நூல் 1: புயலும் பாதுகாப்பும்

Apollo and the Muses

(அப்பல்லோவும் ஒன்பது மியூஸ் தேவதைகளும் ) 

உலகப் புகழ் வாய்ந்த வர்ஜில் தனது ஏனிட் காவியத்தை இப்படித் துவக்குகிறார்.

” நான் ஆயுதங்களையும் அவற்றில்  வல்லவனான அந்த மனிதனையும் புகழ்வதற்காக இந்தக் காப்பியத்தைப் படைக்கிறேன்.”

ஆயுதங்கள் என்பது போர் மற்றும்  அதன் விளைவுகளையும் பற்றியது. அந்த மனிதன் என்று சொல்வது கதையின் நாயகனான ‘ஏனியஸ்’.

எல்லாக் காவியங்களுக்கும் ஒரு மரபு உண்டு. அதுதான் கடவுள் வாழ்த்துடன் துவக்குவது.

 ஹோமர் தனது காவியங்கள் இரண்டையும் மியூஸ் என்கிற தேவதையை வேண்டித்  துவக்கியிருப்பார். மியூஸ் என்பது கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எழுதும் சக்தியை அளிக்கும் தேவதை. சரஸ்வதி தேவியின் மாற்று வடிவம்.  மியூஸ் என்பது ‘நவ கன்னிகை’ என்றும் ஒவ்வொன்றும்  சரித்திரம், கவிதை, நகைச்சுவை , இசை, ஜோசியம் போன்ற ஒவ்வொரு துறை பற்றிய நூல் எழுதுவதற்குச் சக்தியைத் தரும் தேவதை என்றும் கூறுவர்.

வர்ஜிலும் இப்படிப்பட்ட ஒரு  மியூஸ்  தேவதையை  வணங்கி,  தன் ஏனிட் காப்பியத்தை எழுதுகிறார்.

கம்பன்  ” உலகம் யாவையும்” என்ற பாடல் மூலம் பொது  இறைவனை வேண்டிக்கொண்டு ‘கம்பராமாயணத்தைத்’  துவக்குவார். இளங்கோ அடிகள் “ஞாயிறு போற்றுதும்”  என்றார்.   சேக்கிழார்  “உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” என்று துதிப்பார்.சீவக சிந்தாமணி “மூவா முதலா உலகமொரு மூன்று” என்ற கடவுள் வாழ்த்தோடு தொடங்குகிறது. வள்ளுவரும் ‘ஆதி பகவனைப்  போற்றுவார். சென்ற நூற்றாண்டில்  தமிழில் அனைவரும் பிள்ளையாரை வணங்கி தங்கள் படைப்புகளைத் துவக்குவர்.  தேம்பாவணி எழுதிய வீரமா முனிவரும் முதல் பாடலில் “சீரிய உலகம் மூன்றும் செய்து அளித்து அழிப்ப வல்லாய்” என்று கடவுளைப் போற்றுகிறார். பாஞ்சாலி சபதத்தில் பாரதி பிரும்மாவையும் சரஸ்வதியையும் துதிப்பார்.

இந்த ‘ஏனிட்’  காப்பியத்திற்கு  ஒரு பூர்வ கதை உண்டு.

அது மூன்று கிரேக்கப் பெண்  தெய்வங்களின் அழகுப் போட்டியில் துவங்குகிறது.

வீனஸ் , ஹீரா , அதீனா ஆகிய மூவரும் தங்களில் யார் மாபெரும் அழகி என்று கேட்க , அதற்குப்  பதில் சொல்லத்  தேவாதி தேவன் ஜீயஸ் தயங்கினார். காரணம் ஹீரா அவரது மனைவி. ஆதீனாவும் வீனஸும் மகள் முறை.    அதனால் இதற்குத் தீர்ப்புக் கூற டிராய் நாட்டின்  அழகிய இளவரசன் பாரிஸ் அழைக்கப்படுகிறான். ஹீரா  பாரிஸுக்கு அரச பதவி தர வாக்களித்தாள் .  அதீனா அவனுக்கு கிரேக்கரை வெல்லும்  வீரத்தைத் தரத் தயாராயிருந்தாள். ஆனால் வீனஸோ அவனுக்கு உலக அழகி ஹெலன் உருவத்தைக் காட்டி, அவளை அவனுக்கு மணம் செய்ய உதவுவதாகக் கூறினாள். ஹெலனின்  அழகில் மயங்கிய பாரிஸ் வீனஸை சிறந்த அழகியாகத் தேர்ந்தெடுத்தான்.

வந்தது வினை.

ஹெலன் கிரேக்க மன்னனின் மனைவி.  விருந்தினனாகக்  கிரேக்க நாட்டிற்குச் சென்ற பாரிஸ் ஹெலனை இழுத்துக் கொண்டு டிராய் வந்து விட்டான்.  கிரேக்கர்கள் பெரும் படையுடன் டிராய் நாட்டை அழிக்க  ஆயிரத்திற்கும் மேற்பட்ட கப்பற் படையுடன் சென்றனர்.

கிரேக்க டிராய் யுத்தம் பத்து ஆண்டுகள் நடைபெற்றன. வீனஸும் அவளைச் சார்ந்த மற்ற கடவுளர்களும் டிராய் நாட்டுக்கு உதவினார்கள். ஹீராவும், அதீனாவும் அவளைச் சார்ந்த கடவுளர்களும் கிரேக்கர்களுக்கு ஆதரவாக யுத்தத்தில்  இறங்கினர்.

கடவுளர் தலைவர் ஜீயஸ் வெற்றி வாய்ப்பை  இருவருக்கும் மாற்றி மாற்றிக் கொடுத்தார். மொத்தத்தில்  டிரோஜன் யுத்தம் கடவுளர்களில் இரு பிரிவுகளுக்கு இடையே நடக்கும் யுத்தமாக மாறியது. டிராய் நாட்டு மூத்த இளவரசன் மாவீரன் ஹெக்டர் தன் தம்பி பாரிஸூக்குப் பரிந்து கிரேக்கர்களைப்  போரில் கொன்று குவித்தான்.

மாவீரன் அகிலியஸ்  கிரேக்கர்களுக்கு ஆதரவாகப் போரிட வந்ததும் வெற்றி மாலை கிரேக்கர்களுக்கு ஆதரவாக விழுந்தது. ஹெக்டர் அகிலியஸால் கொல்லப்பட்டான். அகிலியஸ்- ஹெக்டர்  யுத்தக் காட்சிகளே ஹோமரின் ‘இலியட்’ காவியமாயிற்று.

( ‘இலியட் கதை   நமது ‘உலக இதிகாசங்கள்’ வரிசையில் இரண்டாவது புத்தகமாக வெளிவந்துள்ளது) 

அப்படியும் டிராய் நாட்டுக் கோட்டையைக் கைப்பற்றக்  கிரேக்கர்களால் முடியவில்லை. ஓடிசியஸ் என்ற கிரேக்க தளபதி  மரக்  குதிரையில் நூறு வீரர்களுடன் ஒளிந்து இருந்தான். உண்மை தெரியாத  டிராய் வீரர்கள் அதனைக் கோட்டைக்குள் இழுத்துச் செல்ல,  இரவில் கிரேக்கர் அனைவரும் வெளிவந்து டிராய் நகரத்தை எரித்து, மன்னனையும் மற்றவரையும்  கொன்று, ஹெலனைக் கைப்பற்றி   வெற்றி வாகை சூடினர்.  கிரேக்க மன்னனும் மற்ற வீரர்களும் வெற்றி எக்களிப்புடன் கடவுளர்களை மதியாது தங்கள் நாட்டுக்குச் செல்லக்  கடற் பயணத்தை மேற்கொண்டனர்.  கோபம் கொண்ட கடவுளர்கள் அவர்களுக்கு வழியில் பலதரப்பட்ட புயல், சுழிக்காற்று  போன்றவற்றால் தாக்கினர்.   கரையில் ஒதுங்கிய தீவுகளில்  கொடுமையான அரக்கர்களால்  இம்சிக்கப்பட்டனர்.   மிகுந்த பல சிரமங்களோடு அவர்கள் தங்கள் நாட்டுக்குச் சென்றனர்.

அதிலும் குறிப்பாக ஓடிஸியஸ்  இன்னும் பத்து ஆண்டுகள் கடலில் சஞ்சரித்துப்  பலதரப்பட்டத்  துயரங்களைச்  சந்தித்தான்.  முடிவில் அவன்   மதியின் திறமையாலும்,  விதியின் வலிமையாலும் ,கடவுளர் அருளாலும்  தன் ஊர் சென்று, மனைவி மக்களுடன் சேர்ந்து சுகமடைகிறான். ஓடிசியஸின் இந்தப் பயணத்தைத்தான் ‘ஓடிஸி’ என்ற பெயரில் ஹோமர் இன்னொரு மாபெரும் காவியம் படைத்தார். 

(இந்த ‘ஒடிஸி’ கதையும்  நமது  உலக இதிகாசங்கள்  வரிசையில் மூன்றாவது புத்தகமாக வெளிவந்துள்ளது)  

டிராய் தோல்விக்குப் பிறகு எஞ்சிய டிராய் நாட்டு வீரர்கள் அந்நாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த மாவீரன் ஏனியஸ் தலைமையில் பெரும் கப்பற்  படையுடன் புதிய நாட்டை உருவாக்கப் புறப்படுகிறார்கள்.

ஏனியஸ்  உருவாக்கிய நாடு தான் பின்னர் ஜூலியஸ் சீஸர், அகஸ்டஸ் சீஸர் ஆகியோர்  ஆண்ட  ரோம சாம்ராஜ்யம்.

ஏனியஸின் இந்தப் பயணத்தைத் தான் வர்ஜில் அவர்கள்  ஹோமரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி  ஏனிட் என்ற காவியத்தைப் படைக்கிறார். ராமாயணம்  என்றால் ராமரின் பயணம் என்ற பொருள்.  ஓடிஸி  என்றால் ஒடிஸியஸின் பயணம் என்று பொருள். அதே கருத்தில் ஏனியஸின் பயணம் ஏனிட் ஆகியது.      

இந்த ஏனியஸ் வேறு யாருமல்ல!

அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற வீனஸ் தேவதையின் மகன்.  

(இதிகாசம் விரியும்)