பெயர்தான் “பொழுது போகாத” என்றிருந்ததே தவிர அது எங்கள் இருவரையும் பெண்டு நிமிர்த்திய சுவாரஸ்யமான வேலை.

எத்தனை வாரங்கள் தொடர்ந்து பிரசுரமாயிற்று தெரியுமா?

என்று கேட்டு சென்ற அத்தியாயத்தை நிறுத்தியிருந்தேன். இப்போது அதை நினைத்தாலும் பல்ஸ் எகிறுகிறது.

ரா கி ர அவர்கள் பாமாஜியை அழைத்து ஐடியாவை ரத்தினச் சுருக்கமாக விளக்கினார்.

அலட்சியமாக நாம் நினைக்கும் விஷயங்களை அலட்சியம் செய்யாமல் கவனித்து எழுத வேண்டியதுதான் அந்த பொ போ  பொ (ஆரம்ப நாட்களில் பொழுது போகாத பொம்மு என்று விஸ்தார டைட்டில் வைத்தாலும் மக்களுக்குப் பழகி விட்டதான் இப்படி பொ போ  பொ என்றே டைட்டில் போட ஆரம்பித்தார்கள்.

முதலில் ஐடியாக்கள் கொடுக்க வேண்டும். வேலையத்தவர்கள் செய்யும் வெட்டி வேலை என்று யோசித்துப் பாருங்கள்? உங்களால் ஒரு லிஸ்ட் எழுத முடியுமா? இரண்டு பேரும் எழுதினோமே..

மாதுளம்பழத்தில் எவ்வளவு முத்துக்கள் இருக்கும்?

ரயிலில் எத்தனை பெண்கள் வட்டப் பொட்டு வைத்துக்கொள்கிறார்கள்.. திலகம் இட்டுக் கொள்கிறார்கள்.. ஸ்டிக்கர் வைத்துக்கொள்கிறார்கள்.. அவர்களில் எத்தனை பேர் கலர் ஸ்டிக்கர்.. எத்தனை பேர் சிவப்பு..எவ்வளவு பேர் மெரூன் என்று கணக்கிடலாம்.

என்றெல்லாம் ஐடியாக்கள் எழுதிக் கொடுத்தோம்.

பொதுவாக இது போன்ற சுவாரஸ்யமான ஐடியாக்கள் ஆறு வாரங்கள்தான் பிரசுரமாகும். மக்களுக்கு போரடிக்க ஆரம்பிக்குமுன் நிறுத்திவிட வேண்டும் என்பார் எடிட்டர் எஸ் ஏ பி. இதில் வெரைட்டி இருந்ததால் போரடிக்கவில்லை போலும்.

போரடிக்கவில்லை என்பதை எதை வைத்துத் தீர்மானிப்பார்கள் தெரியுமா?

ஒரு குறிப்பிட்ட கதைக்கோ, தொடர்கதைக்கோ, தொடர் அம்சத்துக்கோ எத்தனை கடிதங்கள் வருகின்றன என்பதை வைத்தே எடைபோடுவார்கள். அதிகக் கடிதம் வந்தால் (திட்டியோ பாராட்டியோ)  அதைத் தொடர்வது பற்றித் தீர்மானிப்பதோடு கடித எண்ணிக்கைக்குத் தக்கவாறு கடிதங்களைப் பிரசுரிப்பது பற்றியும் தீர்மானிப்பார்கள்.

இந்தப் பகுதி மிகவும் புகழ் பெற்றுவிட்டது. எனவே.. ஒரு வருடத்தைக் கடந்து பிரசுரமாயிற்று.

முதலில் ஐடியாக்களின் பட்டியலைக் கொடுப்போம். நானும் இவருமாய் உட்கார்ந்து மண்டையை உடைத்துக்கொண்டு பட்டியல் போடுவோம். பத்தில் இரண்டு டிக் ஆகி வரும்.

ஒரே சந்தோஷம் என்னவென்றால், இதில் நான் நிறைய ஈடுபட்டு என் கணவரின் சிரமத்தைக் குறைக்க முடிந்ததுதான்.

அது போல் நாங்கள் பலாப் பழத்தில் எத்தனை சுளைகள், ஆழாக்கு அரிசியில் எவ்வளவு அரிசிகள், தர்ப்பூசனிப் பழத்தில் எத்தனை விதைகள் இருக்கும், எத்தனை பெண்கள் பின்னலின் நுனியில் முடிச்சுப் போடுவார்கள், ரப்பர்  பேண்ட் போடுவார்கள்… பவழ மல்லிப் பூ மரத்தை மூன்று நிமிடம் உலுக்கினால் எத்தனை பூக்கள் உதிரும்… சினிமா தியேட்டரில் உள்ள எடை பார்க்கும் இயந்திரத்தில் எத்தனை பேர் எடை பார்ப்பார்கள்.. so on and so forth.

“இன்னிக்கு இந்த ஐடியா ஓ கே ஆயிருக்கு. நீ இதை நாளைக்குச் செய்து எழுதிக் கொடுத்துடு” என்றார் ஒரு நாள்.

200 கிராம் டூத் பேஸ்ட் கொண்டு எவ்வளவு நீளத்துக்கு இழை கோலம் போல் கோடு போட முடியும்?

எங்களுக்குத் திகைப்பே ஏற்படவில்லை. ஏனெனில், இந்த ஐடியாவை எப்படிச் செயலாக்கலாம் என்று யோசித்த பிறகுதானே ஐடியாவையே எழுதிக் கொடுப்போம்!

காலையில் முதல் வேலையாய்ப் போய் டூத் பேஸ்ட் வாங்கி வந்தேன். கணவரின் மேஜையை முழுக்க ஒழித்தேன். மேஜை மேலிருந்த கண்ணாடியை அழகாய் ஒரு ஈரத்துணி போட்டுத் துடைத்தேன். வடாம் பிழிவது போல் நீ…ளக் கோடுகளாய் அடுத்தடுத்துப் போட்டேன். பாதியிலேயே கண்ணாடி நிரம்பிவிட்டது. அடுத்து டைனிங் டேபிளைத் துடைத்து..

ஸ்கேல் வைத்து அளந்து எழுதிக் கொண்டேன். இவர் வந்தபிறகு ஒரு முறை காண்பித்து பிறகு ஒரு ஐஸ்கிரீம் மர ஸ்பூனால் எடுத்து ஒரு சின்ன எவர்சில்வர் டப்பாவில் துவையல் மாதிரி வழித்துப் போட்டேன்.

இப்போது மாதிரி மொபைல்  போன் இருந்திருந்தால் சாமி சத்தியமாய் போட்டோ எடுத்து வைத்திருப்பேன்.

அடுத்த சில வாரங்களுக்கு நாங்கள் பேஸ்ட் ட்யூபைப் பிதுக்காமல், குட்டி டப்பாவிலிருந்து சின்ன ஸ்பூனால் எடுத்து பிரஷ்ஷில் போட்டுப் பல் துலக்கியது  தனிக்கதை.

இது லைட்டான விஷயம் போல் தெரியும். நாங்கள் இதை பிராக்டிகலாகச் செய்தோமா இல்லையா என்ற சந்தேகம் பொது மக்களுக்கு வரக்கூடாது என்பதில் எடிட்டர் கவனமாக இருந்தார். இதை யாரேனும் செய்து பார்த்தால் கூடச் சரியாக வர வேண்டும் என்று நினைத்திருக்க வேண்டும்.

ஒரு முறை ஒரு ஆழாக்கு அரிசியில் எத்தனை அரிசிகள் இருக்கும் என்று என்னை எண்ணச் சொல்லிவிட்டு இவர் ஆபீசுக்குப் போய்விட்டார்.

பத்துப் பத்தாகச் சேர்த்து வைத்தேன். பிறகு அவற்றை நூறுகள் கொண்ட குவியலாக்கினேன். இவ்வாறு கால் ஆழாக்கு செய்வதற்குள் மதியம் ஆகிவிட்டது.  டக்கென்று ஓர் ஐடியா தோன்றியது. நாலால் பெருக்கினால் ஒரு ஆழாக்குக்கு விடை வந்துவிடுமே!

அப்படியே செய்தேன்.

மாலையில் பாமா கோபாலன் வந்தவுடன் விஷயத்தை விவரித்தேன். அவருக்குத் திருப்தியாகவில்லை.

அப்படிச் செய்வது தவறு என்றார். ஒழுங்காக முறையாகச் செய்ய வேண்டும் என்றார். இதை நான் விளக்க வேண்டுமானால் அவரின் மனச்சாட்சி பற்றித் தனியானதொரு கட்டுரையே எழுத வேண்டியிருக்கும்.

மறுபடியும் முழு ஆழாக்கு அரிசியை நானும் அவருமாய்ச் சேர்ந்து இது போல் நூறை ஆயிரமாக்கிக் குவித்துக்குவித்து எண்ணினோம். நிறைய நேரம் ஆயிற்று.

மறுநாள் கொண்டு கொடுத்தார். மறுவாரம் பிரசுரமாயிற்று..

ரா கி ர வந்து “ஜெயிச்சுட்டேள்” என்றார்.

நான் அரிசி எண்ணிய அதே தினத்தில் எடிட்டரும் சப் எடிட்டர்களும் எடிட்டர் அறையில் ஒரு ஆழாக்கு அரிசியை சின்சியராக எண்ணிச் சரிபார்த்தார்களாம்.

ஐந்தாறு வரி விஷயத்துக்கு அவர்கள் இத்தனை சிரமங்கள் பட வேண்டுமா என்றால்.. பட்டார்களே..

குமுதம் அப்படி ஒன்றும் லைட்டான பத்திரிகை இல்லை!!

 

குமுத நினைவுகள் தொடரும்..