
கடவுள் பாதி மிருகம் பாதி
முத்த மழையில் ஆரம்பித்த தக் லைஃப் (Thug life) பரபரப்பு இன்னும் அடங்கின பாடில்லை. படம் வெளியாவதற்கு முன்பு விழா,பேட்டிகள், மேடை பட்டாசுகள் என்று ஊர் ஊராக, நாடு நாடாக படக் குழுவினர் சென்றதையும் பேசியதையும் சோஷியல் மீடியாக்களில் பார்க்காதவர்களே இல்லை. அந்த அளவிற்குச் சற்றும் குறையாமல்,இன்னும் அதிகமாகவே, அதே சோஷியல் மீடியாக்களில் படம் ரிலீஸ் ஆனதும் படத்தைக் கிழித்துத் தொங்க விட்டு விட்டார்கள். அமெரிக்காவில் இருந்தாலும் விடேன் தொடேன் என்று என்று நானும் தான் Thuglife பார்த்தேன்.(கமல் மணிரத்னம் மூன்று பேரில் விசிறி ஆயிற்றே!) ஏமாந்தேன்.
படம் ஏமாற்றம், என்னவெல்லாம் சரியில்லை என்பதெல்லாம் பார்த்தவர்கள் பார்க்காதவர்கள் எல்லோருக்குமே புரிந்து விட்டது. ஆனால் சில வக்கிரங்கள், எதிர்மறை சிந்தனைகள் இவைகள் தான் பலருக்கும் நெருடலாக இருக்கிறது.
திரைப்படங்களில் தெரிந்தே சில அத்துமீறல்கள் அநாகரிகங்கள் இவற்றை புகுத்துகிறார்கள். இதற்கு என்ன விளக்கம் சொல்கிறார்கள் என்றால் ‘சமூகத்தில் நடக்காததையா சொல்கிறோம்’ என்று.
காலம் காலமாக சமூகத்தில் தகாதவை, கூடாதவை, தவிர்க்கப்பட வேண்டியவை இவை எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கும். இருக்கின்றன. இவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டி திரைப்படங்களில் நியாயப்படுத்த வேண்டுமா என்பதுதான் கேள்வி.
இதே கமல் ஒரு படத்தில் சொல்லி இருப்பார் “கடவுள் பாதி மிருகம் பாதி,கலந்து செய்த கலவை நான்” என்று. அது உண்மைதான்.
(உதாரணத்தையே திரைப்படத்தில் இருந்து சொல்ல வேண்டி இருக்கிறது பாருங்கள்.இதுதான் தாக்கம்). நம் ஒவ்வொருவருக்குள்ளும் கடவுளும்,மிருகமும் கலந்து இருப்பதுதான் நிஜம். தார்மீக குணங்களும் மிருக குணங்களும் சேர்ந்த கலவைதான் மனிதன்.நமக்குள் இருக்கும் மிருகம் எது என்பது நமக்குத்தான் தெரியும். அதை அடக்கி கடவுள் போன்ற நல்ல மனதையும் தார்மீக குணத்தையும் வெளியே கொண்டு வரத்தான் படாதபாடு படுகிறோம். அதில் வெற்றி அடையும் போது நல்லவனாக மிளிர்கிறோம். வாழ்க்கையும் அமைதியாக இருக்கிறது.
பெரிய விஷயங்கள் என்று இல்லை. சாதாரண வாழ்க்கையில் நடைபெறும் சின்ன சின்ன விஷயங்களைக் கவனித்துப் பார்த்தால் போதும். நம்முடைய நல்ல குணமும்,மிருக குணமும் நமக்கே புரியும்.
தெரியாமல் தொலைக்காட்சி வால்யூமைக் கூட வைத்து விட்ட மனைவியிடம், “அறிவு இருக்கா உனக்கு? ஆபீஸ் வீடியோ மீட்டிங்ல இருக்கேன். டிவிய பெரிசா வைக்கிறியே” என்று கோபத்தில் எகிறுவது, அவளை நாள் பூராவும் பாதிக்குமே என்று யோசித்தால் கத்தும் மிருக குணம் அடங்கி, சாதாரணமாக சொல்லத் தோன்றும்.
ஆண் பெண் என்று அலுவலக நண்பர்களுடன் பீச் ரிசார்ட்டில் கண்டபடி கூத்தடித்து விட்டு வீட்டிற்கு வந்து அம்மாவிடம் ஆபீஸ் மீட்டிங் என்று மனதார பொய் சொல்லும் மிருக குணம் தவறு என்பது மகளுக்குப் புரிந்தால், ஒன்று போக மாட்டாள் அல்லது சென்ற விஷயம் நேர்மையானதாக இருந்தால் அம்மாவிடம் உண்மையை சொல்லி விடுவாள். இது புரிந்தால் போதும்.
இதைப் படிக்கும் போது, ‘நான் ஒருத்தன் நல்லவனாக இருந்து நாட்டைத் திருத்தப் போகிறேனா” என்கிற மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.ஆமாம். நாட்டைத் திருத்த ஒவ்வொருவரும் நல்லவனாக வேண்டும். ஒவ்வொருவரும் சேர்ந்தது தானே சமூகம்,நாடு !!! எல்லோரும் தர்ம சிந்தனையோடு இருந்தால் நாடு நன்றாகத் தானே இருக்கும்.
பகவத் கீதையில் முதல் ஸ்லோகம். பார்வையற்ற திருதராஷ்டிரன், மகாபாரதம் யுத்த களத்தில் என்ன நடக்கிறது என்று சஞ்சயனைப் பார்த்துக் கேட்கிறான்.
“தர்ம-க்ஷேத்ரே குரு-க்ஷேத்ரே
ஸமவேதா யுயுத்ஸவ:
மாமகா: பாண்ட வாஸ், சைவ
கிம் அகுர்வத ஸஞ்ஜய”
என்பது கீதையில் முதல் ஸ்லோகம்.
மேலோட்டமாக இதன் பொருள்
“புண்ணிய பூமியாகிய குருக்ஷேத்திரத்தில் யுத்தம் புரிவதற்காக ஒன்று சேர்ந்திருக்கும் ,என்னைச் சேர்ந்தவர்களும் பாண்டு புத்திரர்களும் என்ன செய்கிறார்கள் சொல் சஞ்சயா” என்று சஞ்சயனைக் கேட்கிறார் திருதராஷ்டிரன்.
இன்றைக்கும் நமக்குப் பொருந்தக்கூடிய உட்பொருள் இதில் உள்ளது. வாழ்க்கை என்னும் புண்ணியபூமியில் தினந்தோறும் நமக்கு குருக்ஷேத்திரம் என்னும் போர்க்களம் தான். அதில் நம் மனதில் பாண்டவர்கள் இன்னும் தர்ம சிந்தனையுள்ள நல்ல குணமும் உள்ளது. துரியோதனாதிகள் என்னும் கெட்ட சிந்தனை உள்ள மிருக குணமும் உள்ளது. இந்த நல்ல குணமும் மிருக குணமும் தினந்தோறும் நடத்தும் மகாபாரத யுத்தமே வாழ்க்கை.
நமக்கு நாமே இதை கேட்டுக்கொண்டு தர்ம குணங்களை அதிகப்படுத்திக் கொண்டு மிருக குணங்களைக் களைய ஆரம்பித்தால் வாழ்க்கையில் கொந்தளிப்பு இல்லாமல் அமைதியாக இருக்கும்.
ஆக வாழ்க்கையோ சினிமாவோ நடக்காத ஒன்றா என்று மிருக குணத்தை வளர்க்காமல் நல்லதே நாடி, நல்ல வாழ்க்கை வாழ்வதே சிறந்தது. வள்ளுவர் சொல்கிறாற் போல் ‘அல்லவை தேய அறம் பெருகும்’ என்பதை உணர்வோம். எப்போதும் நல்ல வழி நாடுவோம்.
