
பெண்டு நிமிர்த்திய பொழுது போக்கு…
குமுதம் போன்ற பிரம்மாண்டமான பத்திரிகையில் வேலை பார்ப்பதில்.. அல்லது குறைந்த பட்சம் அதில் எழுதுவதில் உடனடிப் புகழ் பெறுவது தவிர மற்றும் ஒரு பெரிய நன்மையும் உண்டு.
குமுதம் என்பது புதுமைகள் செய்தே புகழ் பெற்ற பத்திரிகை என்பது உங்களுக்கும் எனக்கும் நன்றாகவே தெரியும். அவர்கள் செய்யும் புதுமைகளில் நம் படைப்பு நிச்சயமாக சிக்கிவிடும். இது எனக்குப் பல முறை நிகழ்ந்ததுண்டு.
முதல் முதலாய் என்னைக் குமுதம் அது போல் சர்ப்பிரைஸ் செய்தபோது எனக்கு வயது 24. சந்தோஷமும் சர்ப்பிரைஸும் தாங்கவில்லை. குமுதத்தில் கதை வருவதே பெரிய சந்தோஷம் என்ற நிலையில் இது போன்ற விஷயங்கள் கூடுதல் சந்தோஷம்.
அதெல்லாம் சரி. அப்படி என்னதான் நடந்துவிட்டது சொல்லிவிட்டுச் சிலிர்த்துக் கொண்டிரு என்கிறீர்களா?
அது வாழ்க்கையிலேயே பிரசுரமாகும் என் மூன்றாவது கதை. குமுதத்தில் பிரசுரமாகும் மூன்றவது கதையும் அதுதான். தலைப்பு விநோதாவுக்கு தண்டனை.
குமுதத்தில் “உங்கள் கதை வரும் இதழ் ஒன்றில் பிரசுரமாகப்போகிறது” என்று கடிதம் போடும் சமாசாரமெல்லாம் கிடையாது. குமுதம் வரும் நாளில் காலையில் கடைக்கு ஓடினோமா குமுதத்தைப் பிரித்தோமோ நம் பெயர் இருக்கிறதா என்று ஆர்வமாய்ப் பார்த்தோமா என்றுதான் கண்டறிய வேண்டும். (சில சமயங்களில் அவசரமாய்ப் புரட்டி, இரண்டு பக்கங்கள் ஒட்டிக் கொண்டு நகர்ந்ததில், என் கதை எதுவும் வரவில்லை என்று நினைத்து, வீட்டுக்கு வந்து பார்த்தால் என் கதை இருந்த கதையெல்லாம் உண்டு)
கதையைப் பார்க்கும்போதே இன்னொரு விஷயத்தையும் அவசரமாய்ப் பார்ப்பது என் வழக்கம். “யார் படம் போட்டிருக்கிறார்கள்?’ என்பதுதான் அது. யார் போட்டாலும் சந்தோஷம்தான் என்பது வேறு விஷயம்.
இந்த விநோதாவுக்கு தண்டனை கதை பிரசுரமானபோதும் அதே ஆர்வத்துடன் பார்த்தேன். ஓவியம் ஏதும் இல்லை. அதற்கு பதில் ஓர் செவ்வகக் கட்டம் போட்டு காலியாக விட்டிருந்தார்கள்.
“உங்களுக்கு ஓவியம் வரையத் தெரியுமா? எனில் இந்தக் கதைக்கான ஓவியத்தை ஒரு வாரத்துக்குள் வரைந்து அனுப்புங்கள். சிறந்த ஓவியம் பிரசுரிக்கப்படும்” என்று அறிவித்திருந்தார்கள். (பரிசுத் தொகையும் ஏதோ குறிப்பிட்டிருந்ததாக நினைவு).
என் மற்றொரு கதையில் “இந்தக் கதையில் பத்தே பத்துப் பிரதிகளில் மட்டும் பிரசுரகர்த்தா தன் கையெழுத்தைப் போட்டிருப்பார். அது உங்களிடம் இருந்தால் அனுப்புங்கள். நூறு ரூபாய்ப் பரிசு தருகிறோம்” என்று அறிவித்தார்கள். இது போன்ற போட்டிகளின்போது ஒவ்வொரு இதழ், வெவ்வேறு மாவட்டங்களுக்குச் செல்லுமாறு பார்சலில் பேக் செய்து அனுப்புவார்களாம்.
தான் வாங்கிய பிரதி ஒன்றில் அது போன்ற கையெழுத்து இருந்ததாகவும் யாரோ கிறுக்கியிருக்கிறார்கள் என்று நினைத்து அதைக் கடைக்காரரிடம் திருப்பிக் கொடுத்து வேறு பிரதி வாங்கியதாகவும் ஒருவர் குமுதத்துக்கு அடுத்த வாரம் கடிதம் எழுதினார். (இதில் எந்த அளவு உண்மை இருக்கும் என்று தெரியாததால் நம்பகத் தன்மைக்குறைவின் அடிப்படையில் அந்தக் கடிதத்தைப் பிரசுரிக்கவில்லை என்று பிற்பாடு பால்யூ சொன்னார்).
இவ்வாறான புதுமைகள் அவ்வப்போது துணை ஆசிரியர்களின் மனசில் தோன்றிக் கொண்டே இருக்கும்.
அது போல் உதித்த ஒரு ஐடியா பிற்பாடு சக்கைபோடு போட்டது.
உதித்த மூளை திரு ரா கி ரங்கராஜனுடையது.
ஒரு நாள் தன் இயல்பான வழக்கப்படி அவர் தனக்கு மிக விருப்பமான நொறுக்குத் தீனிகளில் ஒன்றான காராபூந்தியை ரசித்துக் கண்மூடி சாப்பிட்டுக்கொண்டே அடுத்த கதைக்கான பிளாட்டை மனசுக்குள் செப்பனிட்டுக் கொண்டிருந்தாராம்.
“ரங்கராஜா.. நூறு காரா பூந்தியாவது சாப்பிட்டிருப்ப.. கதை ரெடியாச்சா இல்லையா” என்று ஜோக்காய்க் கேட்டிருக்கிறார் ஜ ரா சு (பாக்கியம் ராமசாமி),
சட்டென்று கண்கள் விரிய நிமிர்ந்தாராம் ரா கி ர.
“என்ன கதை ரெடியா?” என்று ஜ ரா சு கேட்க..
“இல்லை. ஒரு ஐடியா ரெடி” என்று சிரித்தவாறு இவர் சொல்ல..
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என் கணவர் பாமா கோபாலனை அருகில் அழைத்தார் ரங்கராஜர்.
“ஒரு ஐடியா தோணியிருக்கு. அசையாமல் அட்டாக் போட்ட மாதிரி இங்கயே நில்லும். நான் போய் எடிட்டர் கிட்ட பர்மிஷன் வாங்கிண்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு அறைவாசலில் காத்திருந்து, எடிட்டர் அழைத்தவுடன் உள்ளே சென்று பர்மிஷன் வாங்கிக் கொண்டு ஒரு இளைஞரின் உற்சாகத்துடன் துள்ளி வந்து ஐடியாவைச் சொன்னார்.
சாதாரண ஐடியா அல்ல. தொடர்ந்து செய்ய வேண்டிய அசைன்மென்ட். வாராவாரம் ஆரவாரம் என்று சொல்லத்தக்க யோசனை.
பொழுது போகாத பொம்மு.
அசத்தலான அந்த ஐடியா மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பொதுவாக ஏதேனும் புதுமை செய்தால் அது போரடிப்பதற்குள் அதை நிறுத்திவிட வேண்டும் என்பதுதான் எடிட்டரின் பாலிஸி. எனவே அதிகபட்சம் ஆறு வாரங்கள் வரும். ஆனால் எந்த ஒரு ஐடியாவுக்கு மற்றவற்றைவிட மிக அதிகமாகக் கடிதங்கள் வந்து கொண்டே இருக்குமோ அதை நீட்டிப்பார்கள். மரண அடி மல்லப்பா, முப்பத்தி எட்டாம் பக்கத்து மூலை, அஞ்சு பைசா அம்மு மாதிரி, பொழுது போகாத பொம்மு உருவானார்.
சின்னதாய் ஒரு கால் பக்கம்தான் பிரசுரமாகும். ஆனால் அந்த வாரம் எதைப் பற்றி வந்திருக்கிறது என்று ஆர்வமாய்ப் புரட்டுவார்கள் வாசகர்கள். அதில் ஒவ்வொரு வாரமும், கார்ட்டூனிஸ்ட் பாமாகோபாலனை அழகாய் வரைந்திருப்பார்.
பெயர்தான் “பொழுது போகாத” என்றிருந்ததே தவிர அது எங்கள் இருவரையும் பெண்டு நிமிர்த்திய சுவாரஸ்யமான வேலை.
எத்தனை வாரங்கள் தொடர்ந்து பிரசுரமாயிற்று தெரியுமா?
அடுத்த அத்தியாயத்தில் தெரியும்…

என்னவென்று யூகிக்க முடிகிறது. கையில் கொட்டப்படும் காராபூந்தி போன்ற பொருளில் எத்தனை இருக்கிறது என்று குத்து மதிப்பாய் எண்ணிக்கை சொல்ல வேண்டும்.
ஜூவியின் கழுகு ராத்திரி ரவுண்டப்க்கு முன்னோடி குமுதத்தில் வந்த மனிதன் தொடர்.
எங்கள் பிளாக் ஸ்ரீராம்
LikeLike