மதுரையை எரித்துவிட்டு சென்ற கண்ணகி தெய்வமான கதை தெரியுமா? | Kannagi went where after she burned Madurai - Tamil BoldSkyநெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தில் காவியத்தலைவன் கோவலன் பாட்டுடைத் தலைவி கண்ணகி. பூம்புகார் நகரில் சோழ மன்னனுக்கு இணையாக செல்வமும் செல்வாக்கும் பெற்ற சாத்து வணிகம் செய்கின்ற மாசாத்துவானின் மகன் கோவலனுக்கு மாரிப் போல் வாரி வழங்கும் மாநாயக்கன் மகள் கண்ணகியை திருமணம் செய்கிறார்கள். சராசரி மனிதர்களுக்கே உரிய ஆசாபாசங்கள் மட்டுமல்ல சஞ்சலமும் சலனமும் அதீத கலாரசனையும் கொண்ட கோவலன் நாட்டிய மங்கை மாதவியிடம் மையலுற்று தன்னுடைய சொத்து செல்வம் செல்வாக்கு எல்லாவற்றையும் இழந்து ஒரு இந்திர விழா நாளில் மனஸ்தாபம் ஏற்பட்டு தன் மனைவி கண்ணகியிடம் திரும்புகிறான். தான் மதுரைக்குச் சென்று வியாபாரம் செய்து பொருள் ஈட்டி வருவதாக சொல்லி கிளம்புகிறான். இனியும் உம்மை பிரிந்து இருக்க ஏலாதென்று மணநாளில் தன் கரம் பற்றியவன் கரத்தை தானும் பற்றி அவனோடு கிளம்புகிறான் கண்ணகி.

மாளிகையின் வாசல் மரக்கதவு மிகப் பிருமாண்டமானது. அதில் கவரிமான் ஆட்டுக்கிடாய், அன்னபட்சிகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தது. பித்தளையில் கனமான நாதாங்கியை எடுத்து பாரமான கதவை இழுத்து திறந்து கொண்டு வெளியேறினார்கள் இருவரும்.
கோவலனுடன் கண்ணகி தன் வீட்டு கதவை திறந்து கொண்டு வெளியே கிளம்பும்போது தொடங்குகிறது அவளுடைய பயணம். இருவரும் ஊரில் உள்ள எல்லா கோவில்களையும் வணங்கி விட்டு ராஜபாட்டை வழியாக செல்லாமல் காவிரியின் வடகரையே வழியாக செல்கிறார்கள் ஒரு சோலையில் இளைப்பாறி செல்வதற்காக தங்குகிறார்கள். கண் அசந்தவள் விழித்ததும் கணவனிடம் கேட்கிறாள் “மதுரை புதூர் யாது?” என்று. புகார் நகரை விட்டு கிளம்பி ஒருநாள் பயணம் கூட முடியாத நிலையில் இன்னும் முப்பது காக தூரம் பயணம் செய்ய இவளால் இயலுமா என்று அவள் மேல் பச்சாதபம் கொள்கிறான் கணவன் கோவலன். எனவே இலகுவாக இருக்கட்டுமென அஞ்சாறு காதம் என்று சொல்கிறான்.

வழிப்பயணத்தில் கவுந்தியடிகள் என்னும் சமண பெண் துறவியை சந்திக்கிறார்கள். கோவலன் தன் கதையை சொல்லி மதுரைக்குப் போகும் வழியை கேட்க, தானும் மதுரைக்கு தான் செல்வதாக சொல்லி தன்னுடன் அவர்களை அழைத்துச் செல்கிறார். சோர்ந்து போகும் போதெல்லாம் ஆறுதல் கூறுகிறார். “தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி” என்றும் கற்புக்கரசி என்றும் கண்ணகியை போற்றுகிறார். மூவரும் உறையூர் வந்து சேர்கின்றனர். அங்கே சமணப் பள்ளியான நிகந்த மடத்தில் தங்குகிறார்கள்.
அப்போது திருவரங்கத்திலிருந்து திருவேங்கடம் செல்லும் மாங்காட்டு மறையோனை சந்திக்கிறார்கள். கோவலனுக்கு நிமித்தம் சரியில்லை என்றும் இப்போது மதுரைக்குச் செல்வது அவனுக்கு ஆபத்தாக முடியும் என்று பூம்புகார் திரும்பிச் செல்லும்படியும் அறிவுரை கூறுகிறார். ஆனால் அதை மறுத்து தங்களுக்கு மதுரைக்குச் செல்லும் வழியை சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறான் கோவலன்.

உறையூரிலிருந்து கொடும்பாளூர் சென்று விட வேண்டும். அங்கிருந்து திரிசூலத்தின் மூன்று முனைகள் போல மதுரைக்கு மூன்று வழிகள் செல்லும். ஒன்று காட்டு வழி ஒன்று பாறைகள் நிறைந்த வழி மற்றொன்று நல்ல பாதை அதாவது கொடும்பாளூரிலிருந்து மதுரைக்கு கிழக்கு புறமாக அழகர் மலை வழியாக நுழைவதற்கான வழி சிறந்தது என்று சொல்கிறார். மேலும் உறையூரிலிருந்து கொடுப்பாளூர் செல்லும் வழியில் அடர்ந்த காடுகள் இருப்பதால் அங்கே வன தேவதைகள் உண்டு என்றும் அவைகள் நமக்கு வேண்டியவர்களை போன்ற உருவத்தில் வந்து நம்ம திசை திருப்பி விடும் என்றும் சொல்லி சொல்கிறான்.

காட்டுப் பாதையில் மாதவியின் தோழி வயந்தமாலையை சந்திக்கிறார்கள். மாதவி கருவுற்றிருப்பதையும் கோவலன் நினைவாகவே இருக்கிறாள் என்றும் மாதவியின் துயர் கண்டு வருந்தி அமளிமிசை வருந்துபு நின்றவளாக மாதவியின் தாய் ஊருக்கு திரும்பி வரும்படியும் சொன்னதாக சொல்லி அவனை புகார் அழைக்கிறாள். ஆனால் கோவலன் அதை மறுத்து விட்டான். வன தேவதை தான் வயந்தமாலையின் வடிவில் வந்தவள். வழியில் கோசிகமணி மாதவியிடமிருந்து கடிதம் கொண்டு வருகிறான்; புகார் நகரத்துச் செய்திகளைக் கோவலனிடம் பகர்கின்றான். கோவலனைப் பற்றிய செய்திகளைக் கொண்டு சென்று அவன் பெற்றோர்களிடம் சேர்ப்பிக்கிறான். கோவலனைத் திருத்துகிறான். மாதவி தீதிலள்” என்பதை அறிய வைக்கிறான். தன் தீமையை உணர வைக்கிறான். அவன் கோவலனுக்கு ஊர்ச் செய்திகளை உரைத்து ஆறுதல் தருகிறான்.

கொடும்பாளூர் வந்த மூவரும் அங்கிருந்து கிழக்கு கோட்டைக்குள்ளே நுழைகிறார்கள். இன்றைக்கும் கொடும்பாளூர் மதுரைக்கு செல்லும் வழியில் ஒரு சிறு கண்ணகி கோயில் உள்ளது. கவுந்தியடிகள் இருவரையும் மதுரையின் புறச்சேரியில் தன் மகள் மாதரியிடமும் ஐயையிடமும் அவர்களை ஒப்படைக்கிறாள். அறத்துடன் வணிகம் செய்திட வேண்டும் என்று அறிவுரை கூருகிறாள். அங்கே கோவலனும் கண்ணகியும் இன்புற்று வாழ்கின்றனர். மதுரையை சுற்றிப் பார்த்து வந்த கோவலன் வணிகம் செய்திட சிறந்த ஊர் என்று மதுரையை புகழ்ந்து சொல்கிறான். அவளும் தன் காலில் அணிந்திருந்த சிலம்பு ஒன்றை கழட்டி அதை விற்று முதலாக கொண்டு வணிகம் செய்ய அனுப்புகிறாள். அரசி கோப்பெருந்தேவியின் கால் சிலம்பு ஒன்றை அரண்மனை பொற்கொல்லன் திருடியிருப்பான். அதை கோவலன் திருடி விட்டான் என்று வீண்பழி சுமத்த அரசன் ஆரியப்படைக் கடந்த நெடுஞ்செழியன் கோவலனை கொன்று விட ஆணையிடுகிறான்.

தன் கணவன் வீண்பழி சுமத்தப்பட்டு இறந்து விட்ட செய்தியறிந்த கண்ணகி சினம் கொண்டு தன் கையில் தன்னுடைய மற்றொரு சிலம்பை ஏந்தி அரண்மனை சென்று வாதிடுகிறாள். தன் தவறை உணர்ந்த பாண்டியன் “யானோ அரசன், யானே கள்வன்” என்று அரியணையிலிருந்து கீழே விழுந்து உயிர் துறக்கிறான். அவன் மனைவியும் “கணவனை இழந்தோருக்கு காட்டுவது இல்” என்று தானும் கணவன் பாதம் விழுந்து இறந்து போகிறாள். சினம் தணியாத கண்ணகி தன் இடது முலையை திருகி எரிந்து மதுரை எரிந்து போகட்டும் என்று சாபமிடுகிறாள். அதே சினத்துடன் செல்லும் திசையறியாது நடப்பவளை மதுரை மாநகரின் வனதேவதை ஆற்றுப்படுத்தி பதினான்கு நாட்கலுக்குப் பிறகு அவள் கோவலனுடன் சேர்ந்து விடுவாள் என்று சொல்கிறது.

கண்ணகியாள், நெடுவேல்குன்றம் சென்று மலர் நிறைந்த ஒரு வேங்கை மரத்தின் அடியிலே நின்றனள், மதுரைமா தெய்வம் கூறியதைப் போலவே, வானுலகத்திலிருந்து தேவருடன் கோவலன் வர, அவனுடன் அவளும் விமானம் ஏறி வானகம் நோக்கிச் சென்றனள். அக் காட்சியைக் குறவர் குடியினர் கண்டனர். அவர்கள் அடந்த வியப்போ பெரிது!அதனால், அவளைத் தம் குலதெய்வமாகவே கொண்டு வழிபட்டுப் பணிந்து போற்றலாயினர். இந்த காப்பியத்தை எழுதிய இளங்கோவடிகளாரின் மூத்த சகோதரன் அரசன் சேரன் செங்குட்டுவன், பத்தினியாளான கண்ணகிக்கு இமயத்திலேயிருந்து கொணர்ந்த கல்லிலே படிவம் சமைத்து, அதனை முறைப்படி, விழாக்கோலத்துடன் தெய்வமாக போற்றிக் கொண்டாடினான்.

சாதாரண பெண்ணானக கணவனைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவளாக கிளம்புகின்ற கண்ணகி, மதுரையில் அதிகாரத்திற்கு எதிர்த்து நீதி கேட்டு சிங்கப்பெண்ணாக பயணம் மேற்கொள்கிறாள். மீண்டும் பயணித்து நெடுவேல் குன்றத்தில் தன் கணவனுடன் சொர்க்கம் அடைந்து தெய்வப் பிறவியாகி இன்றளவும் கொண்டாடப்படுகிறாள். இதுதான் சிலப்பதிகாரம் சொல்லும் கண்ணகியின் பாதை.

பூம்புகார் மற்றும் கண்ணகி சிலையை கண்டுபிடித்த பேராசிரியர் சி.கோவிந்தராசனார் வரலாறு/C.Govindarasanarசேரன் செங்குட்டுவன் உண்டாக்கிய கண்ணகியின் சிலையும் கோவிலும் இன்று எங்குள்ளது என்பதை சிலப்பதிகாரத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்ட கரந்தை தமிழ்சங்கத்தில் பேராசிரியர் சி. கோவிந்தராசனார் கண்ணகி கோயிலைக் கண்டு பிடித்து, இவ்வுலகிற்கு அறிவித்தப் பெருமைக்கு உரியவர். கண்ணகியின் அடிச்சுவட்டில், கண்ணகி பயணித்த பாதை வழியே பயணித்து, பதினேழு ஆண்டுகள் நடந்து, கண்ணகி கோயிலைக் கண்டு பிடித்த ஆய்வாளர் இவர்.

டற்கரையில் மீனவர்களின் ஒரு சில குடிசைகளுடன், மணற் பரப்பும், மணல் மேடுகளும், கள்ளியுடன் காரைச் சூரைச் செடிகளும், செறிந்த புதர்களும், சவுக்குத் தோப்புகளும், புனங்காடுகளும் சூழ்ந்திருந்த பட்டணம் என்று அழைக்கப்பட்ட பகுதியே, பண்டைய புகார் நகரம் இருந்த இடம் என்பதைக் கண்டு பிடித்தார்.

கடலில் மூழ்கிய மீனவர்கள் பழமையான செங்கற் பகுதிகள், சுண்ணாம்புக் காரைகள், பாசி படிந்த பானை ஓடுகள் கடற்கோளினால் அழிந்து கடலடியில் மறைந்து நிற்கும், நிலப் பரப்பே காவிரிப் பூம்பட்டிணம், கண்ணகி பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார்.

திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில், பழங்காலத்தில், இடுகாடாக இருந்த கோவலன் திடல் என்ற பகுதியினையும், செல்லத்தம்மன் கோயிலில் இருந்த, கண்ணகி சிலையினையும் கண்டு பிடித்தார். பிறகு மதுரையில் கோவலனை இழந்த கண்ணகி, சேரநாடு நோக்கிச் சென்ற வழியில், இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன் நடக்கத் தொடங்கினார். வையை ஆறானது, சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள, பாதை வழியாகவே, தடம் மாறாமல் இன்றும் பயணிப்பதைக் கண்டு கொண்டார்.

மேல் சுருளி மலையை அடைந்து ஆராயத் தொடங்கினார். சுருளி மலைதான் நெடுவேள் குன்றம் என்பதை உறுதிசெய்தார். சித்தன் இருப்பு என்ற பெயருடன் விளங்கிய மலை, ஆவினன் குடியாகி, பின்னர் பொதினி மலையாக மாறி, தொடர்ந்து அதுவும் திரிந்து பழநி மலை என்று ஆனது போலவே, நெடுவேள் குன்றம் என்னு ம்பெயர், மலையில் இருந்து சுருண்டு விழும், அருவியின் பெயரால் சுருளிமலையாக மாறியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.
சுருளி மலை த்தொடராலும், பழநி மலைத் தொடராலும் இணைந்து முப்புறமும் சுவர் வைத்தாற்போல் சூழப்பட்ட பகுதியில், வர்ஷ நாடு எனப்படும், கம்பம் பள்ளத்தாக்கின் காட்டுப் பிரதேசம் பரந்து விரிந்து கிடக்கிறது.

கீழக் கூடலூருக்குத் தெற்கே உள்ள பெருமாள்கோயிலில் கல் வெட்டு ஒன்றினைக் கண்டுபிடித்தார். கி.பி.14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த கல்வெட்டு அது. மங்கல தேவி அம்மன் பூசைக்கு, சேர மன்னன் ஒருவன், தானமாக வழங்கிய நிலங்களைப் பற்றிய செய்தி, அக்கல்வெட்டில் பொறிக்கப் பட்டிருந்தது. கண்ணகிக்கு அடைக்கலம் தந்த பொழுது, அவளுக்கு உரிய சிறப்புப் பெயரில் ஒன்றான, மங்கல மடந்தை என்னும் பெயரை, கவுந்தி அடிகள், இடையர் குல மகளான மாதரியிடம் கூறும் காட்சி, இவருக்கு நினைவிற்கு வந்தது.

1963 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள், மங்கல தேவி மலையின் மேற்பரப்பிற்குச் சென்றார். கோரைப் புற்காடு எட்டடி உயரத்தற்கு வளர்ந்து மண்டிக் கிடந்தது. 200 அடி பக்கமுள்ளதாகவும், ஓரளவு சதுரமாக உள்ளதுமாகிய கோட்டத்தைக் கண்டார். கருங்கற்கள் அடுக்கிய நிலையில், யானைகள் உள்ளே வராத வகையில் மதிற்சுவர் அமைந்திருந்தது. உட்பகுதி முழுவதும் புதர் மண்டிக் கிடந்தது. செடி கொடிகளால் சூழப்பட்டு சிதைந்த நிலையில் நிற்கும் கற்படைக் கோயில்கள் நான்கு ஆங்காங்கே இருந்தன. இரண்டு கோயில்கள் சிறியதாகவும், அழகுடனும் காட்சியளித்தன. இக்கோயிலின் உட்பகுதி வேரும், விழுதும், தழை மடிசல்களும், மழை நீரும் நிறைந்து, இடிபாடுகளுடன் இடிந்து கிடந்தது. கோட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஓர் அழகானப் படிக்கட்டு. அதற்கு முன்னர் அரைகுறையாகக் கட்டப்பட்டு குத்துக் கற்களுடன் நிற்கும் வாயில், கோட்டத்திற்கு வெளியே சிறு சுனை. சுனையினைச் சூழ்ந்து, அடர்ந்த இருண்டு நிற்கும் காட்டு வேங்கை மரங்கள். மிகப் பழமையோடு கூடியதும், பலி பீடத்துடன் உள்ளதுமாகிய மூன்றாவது கோயிலின் அருகினில் சென்றார்.

உள்ளே சுமார் இரண்டடி உயர அளவில், ஒரே கல்லில், இரண்டு கைகளுடன், இடது காலை பீடத்தில் மடக்கி, வலத காலை ஊன்றிய நிலையில், ஒரு பெண்ணின் சிலை. அப்பெண்ணின் தலையில் கிரீடம் இல்லை. விரிந்த கூந்தல். இடதுபுற மார்பு சிறிதாக இருந்தது. பல நூற்றாண்டுகளாக, இச்சிலை வழிபாட்டிற்கு உரியதாக இருந்துள்ளது என்பதனை, சிலையில் இருந்த வழவழப்பான தேய்வு புலப்படுத்தியது.

கோவை நன்னெறிக் கழகத்தின் சார்பில், 21.3.1965 அன்று சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், முதல் முதலில் கண்ணகி சிலையினைக் கண்டு பிடித்தது பற்றிய செய்தியை உலகிற்குத் தெரியப் படுத்தினார்.

இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது, தனது கண்டுபிடிப்பு பற்றி, சிறிய ஆங்கில நூல் ஒன்றினையும் வெளியிட்டார். அன்றைய தமிழக முதல்வர் அவர்கள், இளங்கோவடிகள் சிலைத்திறப்பு விழாவின்போது, பேராசிரியர் சி.கோவிந்தராசனாரின் கண்டுபிடிப்பு பற்றி, தமிழ் உலகிற்கு அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

மதுரையில் இச்செயல் நடந்து பாண்டிய நெடுஞ்செழியன் மரணமடைந்த போது அவன் தம்பியும் அடுத்த இளவரசனுமான வெற்றிவேற் செழியன் கொற்கையில் முகாமிட்டிருந்தான். அவன் மதுரைக்கு விரைந்து வந்து ஆட்சிப் பொறுப்பேற்று நடந்ததை விசாரணை செய்து காரணமான பொற்கொல்லனையும் அவனது பரிவாரங்களான ஆயிரம் பேர்களையும் தூக்கிலிட்டான். கண்ணகிக்கு நடுகல் எடுத்து வழிபாடு செய்தான் என்றும் கூறுகின்றனர்.
செவி வழி செய்திகள்.

மதுரைக்குள் நுழைந்தபோது கவுந்திஅடிகள் மாதரி என்னும் இடைக்குல மங்கையிடம்தான் கண்ணகியை ஒப்படைத்துச் சென்றார் என்கிறது சிலப்பதிகாரம். கண்ணகி தன் ஒரு மார்பை பிய்த்து எறிந்து மதுரையை எரித்தபின் ஆங்காரத்தோடு அமர்ந்த இடமே இன்றைய வடக்கு மாசி வீதி. இடது மார்பில் ரத்தத்தோடும் கண்களில் சினத்தோடும் உடல் நடுங்க அமர்ந்திருந்த கண்ணகியை இடைக்குல மங்கையர் ஆறுதல் படுத்தினர்.ஒரு பெண் கண்ணகி மார்பில் வெண்ணெயை எடுத்துப் பூசினாள் . வெண்ணெய் உருகி எரிச்சல் குறைந்த கண்ணகியின் மார்பின் மீது பறையர் குலப் பெண் ஒருத்தி தனது முந்தானையால் விசிறி பின் கிழித்துக் கட்டினாள். இதன் பிறகு இளநீர், பானகம், மாவுப் பொருள்களை பருகவும், உண்ணவும் கொடுத்தனர். இதனால் மனமும் உடலும் குளிர்ந்த கண்ணகி இடையர்குலப் பெண்களைப் பார்த்து “எனது நெருப்பால் எந்தத் தெரு வெந்தாலும் இடைச் சேரி வேகாது” என்றும் பறையர் குலப் பெண்ணிடம் ‘பார் மதுரை எரிந்தாலும் பறையர் தெரு எரியாது’ என்றும் கூறி வாழ்த்தியதாக செவிவழிக் கதைகள் கூறுகின்றன.

பழங்காநத்தம் அருகில் கடச்சனேந்தல் அதாவது கடை சிலம்பு ஏந்தல் என்னும் ஊரில் இருவரும் இன்புற்று வாழ்ந்த வீடு இன்றும் சிதலமடைந்து இருக்கிறது.

சில இடங்களில் கண்ணகிக்கு எழுப்பிய கோயில்களில் கண்ணகியின் படிமம் ஒரு முலை இல்லாத நிலையிலேயே அமைக்கப்பட்டு ஒற்றை முலைச்சியம்மன் என்று அழைக்கப்பட்டு வணங்கப்பட்டது. ஆனால் பின்னர் வந்தவர்கள் ஒரு சிலை என்பது எல்லா உறுப்புக்களோடும் அமைய வேண்டும். இவ்வாறு இடது மார்பு இல்லாமல் அங்கஹீனமாக இருப்பதால் இதனை வைக்கக் கூடாது. “அங்க சிதைவு ஆகம மரபு ஆகாது” என்று கூறியதால் இச்சிலைகள் அகற்றப்பட்டு வேறு சிலைகள் இடம் பெற்றன.

பழங்கானத்தம் அருகில் உள்ள கருமாரியம்மன் கோவில் கண்ணகி கோயிலாகும். இங்கு கோவில் புதுப்பிக்கும் பணியின் போது சிதிலமடைந்த கண்ணகி சிலை ஒன்றும் (வட்டக்காதணியுடன்) கிடைக்கப்பெற்றது. மேலும் தோண்டுகையில் தலையுள்ள சிலை மட்டும் தனியாக கிடைத்தது. இங்கு கண்ணகிக்கு வெண்ணெய் பூசும் நிகழ்வு நடைபெறுகின்றது. கண்ணகி தன் நீதி கேட்கும் முன் ஒற்றைகால் சிலம்பினை கழற்றிய இடமாக இது அறியப்படுகின்றது.கடசிநேந்தல்
மதுரை செல்லாத்தம்மன் கோவிலும் கண்ணகி கோவிலே. இக்கோவிலானது, கவுந்தியடிகள் கண்ணகியை இடையர்குலத்தில் அடைக்கலமாக தங்கி இருந்த இடமே இன்றைய செல்லத்தம்மன் கோவில். கோவலன் பொட்டலில் உள்ள தலைவெட்டிய இடத்தை தோண்டும்போது அங்கும் ஒரு கண்ணகி சிலை கிடைத்தது. இன்றும் அக்கோவிலில் அச்சிலை இருப்பதைக் காணலாம்.
மதுரையை எரித்த பின் கண்ணகி மதுரையின் பல பகுதிகளுக்கும் சென்று அரற்றி வெதும்பினாள். அவ்வாறான ஒரு இடமே இன்றைய மதுரையின் தெப்பக்குளம் மாரியம்மன் எனும் வண்டியூர் மாரியம்மன் கோவிலாக மாறி உள்ளது. இங்கும் கண்ணகி சிலை போலவே மாரி சிலையும் வடிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி யம்மன் கோவிலின் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள நின்ற கோல காளி சிலையும் கண்ணகியாகவே கருதப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். எப்படி கண்ணகி மதுரையில் இழந்த கணவனை இங்கே மீட்டேடுத்தாளோஅதைப் போல கண்ணகி கோயிலுக்கு வந்து சென்றால் தாங்கள் இழந்த செல்வம் செல்வாக்கு குடும்ப மகிழ்ச்சி அனைத்தையும் திரும்பப் பெறுவோம் என்பது நம்பிக்கை.