தன்னுடைய ஐ-பேடைப் பார்த்துக் கொண்டு, “ம்…வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்தியாவா இருந்தா என்ன, ஃப்ரான்ஸா இருந்தா என்ன?” என்று அங்கலாய்த்தாள் காமுப்பாட்டி.

நியூஸ் பேப்பரை படித்துக் கொண்டிருந்த சங்கரன் தலையைத் தூக்கி, “என்ன, காலங்கார்த்தாலே வாசப்படி, அடுப்படின்னு ஆரம்பிச்சுட்டே” என்றார்.

“இல்லேடா சங்கரா. உனக்கும் ஜானுவுக்கும் கல்யாணமாகி முப்பத்தஞ்சு வருஷத்துக்கு மேலாச்சு. என்னிக்காவது ஒரு நாள், வெளிப்படையா ஜானு உன் முகத்துலே ஒரு குத்து விட்டோ, இல்லே செல்லமா தட்டி விட்டோ இருக்காளோ?”

“அதை வேறே பண்ணணுமா? சும்மா இருக்கறவளுக்கு நீயே சொல்லி கொடுப்பே போலிருக்கே?” என்று பதறினார் சங்கரன்.

“அதுல்லேடா. ஃபிரான்ஸ் ப்ரெஸிடெண்ட் ‘மெக்ரோன்’ வியட்நாம் போயிருந்த போது பிளேன்ல நடந்த கூத்து உலகம் பூரா வைரல் ஆயிண்டுருக்கே, பாத்தியோ?” என்றாள் பாட்டி.

“என்ன ஆச்சு பாட்டி?” என்று வீட்டிலிருந்தவர்கள் எல்லாம் ஆவலோடு ஒன்று கூடினார்கள்.

“வியட்நாம் போய் எறங்கினதும் செக்யூரிட்டி ஆஃபிசர் ப்ளேன் கதவைத் தொறந்தார். மெக்ரோன் எறங்க தயாரா நின்னுட்டு இருந்தாரா, தீடீருன்னு கதவுக்கு அந்தப் பக்கத்துலேருந்து அவரோட பொண்டாட்டி ‘ப்ரிகிட்’டோட கை அவரோட மூஞ்சி மேலே பாஞ்சுது. எனக்கென்னவோ, நன்னா ஒரு மொத்து மொத்தின மாதிரி தான் தோணித்து. ஆனா ‘ஏடாகூடமாக எதுவும் நடக்கல்லே. புருஷன் பொண்டாட்டி சும்மா தமாஷ் பண்ணிண்டுருந்தா’ன்னு அவா கவர்ன்மென்ட் சைடுலேருந்து சொல்றா. வெறும் வாயை மெல்லற மீடியாகாராளுக்கு அவல் கெடைச்சா சும்மா விடுவாளோ? மீம்ஸ் மேலே மீம்ஸா போட்டு அதகளம் பண்ணிண்டிருக்கா.”

சங்கரன், “அவரோட பொண்டாட்டி அவரைவிட வயசுல மூத்தவர்னு படிச்சேன். மெக்ரோனோட ம்யூசிக் டீச்சரா இருந்தவராம். அந்த உரிமையிலே லேசா ஒரு தட்டு தட்டியிருக்கலாம். இது அவாவா பர்சனல் குடும்ப விவகாரம். இதைப் போய் பெரிசு படுத்தலாமோ?” என்றார்.

“அவாவா குடும்ப விவகாரம்னா, அவாவா ஆத்தோட வெச்சுக்கணும். இப்படியா கேமரா முன்னாடி மாட்டிண்டு திருதிருன்னு முழிப்பா? என்னவோ, இத்தோட போனா சரி. தப்பித்தவறி, அமெரிக்கா பக்கம் போய் ‘ஓவல் ஆஃபீஸ்’லே ‘ட்ரம்ப்’கிட்டே மாட்டிக்காம இருந்தா சரி”

“அங்கே என்ன கூத்து நடக்கறது?” என்றாள் லல்லு.

“வெளிநாட்டுக்காரா எல்லாம் இப்போ ‘ஓவல் ஆஃபீஸ்’ பக்கமா போறதுக்கே பயப்படறா. ஃபெப்ரவரி மாசம் உக்ரைன் ப்ரெஸிடெண்ட் ஜெலன்ஸ்கி அங்கே போனப்போ, ட்ரம்ப் அவரை உண்டு இல்லைன்னு பண்ணிட்டாரு. ரீசென்டா சவுத் ஆஃரிக்கா ப்ரெஸிடெண்ட் ‘சிரில் ராமஃபோஸா’ போயிருந்தப்போ, திரும்பவும் வாக்குவாதம் நடந்துருக்கு. சவுத் ஆஃரிக்காவுலே இனப் படுகொலை நடக்கறதா சொல்லி ட்ரம்ப் அவரை ஒரு பிடி பிடிச்சிருக்காரு. அந்த ராமஃபோஸாவும் லேசுப்பட்டவரா தெரியல்லே. “உங்களுக்கு ஃப்ரீயா ஃகிப்ட குடுக்க எங்ககிட்ட ப்ளேன் எல்லாம் இல்லை”ன்னு நக்கலா பதில் சொல்லியிருக்காரு. கத்தார் நாட்டுக்கு ட்ரம்ப் போயிருந்தப்போ அவருக்கு ஒரு ப்ளேனை ஃப்ரீ ஃகிப்டா குடுத்திருந்ததை குத்தி காமிச்சிருக்காரு.

இது போதாதுன்னு இப்போ ட்ரம்புக்கும் எலான் மஸ்க்குக்கும் நடுவே சண்டை ஆரம்பிச்சுடுத்து. நான் இல்லாட்டா ட்ரம்ப் எலெக்ஷன்லே வின் பண்ணியிருக்கவே முடியாதுன்னு மஸ்க் சொல்ல, மஸ்க் சரியான புளுகு மூட்டைன்னு ட்ரம்ப் சொல்ல, இரண்டு பேரும் குடுமிப்பிடி சண்டை போட்டுண்டிருக்கா. மொத்தத்துலே, உலக அரசியல் ஒரு ‘காமெடி ஷோ’வா போயிட்டிருக்கு.”

“பலே. ஜனங்களுக்கும் கொஞ்சம் என்டர்டெயின்மென்ட் வேணுமோல்லியோ?” என்றார் சங்கரன்.

“அது சரி. இந்தியாவுல என்னென்ன சமாசாரமெல்லாம் நடந்தது. அதை சொல்லு பாட்டி” என்றான் அம்பி.

‘ஆபரேஷன் சிந்தூர்’ன்னு பேர் வைச்சு நம்ம ராணுவம் பாகிஸ்தானை புரட்டி எடுத்துட்டாளே. அவங்க ந்யூக்கிளியர் பங்கர்ஸ் மேலே கூட தாக்குதல் நடந்ததா சொல்றா. அந்த பயத்துலதான் அவா சரண்டர் ஆன மாதிரி தெரியறது. ஆனாக்கூட ‘குப்புற விழுந்தாலும் மீசைலே மண் ஒட்டல்லே’னனு சொல்ற மாதிரி பாகிஸ்தான் கவர்ன்மென்ட் அவங்க ஆர்மி சீஃப்புக்கு ‘ஃபீல்ட் மார்ஷல்’ பட்டம் வேறே குடுத்துருக்கா. கேக்கவே தமாஷா இருக்கு.”

“என்ன பண்ணறது. அவா நாட்டு மக்கள் முன்னாடி ‘ஷோ’ காட்டி ஆகணுமே” என்றார் சங்கரன்.

“பூரா இந்தியாவும் பெருமைப்படற மாதிரி இரண்டு முக்கிய விஷயம் நடந்திருக்கே, என்னன்னு தெரியுமோ?” என்று புதிர் போட்டாள் பாட்டி.

“எனக்கு தெரியுமே. ஒண்ணு, இந்தியா G.D.P ranking-ல நாலாவதா வந்திருக்கு. இன்னொண்ணு, இந்தியன் ரைட்டர் ‘பானு முஷ்டாக்’குக்கு ‘புக்கர் ப்ரைஸ்’ கிடைச்சிருக்கு. அதானே பாட்டி” என்றாள் லல்லு.

“கரெக்டா சொல்லிட்டியே. I.M.F அறிக்கைப்படி G.D.P ranking-ல இந்தியா ஜப்பானை பின்னுக்குத் தள்ளிட்டு நாலாவது இடத்துக்கு வந்திருக்கு. நமக்கு முன்னாலே இப்போ அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மட்டும்தான் இருக்கா. இன்னும் மூணு வருஷத்துலே ஜெர்மனியை கூட முந்திடும்னு சொல்றா. கேக்கவே எவ்வளோ சந்தோஷமா இருக்கு. ஆனா இங்கே இருக்கற சில பேருக்கு அது பொறுக்கலே. GDP-ல நாலாவதா இருந்தா என்ன பிரயோஜனம். Per capita GDP படி பார்த்தா 136-வது இடத்துலே இருக்கோமேன்னு மட்டம் தட்டறா. 140 கோடி ஜனத்தொகையை வச்சு வகுத்தா குறையத் தானே செய்யும்” என்றாள் பாட்டி சற்று கோபத்துடன்.

“என்ன பண்ணறது. எல்லா காலத்திலேயும் நாட்டுக்கு எதிராக கோஷம் போடற ஜனங்கள் இருக்கத்தான் செய்யறா” என்றார் சங்கரன்.

“இந்த வருஷத்துக்கான ‘இண்டர்நேஷனல் புக்கர் ப்ரைஸ்’ கன்னட எழுத்தாளர் ‘பானு முஷ்டாக்’ எழுதின புஸ்தகத்துக்கு கெடச்சிருக்கு. முப்பது வருஷமா கன்னடத்திலே அவங்க நிறைய ஷார்ட ஸ்டோரீஸ் எழுதி இருக்காங்களாம்‌. அதுலேருந்து 12 ஸ்டோரீஸை செலக்ட் பண்ணி, ‘தீபா பாஸ்தி’ன்ற ரைட்டர் இங்கிலீஷ்லே டிரான்ஸ்லேட் பண்ணி ‘ஹார்ட் லேம்ப்’ என்ற புஸ்தகமா வெளியிட்டிருந்தாங்க. அதுக்குதான் இப்போ ‘புக்கர் ப்ரைஸ்’ கொடுத்திருக்காங்க. ப்ரைஸ் மனி ஐம்பத்தி எட்டு லட்சம் ரூபாய். இரண்டு பேரும் ஈக்வலா ஷேர் பண்ணிக்கிறாங்க.”

“அப்பா. எவ்வளோ பணம்” வாயைப் பிளந்தாள் லல்லு.

“அங்கேயும் கான்ட்ராவர்சி இல்லாமே இல்லே. லண்டன்லே புக்கர் பங்க்ஷன் போது, ஒரு லேடி பானு முஷ்டாக்கை அப்ரோச் பண்ணி, உங்க நாட்டிலே இருக்கிற ‘அன்ரெஸ்ட்’ காரணமாக உங்களுக்கு லண்டன்லே ‘அசைலம்’ வேணும்னா நாங்க ஏற்பாடு பண்ணித் தரோம்னு சொன்னாங்களாம். அதுக்கு அவங்க ‘யார் உங்களுக்கு இங்கே ‘அன்ரெஸ்ட்’ இருக்கறதா சொன்னாங்க. நாங்க நல்லாத்தான் இருக்கோம்’னு பதில் சொல்லியிருக்காங்க. பாரு, எப்படிப்பட்ட ஜனங்க இருக்காங்க“ என்றாள் பாட்டி.

“இந்த திரிசமன் வேலை செய்யறதே பொழைப்பா போச்சு சில பேருக்கு” என்று அலுத்துக் கொண்டார் சங்கரன்.

“அதையெல்லாம் விடு பாட்டி. ‘ஈ சாலா கப்பு நம்தே’, பாத்தியா?” என்றான் அம்பி பெருமையுடன்.

“சாலா இல்லேடா. ‘சலா’. ‘சலா’ன்னா ‘தடவை’ன்னு அர்த்தம். இந்த தடவை IPL Cup, ராயல் சேலஞ்சர்ஸ் பேங்களூருக்கு தானே போச்சு. சும்மா சொல்லப்படாது. நன்னாவே விளையாடினா. இன் ஃபாக்ட், ப்ளே ஆஃப்லே வெளையாடின நாலு டீமும் நன்னாவே வெளையாடினா. பட், லக் RCB பக்கம் இருந்தது.

ஆனா பாரு, கப் ஜெயிச்ச மறுநாளே ஏண்டாப்பா இந்த கப்பை ஜெயிச்சோம்னு ஆயிடுத்து. விக்டரி செலிப்ரேஷன் போது கூட்ட நெரிசல்லே 11 பேர் செத்துப் போயிருக்கா. 75 பேருக்கு காயம். 35,000 கெப்பாசிட்டி இருக்கிற ஸ்டேடியத்துலே மூணு லட்சம் பேர் நுழையப் பார்த்தா எப்படி கண்ட்ரோல் பண்ண முடியும்? இப்போ, இதுக்கு யார் காரணம்னு ஒருத்தர் மேல ஒருத்தர் பழி சுமத்திண்டிருக்கா. பெங்களூர் போலீஸ் கமிஷனரையும் இன்னும் நாலு உயர் போலீஸ் அதிகாரிகளையும் டிரான்ஸ்ஃபர் பண்ணியிருக்கா. சி.எம்மோட பொலிட்டிக்கல் செகரெட்ரிரையும் தூக்கிட்டா. KSCA, RCB அப்புறம் ஈவெண்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி ஆளுங்களையெல்லாம் அரெஸ்ட் பண்ணியிருக்கா.

இனிமே என்ன பண்ணி என்ன ப்ரயோஜனம். அநாவசியமா 11 உயிர் போயிடுத்தே. முதல்லே எதுக்கு இந்த விக்டரி செலிப்ரேஷன்? வொர்ல்ட் கப்பா வின் பண்ணியிருக்கா? ஒரு சாதாரண ஃப்ரான்சைஸி டோர்னமெண்ட் தானே? இதுக்கு இவ்வளோ பெரிய ஆர்ப்பாட்டம் தேவையா? ஜனங்களுக்கும் இது புரியணும். கிரிக்கெட், சினிமான்னு இப்படி வெறித்தனமா அலையறதை முதல்லே நிறுத்தணும். பார்த்தோமா, ரசிச்சோமான்னு அத்தோட விட்டுடணும். அதுதான் எல்லோருக்கும் நல்லது” என்றாள் பாட்டி.

“ஆமாம், நீ சொல்றது வாஸ்தவம் தான். எல்லாம் ஒரு லிமிட்டோட இருந்தா நல்லது” என்று ஆமோதித்தார் சங்கரன்.

“சரி. டிபன் ரெடியாயிடுத்து. எல்லாரும் ‘லிமிட்டா’ சாப்பிட வாங்க” என்று அறிவித்தாள் ஜானு.

******************