
வடிவம் அழகு சிலமலர்கள்,
வண்ணம் அழகு சிலமலர்கள்,
செடியில் கொடியில் கொம்புகளில்
சிரித்து மணக்கும் சிலமலர்கள்,
விடியும் காலைப் பொழுதினிலே
விரிந்து பூக்கும் சிலமலர்கள்,
முடியும் நாளின் மாலையிலே
முகிழ்த்து மகிழும் சிலமலர்கள்.
கோடை பூக்கும் சிலமலர்கள்,
குளிரில் தோன்றும் சிலமலர்கள்,
கூடும் வசந்தம் கொள்ளையெழில்
கொண்டு களிக்கும் சிலமலர்கள்,
ஆடும் கொத்தாய்ச் சிலமலர்கள்,
அலரும் தனியாய்ச் சிலமலர்கள்,
வாடும் உடனே சிலமலர்கள்,
வாழும் பலநாள் சிலமலர்கள்.
வகையும் பண்பும் வேறுபட்டும்
மலர்கள் யாவும் அழகன்றோ?
தகவில் உயர்வு தாழ்வென்று
சாற்றும் செயல்வீண் வேலையன்றோ?
திகழும் வாழ்வின் உண்மையினைத்
தெளிவோம் ஒப்பு நோக்குவதேன்?
மிகையும் குறையும் மனத்தளவே,
விந்தை வாழ்வின் வனப்பறிவோம்!
(தகவு – தகுதி/ பெருமை/சிறப்பு)
