சாளக்கிராமம் அடை நெஞ்சே..!

 

Complete Guide to Muktinath Temple Nepal | Muktinath Information

உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள கோயில்களில் முக்கியத்துவம் வாய்ந்தது ஸ்ரீமுக்திநாத் எனப்படும் ‘சாளக்கிராமம்’ ஆகும். பிரசித்தி பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்கள் வரிசையில், இந்தியாவிற்கு வெளியே உள்ள ஒரே திவ்ய தேசமான இதனைத் தரிசிக்கும் வாய்ப்பு, இறையருளால் கிட்டியது.

இமயமலையின் கவின்மிகு அழகை ரசித்தபடி பயணிக்கலாம் என்று எண்ணி, நேபாள தலைநகரம் காட்மாண்டுவிலிருந்து முக்திநாத் தரிசனத்திற்காக, முதலில் போக்ரா நகருக்கு, சாலை மார்க்கமாகப் பயணித்தோம்.

நினைத்தது நிறைவேறும்

போக்ரா செல்லும் வழியில், திரிசூலி மற்றும் மார்ஸயந்தி நதிகள் சங்கமமாகும் பகுதியில், 1300 மீட்டர் உயரத்திலிருக்கும் மனோகாம்னா பகவதியை தரிசிக்க, ‘குரிண்டாரி’ என்கிற இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, குட்டி கேபிள் கார்மூலம் மலை நோக்கிப் பயணித்தோம்.

பர்வதமேடு என்று அழைக்கப்படும் வனப்பு மிக்க மலை பகுதியில் பயணிக்கும்போது, எங்களுக்கு அடுத்த ரோப்கார் பெட்டகத்தில், ஆட்கள் துணையின்றி, ஒரு ஆடும், சில சாக்கு மூட்டைகளும் வந்தன; இப்படி பார்சல் சேவையும் அங்கு நடக்குமாம். ஆடு, வீடு போய்ச் சேர்ந்ததோ.. வீடு பேறு பெற்றதோ தெரியவில்லை.

மனதில் நினைக்கும் விருப்பத்தை நிறைவேற்றித் தருபவள் அம்பாள் மனோகாம்னா. எங்களுடைய உடனடி விருப்பம் – முக்திநாத் தரிசனம். அதைத் தடையின்றி நிறைவேற, பிரார்த்தனை செய்தோம். கோயில் தரிசனம் முடிந்து கீழ் இறங்கி, பயணத்தைத் தொடர்ந்து ‘போக்ரா’ அடைந்தோம்.

பனிமலைகளின் எழில் வரிசை

போக்ரா, ஒரு கவின்மிகு சுற்றுலாத்தலம். இங்கு மெயின் மார்க்கெட்டில் தெரியும் தலைகளை வைத்து, இவர்கள் போகுமிடம் ‘அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் ஏரியா’வா, இல்லை முக்திநாத் கோயிலுக்கா என்று கணிக்கலாம்.

மறுநாள் இளங்காலை, இன்னும் தூக்கம் கலையாத, சோம்பேறித்தனமான போக்ரா விமான நிலையம் நுழைந்தோம். முக்திநாத் தலத்திற்கு அருகில் உள்ள, ‘ஜோம்சம்’ என்ற இடத்திற்கு செல்வதற்காக, செக்-இன் செய்து, ஏர்போர்ட் சிப்பந்தியின் பின் தொடர்ந்தோம்.

அவர் காட்டிய வஸ்து..வைப் பார்த்ததும் அதிர்ச்சியானோம். குட்டி என்றால் அத்தனை குட்டி ப்ளேன்..! அதை, நம்ம ஸ்ரீரங்கத்து கோயில் யானை தன் வாலால் தள்ளி விடும்.

படிக்கட்டில் ஏறும்போது, ஒரு பக்கமாகச் சாய, ‘Welcome on Board’ என விமானி சொல்லி கை தூக்கிவிட,

“நான் வேணும்..னா, விலகிடட்டுமா..” என்று ஒரு மாமா கேட்க, அவரையும் இழுத்து உள்ளே செலுத்தினோம்.

பிளேன் நகரத் துவங்கி, அதிபயங்கர சப்தமிட்டபடி ரன்வே..யில் ஓடினாலும் – எட்டிப் பார்த்தபோது, ஒரு கூர்க்கா நபர், விமானநிலைய காம்பௌண்ட் ஓரம் சைக்கிளில் முந்திப் போவது தெரிந்தது.

ஒரு வழியாக விமானம் வானெழும்பி, தட, தட என அதன் பறவை இறக்கைகள் படபடக்க, அழகு சொட்டும் அன்னபூர்ணா மலைகளுக்கு இடையே நுழைந்தது. 25 நிமிட பயணம். பயத்தில் சிலர் கண்களை இழுத்து மூட, சிலர் இறை பாசுரங்களை முணுமுணுக்க, நான் கீழ் நோக்கினேன்.

ஆஹா, அந்தக் காட்சியை எங்ஙனம் வர்ணிப்பது..!!

அன்னபூர்ணா, தௌலகிரி பனி மூடிய சிகரங்கள் அடியில், பச்சை கம்பளப் புல்வெளியில் செம்மறி ஆடுகளை, சிறுவர் சிறுமியர் மேய்த்துக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே வழிந்தோடும் பனி அருவிகளின் காட்சி!
கீழே வெண் மேகங்கள், ஹாய்..யாகப் படுத்துக் கிடந்தன. அதன் ராட்சத நிழல்கள், குளிர் மலைகளுக்குப் போர்வைகள் ஆயின.

Heidi என்னும் ஆங்கில சீரியலில், ஹேய்டியும், தாத்தாவும், அவளது ஆட்டுக்குட்டியும் சுவிஸ் மலைப் பகுதியில் சுற்றித் திரிந்த அற்புத காட்சிகள் ஞாபகத்துக்கு வந்தன!

விமானம், இரண்டு மலைகளுக்கு நடுவே, ஒரு குறுகலான சந்தைப் பிடித்து, வளைந்து, உயரம் தாழ்ந்து, ஒரு பச்சை பள்ளத்தாக்கை நோக்கிப் பயணித்து, ஒரு வட்டம் அடித்து இறங்கியது. அதுதான் ‘ஜோம்சம்’ என்கிற சிற்றூர்.

மாமா கண் திறந்து, “நான் பிழைப்பேன்..னு நினைக்கலடி. பேசாம ‘துவம்சம்’னே ஊர் பேரை வச்சிருக்கலாம்” என்றார் ஆயாசத்துடன்.

தங்கமலை ரகசியம்

கிளைமேட் acclimatization’க்காக அன்று இரவு ஒரு மரவீட்டில் தங்கினோம். கடல் மட்டத்திலிருந்து பன்னிரெண்டாயிரம் சொச்சம் அடிகள் உயரத்தில் இருப்பதால், மலை  சிக்னஸ்க்கு மாத்திரை தேவைப்பட்டவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.

இரண்டு ரஜாய்களைச் சேர்த்து இழுத்துப் போர்த்திகொண்டு தூங்க ஆரம்பித்தபோது கரண்ட் போய்விட்டது. விடியற்காலை 4:00 மணிவாக்கில் முழிப்பு வந்ததும், நான் கண்ட காட்சி சற்று வித்தியாசமானதாக இருந்தது.

அந்த அறையின் கும்மிருட்டில், தரையில் தங்க நாணயம் வீழ்ந்தாற்போல் ஒரு பொன்னிற ஒளி வட்டம்!

மின்சாரம் வந்து, எதோ ஒரு ஸ்பாட்லைட்தான் ஒளிர்கிறதோ, என நினைக்க, அப்படி ஒன்றும் இல்லை.

ஒருவேளை இறைவனே வந்து விட்டாரா?

ஒளி சாளரத்தின் மெல்லிய இடுக்கிலிருந்து வந்து கொண்டிருந்தது. எழுந்து, ஜன்னலை மெதுவாகத் திறந்தேன்.

அதை எப்படி வர்ணிப்பது?!!

தக தகவென ஒரு மலை. அதில் கொதிக்கக் கொதிக்க, தங்கக் குழம்பு உருகி வழிந்து கொண்டிருக்கிறது. அதன் ஆவி, அங்குமிங்கும் மேலெழும்பிப் பரவ, சற்றும் எதிர் பாராமல், கண்ணைப் பறிக்கும் சொர்க்க லோக தரிசனம்!

மெய்மறந்து அந்த இயற்கை அதிசயத்தைப் பல நொடிகள் பார்த்தபின்தான் விளங்கியது, சூரிய உதயமானது, அந்த வெள்ளிப் பனிமலையில் பட்டு, தன் கிரணங்களைத் தூரிகையாக்கி, பொன்னிறம் தோய்த்து வரைந்த தங்க ஓவியம் அது என்று!

அந்தச் சூரியக்கதிர்களின் தாக்கத்தால் உருகும் பனி – தங்கம் கொதித்து வழிந்து, ஆவியாவது போல ஒர் உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பனிமலையின் பெயர் ‘நீலகிரி ஹிமால்’.

காலைச் சிற்றுண்டி முடித்து, அரதப்பழசான, ஒரு ஜீப்பில் தொற்றிக்கொண்டோம். கூடவே ஒரு நடுத்தர வயது நாக்பூர் சாமியாரும் ஒட்டிக் கொண்டார். ஐந்து வருடங்களுக்கு மேல் இங்குத் தங்கி, கிட்டத்தட்ட லோக்கல் ஆசாமி ஆகிவிட்டாராம்.

சாளக்கிராமம்

தமிழ் வேதம்இமயமலை சாரலில், இனிய பனித் தூறலில் கண்டகி நதி தீரத்திலிருந்து கிளம்பிய ஜீப், ‘முஷ்டங் கணவாயில்’ இருக்கும் ஸ்ரீ சாளக்ராமம் என்கிற முக்திநாத் திருத்தல வாசலை அடைந்தபோது, கோயில் மணி ஒலிகள் நெஞ்சத்தடத்தில்பட்டு அதிர்வலைகளை எழுப்பின.

கோயில் வளாகத்தில் ‘முக்திதாரா’ எனப்படும் புனிதநீர் வரிசையாக 108 கோமுகம் கொண்ட நீர்த்தாரைகள் கொட்டிக்கொண்டிருக்க, வழுக்கி விடாமல் இருக்க சுற்றுக் கம்பிகளைப் பிடித்தபடி அந்த ஐஸ் தண்ணீரில் ஒரு குழாய் கூட விடாமல், தலையை நுழைத்து, குளிர் நடுங்க, நீராடினோம்.

இதனால் 108 திவ்யதேசத்தில் குளித்த புண்ணியம் கிடைக்குமாம். தொடர்ந்து, கோயில் வாசலிலிருந்த இரண்டு பெரிய நீர் தொட்டியிலும், பற்கள் கிடுகிடுக்க முங்கி எழுந்தோம். முக்திநாத் க்ஷேத்திரத்தை பௌத்தர்கள், ‘சுமிக்கியாட்சா’ (நூறு புனித நீர் நிலைகள்) என்று அழைப்பதற்கு இதுவே காரணம்.

பௌத்தர்களுக்கும் இது ஒரு புண்ணிய க்ஷேத்ரம். இங்குள்ள மூர்த்தியை ‘அவலோகிதேஸ்வரர்’ என்கிறார்கள். இதற்கு ‘புத்தரின் கருணை வடிவு’ என்று பொருள்படும்.

தலையைத் துவட்டிக் கொண்டு, கோயிலுக்குள் நுழைந்தோம்.

ககன விமானத்தின் கீழ் ‘திருமூர்த்தி’ பெருமாள்! வெள்ளிக் கிரீடமும், பட்டுச் சால்வைகளும் போர்த்தப்பட்டு, பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும், மங்களாசாசனம் செய்து மகிழ்ந்த, கண்கொள்ளாக் காட்சி தரும் அழகர்.

கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும்
உடன் சூழ்ந்தெழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான்
இடம் சூழ்ந்து எங்கும் இருவிசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும்
தடம் சூழ்ந்து எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே!

(திவ்யபிரபந்தம், பாசுரம் 989)

பூஜைக்கு வைக்கப்பட்டுள்ள பெரிய சாளக்கிராமங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இரண்டு பெண் பூஜாரிகள் அர்ச்சனை செய்தார்கள். பிறகு ஆரத்தி காண்பிக்க, அற்புத தரிசனம் கிட்டியது. கோயில் உள் சுற்றில் சேவித்து, மனமின்றி வெளியே வந்தோம்.

நீரின் மேல் நெருப்பு

கூடவந்த சாமியார், அருகேயுள்ள ‘ஜுவாலா முகி’ ஸ்தலத்திற்கு, ஒரு ஒத்தையடி பாதையில் அழைத்துச் சென்றார். சின்னக் குகை போன்ற தோற்றம். அதன் கீழ் சலசலத்து ஓடும் நீரின் மேல், நெருப்பு எரியும் காட்சியைப் பார்த்தோம். ஆச்சர்யம்தான்! இயற்கையின் அதிசயங்களை என்னவென்பது?

மலையிலிருந்து கீழிறங்கி, கண்டகி நதி தரிசனம் செய்தோம். ‘காளி கண்டகி’ என்கிறார்கள். இங்குதான் புனிதமான சாளகிராமம் கிடைக்கிறது.

இந்த இடம், 51 சக்தி பீடங்களில் ஒன்று. நதிக்கரை படுகையில் சாளக்கிராமங்கள் வாங்கினோம். அதன், வடிவங்களைப் பொறுத்து, கேசவம், லக்ஷ்மி நாராயணர் உள்ளிட்ட பல பெயர்கள். கருப்பு வண்ணத்தில் வரி வரியான கோடுகளுடன் கொண்ட இந்தச் சாளக்ராமங்கள் மிகுந்த பக்தியுடன் பாதுகாக்கப் படவேண்டியவை

கண்டகி நதி இமயமலையில் NHUBINE HIMAL GLACIAR பகுதியில் உருவாகி நேபாளத்திற்கு விவசாயம், குடிநீர், மின் உற்பத்தி தேவைகளைப் பூர்த்தி செய்தபின் இந்தியாவிற்குள் நுழைந்து, பாட்னா அருகில் சோன்பூரில் கங்கையுடன் கலக்கிறது.

மீண்டும், ‘போக்ரா’ நோக்கிப் பயணம். முந்திய நாள் வானிலை மோசமானது காரணமாக விமானம் புறப்படவில்லையாம்.

இந்த முறை, விமானம் பறக்கும்போது யாரும் பயத்தால் கண்களை மூடவில்லை. மன நிறைவுடன், மகிழ்ச்சியான முகங்கள்! முக்திநாதனைத் தரிசித்து விட்டோம், இனி எது நடந்தாலும், கவலை இல்லை என்ற தெளிவு, எல்லோர் மனங்களிலும் இருந்தது.

மனோகாம்னா பகவதிக்கு மானசீகரமாக நன்றியைத் தெரிவித்தோம். இந்தப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த ஆழ்வார்கள் திருவடிகளுக்கு சரணம் சமர்ப்பித்தோம்.