தாயினும் சாலப் பரிந்து!

முன்பின் அறியாத, ஆயினும் எனது நினைவில் நின்ற இரு பெண்மணிகளைப் பற்றித்தான் நான் இங்கே குறிப்பிடப் போகிறேன்.
திவ்யதேச யாத்திரையில் ‘நாதன் கோயில்’ பார்த்துவிட்டு, தரிசனம் செய்வதற்காக அடுத்த கோயிலை அடைந்தபொழுது, மதியம் ஒன்றரை மணி ஆகிவிட்டது.
பொதுவாகக் கிராமத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் வருவது குறைவு என்பதால் முற்பகல் 11-11:30 மணிவாக்கில் மூடப்பட்டு விடும்: ஆனாலும் பாருங்கள், கோயில் திறந்திருந்தது. சுவர் பூச்சு வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்கும்பொழுது, எதிர்த்த வீடுதான் பட்டாச்சாரியார் இல்லம் என்றார்கள்.
நான் பட்டாச்சாரியாரை சென்று அழைத்தபோது, “நல்லவேளை இன்னும் நடை சாத்தலை, வாங்கோ” என்று கூறி சந்நதிக்கு அழைத்துச் சென்று, பெருமாள் தரிசனம் செய்து வைத்தார்.
காலையிலிருந்து ஒரே அலைச்சல். அதையும் தாண்டி, அதீத தாகம் மற்றும் பசி.
அங்கிருந்து கிளம்புவதற்கு முன், அவர் வீட்டு வாசலில் நின்று, “ஒரு டம்ளர் தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்டேன். குரல் கேட்டு எட்டிப் பார்த்த மாமி, ஒரு சொம்பு தண்ணீருடன் வெளியில் வந்தார். பட்டாச்சாரியரிடம் ஏதோ சொன்னார். பட்டாச்சாரியார் உடனே “உள்ள வாங்கோ” என்று அழைத்தார்.
நான் சற்று தயக்கத்துடன் நுழைந்தேன். அதற்குள் மாமி, ஒரு பெரிய மந்தார இலையைப் பரப்பி, பழைய பாய் ஒன்றைப் போட்டு, “உட்காருங்கோ” என்றார் பக்கத்தில் நீர் குவளையை வைத்தபடி.
நான் தயங்கியதைப் பார்த்து அந்த மாதரசி, “தத்யோன்னம், பெருமாள் பிரசாதம்தான்” என்றவர், ஒரு பெரிய கற்சட்டியிலிருந்த தயிர் சாதத்தை, தன் கையால் தாராளமாக எடுத்து, ஒரு பெரிய உருண்டை அளவு இலையில் வைத்தார். நான் உண்ண ஆரம்பிக்கும் முன்னரே, மீண்டும் ஓர் உருண்டையை எடுத்து வைத்தார், கிட்டத்தட்ட அந்த மந்தாரை இலை முழுவதுமாக நிறையும் அளவிற்கு.
பட்டாச்சாரியார், “நேத்தைக்கு கிடாரங்காய் ஊறுகாய் போட்டாயே, அதை, சார்..க்கு போடு” என்றார்.
வெள்ளை வெளேரென்ற அந்தத் தம்பதிகளின் உள்ளம் போலிருந்த தயிர்சாதத்தை, அருகில் ஊறுகாயுடன் நான் சாப்பிட்ட வேகம், எனது பசியின் அளவை வெளிப்படுத்தியிருக்கும்.
வெளியே கைகளைச் சுத்தம் செய்ய நீர் கொடுத்த பட்டாச்சாரியார், தனது வயதையும் பொருட்படுத்தாமல், வாசலில் சாய்த்து வைத்திருந்த கயிற்றுக் கட்டிலைப் போட்டு, “நீங்க, கொஞ்ச நேரம் படுங்கோ சார். அடுத்தது, ‘திருக்கண்டியூருக்குத்தானே போறேள், மினிபஸ் நாலு மணிக்குத்தான்”, என்றார் ஒரு விசிறியைக் கொடுத்தபடி.
மூன்றரை மணிவாக்கில் மெல்லிய குரலில் எழுப்பினார் பட்டாச்சாரியார். முகம் அலம்பக் கையில் ஒரு குவளையில் தண்ணீர் வைத்திருந்தார். திரும்பிப் பார்க்கும்பொழுது மாமி சுடச்சுட காபி வைத்திருந்தார்.
இதற்கு எப்படி கைம்மாறு செய்வது?, தெரியவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இதுபோல இன்னும் ஒரு அனுபவம் – இந்த முறை சிவன்!
திருமயம் அருகிலிருக்கும் ஒரு பழமையான சிவாலயத்திற்கு, மூன்று நண்பர்கள் சென்று கொண்டிருந்தோம். காலையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டக் கோயில்களைப் பார்த்தவண்ணம் வந்ததால், பிரேக்பாஸ்டை தவிர்த்து, திருமயத்தில் மதியம் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று இருந்து விட்டோம்.
பிற்பகல் 2 மணி ஆகிவிட்டது. சரியான வெயில். நாங்கள் போகும் வழியில் எந்த ஒரு நல்ல ஹோட்டலும் சொல்லிக் கொள்ளுமாறு இல்லை. திருமயமும் வந்த பாடில்லை. ஒரு குக்கிராமத்தைக் கடக்கும்போது, என்னுடன் வந்த நண்பர், இதற்குமேல் என் உடம்பு தாங்காது, காலையில் மாத்திரை வேறு போட்டுக்கொள்ளவில்லை, கண்டிப்பாக நான் இங்கு ஏதாவது சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று வாகனத்தை நிறுத்தச் சொன்னார். புழுதி பறக்கும் சாலையில் இருந்த திறந்தவெளிக் கடையைப் பார்த்து, “நான் வெறும் பரோட்டாவாவது சாப்பிடுகிறேன்” என்று சொல்லி, கடையை நோக்கிச் சென்றார்.
நாங்கள் நிழலுக்காக, அருகிலிருந்த வீட்டின், கீற்றுக் கொட்டகைக்கு அடியில் நின்றோம்.
அப்பொழுது அந்த வீட்டிற்குள் இருந்து எட்டிப் பார்த்த பெண்மணி ஒருவர், “உங்களைப் பார்த்தால் இந்தப் பகுதிக்குப் புதிதாக இருக்கிறதே?” என்றவர், தன் கணவரை அழைத்தார்.
“இங்கு ஏதாவது நல்ல ஹோட்டல் இருக்கிறதா? கண்ணில் எதுவுமே படலையே, நாங்க லஞ்ச் சாப்பிடலாம்..னு இறங்கினோம்”, என்று எங்கள் பயணத்தைப் பற்றி அவரிடம் சொன்னோம்”
அவர், “இங்க பக்கத்துல எதுவும் கிடையாது. நீங்கள் திருமயம் போய்ச் சேர்வதற்குள் ‘சாப்பாட்டுக்கடை’ மூடிவிடுவார்களே?”
அதற்குள் அவர் மனைவி, “முதல்ல உள்ளே வாங்க”, என்று எங்களை அழைத்தார்.
உள்ளே நுழைந்தால், சுமார் ஐம்பது பேர் இலை போட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
“எனது அண்ணன் மகனுக்கு, இன்னும் இரண்டு நாட்களில் திருமணம். கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்துள்ள சமையற்காரர்கள், முன்னதாகவே ஒருநாள் விருந்து சமைத்து, அதை ருசி பார்ப்பது வழக்கம். அந்தப் பந்திதான் நடந்து கொண்டிருக்கிறது. வந்து உட்காருங்கள்”’ என்றார் கனிவாக.
முன்பின் தெரியாத ஒருவர் வீட்டில், விருந்து சாப்பிடுவது நியாயமாக இருக்காது என்று தயங்கி, “எங்கள் நண்பர் ஏற்கனவே கடைக்குப் போய்விட்டார், எங்களுக்காகக் காத்திருப்பார். போக வேண்டும்” என்றோம்
உடனே ஒரு பையனைக் கூப்பிட்டு அந்தக் கடைக்கு அனுப்பி, அவரையும் அழைத்து வரச் சொன்னார்கள். வரும்போது டிரைவரையும் கூட்டிவந்தார் அந்த மனிதர்.
தலைவாழை இலை போட்டு, வடை பாயசத்துடன் ஒரு தடபுடல் சாப்பாடு எங்களுக்கு நடந்தது.
முடிவில் ஏற்கனவே தயாராக இருந்த ஒரு பையில் ‘ரிட்டர்ன் கிஃப்ட்’ உட்பட தாம்பூலமும் கொடுத்தார், அந்தப் பெண்மணி.
“அட தாம்பூலப் பையெல்லாம் எதுக்குங்க?” என்று நாங்கள் தயங்கி, மணமக்களுக்காக எங்களது சார்பாக நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று அங்கிருந்த அழைப்பிதழ் கவரில் பணம் வைத்துக் கொடுக்க,
“மொய் எல்லாம் வாங்க மாட்டோம், சிவனடியார்களுக்கு சோறிட்ட புண்ணியம் போதும்”, என்று மறுத்துவிட்டார்கள்.
அவர்கள் குடும்பமே வாகனம்வரை வந்து எங்களை வழியனுப்பியது.
“பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்..” – என்று ஒன்பதாம் திருமுறையில் சேந்தனார் அருளிய பல்லாண்டு பதிகம் நினைவுக்கு வந்தது.
ஒரு பெண் என்பவள், குழந்தையின் பசியை மட்டும் அறிந்தவள் அல்ல. பசியால் வாடும் எவர் முகத்தையும் அவளால் அறிய இயலும். அதைத் தீர்க்காமல் அவளால் கடந்து செல்ல இயலாது.
அதனால்தான் அத்தகைய மாதரசிகளுக்கு ‘அன்னபூரணி’ என்கிற அடைமொழி..!!

அற்புத அனுபவங்கள்.
கொடுத்து வைத்தவர். இறைவன் அருள் பெற்றவர்.
LikeLike