‘பரமபத சோபன படம்’- கவிதைத் தொகுப்பு

ஆசிரியர்: பொன். தனசேகரன்

போதிவனம் வெளியீடு

பரமபதம்: மனத்தின் குணங்கள் 13 ம் பரமபத சோபன படமும்

திரு.பொன். தனசேகரன் மூத்த பத்திரிக்கையாளர்; தினமணி, தினசரி, ஆனந்த விகடன், இதழ்களிலும், எக்ஸ்ப்ரஸ் நெட்வொர்க், தினமலர் கல்வி இணையதளம் ஆகியவற்றிலும் சிறப்பாகப் பணிபுரிந்தவர். சரோஜினி நாயுடு பரிசு, லாட்லி மீடியா விருது, சவுத் ஏசியன் க்ளைமேட் சேஞ்ச் அவார்ட் ஃபெல்லோஷிப், போன்ற பெருமை மிகு சிறப்புகளைப் பெற்றவர். புகையும் காலம், காற்றிலும், மழையிலும் கை விளக்கு என்ற இரு கவிதை நூல்கள் முன்னரே வெளி வந்துள்ளன. பரமபத சோபன படம் இவரது மூன்றாவது தவிதைத் தொகுப்பு.

கவிஞர்கள் உணர்ச்சி பூர்வமானவர்கள். தன் குரலாய் ஒலிக்கும் போதும் ஒட்டு மொத்த மானுடக் குலத்திற்கான ஒருமித்த குரலை வெளிப்படுத்துபவர்கள். இந்தத் தொகுப்பில், ஒடுக்கப்பட்டோர், பெரும்பான்மை மக்களதிகாரம் எனும் மாயை/தீமை, கொரோனா கால அவலங்கள், மரணம், வாழ்வு இதில் எது ஏற்கத்தக்கது, உள்முகச் சிந்தனை போன்ற பல விஷயங்களை கவிஞர் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.

கவிஞர் எளிமையை மையமெனக் கொண்டு அடர்த்தியான செய்திகளைச் சொல்கிறார். வாழ்வெனும் ஒடத்தில் ஏறிக் கொண்டுவிட்ட நாம், எந்தச் சுழலில் சிக்குவோமோ, எந்தப் பாறையில் இடிபடுவோமோ, அக்கரை என்பதை அறிந்தவர் யார், அப்படியே அறிந்தாலும் சொல்பவர் யார், வாழ்வின் விசையில் ஏணியில் ஏற உத்தேசிக்கும் போது, விழுங்குவதற்கு காத்திருக்கும் அரவம் யார், வாழ்தல் இனிமையா, சுமையா, மரணம் என்னும் மாற்றுப் பெருவெளியில் நாம் யார் என்ற கேள்விகளை இத்தொகுப்பில் அதிகமாகப் பார்க்கலாம். பெருந்தொற்றுக் காலத்தில் எழுதப்பட்ட கவிதைகள் வாழ்தலை, மரணிப்பதை மறு விசாரணை செய்கின்றன.

“குதிரையின் காலடியைப் பற்றிக் கொண்டது லாடம்; சட்டையை உரிக்க முடியாமல் திணறி நெளிந்தது பாம்பு” (வதை) என்ற வரிகள் திரு நீலகண்டத்தில் தேங்கி நிற்கும் விஷத்தையும் குறிக்கிறது. அமுது போல் நஞ்சு, நஞ்சு போல் அமுது, விழுங்கவும், துப்பவும் இயலாமல் அது அது அதனதன் தன்மையில்.

இதைப் படிக்கும்போது திரு கே ஜி சங்கரன் பிள்ளையின் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற (தமிழாக்கம் – சிற்பி) கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற கீழ்க்காணும் கவிதை நினைவிற்கு வந்தது.

முற்றத்தில் காலங்களைப் பூக்க

நம் இருவருக்கிடையே ஒரு நதியிருக்கிறது.”

“ஒவ்வொரு சொல்லின் அடித்தட்டிலும் ஒவ்வொரு பாத்திரம் உண்டு.தானே திறந்து மூடும் கண்ணினைப் போல் உயர்ந்து தாழும் கடலினைப் போல் ஒவ்வொரு மந்திரச் செப்பு”

“சொற்களுக்கு முன்னொரு காலத்தில் பூக்களின் முகம் இருந்தது”

புதுமைப் பித்தன் கவிஞரை வெகுவாக பாதித்திருக்கக்கூடும். கடவுள் பக்தனிடம் விடுமுறை கேட்டு விண்ணப்பிக்கிறார் .கடவுளின் வேண்டுதல் ஏற்கப்பட்டவுடன் ‘பள்ளியறையில் நிம்மதியாகத் தூங்கப்போனார் கடவுள்.’ இந்தக் கவிதை இங்கேயே முற்றுப் பெற்றிருந்தால் சிறப்பாக இருக்கும். அது காட்டும் பரிமாணம் விளங்கி இருக்கும். ஆனால், கவிஞர் இடையில் இருக்கும் ஒருவரையும் சிறிது சாட நினைக்கிறார் “கேட்காத விடுமுறை, தானாக மடியில் விழுந்த மகிழ்ச்சியில், கோயில் நடையைச் சாத்திவிட்டு, வீட்டுக்கு நடையைக் கட்டினார் இருவருக்கும் இடையில் தலையைச் சொறிந்து கொண்டு மௌனமாக நின்றவர்”

கே ஜி எஸ் சொல்கிறார்: பாரம்பரியத்தை நான் புதுப்பித்தேன் பதிலாக பாரம்பரியம் என்னைப் பழமை செய்தது!

நேரலை என்ற கவிதை கோவிட் கால அவலங்களைச் சுட்டுகிறது. “சாவின் வாசனை தெரியாமல் நீங்கள் இறந்து போகப் போகிறீர்கள்; நீங்கள் இறந்து விட்டீர்கள்”.

இறந்த காலம் மரணத்தின் மற்றொரு இரகசியத்தை துழாவுகிறது.

“சர்க்கரை போல் இனிக்குமா? உப்பு போல் கரிக்குமா? காரமா? கசப்பா? சாவு எப்படி இருக்கும் என்று கேட்கிறீர்கள். நான் இறந்து பார்த்துச் சொல்கிறேன் விவரமாக” நசிகேதஸ் உயிருடன் எமப் பட்டிணம் போனதை கடோபனிஷத் விரிவாகப் பேசுகிறது. அவன் கேட்ட கேள்விகள் நம் மரபினுள் பயணித்துக் கொண்டிருப்பதை இந்தக் கவிதை எளிமையாகச் சொல்கிறது. இந்த ‘இறந்த காலம்’ என்னும் தலைப்பு மற்றுமொரு கவிதையை நினைவுபடுத்துகிறது. ’பாலையாம், தன்மை செத்தும், பாலனாம் தன்மை செத்தும், காளையாம் தன்மை செத்தும், காமுறும் இளமை செத்தும்,…நாளும் நாம் சாகின்றோமால், நமக்கு நாம் அழாததென்னே?’

சாவு ஒரு மோசமான கவிஞன்; வாழ்வை உயிரற்றதாக்கி ஊனப்படுத்துகிறது.(கே ஜி எஸ்)

“வாழ்வது வலி; விடுதலையா சாவு?” என்று கேட்கும் அவரின் அடுத்த வரி அசைத்து விடுகிறது. “எதில் கண்டம் என்று தெரியவில்லை.” (வாழ்விலே ஒருமுறை)

ரவீந்திர நாத் தாகூர் தன் கீதாஞ்சலியில் எழுதுகிறார்: ‘ மண விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன; மணமகள் மாலையுடன் நிற்கிறாள்; குழலும், கொம்பும் ஒலிக்க, அவன் வருகையில் மாலையிடத் தயாராக.’ ‘மரணமே, வாழ்வின் பெரும் நிறைவே.’

அதைப் போல கவிஞர் கேட்கிறார்: “வாழ்விலே அந்த ஒருமுறை, எப்போது வரும்? குவிந்து கிடக்கும் வேலைகளுடன் காத்திருக்கிறேன் பொறுமையாக.”

மரத்தில் மறைந்த மாமதயானை கவிதையில் சட்டென்று ஒரு புதிய உருவகம் வந்து விழுகிறது “எனது கையில் சிக்காமல், என்னிடம் எங்கேயோ மறைந்து கிடந்து, அவ்வப்போது வெளிப்படும் நிழலைப் போல”

மீண்டும் கே ஜி எஸ் தான் நினைவிற்கு வருகிறார்.

கவிதையின் முப்பட்டைக் கண்ணாடி தாண்டி வரும்போது ஏகாந்தத்துக்கு ஏழு நிறங்கள்.. எந்த முப்பட்டைக் கண்ணாடியைத் தாண்டி வந்தேனோ நான்? இன்று உலகில்  நூற்றுக்கணக்காய்ச் சிதறி விழுகிறேன்

மாய யதார்த்தமும், மகாபாரத்தில் ஏகலைவன் தந்த கட்டை விரல் குருதட்சிணை நிகழ்வும் வாய்க்கூடு கவிதையில் இணைந்து வருகின்றன- ஒடுக்கப்பட்டோரின் குரலாக தற்காலச் சமூகத்தில் இதை எடுத்துக் கொள்ளலாம். “வாயைத் தைத்து, என் கையில் தலையைக் கொடுத்துவிட்டு சுவடு தெரியாமல் மறைந்து போனார். உற்றுப் பார்த்தேன்;அது என் தலை.”

பரமபத சோபன படம்,கவிதை ராகு, கேது கிரகங்களின் இந்தியப் புராண வடிவமைப்பை சற்று எள்ளல் தொனியுடன் கையாள்கிறது. “மனிதத் தலையுடன் பாம்பு உடலா என்று சிலர் பார்த்தார்கள் ;பாம்புத் தலையுடன் மனித உடலா என்று சிலர் பார்த்தார்கள்.” கவிஞரே, அரவமும், மனிதமும் அறிவில் உள்ளவைதானே?

முடிவற்ற தேடல் கவிதை, முடிவிலியின் வடிவமாகச் சுருளும் பாம்பின் தோற்றத்தையும், அந்த வட்ட வளையம் திணறச் செய்வதையும் சொல்கிறது. “தனது வாலைக் கவ்விய பாம்பு, தொடர்ந்து கடித்துக் கொண்டே போனது;வாலும் தீராமல், கடியையும் விட முடியாமல்,வட்ட வளையத்தில் சுற்றித் திணறியது பாம்பு” இது மறைமுகமாகச் சுட்டுவது உயிர்களின் சுழற்சி.

‘எண் அதிகாரம்’ பெரும்பான்மையைக் கேலி செய்கிறது.”அதிகாரத்தைப் பிடிப்பதற்கும், ஆட்சியை இழக்க வைப்பதற்கும் இயங்கு தளம் எண்கள்.”

“கதவைப் பூட்டி வீட்டின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டது சாவி. பூட்டு உருவாகும் போதே சாவியும் தயாரிக்கப்பட்டு விடுகிறது, கள்ளச் சாவியும் கூட”

“நாற்காலியின் உபயோகம் அறிந்த புத்திசாலி சொன்னான் ‘தோள்களில் அமர்ந்தாலும் சப்தம் எழுப்பாது’

“எழுதாத எழுத்தை மனதில் போட்டு நான் எரித்துக் கொண்டிருந்தது யாருக்கும் தெரியவில்லை.” ஆம், எழுதுபவர்களுக்கு  அவர்களையே அள்ளிப் பலியிடும் தளம் இதுவே!

எதையேனும் உடனே விளக்க வேண்டும் எனும் லட்சியப் பைத்தியமற்ற நிலவு போல, பழைய நெருப்பை நோக்கி புதிய ஜ்வாலையுடன் திரும்பி வரும் காதலைப் போல, பறத்தலுக்கும், விழுதலுக்கும் இடையே ஊர்தலின் ஓய்வு மொழியில்

கவிஞரின் கவிதைகள் மலர்ந்திருக்கின்றன. எளிய சொற்கள், கூரிய சிந்தனைகள், விளங்கிக்கொள்ளத்தக்க படிமங்கள் என விரியும் கவிதைகளை வழங்கியவருக்குப் பாராட்டுதல்கள். திரு ஆர். ராஜகோபாலன் சிறப்பான முன்னுரை எழுதியிருக்கிறார்.