
நரியி னார்உரை கேட்டபின் நல்லராய்ப்
புரிவின் நல்லறம் செய்வர்பொய் யாக்கொளீஇ
அரிவ ரம்மகன் அப்பொருள் வேட்கையால்
தெரிவித் திட்டுஅறஞ் செய்பொருள் செப்பினான்.
[நல்லர்=நல்ல குணம் உடையவர்; புரிவின்=விருப்பத்துடன்; பொய்யாக்கொளீஇ-உடல் பொருள் முதலியவற்றை நிலையற்றனவென மனத்திற்கொண்டு]
நரிவிருத்தம் என்னும் இந்த நூலின் உரையைக் கேட்டுணர்ந்த பிறகு, நற்குணமுடையராய், உடல் பொருள் முதலியவற்றை நிலையற்றனவென மனத்திற்கொண்டு, விருப்பத்துடன் நல்ல தருமத்தைச் செய்வார்கள்.
அரிவர மகன்–அரிவரனென்னும் ஒரு மனிதன் அந்த அறமாகிய, உண்மைப்பொருளின் விருப்பத்தினாலே, முனிவர்களிடம் சென்று தான தருமத்தைச் செய்ய வேண்டுமென்று கருதியிருக்கின்ற உண்மையைத் தனக்கு உரைக்க வேண்டுமென்று வேண்டினான். அவர்கள் அங்ஙனமே அதனை உபதேசிக்கக் கேட்டுணர்ந்து அதன் வழி நின்று நற்கதியடைந்தான். ஆதலின் இந்நூலைக் கேட்போர் எல்லோரும் அறம் செய்தலைக் கடைப்பிடிப்பீர்களாக!
இதில் கூறப்படும் அரிவரன் கதை யாவது : அரிவரன் என்பாவன் ஒருவன், அறம்புரிய வேண்டு மென்னும் விருப்பத்தால் முனிவர்களிடத்தில் தர்மம் கேட்டு அதைக் கடைப்பிடித்து நற்கதியடைந்தான்,” என்பதாகும். இக்கதை கதா கோசம் என்னும் நூலில் உள்ளது.
- அஞ்சு மின்அதி லோபம்இல் லோர்களும்
செஞ்சு டர்நெடு வேல்திரி யோதனன்
பஞ்ச வர்க்குமண் பாகம் கொடாமல்
துஞ்சி னான்கிள தன்னொடும் என்பவே.
[அஞ்சுமின்=பயப்படுங்கள்; அதிலோபம் இல்லோர்=ஈகைக் குணம் இல்லாதவர்; துஞ்சினான்=இறந்தான்]
செம்மையாகிய, ஒளியின் கிரணங்களைக் கொண்ட, நீண்ட வேலாயுதத்தையுடைய துரியோதனன் எனும் அரசன் தன்னுடைய தாயாதிகளாகிய பாண்டவர் ஐவருக்கும், பூமியில் பாகத்தைக் கொடுக்காமல் அவர்களோடு பகை கொண்டு போர்செய்து, உறவினருடன் இறந்தான் என்று அறிவுடையோர் கூறுவர், ஆகவே தம்மிடத்தில் பொருள் இல்லாதவர்களும் கூட மிகுந்த ஈயாமைக் குணத்திற்கு பயப்படுங்கள். அதாவது கையில் பொருள் இல்லாவிட்டாலும் இயன்றவளவு தருமம் செய்து அழியாத நற்பயனை யடை யுங்கள்.
- குட்ட நீர்த்துறைப் போம்வழிக் கூனியை
ஒட்ட லன்புனல் உய்த்தஅக் காகுத்தன்
திட்டை வேண்டிய தேர்ச்சியில் வாணிகன்
பட்டது எய்துவ பற்றுளத் தார்களே
[ஒட்டலன்=பற்று இல்லாதவன்; திட்டை=மேட்டு நிலம்]
ஆசை பொருந்திய மனத்தைக் கொண்ட காகுத்தன் என்பவன் குளத்தின் ஓரமாகச் செல்கின்றபோது வழியில் கூனலாகிய ஒரு பெண்ணைக் கண்டான். அவளுடைய நகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்னும் பேராசையினாலே அவள்மீது பற்றுதல் இல்லாதவனாய் அக்குளத்தின் நீரிலே, அவளைத் தள்ளி விட்டான். பின்னர் தான் தப்பித்துக்கொள்ள எண்ணி ஒரு மேடான நிலத்தை விரும்பித்தேடி அந்நிலம் அகப்படாமையால் உயிரைவிட்டவனுமாகிய புத்தித் தெளிவில்லாத செட்டியாகிய காகுத்தன் என்பவன் அடைந்த நிலையை பொருள் மீது பற்று கொண்டவர்கள் அடைவார்கள்.
காகுத்தன் கதை: ”காகுத்தன் என்பவன் ஒரு பெண்ணுடன் செல்லும் போது அவளுடைய ஆபரணங்களைக் கவர்ந்துகொள்ள வேண்டும் என்னும் பேராசையால், அவளை நடுக்குளத்தில் தள்ளி அந்த அணிகளைக் கைக்கொள்ளப் போனான். அப்போது அவள் மரணபயத்தால் அவனை விடாது பற்றி இறுகத் தழுவிக்கொண்டாள்; அவன் குளத்தின் நீரிலிருந்தும், அவள் கையினின்றும் நீங்கமுடியாமையால் அவளுடனேயே உயிரிழந்தான்,” என்பதாகும்.
- நட்ட வன்வந்து நல்லறம் காட்டவும்
ஒட்ட லன்அதி லோபம் உடைப் பெரும்
செட்டி எய்தியது எய்துவ தேபொருள்
கிட்டிய அம்மனத் தளர்கிளர்ந் தென்பவே.
பொருள் மீது அதிகமான பற்றுதல் அடைந்த உள்ளத்தை உடையவர்கள் அடையும் கதி யாதென்றால் தன்னுடைய நண்பன் தன்னிடத்தே வந்து நல்ல நீதியைச் சொல்லிக்காட்டியும் அந்நீதிப்படி நடக்கச் சம்மதிக்காதவனான ஈகைக்குணம் இல்லாத பெரிய வணிகன் அடைந்த துன்பத்தைப் போன்றதே ஆகும் என்று அறிவுடையார் கூறுவர் .
ஸ்ரீ புராணக் கதை: தனதேவன் என்பவன் தன்னுடைன் நண்பனாகிய சிவதேவனிடம் ஓரு சமயத்தில் தனக்குச் சொந்தமான செல்வத்தைக் கொடுத்துக் காப்பாற்றி வைக்கும்படி கூறிச்சென்று மீண்டு வந்து கேட்டபோது அவன் அது தன் னிடம் இல்லை யென்று கூறிக் கேடடைந்தான்.
25 நாட்டு யாத்திரை செய்பவன் நன்மணி
காட்டி வைத்தவன் போய்வந்து கண்ணுறச்
சாட்டி யம் சொன்ன சத்திய கோடனும்
ஈட்டிய வைத்திழந் தான்பொரு ளென்பவே.
[நாட்டு யாத்திரை= வெளிநாட்டுப் பயணம்; நன்மணி=நல்ல இரத்தினம்; கண்ணுற=பார்த்துக் கேட்க; சாட்டியம்=பொய்சாட்சி]
பத்ரமித்ரன் என்னும் செட்டியானவன், சத்திய கோஷனன் என்னும் மந்திரியினிடத்தில், நல்ல இரத்தினச் செப்பைக் குறிப்பிட்டு வைத்தவனாகித் தன்னூர்க்குப்போய்த் திரும்பிவந்தான். மந்திரியைப் பார்த்துத் தான் கொடுத்த இரத்தினங்களைக் கொடுக்கும்படி கேட்டான். இரத்தினங்களை அபகரிக்க வேண்டுமென்னும் எண்ணத்தினால் அந்தச் செப்பைத் தன்னிடம் கொடுக்கவில்லை என்று பொய்சாட்சி சொல்லி சத்திகோஷனென்னும் வேதியனும் அதனை அபகரித்தான். அந்த செல்வத்தை, மோசத்தால் தன்னிடத்தே சேர்த்து வைத்தான். பின்னர் அதைக்கைவிட்டு அப்பாவத்தினாலே சர்ப்பமாய் பிறந்தான் என்று சொல்லுவர் அறிவுடையோர்.
சத்திய கோஷன் கதையாவது:–”இந்த உலகத்தில் ஹிம்ஹபுரத்தில், ஹிம்ஹஸேனனென்னும் அரசன் செங்கோலோச்சி வந்தான்; இவனிடம் சத்தியகோஷன் என்னும் பட்டப்பெயர் பூண்ட ஸ்ரீபூதியென்னும் மந்திரி ஒருவன் இருந்தான்; பத்மஷண்டபுரத்து சுதத்த சிரஷ்டிக்கும் சுமித்திரா தேவிக்கும் புத்திரனான பத்ரமித்திரன் என்பவன் கப்பல் யாத்திரை செய்து அநேகம் இரத்தினங்ககளைத் தேடிக்கொண்டு வந்தான். ஹிம்ஹபுரத்திலே வசிக்க விரும்பி, சத்தியகோஷனிடம் சென்று தன்னுடைய இரத்தினங்களடங்கிய செப்பைக் கொடுத்து, “நான் இதை மீண்டுவந்து வாங்கிக் கொள்கிறேன்,” என்று சொல்லித் தன்னூருக்குச் சென்றான். சில நாள்கள் கழித்துத் திரும்பி வந்தான்.
அந்த இரத்தினச் செப்பைத் தரும்படி கேட்டான். சத்தியகோஷன், ”நான் உன்னை அறியேன்: இரத்தினச் செப்பை நீ என்னிடம் கொடுக்க வில்லை,” என்றான். பத்ரமித்திரன் மனம் நொந்து, சத்தியகோஷனின் மோசச் செய்கையை நகரெங்கும் சொல்லிக்கொண்டு திரிந்தான்; அப்போது சத்தியகோஷன், “இந்த பத்ரமித்திரன் தன் பொருளைத் திருடர்கள் அபகரிக்க இழந்து விட்டான். அதனால் பைத்தியங் கொண்டு இவ்வாறு புலம்புகின்றனன்,” என்று சொல்லித் தன் மோசச்செய்கை வெளிப்படாமல் அதனை மறைத்தான்.
அரசன் மனைவியாகிய இராமதத்தை என்பவள், பத்ரமித்திரன் எப்பொழுதும் ஒரே தன்மையாகப் புலம்புவதை உணர்ந்து, “இவனுக்குப் பைத்தியமானால் முன்னுக்குப்பின் விரோதமாகப் பேசுவான்; அங்ஙனமின்றி இவன் எப்பொழுதும் ஒரே தன்மையாகப் பேசுவதனாலே பித்தனல்லன்; சத்தியகோஷன் . இவனுடைய பொருளை அபகரித்திருப்பான் ; இதனை நான் வெளிப்படுத்துகிறேன், என்று அரசனனிடம் தெரிவித்தாள். சத்தியகோஷனைச் சூதாட்டத்திற்கழைத்து, அதில் அவன் பூணூலையும முத்திரை மோதிரத்தையும் பந்தயம் வைக்கச் செய்து அவற்றை ஜெயித்து, நிபுணமதி யென்னும் தாசிகையில் கொடுத்து, “இவற்றை நீ சத்தியகோஷனுடைய பொக்கிஷத் தலைவனிடம் காட்டி, அந்த சத்தியகோஷன், பத்ரமித்திரன் தன்னிடம் வைத்துச்சென்ற இரத்தினச்செப்பை வாங்கி வரச் சொன்னான் என்று சொன்னால் அவன் கொடுத்து விடுவான்; அதைப் பெற்றுக் கொண்டுவா, என்று கூறி அவளை அனுப்ப, அவள் அவ்வாறே இரகசியமாக அதனை வாங்கிக் கொண்டு வந்துவிட்டாள். இராமதத்தை அதை மன்னனிடம் சேர்த்தனள். அம்மன்னன், பத்ரமித்திரனுடைய உண்மையை நன்றாகச் சோதிப்பதற்காக, அந்த இரத்தினச் செப்பில் தன்னுடைய சில இரத்தினங்களையும் கலந்து அவனிடம் கொடுத்தான்.
அவன், அரசனுடைய இரத்தினங்கள் யெல்லாம் நீக்கிவிட்டுத் தன்னுடையவை மாத்திரம் எடுத்துக் கொண்டான். உடனே அரசன் மகிழ்ச்சி அடைந்தான். பத்ரமித்திரனுக்கு சத்தியகோஷன் எனும் பட்டப் பெயரைச் சூட்டினான். முக்கியமான பதவி அளித்தான். தர்மிளன் என்னும் வேதியனை மந்திரியாக்கிக்கொண்டு, பழைய சத்தியகோஷனென்னும் ஸ்ரீபூதிக்குத் தக்க தண்டனை விதித்தான். பின் சத்தியகோஷன் அவற்றை அனுபவித்து மரணமாகி, அகந்தியனன் என்னும் சர்ப்பமாகப் பிறந்தான் என்பதாம். இவ்வரலாறு ஸ்ரீபுராணத்து [ப.258] விமலதீர்த்தகர தீர்த்தப்பிரஸித்தராகிய மேருமந்தர கணதரர்கள் சரிதத்திலும், மேருமந்தரபுராணம் பத்ரமித்திரன் அறங்கேள்விச் சருக்கத்திலும் கூறப்பட்டுள்ளது.
