புத்தகம் : தமிழகம் தந்த தவப் புதல்வர்கள் ( புத்தக வரிசை)
தொகுப்பு : ஆர்.கே. பிரசாத்
வெளியிட்டோர் : விஜயபாரதம் பிரசுரம்
தலைப்புகள் : 6 புத்தகங்கள் : 100
30 பக்கங்கள், விலை ரூ.15
சென்ற முறை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றபோது தேவையில்லாமல் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வரக்கூடாது என்ற திடமான முடிவுடன் சென்றேன். ஏனென்றால் ஏற்கனவே வாங்கிய புத்தகங்கள் இன்னும் படித்து முடிக்கப்படாமல் வீட்டிலே குவிந்து கிடக்கும்போது, எதற்காக இன்னும் புத்தகங்களை அடுக்குவது என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது.
ஆனாலும், வெறுங்கையுடன் திரும்ப மனமில்லாமல், என்னை அளவுக்கு அதிகமாகக் கவர்ந்த சில நூல்களை மட்டும் வாங்கி வந்தேன்.
அப்படி என் கண்ணில் பட்டு என்னை வாங்கத் தூண்டிய கைக் கடக்கமான குட்டிப் புத்தக வரிசைதான் “தமிழகம் தந்த தவப்புதல்வர்கள்”. விஜய பாரதம் பிரசுரம் ஸ்டாலின் முன் வாசலிலேயே இந்தப் புத்தக வரிசையின் பல நூல்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தது .
ஆன்மீக ஆச்சாரியர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், அன்னையர்கள், கவிஞர்களும் – அறிஞர்களும், கணிதவியலாளர்களும் – விஞ்ஞானிகளும் மற்றும் கலைஞர்கள் என்ற ஆறு தலைப்புகளில் மொத்தமாக 100 குட்டிப் புத்தகங்கள் இந்த “தமிழகம் தந்த தவப்புதல்வர்கள்” என்ற புத்தக வரிசையில் அழகாக வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மினி புத்தகமும் முப்பதே பக்கங்கள் கொண்டது. ஒவ்வொன்றிலும் ஓரிரு சித்திரங்கள் அல்லது புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. எழுத்தும் பெரியதாய் இருக்கிறது.
ஆன்மிக ஆச்சாரியர்கள் வரிசையில் அகத்தியர், அப்பர் (திருநாவுக்கரசர்), திருஞானசம்பந்தர், சுந்தரர், திருப்பாணாழ்வார், நம்மாழ்வார், மாணிக்கவாசகர், ரமண மகரிஷி, காஞ்சி பரமாச்சாரியார், கிருபானந்த வாரியார், சுவாமி ஹரிதாஸ் கிரி ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். விடுதலைப் போராட்ட வீரர்கள் வரிசையில் பூலித்தேவர், வவேசு ஐயர், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன், பாஷ்யம் ஐயங்கார் போன்றோர் இடம் பெற்றிருக்கிறார்கள். அன்னையர்கள் வரிசையில் வேலு நாச்சியார், எம் எஸ் சுப்புலட்சுமி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்றோர் இருக்கிறார்கள். இப்படி மொத்தம் 100 நூலும் 100 குறிப்பிடத் தகுந்த மாமணிகளைப் பற்றி எழுதப்பட்டிருக்கின்றன.
இந்தப் புத்தக வரிசையைப் பார்த்ததும் பள்ளி நாட்களில் எங்கள் தமிழாசிரியரால் எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட “நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்” என்ற புத்தக வரிசை என் ஞாபகத்திற்கு வந்தது. அந்நாளில் அவற்றைப் படித்தபோது என்னுள்ளே நாட்டுப் பற்றும் தமிழ் பற்றும் ஒரு சேர துளிர் விட்டதை இன்றும் எண்ணி எண்ணி மகிழ்வதுண்டு.
நண்பர்களே ! இந்த குட்டிப் புத்தகங்கள் ஒரு பொக்கிஷம். நீங்களும் அவ்வப்போது படித்து மகிழலாம். உங்கள் இல்லத்திற்கு வருகை தருவோருக்கும் பரிசளித்து மகிழலாம்.

