காலையின் பரபரப்பில் தலைநகரின் அந்தச் சாலை முழுவதும் நிரம்பியிருந்த வாகனங்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன.  மெட்ரோ ரயில், சாலையை அகலப்படுத்துதல், மழைநீர் பாதை, நடைபாதை சீரமைப்பு என ஏதாவது ஒரு காரணத்தினால் நகரம் முழுவதுமே இப்படி எல்லா நேரங்களிலும்  மெல்ல நகரும் போக்குவரத்துக்கு மக்கள் பழகி விட்டார்கள். இன்று காலை 6 மணிமுதல்  தேவியும்  அவள் நண்பர்களும் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் புரொபஸருடன் ரவுண்ட் போகும் பிராக்டிகல் வகுப்புகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கிறார் தேவி 3ஆம் ஆண்டு மருத்துவ மாணவி.

தன் முன்னால் போய்க்கொண்டிருந்த ஸ்கூட்டர் திடுமென்று தடுமாறி அலைபாய்வதை கவனிக்கிறாள். என்ன செய்கிறாள்? இந்தப்பெண் என்று எண்ணியபடியே அவளை நெருங்கிறாள். அதற்குள் அந்தப்பெண் ஸ்கூட்டருடன் சரிந்து விழுகிறாள். ஹெல்மெட்  கழண்டு உருண்டு ஒடுகிறது. சட்டென்று தன் ஸ்கூட்டரிலிருந்து இறங்கி அந்தப்பெண்ணை தூக்க முயற்சிக்கிறாள். அவளால் எழுந்திருக்க முடிய வில்லை. மயங்கிச் சாய்ய்கிறாள். முகத்தின் நிறம் மங்கலாகயிருக்கிறது. கண்களின் இமைகளை விலக்கிப் பார்க்கிறார் தேவி விழிகள் அசைய வில்லை.  நரம்பியல் மருத்தவ மாணவியான தேவிக்கு  இது ஏதோ மூளையில் பாதிப்பு, தலையில் உள் காயம் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டுபோக வேண்டிய எமர்ஜென்சி என்ற எண்ணம் மனதில் பளிச்சிடுகிறது. மயக்கத்தில் ஆழ்ந்திருந்த அந்தப்பெண்ணின் மூச்சு மெல்லிதாகயிருந்தது. பல்ஸ் இறங்க வில்லை என்பதை கையைப்பிடித்து பார்த்த தேவி அவசரமாக எழுந்து, வரும் ஒரு ஆட்டோவை கைநீட்டி நிறுத்தி “ “அண்ணா ஒரு எமர்ஜென்சி இந்தப்பெண்னை உடனே  ஆஸ்பத்திரிக்கு கொண்டு போணும். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” என்கிறார்.

வினாடிகளில் நிலமையைப்புரிந்து கொண்ட அவர் ஏறுங்கம்மா போயிடலாம் என்கிறார். அதற்குள் அங்கு கூடிய கூட்டத்தில் ஆளாளாக்கு அட்வைஸ். “ஒரு சோடா கொடுங்க இந்த தண்ணியை மூஞ்சியில் அடிங்க” என்று வாட்டர் பாட்டிலை நீட்டியவர்கள். அவரை ஏதோ ஒரு கார் அடித்து போட்டுவிட்டது என்று முடிவெடுத்த விட்ட ஒருவர்” “இப்படித்தான் பொறுப்பில்லாம சின்னப் பையன்கள்  காரை ஒட்டி அடுத்தவங்களை சாகடிக்கிறாங்க. போலீஸ் பிடிக்க மாட்டங்க! பிடிச்சாலும் பெரிய இடத்து கட்சிகாரங்க சிபார்சுலே விட்டுடுவாங்க. முதல்ல இந்த கவர்ன்மெண்ட் ஒழியணும்” என்று அரசியல் பேசினார்.. தேவி எவருக்கும் பதில் சொல்லமல் ஆட்டோகாரரிடம் “அண்ணா போகலாம் சீக்கிரம்!” என்கிறார்.. இந்த ரோடு முனையில் லெப்டில் காந்தி  ஆஸ்பட்டலுக்கு போங்க நேர எமர்ஜென்சி  வார்ட் கிட்டே போங்க என்கிறார்.  “இப்போ போயிடலாம் மேடம்” என்று ஆட்டோவை விரட்டிக்கொண்டு போகிறார் அவர்..

ஆனால்,  அந்தத் தெருமுனையில் அவர்களைத் தடுத்தது ஒரு இரும்புக் கோட்டை.  “முதலமைச்சரும் அமைச்சர்களும்  இது வழியாக ஒரு விழாவுக்கு வர்றாங்க. அதனால் இந்தப் பாதை மூடப்பட்டிருக்கு. வேற வழியா போங்க!” என்று காவலர் ஒருவர் கர்ஜித்தார். வேறுவழி என்பது அந்த பெரிய சாலையின் மறு முனை.அங்கு போய் பாதை மாறி வர 10-15 நிமிடம் ஆகும். அந்தப்பெண் கோல்டன் அவர் என்று சொல்லப்ப்படும் அதி அவசர நிலையில் இருக்கிறாள் என்பதை உணர்ந்த தேவி

  “சார், ஒரு மூணு நிமிடத்துல பக்கத்திலிருக்கும் ஆஸ்பட்டலுக்குப் போயிடலாம். ஒரு உயிரு ஆபத்துல இருக்கு!” கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. என்றார் தேவி கெஞ்சும் குரலில்.   ஆனால், காவலர் பிடிவாதமாக, “முடியாது அம்மா. நான் என் டியூட்டியைத்தான் செய்றேன். நீங்க ஒண்ணு செய்யுங்க  “ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுங்க. வந்துடுவாங்க. நான் இப்போ விட முடியாது,” என்றார்.

ஆட்டோ டிரைவர் மாரிமுத்து கோபத்தில் கொதித்தான். “என்னய்யா,  மனுஷன் நீ. நீயெல்லாம் எப்படி போலீஸானே? ஒரு உயிர் துடிக்கிறதுன்னு சொல்லாறங்க புரியல்லையா?  என்று கத்தி சண்டையிட ஆரம்பித்துவிட்டான்.

. நிமிடங்கள் உயிரைப் பறிக்கும் வாளாக நெருங்கிக்கொண்டிருந்தன.. சற்று நேரத்திற்கு பின்னர் அந்தக்  காவலர், “எங்க இன்ஸ்பெக்டர் காந்தி ஆஸ்பட்டல் முன்னாடிதான் இருக்கார். அவர்கிட்ட கேட்டுப்பாருங்க,” என்றபடியே  கரகரப்புகிடையே இன்ஸ்பெக்டரிடம் தகவலைச்சொல்லி வயர்லெஸ் செட்டை நீட்டினார்.

தேவி, இன்ஸ்பெக்டர் ரவியிடம் பேசினார். “சார், ஒரு பொண்ணு மயங்கி விழுந்திருக்கு. எமர்ஜென்சி உடனே ஆஸ்பட்டல் அட்மிட் செய்யணும்!!”

மூன்றாவது நாளாக தொடர்ந்து விஐபி பாதுகாப்பு டியூட்டியிலிருந்த இன்ஸ்பெக்டர் ரவி, களைப்பான குரலில், “மேடம், சீப் மினிஸ்டர் கான்வாய்  கிளம்பிருச்சுன்னு இப்போதான் மெசேஜ் வந்திருக்கு. . இந்தப் பாயின்டைக் கடந்ததும் கான்ஸ்டபிள் அனுமதிப்பார்  என்று சொல்லிவிட்டு மைக்கை கான்ஸ்டபிள்கிட்டக் கொடுங்க என்றார். “ என்னய்யா ஏட்டு நீ? அறிவு இருக்கா? நிலைமை உனக்குத் தெரியாதா?  இதெல்லாம் நீ சமாளிக்க வேண்டிய விஷயம் எதுக்கு பப்ளிக்கிட்ட வயர்லெஸ்ஸை கொடுக்கிறே? பொறுப்பில்லாதவரா இருக்கிங்க. என்னிக்குத்தான் கத்துக்கப் போறீங்க? என்று கத்துகிறார். அது தேவிக்கும் ஆட்டோ டிரைவர் மாரிக்கும் கேட்கிறது.  தேவியின் இதயம் நொறுங்கியது. ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக நீண்டது. அந்தப்பெண்ணின் பல்ஸ் மெல்ல இறங்கிக்கொண்டிருந்தது.

பதினைந்து நிமிடங்கள் கழித்து, அமைச்சர்களின் வாகனங்களின் அணிவகுப்பு  ஆடம்பரமாகக் கடந்து சென்றது.. காவலர்கள் தடைகளை அகற்ற,  காத்திருந்த வாகனங்கள் வெள்ளமாகப் பாய்க்கின்றன. மாரிமுத்து ஆட்டோவை ராக்கெட்டைப் போல   கிளப்பினார்.  அதன் ஹாரன் ஒலியில் சாலையே அதிர, , பலரின் திட்டுகளை வாங்கிக்கொண்டு, காந்தி  மருத்துவமனையின் வாசலில் நுழைந்த ஆட்டோ எமர்ஜென்சி வார்ட் முன்னே நின்றது. செவிலியர்கள் ஸ்ட்ரெச்சருடன் ஓடி வந்தனர். தேவியும் செவிலியருடன் அதைத்தள்ளிக் கொண்டே உள்ளே  ஓடினார்.

அதே நேரம், , மூன்றாவது நாளாக தொடர்ந்து விஐபி பந்தோபஸ்த்து டியூட்டினால் களைத்து வெறுத்துப்போயிருந்த இன்ஸ்பெக்டர் ரவி எதிரே இருந்த கடையில்   டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

.சைலண்ட்டிலிருந்த அவர் மொபைல் ஒளிர்ந்தது—மூன்று மிஸ்டு கால்கள், அவரது மனைவி கவிதாவிடமிருந்து. அவர் திரும்ப அழைத்தபோது, கவிதாவின் குரல் பதற்றத்தில் நடுங்கியது. “எங்க இருக்கீங்க? நம்ம ராதிகா ஸ்கூட்டர்லிருந்து மயங்கி விழுந்துட்டான்னு யாரோ காந்தி மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்களாம். அவங்க ஆபிஸிலிருந்து  சொன்னாங்க.  அவங்க மானேஜர் அங்கே வராராம் நான் இப்போ அங்க போய்க்கிட்டு இருக்கேன். நீங்களும் உடனே  வாங்க!”

ரவியின் உலகம் தலைகீழானது. கையில் இருந்த டீ கிளாஸ் சாலையில் விழுந்து சிதறியது. “ஐயோ!” என்று அலறியபடி, எதிரே இருந்த மருத்துவமனையை நோக்கி ஓடினார். வாகன ஓட்டிகளின் திட்டுகளைப் பொருட்படுத்தாமல் சாலையை ஒட்டிக் கடந்து, மருத்துவமனை வாசலில் நுழைந்தார்.

அவர்  ரிசெப்ஷனில் விசாரித்துக்கொண்டிருக்கும்போது   அதே வாராண்டாவில் தேவி  ஒரு டாக்டருடன் பேசிக்கொண்டே வந்தார்.. டாகடர் தேவியிடம் , “ஒரு மெடிகல் ஸ்டுடென்ட்டாக நல்ல மனசோடதான் நீங்க உதவி செஞ்சிருக்கிங்க. ஆனா அவங்களைக் கொண்டு வரும்போதே ஆல்மோஸ்ட் டெட். காப்பாத்த முடியல. MRIல பார்த்தேன். மூளையில ஒரு நரம்பு வெடிச்சு ரத்தம் கசிஞ்சிருக்கு. Intra cerebral hemorrhage (ICH), ஒரு ஐந்து நிமிஷம் முன்னாடி வந்திருந்தாலாவது ஏதாவது முயற்சி செஞ்சிருக்கலாம். சாரி.!

அவங்க பெயர், விலாசம் ஏதாவது தெரியுமா?” அதை ரிசப்ஷனில் சொல்லிடுங்க.  அவங்க போலிஸுக்கு சொல்லிடுவாங்க.

தேவி, குரல் தழுதழுக்க, “அவங்க கழுத்துல இருந்த ஐடி டாக்கில் பார்த்து அவங்க கம்பெனிக்கு போன் பண்ணியிருக்கேன், டாக்டர்.

அவங்க பேரு ராதிகா.

அந்த வார்த்தைகள் இன்ஸ்பெக்டர் ரவியின் காதுகளில் இடியாக இறங்கின.. அவர்  பதறியபடி   டாக்டரின்  அருகில் வந்து , “ராதிகா… என் மகள்…” என்று முணுமுணுத்தார். குரல் கேட்டு தேவி திரும்பிப் பார்த்தாள். ரவியின் முகத்தில் உறைந்திருந்த வலியைப் பார்த்தவளின் கண்களில்  அவளறியாமல் கண்ணீர் வழிந்தது.

நிமிடங்களின் தாமதம் ஒரு உயிரைப் பறித்திருந்தது. ஆனால், அந்த நிமிடங்களுக்குப் பின்னால் நிழலாக இருந்தது மனிதர்களின் கடமைகள், பாதுகாப்பு விதிகள், மற்றும் விதியின் கொடூரமான கைகள்.

சாலையில் வாகனங்கள் மீண்டும் ஒலிகளை எழுப்பிக்கொண்டு பரபரப்பாக ஓடத் தொடங்கின. ஆனால், மெளனமாக நிற்கும் அந்த மருத்துவமனையின் வெளிப்புறச் சுவர்கள்  ஒரு போலீஸ்காரரின் கடமையுணர்ச்சிக்கும், ஒரு தந்தையின் உடைந்த இதயத்திற்கும், ஒரு பெண்ணின் நல்ல மனத்திற்கும் என்றென்றும்  சாட்சியாக நிற்கும்—

  •