‘சார் போஸ்ட்’
‘சார் போஸ்ட், எத்தனை நேரம் இந்த வீட்டு கேட்கிட்டேயே நிற்கிறது, யாராவது வந்து போஸ்ட் வாங்கிட்டு போகக் கூடாதா!’ என்று போஸ்ட்மேன் குரலைக் கேட்டு கீழே இறங்கி வந்தாள் சுனிதா மெதுவாக.
‘என்ன மேடம் கண்ணு தெரியலையா, நான் எத்தனை நேரம் இங்கே உங்க கேட்கிட்ட வெயிட் பண்றது?’
தட்டித் தடவிக் கொண்டு வந்து கொண்டிருந்த சுனிதாவை கேட்ட போஸ்ட்மேன் நிமிர்ந்து கண்ணு தெரியாமல் கையை நீட்டிக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்து
‘சாரி மேடம் நான் கவனிக்கவில்லை’
‘எனக்குதான் கண் இல்லை, நான்தான் கவனிக்கவில்லை, நீங்கள் ஏன் சாரி சொல்கிறீர்கள்?’
பிறகு வந்திருந்த லெட்டரை வாங்கிய சுனிதா தடவி தடவிப் பார்த்து,
‘என்னுடைய வேலைக்காரி இன்று வரவில்லை, என் கணவரும் ஊரில் இல்லை, இந்தக் கடிதத்தை தாங்கள் எனக்காகப் படிக்க முடியுமா, நேரம் இருக்குமா உங்களுக்கு?’ என்று மெதுவாக கேட்டாள்.
‘சரி உங்களுக்காகப் படிக்கிறேன் கொடுங்கள்’
‘லெட்டர் யாரிடம் இருந்து வந்திருக்கிறது?’
‘பிரவீன் என்பவரிடமிருந்து’
‘ஓ, என் கணவரிடமிருந்து தான் வந்திருக்கிறது, எனக்காக நீங்கள் படிக்க முடியுமா?’
‘மேடம் உங்கள் கணவரின் கடிதத்தை நான் படிக்கலாமா?’
‘தாராளமாக படிக்கலாம், இதில் எனக்கு என்ன எழுதி இருக்கிறது என்று தெரிய வேண்டும்’
‘சுனிதா, மன்னித்துக் கொள், எனக்கு லீவு கிடைக்கவில்லை, என்னால் இப்பொழுது அங்கு வந்து உன்னை பார்க்க முடியாது, ஆனால் நீ எப்பொழுதும் என் கூடவே இருக்கிறாய், உன்னுடைய போட்டோவை தலையணை அடியில் வைத்துக் கொண்டுதான் தூங்குகிறேன், உனக்கே தெரியும் இப்பொழுது நிலைமை இங்கு எப்படி இருக்கிறது என்று, இங்கு நான் எல்லையில் இருக்கிறேன், யாருக்கும் லீவு கிடையாது என்று சொல்லிவிட்டார்கள், நான் கடிதத்தை எழுதி என் நண்பனிடம் கொடுத்துள்ளேன், எனக்கு ஏதாவது ஆகிவிட்டது என்றால் இந்த கடிதத்தை உனக்கு அனுப்பும்படி கூறியுள்ளேன், நான் வந்தால் சரி, ஆனால் கடிதம் வந்தால் நான் இவ்வுலகில் இருப்பேனா என்று தெரியவில்லை, நீ எதற்கும் கலங்காதே, வீரனின் மனைவியாக இரு’
சுனிதா மயங்கி கீழே விழுந்து விட்டாள்.
‘சாரி மேடம், கஷ்டமான, துக்கமான இப்படி ஒரு விஷயம் என்னால் உங்களுக்கு சொல்லப்பட்டது’ போஸ்ட்மேன் மெதுவாக தூக்கி உட்கார வைத்தார்.
‘எதற்கு வருத்தப்படுகிறீர்கள், நான் கலங்கக்கூடாது, என் கணவர் கண்டிப்பாக வருவார், சீருடையில் அல்லது மூவர்ண கொடி சுற்றி! என் கணவர் கண்டிப்பாக வருவார்’
