
அந்நாளில்……
“நம் நிறுவனத்தின் ரகசியத்தை ஊடகத்துக்கு அவர் சொல்வதாக இருக்கிறார். வேறு வழியில்லை. அவரை கொலை செய்து தான் ஆக வேண்டும்” என்றான் கருப்பையன்.
“இவர் ஊடகத்தில் வெளியிட்டால் நம் நிறுவனத்திற்கு பெரிய நஷ்டம் தான். நம்முடைய முயற்சி, நம் உழைப்பு அனைத்தும் வீணாகிவிடும்.”
“ஆனால் அவரைக் கொல்வது அவ்வளவு எளிதல்ல!” என்றான் சுப்பராயன். “
“சரிதான்! சூதனமாகத்தான் அவரைப் போட வேண்டும். அதற்கு கண்டிப்பாக வழியுண்டு!” என்றான் நாகமாணிக்கம். கருப்பையன் அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தான்.
இம்மூவரும் நிறுவன அதிகாரிகளின் கைக்கூலிகள். கொலை செய்வதற்கு என்றே உள்ளவர்கள்.
துரைசாமி அந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிபவர். பார்க்கப் போனால் அவர் தான் அந்த ஆராய்ச்சிக்கு மிக முக்கிய நபர். அதிகாரிகளிடம் நேரே சென்று தான் கண்டுபிடித்ததைக் கூறி, தான் அந்த விஷயத்தை ஊடகங்களில் வெளியிடப்போவதாகக் கூறினார். அதைத் தவிர்க்க வேண்டுமானால் தனக்கு ஒரு பெரிய தொகையை நிறுவனம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றார்.
இந்த ப்ளாக்மெயிலை பொறுக்கமுடியாத அந்நிறுவன அதிகாரிகள் அவரைக் கொலை செய்ய ஆட்களை நியமித்தார்கள்.
அதிகாரிகளின் கைக்கூலிகளான அந்த மூவரும் திட்டம் தீட்ட ஆரம்பித்தனர். முதல் வேலையாக துரைசாமியின் தினசரி அலுவல்களை உற்று கவனிக்க ஆரம்பித்தனர். தன் இல்லத்திலிருந்து எப்போது வெளியே வருவார் எனறும், எந்த நேரம் தக்க நேரம் என்றும் விழிப்பாக கவனித்தனர். அவருடைய அன்றாட நடைமுறைகளில் எந்த குறிப்பிட்ட நேரமும் கொலை செய்யும் தருணமாக அமையவில்லை, ஒரேயொரு சமயம் தவிர. அவர் அதிகாலையில் உடற்பயிற்சி செய்யும் முகமாக தினசரி ஜாகிங் செய்வார். காலை ரன்னிங் ஷூ அணிந்து வார்ம் அப் செய்து விட்டு, தெரு முக்கு வரை ஓடுவார். அந்த நேரத்தில் அந்த இடத்தில் அவரை பல நாய்கள் வாலாட்டிக் கொண்டே சுற்றிக் கொள்ளும். அதற்காக தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்த பிஸ்கேட்களை போடுவார். நாய்கள் சந்தோஷமாக சாப்பிடும். அப்படியே தொடர்ந்து பக்கத்து தெருவிற்கு ஜாகிங் செய்வார், ஒடிக் கொண்டே போவார். அந்த தெரு முக்கில் ஒரு சின்ன வழி இருள் சூழ்ந்து இருக்கும். தெரு விளக்கு இல்லையேல் மிக இருண்டு காணப்படும் அவ்வழி. பிறகு சுற்றி வந்து வீட்டிற்கு செல்வார். அவரை கவனிக்கும்போது அப்படித்தான் ஒரே பாணியில் தினசரி அவர் ஜாகிங் செல்வது தெரிந்தது.
“நாம் அவரை அந்த இருண்ட இடத்தில் முடித்தால்தான் சரியாக இருக்கும்!” என்றான் சுப்புரயன்.
“ஆம்!” என்றனர், மற்ற இருவரும்.
“நாம் சம்பவத்திற்கான நாளைக் குறித்து அந்தப் பாதையில் ஊடுருவ வேண்டும்!” என்றான் சுப்புராயன்.
“சரி! நாம் வரும் மூன்றாம் தேதி இச்சம்பவத்தை செய்யலாம்!” என்றான் கருப்பையன்.
“கருப்பையா! நீ அவர் வீட்டில் நில். அவர் வெளியே வந்தவுடன் எங்கள் இருவருக்கும் தெரிவி!” என்றான் நாகமாணிக்கம்.
“நாகமாணிக்கம் தெருமுக்கில் இருப்பான். நீ பைக்கில் வந்து அவனை கூட்டிக்கோ! நான் அந்த இருள் பகுதியில் ஒளிந்திருக்கிறேன்!” என்றான் சுப்பராயன்.
எல்லோரும் ஒப்புக் கொண்டு செல்கிறார்கள். ஆனால், சுப்பராயனுக்கு ஒரு மனக்குழப்பம் ஏற்படுகிறது. அவர்கள் தங்கும் இடத்திற்கு சென்று இரவு உணவு உண்டு விட்டார்கள். ஆனால் சுப்பராயன் மட்டும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். அதனை மற்ற இருவரும் பார்த்து விட்டார்கள்.
“என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள்.
“ஒன்றும் இல்லை. இன்று நாம் திட்டம் தீட்டிய நொடியிலிருந்து ஏதோ ஓர் குழப்பம்!” என்றான் சுப்பராயன்.
“நாளை நாம் நடத்தப்போகும் சம்பவம் ஏற்கெனவே என் மூளையில் பதிவு ஆனது போல இருக்கிறது. நாம் திட்டமிட்ட அந்தக் கொலையும் ஏற்கெனவே நாம் செய்தது போல தோன்றுகிறது! ஏதோ ஒன்று மனதை ஆட்டிப் படைக்கிறது!” என்றான் சுப்பராயன்.
மற்ற இருவரும் அவனை மனதை குழப்பிக் கொள்ளாமல் தூங்கும்படி சொன்னதோடு மட்டுமல்லாமல்,
“நாளை நீ சரியென்று சொன்னால் செய்யலாம். இல்லாவிட்டால் நம் திட்டத்தை மாற்றிக் கொள்ளலாம்!” என்றும் சொன்னார்கள்.
அதை மறுத்து சுப்பராயன், “இல்லையில்லை! எதையும் மாற்ற வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்று அவர்களுக்கு உறுதியளித்து விட்டு உறங்கச் சென்றான்.
பாதி இரவில் சுப்பராயனுக்கு தூக்கம் கலைந்தது. அவனை ஏதேதோ எண்ணங்கள் தொந்திரவு செய்ய எழுந்து உட்கார்ந்து கொண்டான்.
மறு நாள் பொழுதும் விடிந்தது. அன்று தான் சம்பவ நாள். கருப்பையன் தனது பைக்கில் அமர்ந்து துரைசாமியின் வீட்டு வாசலை கண்காணித்துக் கொண்டிருந்தான். அவர் கையை ஆட்டியபடி ஏதோ எக்ஸர்ஸைஸ் செய்து கொண்டே வெளியே வந்தார். வாசலுக்கு வந்ததும் ஜாகிங் தொடங்கினார். அப்படியே தெரு முக்கு வரை ஜாகிங் தொடர்ந்தது. நாகமாணிக்கத்தை சம்பவத்துக்குத் தேவையான பொருள் எடுத்துக் கொண்டு தயாராக இருக்கச் சொன்னான் கருப்பையன்.
இவன் வண்டியில் சென்று அவனை ஏற்றிக் கொண்டு போனான். சுப்பராயன் அந்த இருள் அடர்ந்த பாதையில் ஊடுருவியிருந்தான். துரைசாமி அந்த இருண்ட பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தார். நாகமாணிக்கமும் கருப்பையனும் வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த இடத்திற்கு நடந்து சென்றார்கள். கையில் பொருளை வைத்துக் கொண்டு தயாராக நின்றிருந்தான். அவர் அருகே வந்த பிறகு மூவரும் ஒரு வட்டமாக அவரை சுற்றிக் கொண்டார்கள்.
துரைசாமி திகைத்துப் போனார். “யார் நீங்கள்? என்னை விடுங்கள்!” என்றார்.
அவர் சொல்வதைக் கேட்காமல், “அவரை போடு சீக்கிரம்!” என்றான் கருப்பையன். நாகமாணிக்கம் முதலில் சென்று அவர் மார்பில் கத்தியை வைத்து ஒரு கோடு போட்டான்.
“ஆ!” என்று அவர் அலறிக் கொண்டு இருக்கும்போதே சுப்பராயன் கையில் இருந்த ஆயுதத்தால் அவரைத் தாக்கினான். அவரை தாக்கும்போது பின்னால் ஒரு ஆள் நடமாடும் சப்தம் கேட்டது. அதைப் பொருட்படுத்தாமல் கழுத்தில் ஒரு பெரிய வெட்டு. பிறகு துரைசாமி குருதி கொப்பளிக்க கீழே விழுந்து துடித்தார். கருப்பையனும் தன் பங்கிற்கு அவரை முதுகில் மீண்டும் வெட்டினான். சராமாரியாக வெட்டுகள் விழுந்தன அவர் கதையை முடிக்க. அவர் மாய்ந்து விழுந்தார்.
மறுபடியும் பின்னே சப்தம் கேட்டு சுப்பராயன் திரும்பி பார்க்க, ‘என்ன ஆச்சரியம்! அங்கே துரைசாமி நடப்பவைகளை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.’
மூவருக்கும் ஒன்றும் பிடிபடவில்லை. ‘இங்கே மாய்ந்து கிடப்பவர் அங்கே உயிரோடு இருக்கிறாரே….?’ என்று ஒரே மர்மமாக இருந்தது.
அவர் அவ்விடத்தை விட்டு ஓடிப் போக, இவர்கள் பிடிக்க இயலாமல் மீண்டும் அந்த இடத்திற்கே வந்து பார்த்தால் துரைசாமியின் பிணம் அங்கே இல்லை. திரும்ப இன்னொரு சப்தம் கேட்டது, அவர் இல்லம் அருகில் தெரு முக்கில். அங்கே இதே துரைசாமி ஜாகிங் வரார். மூவரும் திகைப்பில் ஒன்றும் புரியாமல் பிரமை பிடித்தது போல நின்று கொண்டிருந்தார்கள்.
சுப்பராயனுக்கு நேற்று ஏற்பட்ட மனக்குழப்பத்திற்கான காரணம் இப்போ லேசாக புரிபடுவது போல இருந்தது.
இக்கொலையை, இந்த சம்பவத்தை அவர்கள் இன்று தான் திட்டமிட்டார்கள். ஆனால் இது ஏற்கெனவே நடந்தது போலவே இருந்தது. அதே போல ஜாகிங் செய்து வந்த அந்த துரைசாமி இவர்கள் அருகில் வந்தார். இவர்கள் அச்சத்துடன் தங்கள் கத்தியை நீட்டினார்கள்.
அப்போது துரைசாமி இவர்களைப் பார்த்து கேட்டார், “என்ன? என்னைக் கொல்லப் பார்க்கிறிர்களா? நீங்கல் நினைப்பதை உங்களால் செய்ய முடியவே முடியாது” என்றறு நகைத்தார்.
அவர்கள் வேறு வழியின்றி விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்காக, “எப்படி?” என்றார்கள்.
“என்னை நீங்கள் ஏற்கெனவே பலமுறை கொலை செய்திருக்கிறீர்கள்! இந்த சம்பவத்தை நான் தான் உருவாக்கினேன்! நீங்கள் என்னைக் கொலை செய்வதை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்!” என்றார்.
இவர்களுக்கு ஒன்றும் புரியவிலை. தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.
“என்னுடைய ரகசிய ஆராய்ச்சியில் விளைந்தது தானே இந்த திட்டம்? மேலும் என்னுடைய முக்கியமான ஆராய்ச்சிகளுள் ஒன்றாகும் இது. ‘குவாண்டம் மிர்ரர்’ என்று இதைச் சொல்வார்கள், அறிவியல் ரீதியாக. இதுஒரே சம்பவத்தை, பல ரியாலிடிகளை உருவாக்கும். அதில் உண்மை எது என்று யாருக்கும் வெளிச்சம் இல்லை. இது ஒரு அதிசய சம்பவம், விநோத நிகழ்வு. இந்த விநோத நிகழ்வில் நீங்களும் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். நான் இதற்காக, இந்த இடத்தை தான் தேர்வு செய்து என்னுடைய பரிசோதனை, இந்த ரியாலிடி இங்கே பலமுறை நடைபெறும். அதில் ஒரு முறை நான் கடந்த காலத்தில் இந்த சம்பவத்தை அமைக்கும்போது (சுப்பராயனை சுட்டிக் காட்டி) இவரும் வந்து போனார். இவர் இதே இருளில் தான் ஊடுருவியிருந்தார். அதனால் ஒரு சில விஷயங்களின் தாக்கம் அவருக்கு அதிகமாக இருக்கும், ஆனால் அவ்வளவாக நினைவில் இருக்காது. பிறகு நீங்களும் வந்து போனீர்கள். இங்கே நடப்பது எல்லாம் பலமுறை நடக்கிறது. அதனால் இந்த தாக்கத்திற்கு நீங்களும் ஆளாகி விட்டீர்கள். எனவே நீங்களும் இந்த வினோத நிகழ்வில் ஒன்றாகி விட்டீர்கள்.” என்றார் துரைசாமி.
“இவன் வித்தைக்காரன்! மறுபடியும் போடு! என்ன பண்றான்னு பார்க்கலாம்!” என்றான் கருப்பையன் ஆக்ரோஷமாக.
துரைசாமி சிரித்தார். “நீ எத்தனை முறை கொலை செய்தாலும் மீண்டும் மீண்டும் இது நடந்து கொண்டே தான் இருக்கும்! இது ஒரு வகையான ரியாலிட்டி. இதில் எது உண்மை என்று கண்டு பிடிக்கவே முடியாது! நீங்களே உண்மை கிடையாது!” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அதே தெருமுக்கில் நாகமாணிக்கமும் கருப்பையனும் வண்டியில் வருவதை அவர்கள் பார்க்கிறார்கள். இதைப் பார்த்து அவர்கள் மூவரும் திக்குமுக்காடிப் போனார்கள்.
“ஆனால் இதுவும் உண்மையல்ல! இதுதான் நான் ஆராய்ச்சியில் கண்டுபிடித்தது! உங்களுடைய ரியாலிடி தான் என்னுடைய ரியாலிடியை கொல்ல முடியும். ஆனால் அது தான் ரியாலிடியா என்று தெரியாது. பார்க்கப் போனால் ரியாலிடி என்பது ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். விஞ்ஞானத்தின் ஆச்சர்யம் அல்லவா இது? எங்கே? இப்போது கண்டுபிடித்து உங்கள் செயலை முடியுங்கள் பார்க்கலாம்!” என்று கூறியவாறே ஜாகிங்கை தொடர்ந்தார் துரைசாமி.

நமது இசை புதிது ‘ சாந்தி மேடம் ‘ அவர்களின் புதல்வர் ‘சிரிஷ் ‘ அவர்களின் வித்தியாசமான விஞ்ஞானக் கதை. ‘குவாண்டம் கண்ணாடி’ என்று ஒரு அறிவியல் கருத்தை எடுத்துக்கொண்டு இவர் படைத்திருக்கும் இந்த மர்மத் திகில் கதையின் ‘வினோத நிகழ்வைப் ‘ படிக்கும் போது இந்தக் கதையைப் படிக்கும் வாசகனின் ஒருவனாக எனக்கு இதை மறுபடியும் படிப்பது போல் ஒரு பிரமை. அந்தப் பிரமையை ஏற்படுத்திய விதத்தில் ஆசிரியரின் கதை எழுதும் திறனின் வெற்றி தெரிகிறது. தொடரட்டும் இந்த இளவலின் அறிவியல் கதைகள். வாழ்த்துகள். சாந்தி மேடத்திற்கும் சேர்த்து . இந்தக் கதைக்குப் பொருத்தமான படத்தைத் தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கும் குவிகம் சுந்தரராஜன் அவர்கட்கும் வாழ்த்துகள் .
LikeLike
Good sci-fi ! congratulations Sirish Srinivasan!!
LikeLike
Sujatha தான் இப்படி விஞ்ஞான வரிகள் கொண்டு எழுதுவார்… புரிய நேரமாகும் நமக்கு..! திகில் கதையை ரசித்தேன். நன்று. வளர்முக!👌💐😊
LikeLike
மைகாட்.. நல்லதொரு அறிவியல் கதை. டைம் லாப்ஸ் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறதா? இப்போது இந்தக் கதையை நான்தான் படித்தேனா, இல்லை உருவாக்கப்பட்ட என் ரியாலிட்டி பிடித்ததா என்று தெரியவில்லையே….!
எங்கள் பிளாக் ஸ்ரீராம்.
LikeLike