
இது ஒரு டீ வி யில் வந்த ஒரு எபிசோட் கதை.
ஒரே செட். ஓரங்க நாடகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.
ஒரு மருத்துவ மனையில் ஒரு பிரசவ வார்டு. நான்கு படுக்கைகள். நாலு நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் படுத்திருக்கிறார்கள். டாக்டர்கள், நர்சுகள் வந்து போகிறார்கள். ஒருவருக்கு மாத்திரை கொடுக்கப் படுகிறது.
ஒரு பெண்ணின் பக்கத்தில் ஒரு 55/60 பெண் அமர்ந்து கொண்டு “ஜோசியரிடம் கேட்டு விட்டேன், ஆண் என்றுதான் சொல்கிறார். இந்த முறையாவது ஆணை பெற்றுக் கொடு. எத்தனை பெண்கள்… ஹூம்” என்று சொல்லிவிட்டுப் போகிறாள். “ஆண்டவனே ஆண் குழந்தையைக் கொடு.. ஏமாற்றி விடாதே” என்று வேண்டிக் கொள்கிறாள். அந்த பக்கமாக வரும் நர்சிங் ” ஆண் தானே பிறக்கும்? டாக்டர் என்ன சொன்னார்? “
அதற்கு நர்ஸ் “எத்தனை தடவை கேப்ப… யாருக்குத் தெரியும்? ” என்று கேட்டுவிட்டு முணுமுணுத்த படியே சென்று விடுவாள். (அப்போது எந்த கருவியும் கிடையாது).
சிறிது நேரத்தில் 4 வது பெட் பெண் பெரிதாக சப்தம் போட அவளை ஒரு ஸ்ட்ரெக்சரில் அந்த அறையை விட்டு அழைத்துச் செல்வார்கள்.
அடுத்த காட்சியின்போது மூன்று பெட்டிலும் பெண்கள் படுத்திருப்பார்கள். அனேகமாக மயக்க நிலையில் இருப்பார்கள்.
கொஞ்சம் நினைவு வந்து முனகுவாள் ஒரு நர்ஸ் ஒரு குழந்தையைக் கொண்டு பக்கத்தில் வைப்பாள். “என்ன குழந்தை என்று கேட்பாள்” அழகான பெண் குழந்தை. அந்த பாட்டியம்மா இந்தக் குழந்தையைப் பார்க்காமலே போய்விட்டாள்” என்று சொல்லுவாள். முகத்தை மூடிக் கொண்டு அழுவாள். அவளும் அந்த குழந்தை பக்கம்கூட திரும்பாமல் வேறு பக்கம் திருப்பிக் கொள்வாள். மீண்டும் மயக்கம் அடைவாள்.
அடுத்த காட்சி அவளுக்கு மீண்டும் நினைவு திரும்பும். தன் குழந்தை பக்கம் திரும்பிக் கூட பாக்காமல், “நர்ஸ் நர்ஸ் அந்த நாலாம் நம்பர் பெண்ணுக்கு என்ன குழந்தை பிறந்தது என்று கேட்பாள் ” ஆண் குழந்தை” என்று சொன்னதும் மேலும் கண்ணீர் வரும். “நீ மயக்கத்தில் இருந்ததால் உன் குழந்தைக்கு நாங்களே உணவு கொடுத்து விட்டோம் இனி அழும்போது நீயே பால் கொடுத்துவிடு ” என்று சொல்லிவிட்டுப் போவாள். குழந்தை பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டாள்.
சிறிது நேரம் கழித்து வேறு ஒரு நர்ஸ் வரும்போது “அந்த 3 நம்பர் பெண் எங்கே? அவருக்கு என்ன குழந்தை என்று கேட்பாள். ” ஆண் குழந்தை…. ஆனால் அந்த பெண் இறந்து விட்டாள்” என்று சொல்வாள். திடுக்கிடுவாள். குழந்தை அழத் துவங்கும். அதைப் பற்றி கவலைப் படாமல்.. “இந்த இரண்டாம் நம்பர் பெண்ணுக்கு என்ன குழந்தை ? ” என்று கேட்பாள்.
“குழந்தை அழுது… அதை கவனிக்காம கேள்வி மேல கேள்வி கேட்கிற… அந்தக் குழந்தை இறந்தே பிறந்தது. எந்த குழந்தையாய் இருந்தால் என்ன” எண்பாள்.
“என்னது.. குழந்தை இறந்து விட்டதா? ” என்று கேட்டு விட்டு. “அடப்பாவமே.. என்று கூச்சலிட்டு விட்டு… என் கண்ணே..” என்று கூறி தன் குழந்தையை ஆசை ஆசை யாகத் தூக்கி முத்தம் கொடுத்து… பாலும்.. கொடுப்பாள்.
அப்படியே ப்ரீஸ் பண்ணி… சிறிது காட்டி விட்டு பின் மெதுவாக டைட்டில் போடுவார்கள்.
பொட்டில் அறிந்தது போல இருந்தது. கடைசி நொடியில் மையக் கருத்தை பளிச்சென்று சொல்லி முடித்தார்கள்.
இன்றும் அந்த கருத்து / உண்மை பொருந்தும்.
