பகவத் கீதைகர்ம யோகம் காண்பிக்கும் ஐந்து யஞ்யங்களை ஏழாம் அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த எட்டாம் அத்தியாயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கர்ம யோகத்தை எந்தெந்த கோணங்களில் பார்த்தார் என்பதைப் பார்க்கலாம். ஸ்ரீகிருஷ்ணர் நான்கு கோணங்களிலிருந்து கர்மயோகத்தைப் பார்க்கிறார்.

முதலாவது, இறைவனின் ஆக்ஞையாக; இரண்டாவது, இறைவனின் பூஜனையாக; மூன்றாவது சித்த சுத்திக்காக, அதாவது, உள்ளத்தில் இருக்கும் மாசு எண்ணங்களை நீக்க வரும் வழியாக; நான்காவதாக, இந்த உலகில் தார்மீக வழியாக கர்ம யோகம் நின்று காக்கும். என்னோடு எனக்கிருக்கும் நல்லிணக்கம் மனதில் அமைதியைத் தரும்; என் குடும்பம் மற்றும் சமூகம், என் நாடு மற்றும் என் சுற்றுப்புரச்சூழலுடன் எனக்கு இருக்கும் நல்லிணக்கம், தார்மீக வழி நிலைபெற வழிகாட்டும்.

இவற்றில் எந்த கோணத்தை ஏற்றுக்கொண்டாலும் சரியே. கர்ம யோகத்தை யாராலும் தவிர்த்து விட முடியாது. ஒருவனுக்கு விதிக்கப்பட்ட கடமைகளையும், பொறுப்புக்களையும் இறைவனின் ஆக்ஞையாக, அவனது பூஜனையாகச் செய்பவன், தர்ம வழிப்படி நிற்பவனாக மட்டுமில்லாமல், பந்தங்கள் அற்றவனாகவும், ஜனக மகாராஜாவைப் போல, மாறுகிறான். பந்தங்களோடு வாழ்பவன் எந்தக் கட்டிடத்தையும் தங்கும் வீடாகப் பார்ப்பான்; பந்தமற்று இருப்பவனுக்கோ, எந்தக் கட்டிடமும் ஆசிரமாக மாறும்.

இந்தக்கட்டத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிடம், தார்மீக வழியில், உள்ளத்தைத் தூய்மைப் படுத்தி, இல்லறத்தானாக ஞானத்தையும் குருவிடம் அடைந்து இல்லறஞானியாக வாழ்வதே உத்தமம் என்று உணர்த்துகிறார். அர்ஜுனன் யுத்த களத்தில் இருந்து ஓடிப் போய் ஞானத்தை அடைய சன்யாச வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு விடலாம் என்று நினைத்த படியினால், ஸ்ரீகிருஷ்ணர், உலகில் வாழும் ஞானி கூட கர்மங்களிலிருந்து முற்றிலும் விடுபட முடியாது என்பதை உணர்த்துகிறார்.

ஒருவர் பெறும் ஞானம் மனம் சார்ந்தது; கண்ணுக்குத் தெரியாதது. எந்தவிதமான உடல் திறன் சோதனையும் இதனை அளக்க முடியாது. அதனால், அர்ஜுனன் ஒருவேளை, தான் ஞானம் பெற்று விட்டேன், அதனால் மனத் தூய்மைக்காகவோ அல்லது ஞானத்திற்காகவோ தான் செயல்பட வேண்டாம் என்று நினைத்து யுத்தத்திலிருந்து விடுபட்டுப் போக எண்ணினால், அது சரியாகாது என்பதை உணர்த்த, ஞானம் பெற்ற ஒருவரும் கடமையிலிருந்து விடுபட முடியாது என்பதை உணர்த்துகிறார்.

இந்த நேரத்தில் ஸ்ரீகிருஷணர் நம் சனாதன தர்ம மரபு உணர்த்தும் ஒரு உண்மையை இங்கு கூறுகிறார். தார்மீக வாழ்க்கையை கர்ம யோகத்தின் துணை கொண்டு வாழ, நமது தர்ம சாத்திரங்கள் ஞான மார்க்கத்திற்கு மூன்று விதமான வழிமுறைகளைக் காண்பிக்கின்றன. இந்த ஞானம் இல்லாமல் ஒருவன் இந்த உலகில் வாழ்ந்து விட முடியாதா என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக வாழலாம். ஆனால், விருப்பு வெறுப்புக்களுக்கும் உட்பட்டு, பந்தங்களும், எதிர்பார்ப்புக்களும் நிறைந்த வாழ்க்கையாக அது இருக்கும். பந்தம் வந்து விட்டாலே, மனத்தில் ஆசைகளும், ஏமாற்றங்களும் கோபதாபங்களும் கூடவே வரும். விருப்பு வெறுப்புக்களுடன் வாழும் வாழ்க்கை மன அமைதியையோ மனத்தில் ஆனந்தத்தையோ தராது. ஒரு சீர்மைப்பட்ட மனிதர் தன் மனம் போனபடி நடக்க மாட்டார். மாறாக எது சரியான தார்மீகமான வாழ்க்கையோ, அதையே தேர்ந்தெடுப்பார்.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் தோல்விகளையும் பிரச்னைகளையும் கண்டு சிலர், ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பதே மேல் என்று நினைக்கலாம். சும்மா இருந்தால், பிரச்னைகளும் தோல்விகளும் இல்லை; ஆனால் நம்முள்ளே எந்த விதமான ஆன்மீக வளர்ச்சியும் இருக்காது. ஆன்மீக வளர்ச்சி இல்லாத நிலையில், அப்பொழுதும் மனம் அழுக்காறு அவா சினம் போன்ற குணாதிசயங்களில் மாட்டிக் கொண்டு தனக்குத் தானே பிரச்னையாகி நிற்கும். அதனால் செயல்பாடு இல்லாமல் நாம் வாழ முடியாது. இதனால் வாழ்வதற்கு எது சரியான முறை என்பதை அறிந்து கொள்ளுதல் மிகவும் முக்கியம்.

இவ்வாறு சரியான தார்மீக முறையைத் தேர்ந்தெடுக்க நமது சாத்திரங்கள் கூறும் வழிமுறைகள் மூன்று. அவை:

  1. தர்ம அதர்ம விவேக ஞானத்தைப் பெற வேண்டுமாயின், வேதங்களை அறிந்து கொள்ளுவதும் புரிந்து கொள்ளுவதும் அவசியம். ஏனெனில், வேதங்களே, தர்மத்தின் முதன்மை மூலங்களாகும்.
  2. வேதங்களை அடிப்படையாகக் கொண்ட ஸ்ம்ரிதிகள் இரண்டாம் நிலை இலக்கியங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றை வேதம் அறிந்த பண்டிதர், சமூகத்தின் நலனை மனத்தில் கொண்டு, சாதாரண மனிதனுக்கும் புரியும் விதத்தில் எளிமைப் படுத்திக்கொடுக்கின்றனர்.
  3. ஸ்ரேஷ்ட ஆசாரம் என்று சொல்லப்படும் வாழ்க்கை முறை – சமூகத்தில் பொறுப்பு நிறைந்து தார்மீக முறைப்படி வாழ்வோரின் வாழ்க்கை சாதாரண மனிதனுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும்.

இம்மூன்றிலும் சாதாரண மனிதனுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் வழிமுறை எது என்று கேட்டால், அது ஸ்ரேஷ்ட ஆசாரம் என்றே சொல்லலாம். ஏனெனில், முதல் இரண்டும் நமக்கு எழுத்து வடிவம் மூலமே இருக்கின்றன; மேலும், கேட்கும்/ படிக்கும் மனிதனுக்கு ஏற்ப ஒரு மனிதன் அகவழிக்கண் காட்சிப் படுத்திக்கொள்ள முடியும். இதனால் இந்த வழிமுறையின் விளக்கம், மனிதனுக்கு மனிதன் மாறுபடும். அனால், ஒரு மனிதர் முன்மாதிரியாக நமக்கு வாழ்ந்து காண்பித்தால், அதைவிட இரு பெரிய கற்கும் முறை வேறு எங்கு இருக்க முடியும்?

ஒரு குடும்ப அமைப்பில் இதற்கு மிகப் பெரிய உதாரணமாக தாயும் தந்தையும், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்களும் இருக்கின்றனர். ஒரு குழந்தையின் தொடக்க காலத்தில் அதன் தாயம், தந்தையுமே மிகச் சிறந்த ஆசானாக இருக்கின்றனர். இவர்களிடமிருந்து வாழ்க்கையின் முதல் பாடங்களைக் கற்ற பின்னரே, ஒரு குழந்தை குருவான ஆசானிடம் வரும்.

இந்தக் கட்டத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஒன்றைக் குறிப்பாக உணர்த்துகிறார். ஸ்ரேஷ்ட புருஷர் எனப்படும் சான்றோர் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் முன் மாதிரியாக இருப்பதால், அவர் ஏதேனும் தவறு செய்தால், அந்த சமூகமும், அந்தத் தவறைச் செய்யும். இதனால், அர்ஜூனர், நீ யுத்த களத்தை விட்டுப் போக நினைத்தால், நூற்றுக்கணக்கானோர் உன்னைப் பின்பற்றி தன கடமையிலிருந்து வழுவிப் போகப் பார்ப்பர் என்பதை அறிவுறுத்துகிறார்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதார புருஷனாக இருந்தும் அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்து தனது செயல்பாட்டைக் காண்பிக்கிறார். இது எதனால்? தன்னை வணங்குபவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதனால். ஒரு சமூகத்தில் இந்த மாதிரி முன்மாதிரி இல்லாமல் இருந்தால் அங்கு தார்மீக நெறி இருக்காது; மற்றும் சமூகநல்லிணக்கம் நலிந்து போகும்.

மேலும் ஸ்ரீகிருஷ்ணர் நான் என் கடமையை சரியாகச் செய்யவில்லை என்றால் என்னைப் பார்த்து மற்றவர்களும் தத்தம் கடமையைச் செய்யாமல் விட்டுவிடலாம். இது சமூகத்தில் ஒழுங்கீனத்திற்கு வழி வகுக்கும். ஒரு மனிதனின் கட்டாய கர்மாபாக நாம் பார்த்த எந்த விஷயமுமே தார்மீக முறைப்படி இருக்காது; குழப்பமும், இந்த சிருஷ்டியையே அழித்து விடக் கூடிய வன்மங்கள் நிறைந்த சக்திகளும் பெருகும். இதனால் ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகத்தை அனைவருமே பின்பற்றினால் அன்றி இப்பூமியில் அமைதியும், நல்லிணக்கமும் இருக்காது என்று உரைக்கிறார். இங்கே யோகம் என்று கிருஷ்ணர் குறிப்பிடுவது எந்த நிலையிலும் சமநிலையோடு இருத்தல் என்பதையே. மனத்தளவில் வளர்பவன் வெளிஉலக பொருள்முதல்வாத வளர்ச்சி பெறாவிட்டாலும், தன்சமநிலையை மறக்க மாட்டான்.

சம்பத்தோ ச விபத்தோ ச மகாத்ம ஏக ரூபகஹ

உதயே சவிதா ரக்தஹ ரக்த ச அஸ்தமையே ததஹ.

சான்றோர் செல்வம் நிறைந்த இன்ப காலத்திலும் துன்பம் நிறைந்த துயர்க் காலத்திலும், அதிகாலையிலும் மாலையிலும் தோன்றும் ரத்த வர்ண சூரியனைப் போல மாறாது, கலங்காது இருப்பராம்.

கர்மயோகம் என்பது பொருளாதார வளர்ச்சியிலிருந்து ஆன்மீக வளர்ச்சிக்கு, உள்ளத்தின் தூய்மையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதே என்பதாகும். கர்மயோகம் செயலுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. அந்தச் செயலைச் செய்யும்பொது இருக்கும் சரியான அணுகுமுறையை போற்றுகிறது. சரியான அணுகுமுறை, தர்ம வாழ்விற்கு வழிவகுக்கும். தர்மம் நம் ஆன்மீக வளர்ச்சிக்கு வழிகாட்டும்.