனை  அடைவார்கள்‌.  இங்ஙனம்‌ நல்வழியில்‌ செல்லாமல் அந்த ஞானமாகிய பயனை  அறியாதவர்  மூடராகவே இருப்பர்.

  1. கேத்திர நன்ற தாகிற்‌ கேடின்றி யிட்ட வித்து

  வாய்த்ததா வெழுந்து நன்றாய்‌ விளைதலைக்‌ காட்டு மாபோல்‌

  ஏத்தருந்‌ தவத்தின்‌ மிக்க வெல்லையில்‌ குணத்தி னார்க்குப்‌

  பாத்திர தான மீந்தாற்‌ பயனுமற்‌ றதனை யற்றே,;

 

[கேத்திரம்=நிலம்; வித்து=விதை; ஏத்தரும்=துதித்தற்கு அரிய; பாத்திரம்=தகுதி உடைய பெரியோர்]

 

நிலமானது நன்றாக இருக்குமேயானால்‌ அதில் விதைக்கப்பட்ட விதையானது கெடுதல்‌ இல்லாமல்‌ சிறந்த முறையில் முளைத்து உயர்ந்து நன்மையாகப் பயன்தருமாம். அதேபோல துதித்‌தற்கு அரிய  தவத்தினாலே மிகுந்த அளவற்ற நற்குணங்களையுடைய நல்லவர்களுக்குத்  தகுதியான இடத்தில் தானம்  கொடுத்தால்‌ அத்தானத்தால்‌ உண்டாகும் பயனும்‌ அந்த நல்ல நிலத்தில் விளைந்த விளைவின்‌ அளவேயாம்‌, ஆதலால்‌ பிறருக்குக் கொடுத்தலை  மிகுதியாகச்‌ செய்யவேண்டும்.

  1. ஓக்கத்தான்‌ மதியம் முட்டும் உறுதவன் நகரி முன்னே

யாக்கையால் அழகி தாய்ஓர்‌ பொன்மயில் ஆடக்‌ கண்டு

தோக்கையைப்‌ பற்ற லோடும்‌ தொட்டவன்‌ காய நூக்கிக்‌

காக்கையாப்‌ பறந்தே ஓடக்‌ கவர்ந்து அங்கை சோர்ந்து விட்டான்‌.

 

[ஓக்கம்=உயர்ச்சி; மதியம்=சந்திரன்; உறு=மிகுதியாக; தவன்=தவத்தினை உடைய அருகக்கடவுள்; யாக்கை=உடல்; தோக்கை=தோகை; நூக்கி=தள்ளிவிட்டு; அங்கை=அழகிய கை]

 

 உயர்வாலே மேலும் வளர்ந்து சந்திரன்‌ வரையிலும்‌ போய்‌ முட்டுகின்ற, மிகுதியாகிய, தவத்தினையுடைய அருகனது, கோவிலுக்கு எதிரே உடல் அழகினையுடையதாய்‌, பொன்னாலாகிய ஒரு மயில்‌ ஆடியது. அதைக் கண்ட ஓர் அர்ச்சகன்‌ பேராசைகொண்டு அதன்‌ இறகு முழுமையும்‌ கைப்பற்றவேண்டுமென்று நினைத்து அதன்‌ தோகையைப் பிடித்த மாத்திரத்தில்‌, அம்மயில் அவ்வாறு கைப்பற்றிய அர்ச்சகனைத் தூக்கிக் கொண்டு காக்கை வடிவமாகப் பறந்துசென்று, அவனைத் தள்ளிவிட்டு ஓடிப்போனது. அவன்‌ அழகிய கை தளர்ச்சி அடைந்து பிடித்த பிடியைவிட்டுக்‌ கீழே வீழ்ந்து இறந்தான்‌ .

ஒருவன்‌ மயில் தோகைபற்றி பிறந்த கதையாவது:–* தர்மத்தில் சிறந்த ஓர் அர்ச்சகன் ஒரு ஜைன ஆலயம் கட்டி அதில் அருகக்கடவுள்  பிரதிஷ்டை செய்து‌ ஆனால்  அதற்கு நித்தியபூஜைக்குத் தக்கபடி‌ ஏற்படுகள் செய்யாமல் மரணமானான். அவன் ‌ தேவருலகில் பிறந்தான்.‌ முற்பிறவியில்‌ செய்த அக்குற்றத்தை நிவர்த்திக்க  ஒரு பொன்‌ மயில்‌ ரூபமாக அந்த ஆலயத்தைச்சார்ந்து, அருகக்கடவுளுக்கும்‌ அர்ச்சகனுக்கும்‌ உபயோகமாகும்படிக்கு  தினந்தோறும்‌ இரண்டு பொன்னிறகு போட்டு  வந்தான்‌. அந்த இறகுகளால்‌ அந்த அர்ச்சகன்‌, கடவுள்‌ பூஜாவிதிகளை நிறைவேற்றிக்கொண்டு தானும்‌ சுகமாக வாழ்ந்து  வந்தான்‌. அப்படி இருக்கும்போது அவன்‌ ஒரு நாள் இந்த மயிலையே பிடித்துக்‌ கொண்டால்‌ அநேகம்‌ பொன்னிறகுகள்‌ அகப்படும்‌; அவற்றால்‌ நமக்‌குப்‌ பொருள்‌ குவிந்துவிடும்‌,” என்று பேராசைகொண்டு, அம்மயில்‌ வந்திருக்கும்போது அதன்‌ தோகையைப்‌ பற்றினான்‌. அந்த மயில்  அப்‌படியே அவனைத்‌ தூக்கிக்கொண்டு காக்கை வடிவமாக ஆகாயத்தில்‌ பறந்தது.  அவன்‌ பயந்துபோய்க்  கைப்பிடியைவிட்டு நிலத்‌தில்‌ வீழ்ந்து நொடிப்பொழுதில் மாண்டான்‌” என்பதாகும்‌.

  1. நல்ல சூழ்ச்சி யல் லாநரி எய்திய

அல்லல்‌ கேட்டும் அறம்செய்கி லாதவர்‌

செல்லல் எய்திய செம்பொனின் இட்டிகை

புல்லி தாக்கொண்ட வாணிகன்‌ போல்வரே.

 

[செம்பொன்னின்‌ இட்டிகை=சிவந்த பொன்னையுடைய செங்கற்களை, புல்லிதா=அற்பமாக]

 

இந்நூலின்‌ தொடக்கத்தில் சொல்லப்பட்ட  நல்ல ஆலோசனை இல்லாத  நரியானது, பேராசையினாலே அடைந்த துன்பத்தைக் கேட்டும்‌, தருமத்தைச் செய்யாதவர்கள் அருகக் கடவுளின் ஆலயத்தின் பொருட்டு ஜயசேன மகாராஜனால்‌ அழைப்பின் பேரில் அங்கு சென்ற சிவந்த பொன்னையுடைய செங்கற்களை அற்பமாக நினைத்துப் பேராசையால்‌ கைப்பற்றிய லோலுபன்‌ என்னும்‌ பிட்டுவாணிகன் போலத்‌ துன்பத்தை அடைவார்கள்‌.

 

 பொற்செங்கற்‌களைக்‌ கவர்ந்த லோலுபன்‌ கதையாவது:–ஜயசேன மகாராஜன் என்பவன் ஒரு ஜைன ஆலயம் கட்டுவதற்காகச்‌ செங்கற்களைத்‌ தன்‌ குடிமக்கள் மூலம் வரவழைத்துக் கொண்டிருந்தான்‌. அப்போது அம்‌மன்னனது நகரத்திலிருந்த லோலுபன்‌ என்னும்‌ பிட்டுவாணிகன் ஒருவன்‌, செங்கற்கள்‌ கொண்டுவந்தவர்களில்‌ ஒருவனுக்கு உணவு அளித்து, அவனிடத்தில்‌ சில செங்கற்களைத்‌ தனக்காக வாங்கிவைத்தான்‌.

 

அவற்றுள்‌, ஒரு செங்கல்லில்‌ பொன்னாலன ஒரு துண்டம்‌ காணப்பட்டது. அதைக்கண்டவுடனே அவன்‌ மகிழ்ச்சி அடைந்து  எல்லாவற்றிலும்‌ இப்படியே துண்டம்‌ இருக்கும்  என்று நினைத்து, மேலும்‌ செங்கற்களை வாங்கி வைக்கவேண்டும் என்று பேராசை கொண்டான். முன்னால் தனக்குச்‌ செங்கற்கள்‌ கொடுத்தவனுக்கு மேலும்‌  பலவித தானங்களைச் செய்து அவனிடத்தில்‌ இரகசியமாகத்‌ தினந்தோறும்‌ செங்கற்களை வாங்கித்‌ தன்‌ வீட்டில்‌ பத்திரப்படுத்திவந்தான்‌.

 

அங்ஙனம்‌ அவன்‌ நடத்திவரும்போது ஒரு நாள்‌, தன்‌ மகளைக்‌ காண்பதற்காக  அவளிருக்கும்‌ கிராமத்திற்குப்‌ போகவேண்டிய அவசரம்‌ நேர்ந்தது. அவன் செல்‌ லும்போது, செங்கற்கள்‌ வாங்கும் தொழில்‌ ஒருநாளேனும்‌ தவறக்‌ கூடாதென்று கருதித்‌ தன்‌ மகனையழைத்து அவனிடம்‌ செங்கற்கள்‌ கொடுப்பவனுக்குத்  தானங்கள் செய்து அவனிடமிருந்து அவற்றை வாங்கிச்‌ சேர்க்குமாறு கூறிச்சென்றான்‌. அவனுடைய மகனும் தந்தை சொன்ன அக்காரியத்தைச்‌ செய்யாமல்‌ மறதியாயிருந்து விட்டான்‌. லோலுபன்‌ கிராமத்திற்குச் சென்று மீண்டுவந்து பார்க்க, மகன்‌, அவன்‌ சொல்லிச் சென்ற செயலை நிறைவேற்றாமல்  இருந்தது தெரிந்தது.

 

உடனே அவனுக்குப்‌ பேராசையால்‌ கோபம் வந்தது. அதனால்‌ அவன்‌ தன்‌ மகனுடைய தலையில் அடித்ததோடு, ,செங்‌கற்களை வாங்குவதை விட்டு ஊருக்குச்சென்ற அவன்‌ கால்களிலும்  அடித்தனன்‌. இந்தச் செய்தி  அரசனுக்குத்‌ தெரிந்தது. உடனே அம்மன்னன்‌ அவனைத்‌ தண்டிக்குமாறு‌  கட்டளையிட்டான்‌. அவ்வாறே அவர்கள்‌ அவனைத் தண்டிக்க  அவன்‌ மரணமடைந்து கீரியாயினன் ‌என்பதாம்‌. இக்கதை ஸ்ரீபுராணத்துள்ளது. (ஆதிபுராணம்‌, ப. 61)

 

  1. மெய்பொருள் தேறலன்‌ பற்றுள மேபுரிந்‌து

இப்பை யாக்கையில் தேர்ச்சியில்‌ வாணிகன்‌

கப்பி யாப்பிறந்‌ தான்எனும்‌ கட்டுரை

ஒப்ப நூல்உணர்ந்‌ தார்சொலக்‌ கேட்டுமால்‌,

 

தேறலன்=அறியாதவன்; பற்று=பேராசை; இப்பை=இந்த உடல்; தேர்ச்சியில்=அறிதல் இல்லாத; கப்பியா=குரங்காக]

இந்தப்பை போன்ற கூடான உடல்‌ மிகவும்‌ இழிவானதென்றும்‌, நிலையற்ற தென்றும்‌ ஆராய்ந்து இதன்‌ நிலைமையை அறிதல் இல்லாத நாகதந்தன்‌ என்னும்‌ வணிகன்‌, உண்மைப் பொருளாகிய ஞானத்தை அறியாதவனாய்‌ மனத்தில்‌, பேராசையையே விரும்பி செய்யத்தகாதன செய்து, குரங்காகப் பிறந்தான்‌ என்னும்‌ உறுதியான சொற்களை உண்மையான அறிவு நூல்களினைக்‌ கற்றுணர்ந்தவர்கள்‌ உரைக்க நாம்‌ கேட்டிருக்கின்றோம். ஆதலினால்‌ நாம்‌ நிலையற்ற உலகவாழ்வில்‌ பற்றுவைக்காமல்‌, அறத்தைத்‌ தேட வேண்டும்

பற்றுளத்தால்‌ குரங்கான நாகதந்தன்‌ கதையாவது :–தான்யபுரத்‌தில் இருந்த குபேரதத்தன் என்பவனுக்கும்‌, சுதத்தையென்னும்‌ அவன்‌ மனைவிக்கும்‌ நாகதந்தன் எனும் மகன் பிறந்தான். நாகதந்தன் அறியாமையினால் ‌ மாயையில்‌ அழுந்தி மிக்க பேராசையுடையவனாயிருந்தான்‌. அப்போது, அவன்‌, தன்‌ தங்கையின்‌ கல்யாணத்தின்‌ பொருட்டுத்‌ தன்‌ தந்தையின் ‌ கடையில்‌ தன்னுடைய அன்னை பல விலை உயர்ந்த பொருள்களைத்‌ தெரிந்து வாங்கிய தருணம்‌, வஞ்சனை செய்ய இடம் கிடைக்காமையால்‌, அந்தக்‌ கவலையுடனே உயிர்‌ விட்டுக்‌ குரங்காயினான்‌,” என்பதாம்‌. (ஸ்ரீபுராணம்‌ ப. 60)