நானும் சகோதரி ரேவதி பாலுவும் திருவல்லிக்கேணியில் ஒரு திருமண அழைப்பில் கலந்து கொள்ள சென்றிருந்தோம். வழக்கமான சந்தடிகளுக்கு இடையே ஒரு உற்சாக கும்பல் கவனத்தை ஈர்த்தது. அருகில் சென்று பார்த்த போது நடுவில் நமது பாலகுமாரன் அவர்கள் அமர்ந்திருக்க சுற்றிலும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் எல்லா வயதினரும் சூழ்ந்திருக்க அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டு அளவளாவிக் கொண்டிருந்தார் எழுத்துச் சித்தர்.
என் பங்குக்கு நானும் மெர்குரிப் பூக்கள் பற்றி என்னுடைய கருத்துக்களைக் கூற முற்பட்ட போது அவர் நெற்றியை சுருக்கி நீங்கள் மோனஹன்ஸ் பள்ளியில் படித்தீர்களா என்று கேட்டார். நான் சொன்னேன் நான் படிக்கவில்லை ஆனால் மோனஹன்ஸ் பள்ளியில் படித்த ஒருவர் எங்கள் புரசைவாக்கம் லேடி எம் சிடி ஸ்கூலில் ஒரு அற்புதமான ஆசிரியர். அவர் பெயர் சிந்தாரவி என்று . பாலகுமாரன் அமைதியாக அவர் எனது தங்கை என்றார். அப்படியா சிந்தாரவியின் தமையனாரான நீங்கள் இவ்வளவு திறமைகளையும் பெற்று பிரபலமாக இருப்பதில் ஆச்சரியமே இல்லை என்று கூறினேன்.
என்னுடைய உள்ளம் கவர்ந்த ஆசிரியரும் என் மனதுக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளரும் ஒரே ரத்தம் என்று தெரிந்து கொண்டதில் மிக மகிழ்ச்சியாக இருந்தது .
சிந்தாரவி டீசர் எங்களுடைய புரசைவாக்கம் லேடி எம் சி டி பள்ளியில் நாங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் புதிதாக வந்து சேர்ந்தார். அவரை காலையில் பள்ளியின் இறைவழிபாட்டின் போது அறிமுகப்படுத்தினார் தலைமை ஆசிரியர். அவரே உற்சாகமாக முன்வந்து தன் பெயரைக் கூறி சுருக்கமாக தன்னைப் பற்றி க்கூறி உடனே அந்த இடத்திலேயே கொஞ்சம் கூட தயக்கம் இன்றி எங்களுக்கு ஒரு ஓரங்க நாடகம் நிகழ்த்தி காண்பித்தார்.
கிருஷ்ணதேவராயர் சபையில் தெனாலிராமன் தாமதமாக வந்த காரணம், குழந்தையானையைத் தூக்கி பானையில் போடச் சொல்லி வற்புறுத்திய கதையைக் கூறி அரசராகவும் தெனாலிராமனாகவும் குழந்தையாகவும் மாறி மாறி நடித்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.
அவ்வளவுதான் அன்றிலிருந்து பள்ளியில் அவர் எங்கள் கதாநாயகி. அவர் கால் பட்ட இடம் எல்லாம் செல்வோம். அவர் கண் பார்வை எங்கள் மேல் விழாதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.
பாடம் நடத்துவது அபாரம் .ஆங்கிலம், சரித்திரம். பள்ளிக்கு விடுமுறை எடுக்கவே மனது வராது. பாடத்தில் எல்லோரரையும் ஈடுபடுத்தி நடு நடுவில் சின்னச் சின்ன விஷயங்களை சொல்லி எங்களுடைய கவனம் திரும்பாமல் மிக அழகாக சொல்லித் தருவார்.
அது மட்டுமல்ல ஒவ்வொரு வருடமும் எல்லா விழாக்களிலும் நாடகம் அவ்வளவு அழகாக
பயிற்றுவிப்பார். ஒருமுறை வீரபாண்டிய கட்டபொம்மன் ஒருமுறை பாரதியார் ஒரு முறை கர்ணன் குந்தி. அப்பா ரசவாதி இருந்தவீட்டில் புத்தகத்திற்கு ஏது பஞ்சம். பிஎஸ் ராமையா அவர்களுடைய தேரோட்டி மகன் புத்தகம் அவருக்குக் கொண்டு போய் கொடுத்தேன். அதிலிருந்து கர்ணன் குந்தி சந்திப்பை மிக அழகாக இரு சக மாணவிகளை வைத்து மேடையேற்றி னார். அந்த நாடகம் அபார வெற்றி பெற்று பரிசுகளை அள்ளித் தந்தது. லியோ டால்ஸ்டாய் அவர்களுடைய அழையாத விருந்தாளி invisible guest நாடகம் மிகச்சிறப்பாக அமைந்தது.
பாரதியார் நாடகத்திற்கு அவருடைய சுவையான பாடல்களை எடுத்து அதற்கு இசை அமைக்க ச்சொல்லி நடுநடுவில் பாடலுடன் அவ்வளவு அழகாக செய்தார். வீரபாண்டிய கட்டபொம்மனாக என்னை கர்ஜிக்க வைத்தார்.
சிந்தா ரவி டீச்சருடைய இணைபிரியா ஸ்நேகிதி எங்களுடைய தமிழ் ஆசிரியை லலிதா பாய் டீச்சர். இவர்கள் இருவரும் இணைந்து ஸ்டாப் ரூமில் இருந்து நடந்து ஒவ்வொரு கிளாஸ் ரூம் போகும்போது பார்ப்பதற்கே எல்லோரும் தவம் கிடப்பார்கள். அத்தனை ஒயிலாக, அத்தனை கம்பீரமாக இருக்கும் .
பள்ளியை விட்டு வரும்போது தோழிகளை விட்டு பிரிவது ஒரு பக்கம் சிந்தாரவி டீச்சர் லலிதா பாய் டீச்சரை விட்டுப் பிரிவது பெரும் துக்கம். பள்ளியை விட்டு வந்தும் மொபைல் இல்லாத காலத்தில் அவரிடம் தொடர்பில் இருந்தோம் அதுக்கப்புறம் அவர் அடையார் சாஸ்திரி நகர் ஏரியாவுக்கு வந்த பிறகு தோழிகள் குழுக்களாக சென்று அவரைப் பார்த்து உட்கார்ந்து பேசி விட்டு வருவதுண்டு. நாங்கள் செய்வது போல் பள்ளியில் மற்ற மாணவிகளும் செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டோம் .
ஒரு நிமிடம் சும்மா இருக்க மாட்டார். கை வேலை என்ன, எம்ப்ராய்டரி என்ன, கதை எழுதுவது என்ன, படிப்பது என்ன,கவிதை எழுதுவது என்ன, பாலகுமாரன் பேரப்பிள்ளைகளை அழகாக கதை சொல்லி விளையாடி அவர்களை மகிழ்விப்பது என்ன என்று வாழ்க்கையை உபயோகமாக செலவிடுவது எப்படி என்று அவரிடம் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
திருமணமே செய்து கொள்ளவில்லை அவர்கள் .தங்கள் வாழ்வையே கல்வித்துறைக்கு அர்ப்பணித்து விட்டார்கள்.
பாலகுமாரன் அவர்களுக்கு ‘உடையார்’ எழுதுவதில் சிந்தாரவி டீச்சருடைய பங்கு மிகப் பெரிது. எங்கிருந்தோ வரலாற்றுத் தகவல்களை சேகரித்துக் கொடுத்து பாலகுமாரனுடன் விவாதித்து கல்வெட்டுகளை படிக்கக் கற்றுக்கொண்டு தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அவருடன் சென்று
ஆராய்ச்சிகள் செய்து இந்த ஆறு வால்யூம் உடையார் வருவதற்கு அவருடைய பங்களிப்பு மிக மிகப் பெரிது. இதைப்பற்றி பாலகுமாரன் அவர்களே தன்னுடைய உடையார் புத்தக முன்னுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். உடையாரின் நான்காவது பாகத்தை பாலகுமாரன் அவர்கள் சிந்தாரவி டீச்சருக்கு சமர்ப்பணம் செய்து இருக்கிறார்.
கடைசியாக முகப்பேரில் ஒரு இல்லத்தில் சேர்ந்து மூன்று மாதங்களே ஆகியிருந்தன .தமிழ்ப் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடுவதற்கு அந்த இல்லத்தில் இருந்தவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு கொடுத்து நிகழ்ச்சிகளை வடிவமைத்து அந்த இல்லத்தின் உரிமையாளரை முதற்கொண்டு ஒரு பாட்டு பாட வைக்கும் யோசனையில் சமையல் மெனு எல்லாம் திட்டமிட்டு வைத்திருந்தார். அவர் முதியவரே அல்ல அவர் என்றும் இளைஞர். ஆனால் விதி வசத்தால் தமிழ்ப்புத்தாண்டுக்கு முன்பே பாத்ரூமில் வழுக்கி கீழே விழுந்து மண்டையில் அடிபட்டுநினைவு தப்பி தனக்கு பிரியமான தமையனார் பாலகுமாரனுடன் சேர்ந்து விட்டார்.
சிந்தாரவி டீச்சருடைய அறுபதாவது பிறந்த நாள் அன்று அவருடைய பள்ளி மாணவிகள் உறவினர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் பாலகுமாரன் பேசியது ஞாபகம் வந்தது தன்னுடைய தங்கை சிந்தாரவி டீச்சரைப் பற்றி சுவையாக பேசிய பாலகுமாரன் அவர்கள் இறுதியாக ‘இன்னும் நூறு வருடம் இருந்து தொலை’ என்ற அன்பு கட்டளையிட்டார் அது ஞாபகம் வந்தது
சிந்தாரவி டீச்சர் சேர்ந்து மூன்றே மாதங்களான அந்த முதியோர் இல்லத்தில் அவர்கள் இருவருடைய உதவிக்காக வைத்திருந்த பெண்கள் காட்டிய துக்கமும் சோகமும் மனதை பிழிகிறது.
கடைசிவரை தன்னைச்சுற்றி இருப்பவர்களை தன் பால் இழுக்கும் காந்த சக்தியை அவர் இழக்கவில்லை. நாங்கள் பள்ளித் தோழிகள்1974 ஆம் ஆண்டில் பள்ளிப்படிப்பு முடித்து வெளியில் வந்தோம். அப்போது 1992 ஆண்டு பள்ளியை விட்டு வெளியில் வந்த நளினி என்பருடன் பேசும் பொழுது சிந்தா ரவி டீச்சரை பற்றிய இருவர் எண்ணங்களும் இழப்புகளும் ஒன்றாகவே இருந்தது மிக ஆச்சர்யமாக இருந்தது.
அவருடைய பிரியமான தோழி லலிதா பாய் அவர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்து விட்டு வரும்போது சித்தாரவி டீச்சருக்கு மரணம் இல்லை. அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார் என்ற உணர்வு எஞ்சியது.
============================================================================

சுவாரஸ்யமான விஷயங்கள். நீங்கள் பேசமுற்பட்டபோதே பாலகுமாரன் ஏன் நீங்கள் அந்த குறிப்பிட்ட பள்ளியில் படித்தீர்களா என்று கேட்கவேண்டும்? எதை வைத்து அவர் அந்தக் கேள்வியைக் கேட்டார்?
ஒருவேளை அவர் தங்கை சின்தாராவி வேறு யாருக்கும் தோன்றாத தான் மட்டுமே கொண்டிருந்த கருத்துகள் சிலவற்றை நீங்கள் கேட்டீர்களோ?
எங்கள் பிளாக் ஸ்ரீராம்
LikeLike