ஜப்பானில் தேரோட்டம்!


நடிப்பில், எழுத்தில், சொற்பொழிவில் நகைச்சுவை எளிதானது அல்ல. சர்க்கஸில் பபூன்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது.நவரசங்களில் ஒன்றான நகைச்சுவை சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தூண்டக்கூடியது.மன அழுத்தத்திலிருந்து விடுபட வைக்கும் அருமருந்து என்றால் மிகையல்ல.
முழு நகைச்சுவை இதழ்களாக யாழ்ப்பாணத்திலிருந்து சுவைத்திரள்,மட்டக்களப்பில் இருந்து சிரித்திரன் இதழ்கள் வெளிவந்துள்ளன.
அமெரிக்கா போகாமலேயே வாஷிங்டனில் திருமணம் நகைச்சுவைத் தொடரை ஆனந்த விகடனில் எழுதினார் சாவி ( சா.விஸ்வநாதன்). இன்று வாசித்தாலும் சுவாரசியம் குன்றாத லட்சக்கணக்கான வாசகர்களை தொடர் வெளியான போதே மகிழ்வித்த படைப்பு அது.
இதற்கு சற்றும் குறையாத சாவியின் மற்றொரு நகைச்சுவைத் தொடர் தெப்போ-76.
தினமணி கதிர் இதழில் தொடராக வெளியானது.ஜப்பான் நாட்டுக்கு சென்று பல்வேறு இடங்களையும் பா்த்துவிட்டு சாவி எழுதிய படைப்பு. இந்தக் கதையை எழுத முடிவு செய்ததும் சாவி, திருவாருக்கு நேரில் சென்று தியாகராஜ சுவாமியின் தேரோட்டத்தையும் கமலாயத்தில் நடைபெறும் தெப்ப உற்சவத்தையும் கண்டு களித்தார். இந்த உற்சவங்களை ஜப்பானில் நடத்தினால் என்ற கற்பனையில் உருவானதுதான் தெப்போ-76 நகைச்சுவைத் தொடர். ஜப்பானின் கின்ஸா வீதிகளில் தேரோட்டம் ஹகோனே ஏரியில் தெப்போற்சவம் என நாவலில் அமர்களப்படுத்தியிருப்பார் சாவி. ஜப்பான் மன்னரே வியந்துவிட்டார் என்றால் நாம் எம்மாத்திரம்! வாஷிங்டன் திருமணத்தில் நமக்கு அறிமுகமான அம்மாஞ்சி, சாம்பவசிவ சாஸ்திரி, கோபால் ராவ்,பஞ்சு ஆகியோருடன் ஜப்பான் குள்ள சாஸ்திரி என்ற புதிய கதாபாத்திரத்தையும் அறிமுகம் செய்து நம்மை நகைச்சுவைக் கடலில் மூழ்கடித்திருப்பார் கதாசிரியர். ஒருபானை சோற்றுக்கு பதம் பார்க்க ஒரு பருக்கை வாசகர்களுக்கு. கின்ஸா ஏரியா முழுவதும் சாம்பசிவ சாஸ்திரிகளைத் தேடித் தேடி சலித்து விட்டது.அவர் எங்குமே அகப்படவில்லையே என்றார் குள்ள சாஸ்திரி. இப்படிச் சல்லடடை போட்டுத் தேடினால் சலிக்காமல் என்ன செய்யும் என்று ஜோக் அடித்தார் அம்மாஞ்சி வாத்தியார். ஜப்பானில் மிக முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று ஃபியூஜி மலை.டோக்கியோவில் அடாமா என்ற இடத்திலுள்ள எந்த ஓட்டலிருந்தும் ஜன்னல் வழியாக ஃபியூஜி மலையைப் பார்க்கலாம் என்ற தகவல் நாவல் வழியாக நமக்கு கிடைக்கிறது. விரல் விட்டு எண்ணும் போது கட்டை விரலில் இருந்து ஆரம்பிக்கறாங்க. தீக்குச்சியை எதிர்த்திசையில் கிழிக்கிறாங்க என்று ஜப்பானியர்களின் பழக்க வழக்கமும் தெப்போ-76-இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக ஜப்பான் பயணம் மேற்கொள்கிறீர்களா இந்தப் புத்தகம் விமானப் பயணத்தில் வாசித்து சிரித்து மகிழ மட்டுமல்ல ஒரு வழிகாட்டியாகம் அமையும்.
சேவற்கொடியோன்
சேவற்கொடியோன் ஆனந்த விகடன் ஆசிரியர் மறைந்த எஸ்.பாலசுப்ரமணியன் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். மனிதர்களுக்கு இணையாகப் பிராணிகளையும், பறவைகளையும் மற்றும் விவசாயத்தையும் நேசித்தவர். எம்.ஜி.ஆர்.முதல்வராக இருந்தபோது ஆனந்த விகடன் அட்டைப் படத்தில் ஒரு கார்ட்டூனை வெளியிட்டதற்காக பாலசுப்ரமணியன் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வெற்றி பெற்றதுடன் அரசு அவருக்கு ரூ.1000 அபராதத் தொகையும் அளித்தது. ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டிய துணிச்சல்காரர்.
‘அழியாத ரேகைகள்’ என்ற தலைப்பில் பத்திரிகை உலக முன்னோடிகளின் வாழ்வும் பணியும் குறித்த உரை சென்னையில் கடந்த மே மாதம் தொடங்கியது. பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலன் முன்னின்று இதை நடத்துகிறார். ஜூன் 4-ம் தேதி இரண்டாவது நிகழ்வாக ஆனந்த விகடன் சேர்மன் மற்றும் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் குறித்து விகடனில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவரும் இசை விமர்சகருமான வீயெஸ்வி (ஸ்ரீனிவாசன் வெங்கட்ராமன் )பேசினார். அதன் சாராம்சம். ஆசிரியருக்கு சிறு வயதிலேயே பத்திரிகைத் துறையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. 12 வயதில் ‘சந்திரிகா’ என்ற பெயரில் கையெழுத்துப் பிரதி நடத்தினார்.விகடன் ஆசிரியராகப் பொறுப்பேற்றதும் பல்வேறு புதுமைகளை புகுத்தி வாசகர்களைக் கவர்ந்தார். காலை 8 மணிக்கு அலுவலகம் வந்துவிடுவார்.நேரம் அவருக்கு முக்கியம். காக்க வைத்தல் அவருக்கு பிடிக்காது. சிறுகதைகளை செம்மைப் படுத்துவதில் சிற்பி. எழுத்தாளர்களிடம் மதிப்பும் நெருக்கமும் கொண்டிருந்தார். முத்திரைக் கதைகள் வெளியிட்டு எழுத்தாளர்களிடமிருந்து ஆகச் சிறந்த கதைகளை வெளிக் கொணர்ந்தார். முத்திரைக் கதைகளுக்கு அதிக சன்மானம் தந்து வியக்க வைத்தார். எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸிடம் ஆசிரியர் நண்பராகப் பழகினார். மனைவி இறந்த துயரம் தாங்காது ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் ஆசிரியருக்கு அளவற்ற சோகத்தை ஏற்படுத்தி விட்டது. சேவற்கொடியோன் என்ற பெயரில் நாவல்கள் எழுதியவர் எஸ். பாலசுப்ரமணியன்தான் என்பது இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது.மகாகவி பாரதியார் மீது இருந்த பற்றை ஆசிரியர் தன் தொடர்கதை தலைப்புகள் வாயிலாக வெளிப்படுத்தினார். சேவற்கொடியோன் என்ற பெயரில் உன் கண்ணில் நீர் வழிந்தால், என் கண்ணில் பாவையன்றோ, பேசும் பொற்சித்திரமே ஆகிய தலைப்புகளில் அவர் எழுதிய தொடர்கள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. விகடனில் பிழை வந்துவிடக்கூடாது, படைப்புகளை வாசிப்போருக்கு குழப்பம் ஏற்படக்கூடாது என்பதில் ஆசிரியர் உறுதியாக இருந்தார்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1983-இல் வெளியான திரைப்படம் மிருதங்க சக்கரவர்த்தி. விகடனில் வெளியான விமர்சனத்தில் தகவல் பிழை இருப்பதாக நிறைய வாசகர்கள் கடிதம் எழுதினர். வருத்தம் தெரிவித்த ஆசிரியர் அடு்த்த ஒராண்டுக்கு விகடனில் திரை விமர்சனம் வராது என்றும் அறிவித்துவிட்டா்.
ஆசிரியர் குழு கூட்டத்தில் தான் பேசுவதைக் குழுவினர் கவனிக்கவில்லை என்று கோபித்துக் கொண்டு வெளியேறிவிட்டார். ஆசிரியர் ராஜிநாமா செய்யப்போகிறார் என்ற பேச்சு நிலவியது. அடுத்தநாள் ஆசியர் குழுவினர் ஒவ்வொருவர் அறைக்கும் வந்து ஆசிரியர் வருத்தம் தெரிிவித்தார்.
மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் மூலம் எண்ணற்ற இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கியவர்.அவரது கையொப்பம் மாறாது இருப்பது வியக்க வைக்கும். காபி பிரியரான அவருக்கு இசையிலும் ஆர்வம் உண்டு. ராகங்களைச் சரியாகச் சொல்வது அவருக்கு கைவந்த கலை. சைவ அசைவ உணவு வகைகளை செய்வதில் கெட்டிக்காரர். மயிலம் கோயிலுக்கு ஆண்டுதோறும் சென்று வந்த முருக பக்தர்.
இறந்த பிறகு தனது உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு தானம் செய்ய வேண்டும் வாழும் போதே உயில் எழுதி வைத்தவர். அதற்காக மருத்துவ நிபுணர்களிடம் ஆண்டு தோறும் தவறாது மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார். இறந்தபிறகு அவரது விருப்பப்படியே உடல் உறுப்பு தானம் நடைபெற்றது.
வீயெஸ்வி பேசி முடித்தும் பாலசுப்ரமணியன் என்ற ஆளுமை மீதான பிரமிப்பிலிருந்து மீள முடியவில்லை. மாலன் பேசுகையில்,
” கூலி என்ற உரையாடல் நடை சிறுகதையை விகடனுக்கு அனுப்பினேன். அதை வெளியிடுவதில் அவர்களுக்கு தயக்கம் இருந்தது. ஆசிரியரை நேரில் சந்தித்த போது கதையை ‘அப்படியே பிரசுரம் செய்வதாய் இருந்தால் செய்யுங்கள். இல்லாவிட்டால் கதையைத் திருப்பி கொடுத்துவிடுங்கள்’ என்று கறாராய் சொன்னேன். என்னிடம் ஒருமணி நேரம் பேசி அனுப்பிய அவர் கதையையும் பிரசுரித்தார். பாரதியார் நூற்றாண்டு விழாவையொட்டி ஐந்து எழுத்தாளர்களிடம் (சுஜாதா, பாலகுமாரன், மாலன்,வண்ணநிலவன், ஸ்ரீவேணுகோபாலன்) சிறுகதை வாங்கி பிரசுரம் செய்தது விகடன். நான் எழுதிய ஆயுதம் என்ற சிறுகதை அட்டைப் படத்தில் மணியம் செல்வத்தின் டபுள் ஸ்பிரட் ஓவியத்துடன் பிரசுரமானது ” என்று தனது நினைவுகளைப் பதிவு செய்தார்.
இரண்டாம் இடம்
மறைந்த மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயருக்கு ஞானபீட பெற்றுத்தந்த நாவல் ‘இரண்டாம் இடம்.’ கலாகெளமுதி மலையாள வார இதழில் தொடராக வந்தது.சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள இந்நாவலை குறிஞ்சி வேலன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 1977 நவம்பரில் மரணம் என்னை மிகவும் நெருங்கிப் பின் வாங்கிய என் ஜீவிதக் கட்டத்தில், மிஞ்சியுள்ள காலத்தில் இதையாவது எழுதி முடிக்க வேண்டும் என்னும் ஆவலுடன் இருந்தேன். இதை எழுதி முடிப்பதற்கே 1983-ம் ஆண்டு வரை ஆகிவிட்டது என்று நாவலின் பின்னுரையில் குறிப்பிட்டுள்ளார் வாசுதேவன் நாயர். இந்தியாவிலுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் எப்போதும் ஆராதனைக்கு உரிய இரண்டு பலவான் கதாபாத்திரங்கள் உண்டு. அவற்றில் ஒன்று ராமாயணத்தில் வரும் அனுமான். மற்றொன்று மகாபாரத்தில் வரும் பீமன்.சிறு வயது முதல் சகோதரன் அர்ஜுனனுக்கு கிடைக்கும் புகழும் பெருமையும் தன் செயலுக்கு கிடைக்காது ஏங்குகிறான்.அர்ஜுனனின் மிக நெருங்கிய நண்பனாக கிருஷ்ணன் இருந்ததால் அவனிடமிருந்து விலகியிருப்பது பீமனின் வழக்கமாக இருந்தது. இருந்தபோதும் கிருஷ்ணன் பீமனுக்கு நல்லதொரு மரியாதையை எப்போதும் அளித்து வந்தார் என்பது வரலாறு. இதுவரை நாம் படித்துள்ள மகாபாரதக் கதைகளில் இருந்து சற்று மாறுபட்டது இந்த நாவல்.வாயுவின் மகனாகக் கருதப்படும் பீமன் தனது பார்வையில் மகாபாரதக் கதையைத் தானே சொல்வது போல் நாவல் எழுதப்பட்டுள்ளது. நாவல்கள் மட்டுமின்றி பெருந்தச்சன், ஒரு வடக்கன் வீர கதா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை அமைத்து இயக்கியவர் வாசுதேவன் நாயர் என்பது குறிப்பிடத்தக்கது. 
விகடன் ஆசிரியர் திரு பாலசுப்ரமணியம் ஸார் பற்றிய தகவல்கள் அதிக சுவாரஸ்யம்.
எங்கள் பிளாக் ஸ்ரீராம்
LikeLike
ஜப்பானில் கார் நிறுவனத்தில் பணிபுரிபவரை ஜனவரியில் திருமணம் செய்து கொண்டேன். கடந்த வாரம்தான் கிமேஜி வந்தேன். தெப்போ 76 நாவலை விமான பயணத்தில் வாசித்து மகிழ்ந்தேன்.
ஜப்பானில் இருந்து
பவித்ரா குமார்
LikeLike