Manam Oru Kurangu by Cho Ramaswamy | Goodreads

மனம் ஒரு குரங்கு

மனசை குரங்கென்று கூறக் கேட்க மனசுக்கு மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது. நம்மோடு பயணித்து நம்மை ஆட்டி வைக்கும் ஒரு ஜந்து என்று சொல்லலாமா இல்லை உறுப்பு என சொல்லலாமா? மனசுக்குதான் உருவமோ வடிவமோ கிடையாது, மனசை அரூபி என வைத்துக் கொள்வோம்.

இப்ப என்ன மனசைப் பற்றிய புலம்பல் என நினைக்கலாம். பின்ன என்ன? எதை நினைக்காதே என கட்டளை இடுகிறோமோ அதைப் பற்றி அதிகம் நினைக்க ஆரம்பித்து விடுகிறது.

கண்களை பார்க்காதே என கட்டளையிட்டால் உடனே இமைகள் வந்து கண்களை மூடி விடுகிறது. பேசாதே என வாய்க்கு கட்டளையிட்டால் உதடுகள் இறுக்கி மூடி விடுகின்றன. காதுகளுக்கு உறை இல்லை என்றாலும் கைகளால் மூடிக் கொள்ளலாம் இல்லா விடின் பஞ்சை வைத்து அடைத்துக் கொள்ளலாம். இந்த மனசுக்கு மட்டும் என்ன கேடு வந்தது.

பெண்கள் மனதை புரிந்து கொள்ளவே முடியாது என்ற பேச்சு நம் காதில் விழும். ஆண்கள் மனதை புரிந்து கொண்டவர் யார்?

உடம்புக்கு கஷ்டம் என்றால் உணரலாம், அளவிடலாம் ஆனால் மனசுக்கு கஷ்டம் என்றால் உடம்பு உணராது.

மனோ வேகம் வாயு வேகம் என்ற வார்த்தை பழைய நாவல்களில் எங்காவது படித்திருப்போம். மனோ வேகத்தை எந்த வேகத்தோடு ஒப்பிட முடியும். ஒரு நொடியில் மனம் வாழ்க்கையை ஒரு சுற்று, சுற்றி வந்திருக்கும். அமெரிக்காவோ, சந்திர மண்டலமோ சென்று திரும்பியிருக்கும்.

அருணகிரி நாதர் போன்று தெய்வீக மனசு படைத்தவர் கூட மனதை கட்டுப் படுத்த முடியாமல் , குயவன் சுற்றிய சக்கரமாய் மனம் சுழல்கிறதே என புலம்புகிறார்.

மனம் ஒரு மந்திரச்சாவி. அதை பயன்படுத்துவதை பொறுத்து உன் எதிர்காலம் அமையும் எனக் கூறும் பெரியவர்கள் மனம் ஒரு மாமருந்து என்றும் கூறுகின்றனர். எல்லாம் சரிதான். மனதை நம்மால் கட்டுப் படுத்த முடிய வில்லையே?

நான் தேடியவரை மனதிற்கு கடிவாளம் போடும் வழியை இது வரை யாரும் சொல்லிக் கொடுக்க வில்லை.
இது கூட ஒரு சிலருக்கு சாதகமாகி விடுகிறது.

இப்படித்தான் ஒரு கிராமத்தில் அப்படி- இப்படி வைத்தியம் பார்த்து ஒரு வைத்தியர் பிழைத்து வந்தார். அவரிடம் வைத்தியம் பார்ப்பவர்களில் அதிர்ஷ்ட வசமாக சிலர் சரியாகி விடுவார்கள்.
அதே ஊரில் ஒரு முரடன் இருந்தான். பெரும் பாலும் அவன் வாய் பேசாது, கைகள்தான் பேசும். வைத்தியரின் கெட்ட நேரம் முரடனுக்கு தாங்க முடியாத வயிற்று வலி.

‘வைத்தியரே! என்ன செய்வையோ தெரியாது, என் வயிற்று வலி உடனே சரியாகனும்’ என்றான் முரடன்.

வைத்தியரோ முரடனின் கை பிடித்து நாடி பார்க்காமல், அவன் கையிலிருந்த கத்திக்கு நாடி பார்த்து குளம்பிப் போனார்.

மனதைத் திடப் படுத்திக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தார். முரடன் கையில் ஒரு லேகியத்தை கொடுத்து மூன்று வேலை சாப்பிட்டால் வயிற்று வலி சரியாகி விடும். கூடவே ‘மருந்து சாப்பிடும் பொழுது கருங் குரங்கை மட்டும் மனதில் நினைக்கக் கூடாது. நினைத்தால் மருந்து வேலை செய்யாது’ என்ற பத்தியத்தையும் கூறினார்.

முரடனுக்கோ மருந்து சாப்பிடும் பொழுதெல்லாம் கருங் குரங்கு மட்டும்தான் நினைவில் வந்தது. வயிற்று வலியும் சரியாக வில்லை. வைத்தியரும் பிழைத்தார்.

இப்படித்தான் எதை நினைக்கக் கூடாது என நினைக்கிறோமோ அதையே சுற்றி சுற்றி வரும்.
கடிவாளம் போடும் வழி தெரிந்தால் தயவு செய்து கூறுங்களேன்.