அவருக்கு அறுபத்தைந்து வயதிருக்கலாம் – இருபது வருடங்களுக்கு மேலாக சர்க்கரை வியாதியும் இரத்தக் கொதிப்பும் அவருடன் பயணிக்கின்றன! கொஞ்சம் நெட்டில் மேய்வது – முக்கியமாக ஹெல்த் சம்பந்தமான செய்திகள் – பிடித்தமான பொழுதுபோக்கு.
இரண்டு நாட்களாக மார்வலி – ’கேஸ்’ பிராப்ளம் என்று தானே, ரோஸ் கலர் மருந்து, ரானிடிடின் (நெட் உபயம்!) எடுத்துக்கொண்டும் வலி கேட்கவில்லை. வலி அதிகமாகவே, ’ஹார்ட் அட்டாக்’ எனப் பயந்து, எல்லா டெஸ்டுகளும் எடுத்து, மருத்துவமனை யில் இரண்டு நாட்கள் தீவிரமாகக் கண்காணிக்கப் பட்டார்! ஐந்தாம் நாள் திட்டுத் திட்டாக சிவந்த நிறத்துடன் சின்னச் சின்ன நீர்க் கொப்புளங்கள் இடது பக்க மார்புப் பகுதியில் தோன்றின – ஹெர்பிஸ் சாஸ்டர் – அக்கி – எட்டிப்பார்த்தது.
‘அக்கி’ என்பது பெரும்பாலும் ஐம்பது வயதிற்கு மேற்பட்டோருக்கு வருகின்ற ‘வைரஸ்’ தொற்று – சின்ன வயதில், சம்மர் விடுமுறையில் அநேகமாக நம் எல்லோருக்கும் வரக்கூடிய ‘சின்ன அம்மை’ (ஆத்தா மேலெ எறங்கியிருக்கா என்று வேப்பிலைப் படுக்கையும், பத்தியமும், பால்குடமும், நேர்த்திக்கடனும் இன்னமும் வழக்கத்தில் தமிழ்ப் பாரம்பரியம் பேசியபடி உள்ளன!), பெரியவர்களுக்கு உடம்பின் ஒரு பாதியில் (இடது அல்லது வலது), ஒரு பகுதியில் மட்டும் (ஒரு நரம்பு ஓடும் பாதையில் மட்டும்) வருவதுதான் அக்கி – வேரிசெல்லா சாஸ்டர் வைரஸ் (VARICELLAA ZOSTER VIRUS) தொற்று.
ஜுரம், குளிர், தலைவலி, சோர்வு, தசை பிடிப்பு எல்லாம் சிலருக்கு வரலாம். நரம்பின் பாதையில், தோலின் மீது சிறு நீர்க் கொப்புளங்களாக, அங்கங்கே வரும் – எரிச்சலுடன் வலியும் இருக்கும் (சில நேரங்களில் அரிப்புடன்). உடம்பின் ஒரு பாதியில் மட்டும் இருப்பது முக்கியம். குறிப்பிட்ட பகுதியில் மட்டும் (LOCALISED) வருகின்ற சின்ன அம்மை எனலாம்.
பேச்சு வழக்கில், குழந்தைகளுக்கு முகத்தில் வருகின்ற – மூக்கு, உதடுகளின் ஓரங்கள், கன்னம், கழுத்து, கை, கால் என வரலாம் – பாக்டீரியல் தொற்றினை (IMPETIGO) ‘அக்கி’ எனத் தவறாக நினைப்பவர்கள் உண்டு. இவை, சிவப்பும்,மஞ்சளும் கலந்த நிறத்தில், பொருக்குடன், இரண்டு பக்கமும் இருக்கும் – இதற்கான சிகிச்சை வேறு. (அம்மை அல்லது அக்கி என்றெண்ணி, வேப்பிலையும், மஞ்சளும் அரைத்துப் பூசி, உடம்பு பூராவும் புண்ணாகி விடும் – ஆத்தா வீரியமாக வந்துவிட்டதாக நினைத்து பயப்படுவோரும் உண்டு!)
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நிலையில், வயதானவர்களுக்கு அக்கி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அறுபது வயதுக்குமேல், எச்.ஐ.வி., புற்றுநோயும் அதற்கான கீமோதெராபி, ரேடியோதெராபி, ஸ்டீராய்ட் தெராபி, நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்கு அக்கி வரலாம்.
தோல் கொப்புளங்கள், இரண்டு அல்லது மூன்று வாரங்களில் ஆறிவிடும். சிலருக்கு, மாறாத வடுவாகவும் நின்று விடக்கூடும்.
ஓய்வு மிகவும் அவசியம். குளிர் ஒத்தடம் உதவும். காலமின் லோஷன் கொப்புளங்கள் காய்வதற்கு உதவும். மருத்துவரின் ஆலோசனையுடன், ஆண்டி வைரஸ் மருந்துகளும், வலி மற்றும் அரிப்புக்கு மருந்துகளும் எடுத்துக் கொள்ளலாம்.
அக்கி என்றவுடன், சட்டி, பானைகள் செய்யும் குயவனாரிடம் சென்று ‘எழுதிக் கொண்டு’ வருவது வழக்கம் – சுட்ட பானைச் சில்லுகளைப் பொடித்து, குழைத்துப் பூசி விடுவார்கள் – காலமின் லோஷன் போலவே ’காயவைக்கும்’ குணம் இதற்கு உண்டென்றாலும், அசுத்தமான நிலைகளில், பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்புகள் அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
முகத்தில் கண்ணைச் சுற்றி வருகின்ற அக்கி (HERPES ZOSTER OPHTHALMICUS) சிறிது கவலைக்குறியது. கண் கருவிழியில் வெள்ளைப் புள்ளிகளாய் காயங்கள் ஏற்படலாம். சரியான மருத்துவப் பரிசோதனையும், சிகிச்சையும் அவசியம்.
ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி – வலது பக்கக் கண் மற்றும் நெற்றி எங்கும் தாங்கமுடியாத வலியுடன் – ”பளிச்” சென கத்தியால் வெட்டுவதைப் போன்ற வலியுடன் – வந்தார். அருகில் பார்த்ததில், ஆறிய அம்மை வடுக்களும், சிவந்த கண்ணும் தெரிந்தன. கண் மருத்துவர் பார்த்து, கண்ணுக்கு சொட்டு மருந்துகள் கொடுந்திருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன் அக்கி வந்ததையும், சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டதையும் அவர் காட்டிய மருந்துச் சீட்டு சொல்லியது! இது அக்கியின் பின் விளைவான நரம்பு வலி (POST HERPETIC NEURALGIA) !
வயதானவர்களுக்கும், சர்க்கரை நோயுள்ளவர்களுக்கும், அக்கி மறைந்த பிறகும் கூட – சில சமயங்களில் ஒரு வருடம் வரையில் – நரம்பு ‘வலி’ இருந்து கொண்டே இருக்கும். வைரஸினால் நரம்புகள் பாதிக்கப் படுவதால், தோலில் கொப்புளங்கள் மறைந்தாலும், வலி மட்டும் தொடரும். அக்கி வந்த இடங்கள் சிலருக்குக் கூசும் – சிலருக்கு, மஸ்லின் போன்ற மெல்லிய துணிகள் பட்டால் கூட எரிச்சலோ, கூச்சமோ ஏற்படும். மிகவும் தாங்கமுடியாத நரம்பு வலி சிலரை மிகவும் பாதிக்கும். அதற்கான பிரத்தியேக மருந்துகளும் எடுத்துக்கொள்வது அவசியம். குடைமிளகாயில் செய்யப்படும் கிரீம்கள் இங்கு உதவியாக இருக்கும் (CAPSAISIN). (பாட்டி வைத்தியமாக பச்சைக் குடைமிளகாயை அரைத்துப் போடுவதைத் தவிர்க்கவும் – விளைவுகள் விபரீதமாக இருக்கும்!).
அக்கி பிறருக்குத் தொற்றும் வாய்ப்புகள் உள்ளதால், குழந்தைகள், மற்றும் வயதானவர்கள் சிறிது விலகி இருப்பது நலம்.
தோலில் கொப்புளங்கள் இல்லாமல் வலி மட்டும் முதலில் வருவதால் டயக்னோசிஸ் குழப்பங்கள் (முதல் கேஸ்) – அக்கியின் பின் விளைவாக வரும் நரம்பு வலி (இரண்டாவது கேஸ்) – இவற்றால் அக்கி முக்கியத்துவம் பெறுகிறது.