(ஓர் அடியார்- ஒரு வெண்பா)

 

60) திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

ஓங்காரக்குடில் Ongarakudil ...
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் சோழ நாட்டில் உள்ள திருஎருக்கத்தம் புலியூரைச் சேர்ந்தவர்.

அவர் சிவபெருமான் பெருமைகளைத் தகுந்த முறையில் யாழில் அமைத்து இசைப்பவர்.
சோழ நாட்டின் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்களில் வழிபட்டு வணங்கிப் பின்னர் ஆலவாய் என்னும் மதுரையை அடைந்தார்.
அங்குக் கோவிலின் வாயிலில் நின்று யாழிசைத்து உமையொரு பாகனை வணங்கினார்.
இறைவர்,அவ்வூரில் உள்ள அடியவரின் கனவில் தோன்றி ஆணையிட, அவர்கள் திருநீலகண்ட யாழ்ப்பாணரைக் கோவிலுக்குள் இறைவன் முன் அழைத்துச் சென்றனர்.
இஃது இறைவன் இட்ட பெரும்பணியாகும் என்பதை உணர்ந்த நாயனார் யாழ் வாசித்துப் பாடலானார்.

சிவபெருமான் முப்புரம் எரித்ததையும், யானையை உரித்ததையும், காமனைக் காய்ந்ததையும், அரி அயற்கு அரியவராய் விளங்கியதையும் பாடலில் அமைத்து யாழ் மீட்டிப் பாடினார்.
அப்போது, தரையின் ஈரத்தால் யாழின் சுருதி கெடும் என்பதால் , அவருக்குத் தகுந்த பலகை இடுமாறு இறைவன் அடியவர்க்குக் கட்டளையிட்டான்.

நாயனார் அவர்கள் இட்ட பொற்பலகை மீது ஏறியமர்ந்து வாசித்து வணங்கி மகிழ்ந்தார்.
பிறகு திருவாரூர் சென்று கோவில் முன்னே யாழிசைத்தார். அதைக் கேட்ட இறைவன் அவர்க்கென ஒரு வாயிலை வடதிசையில் வகுத்தருள அதன் வழியே அவர் உள்ளே சென்று வணங்கினார்.

நீண்ட காலம் அங்குத் தங்கியிருந்து இறைவனின் திருவருளைப் பெற்றார். பிறகு பல்வேறு பதிகளுக்குச் சென்று யாழிசைத்து இறைவனை வணங்கி மகிழ்ந்தார்.
உமையன்னையிடம் ஞானப்பால் உண்ட கவுணியர் பெருமானாகிய திருஞானசம்பந்தரைக் கண்டு வணங்கச் சீர்காழிப் பதியை அடைந்தார்

திருஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்குத் தகுந்த சிறப்புச் செய்தார். ஞானசம்பந்தரின் பதிகப் பாடல்களுக்கு ஏற்ற இசையைப் பாணர் தம் யாழில் வாசித்தார். இப்படி ஞானசம்பந்தருடன் இருந்து பின்னர்த் திருநல்லூர்ப் பெருமணத்தில் ( ஆச்சாள்புரம்) அவருடன் இறைவனின் திருவடிகளை அடைந்தார்.

“ திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்”

என்று திருத்தொண்டத் தொகை இவரைப் போற்றுகிறது

 

திருநீலகண்ட யாழ்ப்பாணர் வெண்பா

இறைவன்சீர் யாழிலிட்(டு) ஏத்துவார்,பொன்னில்
உறுபலகை பெற்றார் உவந்து – நிறைகாழி
வேந்தர்க்கி யாழிசைத்தார்,வேண்டி அவருடனே
போந்தார் பரமன் புரம்.

********* ********** ********””

61) சடைய நாயனார்

Sri Thripurantheeswara Temple,palai - 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ************************************* #திருச்சிற்றம்பலம் ************************************* 🔥29 -#சடையநாயனார் 🔥பெயர்: #சடையநாயனார் ...

திருமுனைப்பாடி நாட்டில் சைவநெறி தழைக்கும் திருநாவலூர் என்னும் வளம் மிக்க ஊரில் ஆதி சைவ மரபில் தோன்றியவர், சிவத்தொண்டில் சிறந்த சடையனார். இவர் தம் மனைவியார் இசைஞானியாரோடு அன்பும் அறமும் பொலிய வாழ்ந்து வந்தார். சைவமும், தமிழும் செய்த தவப் பயனாக இவர்களுக்கு மகனாகப் பிறந்தவர் சுந்தரமூர்த்தி .நம்பியாரூரர் என்றும், தம்பிரான் தோழர் என்றும் அழைக்கப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகை பாடியருளினார். இறைவனையே பரவை அம்மையாரிடம் தூதாக அனுப்பிய பெருமையுடையவர். சேரமான் பெருமாள் நாயனாரின் உற்ற நண்பர். இத்தகைய சிறப்புடைய சிவஞானச் செல்வராகிய சுந்தரரை உயிர்கள் அனைத்தும் உய்யும் பொருட்டுப் பெற்றெடுத்த சடையனாரின் புகழ் மிகவும் போற்றி வணங்கத் தக்கதாகும்.

“ என்னவனாம் அரன் அடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்”

என்று திருத்தொண்டத் தொகை இவரைப் போற்றுகிறது.

சடைய நாயனார் வெண்பா

எம்பிரான் தன்னையே இங்கொரு தூதனுப்பும்
தம்பிரான் தோழரைத் தாம்பயந்தார்– வம்புலாம்
பூமலி நாவலூர்ப் பொற்சடைய னார்புகழ்
நாமணக்கப் போற்றி நவில்.

 

62) இசைஞானியார்

இசைஞானியார் – chinnuadhithya

இசைஞானி அம்மையார்,குறைவில்லாத பெருமையுடைய சடையனாரின் மனைவியாவார்.
முப்புரங்களை அழித்த சிவபெருமானின் அன்புக்குரிய நம்பியாரூரர் என்னும் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றவர்.

குறையெதுவும் இல்லாத குலத்தில் பிறந்த இசைஞானியாரின் புகழ் மிகவும் பெரியதாகும்,
விளக்கிச் சொல்லுவதற்கு அரியதாகும்.

“இசைஞானிப் பிராட்டியாரை என்சிறுபுன்
மொழியாற் புகழ் முடியுமோ”

என்று சேக்கிழார் இவரைப் பற்றிப் பாடுகிறார்.

இசைஞானியார் வெண்பா

வசையில் சடையனார் வாழ்க்கைத் துணையாம்
இசைஞானி போற்றல் எளிதோ – திசைவணங்கும்
நம்பியா ரூரரை நன்றளித்தார் அன்னையார்
எம்பெருமான் பேர்பரப்ப இங்கு.

(அடுத்த  இதழில் முடிவுறும் )