ப
ல ஆசிரியர் படிப்பிற்கான கல்வி நிலையங்களில் உள்ளது போல நான் கற்றுத்தரும் இடத்திலும் ஆரம்பப் பள்ளி சேர்ந்திருந்தது. மனநலம், வளர்ச்சி சார்ந்த பாடத்திட்டங்கள் சொல்லித்தருவது என்னுடைய இலாகா.
நான் ஸைக்காட்ரிக் சோஷியல் வர்க் பயின்றிருந்ததையும் மனநலம், கல்வி ஆலோசகர் என்றதையும் அறிந்திருந்ததால் எங்கள் பள்ளியின் குழந்தை தியாவின் பெற்றோர்கள் என்னை அணுகினார்கள்.
மூன்று வயதான தியாவை அவளின் தந்தை முத்து, தாயார் அன்னம் அழைத்து வந்தனர். முத்து சொந்தமான மரச்சாமான் கடை வைத்திருந்தார். கைவேலை மீது மிகவும் ஈர்ப்பு இருந்ததால் தச்சன் என்ற அடையாளம் மட்டுமே தமக்குப் பெருமை என்றார். அன்னம், சொந்த நூலகம் நடத்தி வந்தாள்.
எதைப் பார்த்தாலும் தியா கேள்வி கேட்பதும், மற்றவரை நகல் செய்யும் விளையாட்டும், மிகுதியான ஆர்வமும், சாப்பிட வைப்பது கடினமாக இருப்பதையும் பற்றிப் பகிர்ந்தார்கள். இருவரும் இவற்றினால் எரிச்சல் ஏற்படுவதாகக் கூறினார்கள். பெற்றோர் இப்படிக்கூறியதும் புரிய வைக்க ஆரம்பித்தேன்.
தற்போது இதைப் பற்றிச் சொல்லித் தந்து கொண்டிருந்ததால் வகுப்பில் பங்கேற்கப் பரிந்துரைத்தேன். சில செயல்திட்டங்களுக்குப் பின்னர் பெற்றோர் புரிந்து கொண்டார்கள். குழந்தைகள் இயல்பாகக் கேள்விகள் குவித்துக் கொண்டிருப்பார்கள். புத்தகங்கள் விளக்கியது என்னவென்றால் ஆறு வயதுவரை அதிகமாக அறிந்துகொள்ளும் ஆர்வமும் வியக்க வைப்பதும் இந்த வயதின் தன்மையே என்று. புரிந்து கொண்டார்கள்!
வித்தியாசமான பல கேள்விகள் வரும்போது தமக்குப் பதில் தெரியாமல் போவதை ஒப்புக்கொண்டனர். இதைக் கையாளத் தெரியாமல் தியாவை மௌனமாக இருக்கச் செய்கிறோம் என அடையாளம் கண்டார்கள். ஏனெனில், தம்முடைய சுயதரம் எங்கே கணிக்கப் பட்டுவிடுமோ என்ற அச்சம்.
இதை ஸெஷனில் பார்வையிட்டோம். இருவரும் குழந்தையிடம் தெரியவில்லை என்று சொல்லத் தயங்கி, தம்மை மதிக்க மாட்டாள் என எண்ணினார்கள். இந்தத் தவறான யுக்தியை மாற்ற, விதவிதமான தகவல்களைப் படிக்க வைத்தேன். இவற்றை உரையாடலில் கொண்டு வந்தேன்.
அவர்கள் “தெரியவில்லை” என்ற சொற்களைப் பயன்படுத்தத் தவறியதை ஸெஷனில் பார்வையிட்டோம். குழந்தையிடம் தெரியவில்லை என்பதைச் சொல்ல மறுத்தது ஒரு பக்கம். மற்றொரு பக்கம், தியாவிடம் எதிர்பார்ப்போ, எது தெரியவில்லை என்றாலும் வெட்கப்படாமல் கேட்டுத் தெளிவு பெற வேண்டும் என! இந்த வயதில் குழந்தைகள் தம்முடன் இருக்கும் பழகும் பெரியவர்களை நகல் செய்து கற்றுக்கொள்வார்கள். எம்மாதிரி எடுத்துக்காட்டு இது?
இதைப் பல உதாரணங்களுடன் பார்க்க, முத்து, அன்னம் புரிந்து கொண்டார்கள், செயலும் சொல்லும் ஒன்றுபட வேண்டும் என. பல ஆராய்ச்சியில் கூறுவது, கூட இருப்பவர்களின் தாக்கம் குழந்தைகள் மேல் அதிகம். உணர்வு, சிந்திப்பின் விதம், ஆற்றல் ஒன்று விடாமல் நம்மை உன்னிப்பாகக் கவனித்து நகல் செய்வார்கள், நாம் பயன்படுத்தும் வார்த்தைகள், உடல்மொழி எல்லாம் கண்ணாடியில் பார்க்கும் பிம்பம் போலக் குழந்தைகளிடம் காண முடியும் என்று படித்ததை அன்னம்-முத்து நேரில் பார்த்து வியந்தனர்.
அப்போதுதான் “தெரியவில்லை” என்று சொல்வதில் தவறில்லை என்பதை உணர்ந்தார்கள்.
வரும் நாட்களில் முத்து-அன்னம் தமக்குத் தெரியாததைத் தேடி அறிந்து புரிந்து கொள்வதின் அருமையைக் காண்பதும் துவங்கியது. இதிலிருந்து தியாவின் ஆர்வம் தேடலின் மேன்மை புரியவந்தது.
இந்தத் தம்பதியினரின் சந்தேகத்திலிருந்து பிறந்தது, குழந்தைகள் வளர்ப்பில் பாசம், வியப்பு, போற்றுதல், கண்டிப்பு என்ற கலவை, உடல்-மனம்-சமூக வளர்ச்சி இவற்றைப் பற்றி நான் நடத்திய வர்க்ஷாப்.
முத்து-அன்னம் தங்களின் பெற்றோரின் தவறான வளர்ப்பு முறைகளைத் தாமும் பின்பற்றுவதை அடையாளம் கண்டுகொண்டனர். சொல்-செயல் தாக்கம் நன்றாகப் புரிந்தது!
மேலும் தியாவின் தனித்துவத்தைத் தவிர்த்ததும் புரிந்தது. மாறாக, தம் மனதில் வைத்திருந்ததை உருவாக்க முயல்கிறோம் என்று புரிந்து கொள்ளப் பல செஷன்கள் ஆனது.
பிறந்ததிலிருந்து ஆறு வயது வரை மூளை வளர்ச்சி முழு வீச்சில் உள்ளது. ஆர்வம் தூண்டும், வெளி உலகத்தின் அமைப்பைப் புரிந்து கொள்ளவே குழந்தைகள் விதவிதமான கேள்வி கேட்பதுண்டு. தம்முடைய புலன்கள் எதை அனுபவிக்கின்றனவோ அதைப்பற்றி கேள்விகளை எழுப்புவது குழந்தையின் சுபாவமாகும்.
சில பெற்றோர் இந்த அறிய வாய்ப்பை நழுவ விடுகிறார்கள். பதில் சொல்லத் தெரியாமலோ, பதில் கூறி சலித்தோ, இவ்வாறு கேட்டுக் கொண்டே இருப்பது தவறான நடத்தை என முடிவு செய்வதாலோ இப்படி. தாம் பார்த்துக் கொண்டியிருக்கும் டிவி, கைப்பேசி இவற்றிற்குக் கேள்விகள் இடையூறெனக் கவனம் கொடுக்காமல் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
ஆர்வத்தைத் தட்டிக் கழித்து விட்டால், குழந்தை மந்தமாக இருக்க, பாடத்திட்டங்களில் ஈடுபாடு இருக்காது. எல்லாப் பெற்றோருக்கும் பிடித்தமானது மதிப்பெண், அது என்றும் பின்தங்கி நிற்கும்.
தன் தவறான செயலை முத்து உணர்ந்தார். எந்த அளவிற்குத் தன்னைத் தச்சன் என்று கூறுவதில் பெருமை கொண்டாலும், மகள் ஏதேனும் கையால் முயன்றால் தடுப்பது, மீறிச் செய்தால் கண்டிப்பு, தண்டனை என்று தாம் செய்வது நியாயமற்றது எனக் கண்டுகொண்டார்.
ஆகமொத்தத்தில், தியா வளர்ப்பில் “Reactive disciplining” எனும் எதிர்வினை முறையைக் கடைப்பிடிக்கிறோம் எனப் பெற்றோர் உணர்ந்தார்கள். எரிச்சல் படுவதும் சோர்வடைந்த நிலையில் தாம் உள்ளதை உணராமல் குழந்தையைச் சாடுவதும் உறவில் விரிசல் வரச் செய்தது.
விளைவு, குழந்தைகள் குழப்பம் அடைவார்கள். கேட்பது தவறோ, இவர்களிடம் கேட்கக் கூடாதோ என்ற அச்சம் சந்தேகம் கேட்பதைப் புதைத்துவிடும். வளரும் போதும் இது தொடரும். எதிர்காலத்தில், எதிலும் கேட்டுத் தெளிவுற மிரளுவதினால், தைரியம் குலைந்து தன்மதிப்பு பாதிக்கப்படும்.
ஆக்கப்பூர்வமான வழி, Responsive parenting, அதாவது மதித்து மறுமொழி கூறுவது. இதை நடைமுறையில் முத்து-அன்னம் கொண்டு வர பல மாதங்கள் ஆயிற்று. குறிப்பாகக் குற்ற உணர்வு மற்றும் அவமானம் இரண்டையும் கையாளக் கற்றுக் கொள்ள நாட்களானது.
அதுமட்டுமல்ல, அதே கேள்வியைக் குழந்தை மீண்டும் எழுப்பும்போது எரிச்சல் படாமல், கேட்பதைப் புறக்கணிக்காமல் பறந்த மனப்பான்மையுடன் தற்போது நடப்பதில் கவனம் செலுத்திப் பதிலளிப்பதின் முக்கியத்துவம் புரிந்தது.
இதுபோன்ற நேரங்களில் குழந்தை முகம் பார்க்காமல் இருப்பதும், அளவிற்கு மீறின கண்டிப்பு காண்பிப்பதும் பயனற்ற நடத்தை. ஏனெனில் இந்த வளரும் வயதில் குழந்தை நேர்மறை குணாதிசயங்கள் கற்றுக்கொள்ள இவை உதவாது. குறிப்பாக அன்பு, பாசம் வறட்சி நிலையில் இருக்கும்.
இந்த நிலை நேராமலிருக்க முத்து-அன்னம் இருவரையும் உறவாடும்போது தியாவின் மேல் உள்ள உணர்வை, ஏன் எதற்கு எனக் குறித்துக்கொண்டு செஷன்களில் பகிரப் பரிந்துரைத்தேன். இத்துடன், தியாவிடம் பிரத்தியேகமான உள்ளதை அடையாளம் கண்டுகொண்டார்களா, அதற்குத் தடையாக இருந்தார்களா அல்ல ஊக்குவித்தார்களா எனக் கண்டறிதல்.
தியா விடாமுயற்சியாக ஒன்றைச் செய்யும் போது உணவை மறுத்தால் தாம் அதை எதிர்ப்பதின் இரு காரணம் புரிந்தது. ஒன்று, குழந்தையின் உடலில் குறைபாடு நேருமோ என்று, மற்றொன்று தமக்கு அவமதிப்பு என்ற கவலை.. இதனால் குழந்தை செய்வதில் தாம் இடையூறாக இருப்பதும், அது அவளின் ஊக்கத்தைப் பலவீனமாக்குவதும் புரிந்தது.
முத்து-அன்னமும் மற்ற பெற்றோரும் வர்க்ஷாப்பில் அறிந்தது, குழந்தை வளர்ப்பில் மிக முக்கியம் அவர்களை மதிப்பதே. இதிலிருந்து அவர்கள் உணர்வில் பதியும், தமக்குப் பாதுகாப்பு உள்ளது, தன்னைப் புரிந்து கொண்ட நபர்களுடன் தான் வாழ்கிறோம் என்று. அதிலிருந்து வருகிற தெம்பு உடல் மன நலனை மேம்படுத்தும், வளர்ப்பில் முக்கிய பங்காகும்!
பெற்றோருக்கு முக்கியமான வித்தியாசம் புரிந்தது. தீர்மானமான வார்த்தைகளான “குட்”, “அற்புதம்” என்ற ஒற்றைச் சொற்களில் கணிப்பு உள்ளது. அத்துடன் நில்லாமல், “நீ ….(இதைச்) செய்வதைப் பார்த்தேன்…”, “விடாமல் செய்ததற்காக…” என்றால் அக்கறை தென்படும். இதை நாம் குழந்தைகளிடம் மட்டுமல்லாமல் சுற்றி உள்ளவர்களிடமும் உபயோகித்தால் குழந்தைகள் அதைக் கவனித்து தாமும் செய்வார்கள்.
அன்னம்-முத்து கவனம், மரியாதை காட்டுதல் இவற்றைச் செயலில் கொண்டுவந்தார்கள். கவனம் புறக்கணிக்கும் “முழுச் சுதந்திரம்” என்பதைத் தவிர்த்து இப்படித் தெளிவான வழிமுறையுடன் இருப்பதே positive discipline.
குழந்தைகள் ஆன நாங்கள்
நீங்கள் பேசுவதை, செய்வதைக் கடைப்பிடிப்போம்
நகல் எங்கள் மொழியாகும்!
******************************

படத்தை சரியாக அமைத்தால் பவும் லவும் பிரியாமல் இருக்கும்!!!
உபயோகமான கட்டுரை.
எங்கள்பிளாக் ஸ்ரீராம்.
LikeLike