நான் கல்லூரியில் படித்த நாட்களில் ஒரு ஆண்டு கல்லூரி விழாவிற்கு அரிச்சந்திரன் கதையை தெருக்கூத்து பாணியில் மேடை நடன – நாடகமாகப் போட்டார்கள். திரு நடராஜ் – திருமதி சகுந்தலா என்னும் நடனக்கலைஞர்கள் தான் மாணவிகளுக்கு நாட்டியப்பயிற்சி அளித்தது. நான் அந்த நிகழ்ச்சிக்குப் பாடினேன். அநியாயமாகப் பாடல் குறிப்புகளைக் கைவசம் பாதுகாக்காமல் விட்டுவிட்டேன். பாடல்கள் நாட்டுப்புற பாணியில் உள்ளவை, ஓரிரு பாடல்கள் இன்றும் நினைவில் உள்ளன.

Harishchandra Taramati Satyapariksha - RV-1         அரிச்சந்திரனின் அரசி சந்திரமதி சபைக்குள் நுழைவது பிரமாதமான பாடல் வரிகளுடன் இருக்கும்.

          கந்த பரிமள சந்திரமுக வாசம்

                     சபை எங்கும் பிரகாசம்

          சந்திரமதி தேவி வந்தாளே கைவீசி

                     காலில் தண்டை ஒலிபேசி

          கற்புடைய பெண்ணரசி கணவனை நாடிநல்ல

          பொற்புடைய சூர்யலகுல புத்திரன் லோகிதாசனுடன்

                     தத்தோம் தத்தோம் தரிகிட …….

 

          பின்பு கொடுத்த கடனைத் திரும்பக் கேட்கும் நட்சத்திரகன் வருவான்

          நட்சத்திரகன் வந்தேன் நானே

                     இச்சபையை நாடி வந்தேன்

                     உச்சிதமாக கச்சிதமாக

                     உச்சிதமாக கச்சிதமாக

          பொன்னைத்தாரேன் என்று

                     சொன்னபடி இங்கே.. சொன்னபடி இங்கே..

                     இன்னைக்கே தந்திடு இப்போதே கொடுத்திடு

                     இன்னைக்கே தந்திடு இப்போதே கொடுத்திடு..

          இப்படிப்பட்ட அருமையான பாடல்கள் நிறைந்த நாட்டிய நாடகம். ஏழெட்டு ஆண்டுகளின் முன்பு  எனது ‘ -Alma Mater’ஐப் பார்க்க நானும் சில தோழிகளும் சென்றிருந்தோம். இந்த நாட்டிய நாடகம் அரங்கேற்றப்பட்டபோது (40 ஆண்டுகளின் முன்பு) வைஸ் பிரின்சிபலாக இருந்த மதர் சுபீரியர் எனும் (கன்யாஸ்திரீயான) பெருமாட்டியைப் அப்போது பார்க்கச் சென்றோம். என்னை நினைவு வைத்திருந்த அவர், வயது வித்தியாசம் பார்க்காமல், பதவி (ஒரு கல்வி நிறுவனத்தின் தலைவர் – பழைய மாணவி) வித்தியாசம் பார்க்காமல், அன்பு ஒன்றையே பிரதானமாகக் கொண்ட அச்சந்திப்பில் என்னுடன் இப்பாடல்களைத் தானும் சேர்ந்து இசைத்து மகிழ்ந்தது இன்றும் நினைவில் நின்று கண்களில் நீர்சோர வைக்கிறது.

          பெரியவர்கள் சொல்லும் கதைகளில் பல நல்வழிப் பாடல்களும் உண்டு. முனிசாமி முதலியார் என்பவர் பலவிதமான பாடல்களை எழுதி வெளியிட்டார். அவற்றின் பதிப்புகள் இப்போது இணைய தளங்களில் காணக்கிடைக்கின்றன. இவற்றுள் ‘பதிவிரதைப்பாட்டு’ என்று ஒன்று. சிறுவர்களான எங்களுக்கு பாட்டியின் குரலில் அதனைக் கேட்பதில் பரம சந்தோஷம்.

          அன்னை தந்தைகளை தெய்வமென்றே தினம்

          அன்பாயு பசரிப்பாள் பதிவிரதை

          இன்னிலத்தில் கெட்ட துரோகியெனும் பெயரை

          ஏற்றுக் கொள்வாள் மூட தடிக்கழுதை

 

          அங்கம் பசித்தொருவர் அபயமென்று வந்தால்

          அன்பாயு பசரிப்பாள் பதிவிரதை – இல்லாமல்

          தங்க வொட்டாமலே சீறித்தெருவில் நெட்டித்

          தள்ளிப் போவாள் மூட தடிக்கழுதை…

          இப்படி போகும் அந்தப்பாட்டு! நம்ப மாட்டீர்கள் என்று புத்தகத்தின் அட்டைப் படத்தையே கொடுத்திருக்கிறேன்!!!

          வேறு இந்திய மொழிகளிலும் இப்படிப்பட்ட பாடல்கள் உண்டு. செம்மீன் எனும் மலையாளத் திரைப்படத்தில் ஒரு மீனவப்பாடல் அவர்கள் நம்பிக்கையை முன்வைத்து ஒலிக்கும். கடலில் முத்துக்குளிக்கப் போகும் மீனவனுக்கு அவனுடைய மனைவியின் கற்பே காப்பு எனப்பாடுவார்கள்.

          ‘பண்டொரு முக்குவன் முத்தினு போயி

          படிஞாறங்காட்டத்து முங்கிப்போயி

          அரையத்தி பெண்ணு தபஸ்ஸிருந்நு

          அவனக் கடலம்மா கொண்டு வந்நு’ என்றுபோகும் பாடல். கேட்டுப்பாருங்கள்.

                                                    *****

          இதே போலத் தெலுங்கிலும் சில பாடல்கள் உண்டு – தத்வம் எனப்படும் இவற்றை தெருவில் பிட்சைக்காகச் செல்லும் சாமியார்கள் பாடிக்கொண்டு செல்வார்கள் என்றும் தாம் சிறு வயதில் கேட்டிருப்பதாக ஒரு நண்பர் கூறினார். இசை வல்லுனர் திரு. பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் சிலவற்றை அழகாக இசையமைத்துப் பாடியுள்ளார்.

          ‘ஏமி சேதுரா லிங்கா’ எனும் பாடல் மீன்களின் எச்சில் பட்ட நீராலும் வண்டுகளின் எச்சில் பட்ட மலர்களாலும் எப்படி நான் உனக்குப் பூசை செய்வேன் லிங்கா எனக் கேட்பதாக அமைகிறது.

                               *****

          முருகன் கோவில்கள் இவற்றிற்கு திருவிழாக்களுக்குப் போகும்போது சாரிசாரியாகச் செல்லும் மக்கள் கூட்டம் உற்சாகமாகப் பாடிக்கொண்டு செல்லும் பாடல்கள் பல உண்டு. இவற்றிற்கு வழிநடைப்பாடல்கள், காவடிச்சிந்து, வழிநடைச் சிந்து என்றெல்லாம் பெயர்களுண்டு.

          அலங்காரம் அலங்காரம் ஆகா ஒய்யாரம்

          சிக்கில் பார்க்க சிங்காரம் அலங்காரம் அலங்காரம்

          ஐப்பசி மாதத்திலே ஆறுநாள் திருநாளுண்டு

          சூரசம்ஹாரமுண்டு சுப்ரமண்ய வேலருண்டு

                     அன்னமே வாடி அடி சொர்ணமே வாடி

                     இனி சஞ்சலமேண்டீ (அலங்காரம்)

          அழகான உற்சாகம் ததும்பும் பாடல்.

                                                    *****

          அண்ணாமலை ரெட்டியார் எழுதியுள்ள முருகன் காவடி வழிநடைச்சிந்து மிக ரம்மியமான பாடல்களைக் கொண்டது.

                     தெள்ளுதமி ழுக்குதவு சீலன் – துதி

                                 செப்பும் அண்ணாம லைக்கும் அனு கூலன் – வளர்

                     செழிய புகழ்விளைத்த கழுகு மலைவளத்தை

                                 தேனே! சொல்லு வேனே.

 

                     வெள்ளிமலை யொத்தபல மேடை, – முடி

                                மீதினிலே கட்டுகொடி யாடை, – அந்த

                     வெய்யவன் நடத்திவரு துய்யஇர தப்பரியும்

                               விலகும் படி இலகும்.- இது ஒன்று.

 

                     சென்னி குளநகர் வாசன், – தமிழ்

                               தேறும் அண்ணாமலை தாசன் – செப்பும்

                      செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை

                                 தீரன்; அயில் வீரன்.

 

                     வன்ன மயில்முரு கேசன், – குற

                               வள்ளி பதம்பணி நேசன் – உரை

                     வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற

                               வாதே சொல்வன் மாதே!

          இந்தப்பாடலும் அழகானது; இனிய இரு காலப்பிரமாணங்களில் பாட வேண்டியது. குழுவாகப் பாடினால் உற்சாகம் பொங்கும்.

                               *****

           மாரியம்மன் பக்திப்பாடல்கள் கேட்பவர்கள் உள்ளத்திற்கு உற்சாகம் தரும் நாட்டுப்புறப்பாடல்களின் அடிப்படையில் பிறந்தவையே. எடுத்துக்காட்டு – கற்பூர நாயகியே கனகவல்லீ……..(L.R. ஈஸ்வரி அம்மா பாடியுள்ளார்கள்.)

          சற்றுப் பெரிய குழந்தைகள் விடுகதைகளைப் பாடல்களில் அமைத்துப் பாடுவார்கள். எட்டெழுத்திலுள்ள ஒரு ஊரின் பெயரைத் தெரிவிக்க கீழ்க்காணும் விடுகதை சொல்லப்படுகிறது.

                     ஒன்றும் இரண்டும் சேரில் செல்வம்

                     மூன்றும் நான்கும் சேரில் குளம்

                     மூன்றும் ஐந்தும் ஒன்றும் சேரில் கங்கை

                     மூன்றும் ஆறும் சேரில் பெருமை

                     ஏழும் எட்டும் சேரில் பருகு அஃது என்ன?

          -எண்ணை வைத்து எழுத்தைச் சேர்த்து திரு, வாவி, வானதி, வான், குடி என இணைத்துப் பின் “திருவாவினன்குடி” என்ற விடையளிப்பர்.

          பாரம்பரியக் கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், கும்மி, கரகம், காவடி, பொய்க்கால் குதிரை இவற்றுக்கெல்லாம் பாடல்வகைகள் உண்டு. நந்தனார், பவளக்கொடி, நல்லதங்காள் கதைகளும் பாடல்களும் இவற்றுள் அடக்கம் எனலாம். பவளக்கொடி, நல்லதங்காள் கதைகள் ஒரே தொடராக வசன வடிவில் ஆனால் பாடல்களாக இசைக்கப்பட்டிருக்கக்கூடும். இவைபோல இன்னும் எத்தனை எத்தனையோ!!

                                                   *******

          அடுத்ததாக ஓடப்பாடல்கள் எனும் வகையைப் பார்க்கலாம். ‘ஏலேலோ’ என முடியும் இவற்றையும் வீடுகளில் மகளிர் பாடிவந்தனர். தஞ்சாவூர், கும்பகோணம் பக்கங்களில் ‘காவேரி ஓடம்’ என ஒரு பாடல் மிகப்பிரபலம். இதனை நாம் சிட்டி – தி. ஜா எழுதியுள்ள ‘நடந்தாய் வாழி காவேரி’ நூலில் விவரமாகக் காணலாம். காவேரியின் உற்பத்தியில் தொடங்கி அவள் அழகுநடை பயின்று கடலோடு கலக்கும்வரை மிக அழகாகப் புனையப்பட்ட பழம்பாடல்.

          அம்பரம் தொடுசைய மலையில் நிலைபெற்று

          அகத்திய மஹாமுனி கடத்தினில் உதித்து

          …………………………….

          அன்புடன் திருவை யாறப்பனைக் கண்டு

          அறம்வளர்த்தாள் உத்தரவு பெற்றுக் கொண்டு

          …………………………..

          சங்கமும் வந்து கடல் கூடியது வெள்ளம்

          ஏலேலோ! 

          ‘கப்பல்’ என ஒரு வகைப்பாடல். இதுவும் காவிரி அம்மனைப் பற்றியது.

          ஆனைக்குந்தி மலையைவிட்டு அமராவதி சேர

          சொந்தமாய் ஈரோடுவிட்டு கொடுமுடியைச் சேர்ந்து

          …………………………………. 

          சந்தோஷமாய் காவேரி சாயாவனந் தாண்டி

          சங்கமுகத் துறையடைந்து சமுத்திரரைச் சேர்ந்தாள்

          அன்புடனே கூடி அலையுடன் போராடி

          கண்கலங்கி வாடி கணவரிடம் ஓடி

          ……………………………….

          காதலுடன் கடல் மன்னனுடன் காவேரியும் கலந்துவிட

                     ஏலேலோ   –   ஏலேலோ  –   காவேரி

                     கடலுடனே கலந்த கப்பல்!

          அருமையான பாடல்; அருமையான கதை! இதைப்பற்றிப் பின்னொருநாள் சமயம் வாய்த்தால் காணலாம்.

          இப்போது நாமும் சிறிது இளைப்பாறுவோம். சிந்திப்போம் கேட்டுக்களிக்க முயல்வோம். பாரம்பரிய சொத்துக்களை அனுபவிப்போம்!!!   

                                                                                            

                                                                                            [வளரும்.]

 

                               000000000000000000000000000