Bhagavad Gita in Tamil: Bhagavad Gita in Tamil - Chapter 18நமது உடல் மற்றும் உள்ளமும், தனி மனித சந்தோஷத்திற்காக நமக்கு அளிக்கப்பட்டது அல்ல. மாறாக மற்றவரின் சேவைக்காக நமக்கு வழங்கப்பட்டது இந்த உடல்; மற்றவர் மேல் அன்பு கொண்டு  அவர் துயர் நீங்க வழிவகுக்க வந்தது இந்த மனம்; புத்தியோ நான் பெற்ற அறிவை, ஞானத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள உதவ வருகிறது. இவ்வாறு என் உடலும், மனமும் புத்தியும் மற்றவர்களுக்காக செயல்படும்போது என் செயல்கள் யாவும் இறைவனுக்குரிய பூஜனை ஆகின்றன. இதே உடலும், மனமும், புத்தியும் என் மகிழ்ச்சிக்காக செயல்படும்போது அது என் மனத்துள் பந்தத்தை விளைவிக்கும். இதனால் வாழ்க்கையையே இறைவனை வணங்குவதற்குக் கிடைத்த ஒரு அருட்பிரசாதமாக ஏற்பதே கர்ம யோகத்தின் முக்கிய நோக்கமாகும்.

கர்ம யோகத்தின் அடிப்படைத் தத்துவமே இறைவனின் பிரபஞ்சத்தை மரியாதையுடன் வழிபடுவது; இந்தப் பிரபஞ்சம் நமக்கு இயற்கை மூலம் தரும் எல்லாவற்றையும் நன்றியுடன் ஏற்பது; இந்த நன்றியை நாம் தெரிவிக்காவிட்டால் நாம் நன்றி மறந்தவராகி விடுவோம். இது எப்போது நிகழும் என்றால், நாம் ஒவ்வொருவரும் தனி மனித சந்தோஷத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மனத்திற்குள் பற்றினையும் ஆசையையும் வளர்த்துக் கொள்ளும்பொழுது. இது இறைவனுக்கு நாம் காட்டும் பூஜனை பாவம் அல்ல. மாறாக இறைவனுக்குச் சொந்தமானவற்றை அவரிடம் சொல்லாமல் எடுத்து இன்புறுவது ஒரு திருடன் வீட்டிலிருந்து பொருட்களை எஜமானருக்குத் தெரியாமல் கொண்டு செல்வதற்குச் சமமாகும். பயபக்தியுடன் கூடிய வாழ்க்கை கர்ம யோகமாகும்; இந்த பயபக்தி இல்லாத வாழ்க்கை கர்மா என்றே பார்க்கப்படும். இதுவே பந்தத்திற்கும் வழிவகுக்கும்.

ஆன்மீகப் பயிற்சியாளர்களுக்கு கர்மயோகம் என்பது வினைகள் தரும் பாவபுண்ணியங்களைக் கடந்து போகச் செய்யும்; ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாதவர்க்கும் தார்மீக வழியைக் காட்டும். நல்லிணக்கத்துடன் வாழ்க்கையை வாழ்வதற்கு தார்மீக வழி ஒன்றே ஏற்றது. செடி கொடிகளும் விலங்குகளும் இப்பிரபஞ்சத்துடன் நல்லிணக்கத்துடன் வாழ்கின்றன. நல்லிணக்கத்துடன் வாழ்தல் என்பது சுழல் வினைமுறையைக் குறிக்கும். அகிலத்தில் உள்ள சமநிலை பிரபஞ்சத்தில் உள்ள காலங்களையும் உள்ளடக்கியது. நாம் இந்த நல்லிணக்கத்தை எவ்விதத்திலாவது தொந்தரவு செய்தால், அது பந்தங்கள் ஏற்படுத்தும் கர்மாக்களாக மாறும்; இந்த நல்லிணக்கத்தோடு ஒத்து வரும் செயல்கள் கர்மத்திலிருந்து விடுவித்து பற்றற்ற நிலைக்கு அழைத்துச் செல்லும்.

இதன் காரணமாகவே ஒரு கர்ம யோகி நம்மால் மாற்ற முடியாத சூழ்நிலைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறான். இந்தச் சூழ்நிலைகளை இறைவன் தரும் சோதனை என்று பார் என்று சொல்வது ஆன்மிகம்; மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள் என்பது கர்ம யோகம். இதையே தபஸ் என்றும் சொல்லலாம். சூழ்நிலைகள் தரும் சோதனைகளை எத்தனை மலர்ச்சியுடன் ஏற்கிறோமோ அத்தனை அமைதியும் மனத்தளவில் சாந்தமும் வரும்.

ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகம் பற்றிச் சொல்லும்பொழுது ஒரு தனி மனிதனுக்கு இருக்கும் கடமைகளைப் பற்றியும் கூறுகிறார். மூன்றாவது அத்தியாயத்தில்  தனிமனிதக் கடமையை யக்னம், தானம், தபஸ் என்ற மூன்று நிலையிலிருந்து பார்க்கிறார். பதினேழாவது அத்தியாயத்தில் இதனுடன் ஆகாரம் மற்றும் நம்பிக்கை என்ற இரண்டையும் சேர்த்துக் கொள்கிறார்.

நமது தர்ம சாத்திரங்கள் நாம் தவறாமல் செய்ய வேண்டிய செயல்களை கட்டாய கர்மங்கள் என்பர். இதில் நாம் தினமும் செய்ய வேண்டிய நித்திய கர்மாவும், சமயச் சடங்குகளான நைமித்திக கர்மாவும் அடங்கும்.

இதைத் தவிர கட்டாய கர்மா என்பது பிராரப்த கர்மா, சஞ்சித கர்மா மற்றும் ஆகாமிய கர்மா கர்மா என்று மூன்று நிலையில் நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த கால செயல்களின் தொகுப்பு பிராரப்த கர்மா; நமக்கு கிடைத்துள்ள உடல், பெற்றோர், குடும்பச் சூழ்நிலை அனைத்தும் பிராரப்த கர்மாவினால் ஏற்பட்டது. சஞ்சித கர்மா என்பது சேமிக்கப்பட்ட வினைப் பயன்; ஆகாமிய கர்மம் என்பது எதிர் காலத்தில் இனி வரப்போகும் வினைப் பயன்.

இந்தக் கட்டாயக் கர்மாவின் கீழே வருவது காம்ய கர்மாக்கள், நிஷித்த கர்மாக்கள் மற்றும் பிராயச்சித்த கர்மாக்கள். காம்ய கர்மாக்கள் மனத்தின் ஆசைகளை திருப்தி செய்யச் செய்யப்படும் சமயச் சடங்குகள் ஆகும். புத்திரன் வேண்டி தசரதன் செய்த புத்திர காமேஷ்டி யாகம், மற்றும் நாம் செய்யும் ஆயுஷ் ஹோமம்  போன்றவை இதில் அடங்கும். நிஷித்த கர்மாக்கள் என்பவை செய்யக் கூடாது என்று தடை செய்யப்பட்ட செயல்கள். பொய் பேசுதல், திருடுதல் ஏமாற்றுதல் போன்றவை நிஷித்த கர்மங்கள் ஆகும். பிராயச்சித்த கர்மங்கள் என்பவை செய்த பாவத்தை நீக்கும் பொருட்டு செய்யப் படும் செயல்களைக் குறிக்கும்.

பரிந்துரைக்கப்பட்ட கட்டாயக் கர்மங்கள் என்று சில செயல்களை தர்ம சாத்திரம் பட்டியலிடும். இந்தப் பட்டியலில் இடம் பெறுபவை யக்னம், தானம் மற்றும் தபஸ்.

யக்னம் என்னும்போதே நமது தர்ம சாத்திரங்கள் ஐந்து வகையான பஞ்ச மகா யஞத்தைப் பற்றி சிலாகித்துப் பேசும். இந்த ஐந்து யஞங்களும் இறைவன் நமக்குத் தந்த உள்கட்டமைப்புகள் ஆகும்.

முதலாவது கட்டமைப்பு: குடும்பம் என்ற அமைப்பு வைதிக சமூகத்தில் மிகவும் முக்கியமானது. சனாதன தர்மத்தில் குடும்பம் என்ற அமைப்பை ஒரு சமூகத்தின் வாழ்வாதாரமாகக் கண்டனர். சனாதன தர்மத்தின் பங்காளனாக ஒருவன் ஏற்று நடத்த வேண்டிய செயல்களில் பித்ரு யக்னம் மிகவும் முக்கியமானது. குடும்பம் வாழையடி வாழையாகத் தழைப்பதற்கும் வைதீக தர்மங்கள் ஓம்பப்படுவதற்கும் இந்தப் பித்ரு யக்னம் மிகவும் அவசியம்.

இரண்டாவது கட்டமைப்பாக வருவது அந்த மனிதன் சார்ந்த சமூகம். ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு மனிதனை மாண்புள்ளவனாகச் செய்தல் மிக முக்கியம். அந்த மனிதன் அந்த சமூகத்தின் பண்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் எத்தனை தன்னலமற்ற செயல்களைச் செய்கிறானோ அத்துணை அளவு அந்த சமூகம் மேம்படும். இதனாலேயே மனுஷ்ய யக்னம் முக்கியமாகக் கருதப்பட்டது.

மூன்றாவது கட்டமைப்பு, நமது சுற்றுச் சூழல் பற்றியது. சுற்றுச் சூழல் என்றாலே நம்மைச் சுற்றியுள்ள இயற்கை மற்றும் நம்மைச் சுற்றி இருக்கும் இடங்கள்.. இயற்கையைப் பராமரிப்பது பிரபஞ்சத்தின் சுற்றுச் சூழல்நல்லிணக்கத்திற்கு வழிகோலும். நமது வாழ்வே இயற்கையைச் சார்ந்து இருப்பதால் பூத யக்னம் மிகவும் கவனத்துடன் பின்பற்ற வேண்டிய ஒன்று.

நான்காவது கட்டமைப்பு நமது கலாச்சாரத்தைப் பற்றியது. பிரும்ம யஞத்தின் மூலம் இப்படி ஒரு மகத்தான தொலைநோக்குப் பார்வையை நமக்கு அளித்த நமது கலாச்சாரத்திற்கு உகந்த மரியாதையை அளிப்பது மிகவும் அவசியம்.

ஐந்தாவதாக வரும் தேவ யக்னம் ஈஸ்வரப் பிரக்ஞையை நமது வாழ்வில் ஒவ்வொரு கணமும் கொண்டு வருதல். இதையே ஈஸ்வர ஸ்மரணம் அல்லது பூஜனம் என்றும் கூறலாம்.

இந்த ஐந்து யஞ்யங்களைத் தவறாது செய்து வருபவன் உலகத்திலிருந்து தான் பெறுவதை விட அதிகமாக உலகத்திற்கு வழங்குகிறான். இப்படிப்பட்ட ஒருவன் எந்த சமூகத்திற்கும் ஒரு வரமாக இருப்பான்; பாரமாக அல்ல. இந்தக் கர்மங்களைச் செய்யாதவனோ ஆன்மீக வீழ்ச்சியைச் சந்திக்கிறான்.

கடவுள் என்றால் பயப்பட வேண்டும் என்ற நிலையிலிருந்து கடவுள் என்றால் பக்தியில் உருக வேண்டும் என்ற நிலை வரும். தன்னலம் மிகுந்த கர்மா பிணைக்கும்; ஆனால் ஈடுபாட்டுடன் செய்யப்படும் யக்னம் விடுதலை அளிக்கும்.

நம் வேதங்கள் விஞ்ஞானத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் எதிரிகள் அல்ல. ஆன்மீக வளர்ச்சிக்கும் அங்கே முக்கிய இடம் கொடுக்க வேண்டும் என்றே சொல்கின்றன. ஆன்மீக வளர்ச்சியோடு வரும் பொருளாதார முன்னேற்றமே நமக்கும், நாம் வாழும் சமூகத்திற்கும் நமது பிரபஞ்சத்திற்கும் நன்மை பயக்கும்.