–—————————————————————————————-
கலைமகள் இதழில் சாந்தா என்பவர் எழுதிய ‘பரிசு’என்ற
சிறுகதையை மே 2025 இதழ்களில் வெளியான
அனைத்துச் சிறுகதைகளிலும் சிறந்ததாகத் கருதுகிறேன்.
—————————————————————————————
சிறுகதைப் போட்டிக்கான கதைகளை வாசித்து தேர்வு செய்வதைக் காட்டிலும் பிரசுரமான கதைகளில் சிறந்த ஒன்றைச் சல்லடை போடுவது சவாலான பணி.குவிகம் அளித்த வாய்ப்பு பல்வேறு எழுத்தாளர்களின் கைவண்ணத்தை ஒருசேர வாசிக்கும் அரிய அனுபவத்தை தந்தது.
1.பரிசு-சாந்தா- கலைமகள் மே 2025
திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி கிராமம் கதைக்களம்.
எத்தனை விதமான கருக்கள், களங்கள்.சுவாரசியமாய், ஆழமாய், வித்தியாசமாய், வியப்பாய். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை வாசித்து முடித்தும் மனது இன்னும் அசைபோட்டுக் கொண்டிருக்கும் சிறுகதை ‘பரிசு’.கலைமகள் மே 2025 இதழில் சாந்தா என்பவர் எழுதிய அந்தச் சிறுகதையை முதலாவது இடத்திற்குத் தேர்வு செய்துள்ளேன்.
அகஸ்தியர் பட்டியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க கிராமத்து ஏழைச் சிறுவர்கள் இருவர் பொருள்களைச் சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். புதுப் பந்து வாங்க அவர்களிடம் காசு இல்லை.திருநெல்வேலி செல்ல பஸ்ஸுக்கு காத்திருக்கும் எழுபது வயதைக் கடந்த அருணாசலம் தாத்தாவை அணுகி பந்து வாங்கி வர விண்ணப்பம் செய்கின்றனர். போட்டியில் ஜெயித்து கிடைக்கும் பணத்தில் பந்துக்கான பணத்தை திருப்பி விடுவதாக கூறுகின்றனர்.’ஜெயிச்சுருவீகளா’ என்று கேட்டாலும் பந்து வாங்கி வருவதாக உறுதி அளிக்கிறார் பெரியவர் அருணாசலம்.
வீடு திரும்பிய கணவரிடம், ‘மாத்திரை வாங்காம தெரு புள்ளைகளுக்கு பந்து வாங்கியாந்தீரோ’ என்று உணவளித்தவாறு செல்லமாய் கடிந்து கொள்கிறாள் பிச்சி. பந்தை வாங்க அருணாசலம் வீட்டுக்கு வந்த இரு சிறுவர்களும் குழந்தையில்லா அந்த வயதான தம்பதியின் பெருந்தன்மையை வியந்து கண்கலங்கி வாசலில் நிற்பதாகக் கதை முடிகிறது. கதையை வாசிக்கும் யாரும் சிறுவர்கள் இருவரும் பங்கேற்கும் அணி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று பரிசு வெல்ல வேண்டும் என இறைவனிடம் மானசீக வேண்டுகோள் வைக்காமல் இருக்க முடியாது.முதுமை-இளமை இடையே விரிசல் அதிகரித்து வரும் சூழலில் இரு தலைமுறையிடையே பரஸ்பரம் நம்பிக்கையை விதைப்பதாக கதைக்கரு அமைந்துள்ளது சிறப்பு.மனிதம் இன்னமும் மனித மனங்களில் வற்றிவிடவில்லை என்பதை எதார்த்தமாய் சித்தரித்து உள்ளார் கதாசிரியர். பரிசு கதைக்கு முதலிடம் தர எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை.
2.சிரார்த்தம்-கிருஷ்ணமூர்த்தி-வாசகசாலை மே 6, 2025
பெற்றோர்களுக்கான சிரார்த்தம் இன்று வெறும் சம்பிரதாயச் சடங்காக மாறிவிட்ட அவலத்தை இடிந்துரைக்கும் சிறுகதை. வசதியான குடும்பத்தலைவரின் வீட்டுக்கு சிரார்த்தம், ஹோமம் செய்து வைக்க தங்கை மகன் கிட்டுவுடன் செல்கிறார் சங்கரன்.குடும்பத் தலைவருக்கு மூன்றாவது தலைமுறை பெயர் தெரியாத நிலையில் பெருமாள்-லட்சுமி என்று பெயர் வைத்து காரியங்களை முடிக்கிறார்.வீடு திரும்பும் மாமாவிடம் கேசவ பெருமாள்- சீதா லட்சுமி என்று சங்கரன் ஒருமுறை பெயர் மாற்றி கூறிவிட்டதை சுட்டிக்காட்டுறான் கிட்டு.கொவைட் 19-இல் இறந்து போன தங்கை சீதா லட்சுமியின் முகத்தைக் கூட பார்க்க முடியலை. நான் செய்யும் சிரார்த்தம் எல்லாம் அவளுக்கே செய்யறதாதான் நேக்கு தோணறது என்று குமுகிறார் சங்கரன்.சம்பாதிக்க கத்துண்ட விஷயங்களில் கடுகளவு இருக்குமா பஞ்சகச்சம் கட்டற வேலை என்று சங்கரன் வழியாக கதாசிரியர் கேள்வி எழுப்புகிறார்.
3.காட்சிப்பிழை-நர்சிம்-ஆனந்த விகடன் மே 21, 2025
வசனகர்த்தா முத்துவும் உதவி இயக்குநர் திரை வீரனும் நெருங்கிய நண்பர்கள். திரைஉலகில் வளர்ந்து வரும் இளம் கலைஞர்கள்.தென்னிந்திய பிரபல கதாநாயகியை படப்பிடிப்பில் நாளை சந்தித்து கதை சொல்லி ஓகே ஆகிவிட்டால் திரைவீரனின் இயக்குநர் கனவு நிறைவேறிவிடும். காலையில் தந்தை இறந்ததாகத் தகவல் வந்தும் நடிகையைச் சந்திக்கப் போகிறான் திரைவீரன். நடிகையிடம் முத்துவை கதை சொல்லச் சொல்கிறான். நடிகை ஓகே சொல்லி மேனேஜரைப் பார்க்கச் சொல்கிறாள். மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாது, இறந்து விட்ட அப்பாவை பார்க்க ஊருக்கு கூட்டிகிட்டு போரீயா என்று கண்கலங்க நண்பன் முத்துவிடம் கேட்கிறான் திரைவீரன். பரிந்துரையுடன் வரும் நபரை ‘நீங்க ஒரு ரெண்டு நாள் கழிச்சு வாங்க’ என்று தட்டிக்கழிக்கிறான் திரைவீரன். அந்த நபரை, ‘நைட்டு என் ரூம்ல தங்கிக்கோங்க.காலைல பார்க்கலாம் என்ன ஏதுண்னு’ என்று அபயம் அளித்து அழைத்துச் செல்கிறான் முத்து. மாறுபட்ட அணுகு முறை கொண்ட இருவரைச் சிறந்த நண்பர்களாய் கதாசிரியர் படைத்துள்ளது சிறப்பு.
சிறுகதைத் தேர்வுக்கு என்னைத் தேர்வு செய்த குவிகம் ஆசிரியருக்கு நன்றி. மேற்கண்ட மூன்று சிறுகதைகளை எழுதிய கதாசிரியர்களுக்கு பாராட்டுகள்.
மே மாதம் பல்வேறு இதழ்களில் சிறுகதை எழுதிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள்.
