
பரமனுக்கு மனநல மருத்துவரிடம் மாலை 4 மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட். டாக்டருக்கு 3.9 ஸ்டார் ரேட்டிங் இணையத்தில் இருந்தது. பொறுமையாக நிறைய கேள்விகள் கேட்பாராம். பரமன் சரியான நேரத்திற்குச் சென்றார், டாக்டர் சுகப்பிரகாசம் இன்னும் வரவில்லை. ரிசப்ஷன் பெண்மணி புன்னகையுடன் ‘டாக்டர் விரைவில் வந்து விடுவார், அமருங்கள்’ என்றாள். அந்த ‘விரைவில்’ என்பது ஒரு மணி நேரம் ஆகியது. அது வரையில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த விதவிதமான போஸ்டர்களை பார்த்தார். அதற்குள் ஒரு 15 நபர்கள் சேர்ந்து விட்டார்கள். டாக்டருக்கான டிமாண்ட் இருப்பதை நிரூபிக்க கிளினிக்குகள் பின்பற்றும் தந்திரமாகப் பட்டது. அழைப்பு மணி அடித்தவுடன் பரமன் டாக்டர் சேம்பரில் உள் நுழைந்தார்.
“எஸ். உங்கள் பெயர் ?”
“சுருக்கமா பரமன். பாஸ்போர்ட், ஆதார் பிரகாரம் முழு பேரு பரமன் சிவன். சிவன் எங்க அப்பா பெயர். வோட்டர் ID , டிரைவிங் லைசென்ஸ்-ல் நிறெய மிஸ்டேக்ஸ். நண்பர்கள் பரம் என்பாங்க. உங்களுக்கு வேண்டிய மாதிரி எடுத்துக்கோங்க”.
டாக்டர் பரமனை சரியான சைக்கோ கேஸ் போலிருக்கு என்று அனுமானித்தார்.
‘சரிங்க . நீங்க என்னப் பண்ணறீங்க ?’.
‘நான் ஒரு சயன்டிஸ்ட் . அதாவது ரிஸர்ச் . அதாவது விஞ்ஞானி ‘.
டாக்டர் பரமனிடம் மேலும் அவரை நோண்டிப் பார்க்க நினைத்துக் கேட்டார்.
“அதாவது, அறிவியல் ஆய்வாளர். இல்லையா மிஸ்டர் ?. எதைப்பத்தி ஆராய்ச்சி பண்றீங்க?”.
“அதாவது, நீங்க சாப்பிடறது, நான் சாப்பிடறது. அதாவது பொதுவா மக்கள் சாப்பிடறது பத்தியெல்லாம் “.
டாக்டர் கொஞ்சம் குழம்பிப் போனார். நிஜமாகவே சரியான சைக்கோ தான் என்று உறுதியளித்துக்கொண்டார்.
“நீங்க கொஞ்சம் விளக்கமாச் சொன்னா நல்லது !”
“நான் டீடைலாவே சொல்றேன். அதாவது, நாம சாப்பிடற சாப்பாடு நல்ல ஹெல்தியா பாதுகாப்பான முறையில தயார் பண்ணப்பட்டிருக்கான்னு ஆராய்ச்சி பண்றேன். ஒரு சில முறையில உணவை தயார் செஞ்சா பல சத்துகள் வீணாப் போய்டும். அதனால் நாம சாப்பிட்டும் பயனளிக்காது. உயர் அழுத்த கார்பன்-டை-ஆக்சைட் வாயு பயன்படுத்தி கடலை, இஞ்சி, மிளகு இதிலிருந்துயெல்லாம் ஆயில் எடுக்கிறது பத்தி ஆராய்ச்சி பண்ணியிருக்கோம். இதெல்லாம் பாமர ஜனங்க நம்ப மாட்டாங்க ”.
‘பார்த்தா சைக்கோ மாதிரி இருக்காரு. ஆனா, ஆள் ரொம்ப விவரமா தெளிவா இருக்காரே. நான் சந்தேகப்பட மாதிரியான சைக்கோ இல்லையோ என்னமோ’ என்று டாக்டருக்கு சந்தேகம் வந்து விட்டது.
அதைப் புறந்தள்ளி டாக்டர் தொடர்ந்தார்.
‘அப்போ உங்களுக்கு என்னப் பிரச்சினை ?
‘எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்ல, டாக்டர். என் சிஸ்டருக்கு தான் பிரச்சினை. அது என்னமோ வாயிலே நுழைய முடியாத பேரு. ஸ்கிசோஃப்ரினியா (schizophrenia ) ன்னு சொல்லப்படற மனச்சிதைவு நோய். முன்னே மாத்திரை சாப்பிட்டா. ரொம்ப நாளா விட்டுட்டா. அதனால ஜாஸ்தி ஆயிடுச்சு. ‘தனக்கு மனநலம் நல்லா இருக்கு. சுத்தியிருக்கிறவங்களுக்குத் தான் மனநலம் சரியில்ல’ ன்னு வாதாடறா . இங்கே வரமாட்டேங்கிறா. எப்படி வழிக்கு கொண்டு வர்றது ?. என்னப் பண்றது டாக்டர் ?’.
‘அடப் பாவமே !. இதை முன்னாடியே சொல்லியிருக்கலாமே ?’
‘நீங்க எங்க சார் உட்டிங்க. நீங்களும் என் கதையை இல்ல கேட்க ஆரம்பிச்சிட்டிங்க ?”.
‘இன்னும் கொஞ்சம் பேச விட்டால் நம்மையே சைக்கோ ஆக்கி விடுவார் போலிருக்கே !. இவரை சீக்கிரம் இங்கிருந்து கிளப்ப வேண்டும்’ என்ற நினைப்புடன் டாக்டர் ஒரு காரியம் செய்தார்.
“மிஸ்டர், நீங்க மொதல்ல “ எ பியூட்டிபுல் மைன்ட்” ங்கிற ஹாலிவுட் படம் பார்த்திட்டு வாங்க. அதில ஒருத்தர் எப்படி இந்த மாதிரி வியாதியால் பாதிக்கப்பட்டாலும் பின்னாடி நோபல் பரிசு வாங்கற அளவுக்கு உயர்ந்தார்ன்னு படம் பிடிச்சுக் காட்டிருங்காங்க. நிஜமான கதை அது.”.
பரமன் ‘என்னடா இது !, நாம் எதோ கேட்டோம். அதுக்குப் பதிலில்லாமப் படத்தைப் பார்க்க அனுப்புறாரே ‘ என்று திகைப்புடன் அங்கிருந்து நடைக் கட்டினார் .
(குறிப்பு : உலக ஸ்கிசோஃப்ரினியா தினம் ஒவ்வொரு மே 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கணிதவியல் மேதை ஜான் நாஷ் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்தாலும் காதில் மாயக்குரல் கேட்பது மட்டும் குறையவில்லை. ஆனாலும், 1994ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்று சாதித்துக் காட்டினார். இவரது வாழ்க்கையையும், மனச்சிதைவு நோயையும் தத்ரூபமாய் பிரதிபலித்த ஹாலிவுட் படம் தான் 2001ல் வெளியான – A Beautiful Mind ).

சொல்ல வந்தது சரியாகச் சொல்லாமல் பாதியைக் நிற்பது போல இருக்கிறதே… தொடரோ….
எங்கள் பிளாக் ஸ்ரீராம்
LikeLike
மனச் சிதைவிலிருந்து வெளியில் வந்தவர்களும் மருந்துகளினால் மேனேஜ் செய்து செல்கிறவர்களும் இருக்கிறார்கள்தான். A beautiful Mind படம் மிக அழகான படம்.
கீதா
LikeLike
மனசிதைவு நோய் முன்னேற ஒரு தடையல்ல என்பதை எடுத்துக் காட்டுவதே நோக்கம்
LikeLike