அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பும் போது ஏர்போர்ட்டில் உட்கார்ந்து கொண்டு செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திருமண நிகழ்வுகள், அந்தக் கல்யாண பெண்கள் விதவிதமான உடைகளில் தயாராவது, ப்ரீ வெட்டிங் ஷூட்டிங், சங்கீத் படங்கள். நடனங்கள், குதூகலங்கள் என்று பலவிதமான ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தேன். திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்கள் இப்போதெல்லாம் எவ்வளவு ஆர்ப்பாட்டமாக அழகு செய்து கொள்கிறார்கள், தன்னைக் கொண்டாடிக் கொள்கிறார்கள் என்று தோன்றியது.
போனைக் கீழே வைத்த பிறகும் கூட அந்த அழகு இளம் பெண்களின் குதூகலமான முகங்கள் மனதில் நிழலாடின. அதே நேரம் இதில் எத்தனை பெண்கள் திருமணத்திற்குப் பிறகும் இதே சந்தோஷம் குதூகலம் இவற்றோடு இருக்கப் போகிறார்கள் என்கிற கேள்வியும் மனதில் எழுந்தது.
திருமணம் என்கிற பந்தத்தில் நுழையும்போது, சந்தோஷம் மட்டுமல்ல, பலவிதமான சவால்கள், பொறுப்புகள், அழுத்தங்கள், அதிர்ச்சிகள் எல்லாமே இருக்கும் தான்! பெண்களுக்கு மட்டுமல்ல இது ஆண்களுக்கும் பொருந்தும். இருந்தாலும் பெண்களுக்கு இவற்றை கையாள்வதோடு இது குடும்ப மான அவமானம் சம்பந்தப்பட்டது என்ற பயமும் இருக்கிறது.அப்படித்தான் அவளுக்குக் கற்பிக்கப்படுகிறது. அதற்கேற்றாற் போலத் தான் சமூகமும் அவளை எதிர்கொள்கிறது.
இதற்குப் பயந்து அவள், ‘புகுந்த வீட்டில் அடங்கிப் போக வேண்டும்’, ‘எதையும் வெளியில் சொல்லக்கூடாது’, ‘அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும்’, ‘தானே சரியாகிவிடும்’, ‘பிறந்த வீட்டில் போய் சொல்லக்கூடாது’ இப்படிப் பல அழுத்தங்களில் மாட்டிக் கொள்கிறாள். அழுத்தம் அதிகமாகும் பொழுது பிரஷர் குக்கர் போல் வெடித்து விடுகிறாள். இப்படிப் பிரச்சினைகள் வரும் போது, வெளிப்படையாகப் பிரிவு, சண்டை, ஆக்ரோஷம், போலீஸ், சச்சரவு என்று கிளம்பும் பெண்கள் ரொம்பக் குறைவு. தற்கொலை, சகித்துக் கொள்ளுதல், சட்டப்படி அல்லாத பிரிவு என்று முடிந்துவிடும் பெண்களின் வாழ்க்கை தான் அதிகம்.அதுதான் பரிதாபம்.
இவை எல்லாவற்றுக்குமே அடிப்படை, இன்றைய இளம் பெண்களின் மனநிலை, அவர்கள் வளர்க்கப்படும் முறை என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு வரும் மேற்சொன்ன அழுத்தங்களோ, சமூகம் சார்ந்த பயங்களோ, காலம் காலமாக இருப்பவை தான் ! சொல்லப்போனால் அதிகம் கல்வி, சம்பாத்தியம், பெற்றோர் ஆதரவு இவைகள் எல்லாம் இல்லாத காலத்திலேயே பெண்கள் இந்த மாதிரி விஷயங்களை எதிர்கொண்டும், எதிர்த்தும், முடிவெடுத்து சொந்தக் காலில் நின்று ஜெயித்துக் காட்டியும் இருந்திருக்கிறார்கள்.
அந்த அளவு மனோ தைரியம், தெளிவான சிந்தனை, லட்சியம், ரோஷம் எல்லாமே பெண்களிடம் அப்போது இருந்திருக்கிறது. திருமணத்தில் பிரச்சனை என்றால் கணவனோ, புகுந்த வீடோ கொடுமைப்படுத்தினால் தூக்கிப்போட்டுவிட்டுப் பெற்றோர் அனுசரணை இல்லாவிட்டாலும் வாழ்ந்து காட்டும் உறுதி அந்தப் பெண்களிடம் இருந்திருக்கிறது.
இந்தக் குணம் தான் இந்த காலப் பெண்களிடம் இல்லையோ என்று தோன்றுகிறது. நிறையப் படிப்பு, வெளியுலக அனுபவம், திறமை, எதையும் கற்றுக்கொண்டு ஜெயிக்கும் குணம், தன்னை அழகாக வெளிப்படுத்திக் கொள்ளும் சீர்மை எல்லாமே இன்றைய இளம் பெண்களிடம் இருக்கின்றன. பார்ப்பதற்கு தைரியமும், மிடுக்கும், தோரணையும் கொண்ட பெண்ணாகத் தான் தெரிகிறாள். வாழ்க்கையில் அவன் கேட்டதெல்லாம், கேட்காததும் கிடைக்கிறது. பெற்றோரும் உடன்பிறந்தோறும் அவளைத் தங்கத்தட்டில் வைத்துத் தாங்குகிறார்கள்.
ஆனால் திருமணமாகி குடும்ப வாழ்க்கைக்குள் வந்ததும், அங்கு சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் தைரியம் அவளுக்கு இல்லாமல் போகிறது.க் தானே தனியாகக் கையாளத் தெரியவில்லை. தூக்கிப் போட்டுவிட்டு வெளியே வரும் துணிவும் இல்லை.
பெற்றோரிடம் ஓடுகிறாள். அவர்கள் ஏதாவது மேஜிக் செய்து நிலைமையை சரி செய்வார்கள் என்று நினைக்கிறாள். அல்லது ‘கவலைப்படாதே! நான் இருக்கிறேன்’, என்று ஏற்றுக்கொண்டு அரவணைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறாள்.
ஆனால் அதுவரை பெண்ணை அல்ட்ரா மாடனாக வளர்த்த பெற்றோர், லட்சம் கோடி என செலவழித்துப் படிக்க வைத்துத் திருமணம் செய்து கொடுத்து அவள் ஆசைப்பட்டது எல்லாம் செய்து கொடுத்த பெற்றோர், இப்போது, ‘சமூகம் என்ன சொல்லும், அட்ஜஸ்ட் செய்து கொள்’ என்று பின்வாங்குகிறார்கள்.அவளுடைய நம்பிக்கைக் கதவு அடைக்கப்பட்ட பின் இப்போது தனியாகத் தன்னுடைய பிரச்சனையை எதிர்கொள்ள அவளுக்குத் தெரியவில்லை. ‘அழுத்தம் தரும், கொடுமைப்படுத்தும், புருஷனும் புருஷன் வீட்டாரும் வேண்டாம். புரிந்து கொள்ளாத பெற்றோரும் வேண்டாம். எனக்கு படிப்பு இருக்கிறது. சம்பாதிப்பேன். என்னுடைய சொந்தக் காலில் நிற்பேன்’, என்று தூக்கிப்போட்டுவிட்டுத் தலை நிமிர்ந்து வாழும் தைரியம் தான் இன்றைய இளம் பெண்களுக்குத் தேவை.
நாம் கேள்விப்படும், பார்க்கும், சில விஷயங்களை வைத்து இன்றைய இளம் பெண்கள் திருமண வாழ்க்கையை மதிப்பதில்லை என்று நினைக்காதீர்கள். இன்னும் பல பெண்கள் பணமிருந்தும் படிப்பு இருந்தும் பயந்த ரித்திகாக்களாக வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெற்றோர்களுக்கு ஒரு வார்த்தை. பெண் குழந்தைகளுக்கு தைரியம் ரோஷம் லட்சியம் இவற்றைச் சொல்லிக் கொடுங்கள்.பிரச்சனைகளோடு வரும்போது துணிந்து அரவணைத்துக் கொள்ளுங்கள்.
சமூகத்தில் நாம் சந்திக்கும் இளம் பெண்களுக்கும் தைரியத்தை சொல்லிக் கொடுப்பது நம் கடமை.

காசுக்கு அலையும் ஒரு குடும்பத்தாருக்கு அந்தப் பெண்ணை தாரை வார்த்திருக்கக் கூடாது. முதல் குற்றம் அவள் தந்தையினுடையது.
எங்கள் பிளாக் ஸ்ரீராம்.
LikeLike