
“செங்கொடி ஏந்தும்.. செங்கொடி ஏந்தும்..”
கழுத்து நரம்புகள் புடைக்க தொழிற்சங்கத் தலைவர் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அதை வழிமொழிந்தனர்.
“ஜிந்தாபாத்.. ஜிந்தாபாத்..”
எர்ணாகுளம் மஹாத்மா காந்தி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கப்பல் கட்டுமான நிறுவனத்தின் ரவிபுரம் வாயிலில் ஏராளமானோர் பதாகைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
“தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்கத் தவறிய நிர்வாகத்தைக் கண்டிக்கின்றோம்.. கண்டிக்கின்றோம்..”
முறுக்கிய மீசையுடன் யூனியன் செயலாளர் உரக்கச் சொல்ல, கருஞ்சாம்பல் நிறச் சீருடையும் மஞ்சள் ஹெல்மெட்டும் அணிந்த தோழர்கள் பின்னணிக் குரல் கொடுத்தனர்.
“காலமானவர்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் வேலை கொடு.. வேலை கொடு..”
கூட்டத்தில் நின்று கொண்டிருந்த பரசுராம் கையிலிருந்து ‘மாத்ருபூமி’ நாளிதழ் தவறி கீழே விழுந்தது. அதை எடுத்து மீண்டும் அந்தத் துயரச் செய்தியைப் படித்துப் பார்த்தான்.
‘2018 பிப்ரவரி 14 – கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நேற்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து பேர் பரிதாப சாவு. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஊழியர்களும், தீயணைப்பு அலுவலர்களும் இறந்து போயினர். காயமடைந்த எட்டுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தருவதாக அறிவிப்பு. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சரும், கேரள முதல்வரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்..”
வேறொரு பத்திரிகையில் போட்டிருந்த “அஞ்சு மலையாளிகள் மரிச்சு” என்ற தலைப்பு அவன் ஞாபகத்திற்கு வந்து எரிச்சலூட்டியது. ‘உயிர் எல்லோருக்கும் பொதுவானது தானே. மனித மரணத்தைக் கூட ஏன் மொழிவாரியாகப் பிரிக்க வேண்டும்’ என்று வேதனைப்பட்டான்.
முந்தைய தினம் செவ்வாய்க்கிழமை வாராந்தர விடுமுறையாதலால் பரசுராம் வேலைக்குச் செல்லவில்லை. அதிர்ஷ்டவசமாக, தான் உயிர் பிழைத்ததை எண்ணி குருவாயூரப்பனுக்கு நன்றி தெரிவித்தான். திடீரென்று கோஷங்கள் நிறுத்தப்பட்டு சங்கத்தின் பொருளாளர் பேசத் தொடங்கினார்.
“ப்ரிய சஹாக்களே.. ‘ஸாகர் பூஷன்’ என்ற கலத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.. இவ்விபத்தை முற்றிலுமாகத் தவிர்த்திருக்கலாம்.. 1948-ஆம் வருடத்திய தொழிற்சாலைகள் சட்டத்தின் சில விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.. பாதுகாப்பு அதிகாரி சம்பவ இடத்தை முன்னரே பார்வையிட்டு சான்றிதழ் கொடுத்திருக்க வேண்டும்.. அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.. மேலும்…”
அப்போது பரசுராமின் கைபேசி மென்மையாக அதிர்ந்தது. சிநேகிதி நீத்து அழைத்தாள். ஜோஸ் ஜங்ஷனில் ஒரு துணிக்கடையில் வேலை பார்க்கும் யுவதி. இன்னொரு பெண்ணுடன் அடுக்ககத்தில் வசிப்பவள்.
“பரசு.. ‘ஹே ஜூட்’ படத்துக்கு டிக்கெட் வாங்கியிருக்கேன்டா.. மதியம் பந்த்ரெண்டு மணி ஷோ.. பிவிஆர் மால்..”
“இன்னிக்கு எனக்கு சினிமா பார்க்க இஷ்டமில்ல நீத்து..”
“இது எந்தானு.. த்ரிஷாவோட தீவிர ரசிகனாச்சே நீ.. மலையாளத்துல அவ நடிச்ச முதல் சித்திரம் இது..”
“அதெல்லாம் சரிதான்.. கம்பெனியில அஞ்சு பேரு அநியாயமா செத்துட்டாங்க.. நியூஸ் கேள்விப்பட்டியா..” என்றான் பரசுராம். “எனக்கு மனசு சரியில்ல..”
“நீ நைட் ஷிஃப்ட்னு பறஞ்சதால நானும் லீவு போட்டு ‘மேட்னி’க்கு புக் பண்ணேன்.. ”
“ஸாரி நீத்து.. நிறைய பேர் ஆஸ்பத்திரியில இருக்காங்க.. அவங்களை போயி பார்க்கணும்..”
“இன்னிக்கு ‘வேலன்டைன்ஸ் டே’.. அதாவது ஞாபகமிருக்கா.. நீ ஒரு மெஸேஜ் கூட அனுப்பலை.. காதலியை விட காம்ரேட்ஸ் தான்டா முக்கியம் உனக்கு..” என்று கோபத்துடன் அழைப்பைத் துண்டித்தாள்.
********************************
கரிக்காமுரி பகுதியிலுள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் காத்திருந்தான் பரசுராம். விளம்பரப் பலகை ‘சிரோதாரா’ ‘பிழிச்சல்’ முதலான வைத்திய முறைகளை விவரித்தது. வரவேற்பறையில் கன்யகா, மலையாள மனோரமா, வனிதா போன்ற தினசரிகளும், சஞ்சிகைகளும் சிதறிக் கிடந்தன. சுவற்றில் திருவனந்தபுரம் தாமரைக் கோவிலின் படம் காணப்பட்டது.
எண்ணெய் பாத்திரத்துடன் வேகமாக வந்த செவிலியரிடம் “ஜோஸஃப் சாரைப் பார்க்கணும்.. ஷிப்யார்ட் வெடிவிபத்துல அடிபட்டு..” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் “அகத்து செல்லு..” என்று உள்ளே கைகாட்டினாள்.
அறையில் அவர் கருந்தாடி, வேஷ்டியுடன் கால்களை நீட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். தைல மணம் வீசியது. மேஜையில் ‘புதிய நியமம்’ பைபிள் புத்தகத்துடன் லேகியம், அரிஷ்டம் போன்ற மருந்து பாட்டில்களும் இருந்தன.
தானியங்களை துணியில் சிறிய மூட்டை மாதிரி செய்து, நெருப்பில் காட்டி வலிக்கும் முட்டியில் ஒற்றி எடுத்தவாறே “ச்சூடு இருக்கா..” என்று கேட்டுக் கொண்டிருந்தாள் நர்ஸ்.
சிகிச்சை முடிந்தவுடன், பரசுராம் நேந்திரம்பழங்களை ஜோஸஃபிடம் கொடுத்து, உடல்நலம் விசாரித்தான். “காயமடைஞ்ச நிறைய பேர் மெடிக்கல் டிரஸ்ட் ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க.. நீங்க மட்டும் இங்க..”
“கர்த்தர் கிருபையால எனக்கு பெரிசா கேடுபாடு எதுவுமில்ல.. கப்பல்ல தண்ணித் தொட்டியைச் சுத்தி வெல்டிங் செஞ்சுட்டு இருந்தோம்.. திடீர்னு ஏஸி கம்பார்ட்மென்ட்ல கேஸ் லீக்காயி.. புகை வரத் தொடங்கித்து..”
“அப்பதான் தீப்பிடிச்சுதா.. “
“வெடிச்சப்தம் மாதிரி கேட்டுது.. அந்த அதிர்ச்சி என்னை தூக்கி வீசிச்சு.. ரெண்டு கால்லயும் பயங்கர வேதனை.. தூரத்துல நெருப்பு எரிய ஆரம்பிச்சுது.. உடனே மயக்கமாயிட்டேன்..” என்றார் ஜோஸஃப். “கண் முழிக்கும் போது ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு போறாங்கன்னு தெரிஞ்சுது.. நான்தான் இங்க சேர்க்கச் சொன்னேன்.. செலவு கம்மியாகுமேன்னு…”
“நீங்க பணம் எதுவும் கொடுக்க வேண்டாம்.. எல்லாத்தையும் மேனேஜ்மென்ட் ஏத்துக்கும்னு சொல்லிட்டாங்க.. அந்த ஆஸ்பத்திரியில கருப்பனும், அப்துல்லாவும் ரொம்ப சீரியஸா….”
“ஐயோடா.. அந்தப் பசங்களை எனக்கு நல்லா தெரியும்.. ‘ஃபிட்டரா’ இருக்காங்க..”
அச்சமயம் பரசுராமின் மொபைல் ஒலிக்கவே அவன் பேசிவிட்டு “எம்.டி. ஹாஸ்பிடல்லருந்து கூப்பிடறாங்க.. அவங்க ரெண்டு பேருக்கும் ரத்தம் தேவைப்படுதாம்.. நான் கொடுக்கறேன்னு சொல்லியிருந்தேன்.. அவசரமா போகணும்..” என்று கிளம்பினான்.
இருசக்கர வாகனத்தில் சித்தூர் ரோடு வழியாக ஸஹோதரன் ஐயப்பன் சாலையிலுள்ள மருத்துவமனை நோக்கி விரைந்தான்.
**********************
ஜரிகை பார்டருடன் வெள்ளைச் சேலையும், சந்தனப் பொட்டுமாய் இருந்த நீத்து விபூதியை பரசுராமின் நெற்றியில் பூசினாள். ‘மெரைன் டிரைவ்’ பகுதி சிவன் கோவில் பிரகாரத்தில் வலம்வரத் தொடங்கினர்.
“போன வாரம் ஸினிமாவுக்கு வராம ஏமாத்தின மாதிரி இன்னிக்கும் நீ செஞ்சிருந்தா.. நான் ‘பிரேக்கப்’ பண்ணிடலாம்னு இருந்தேன்டா..”
“அதெப்படி நீத்து.. உன் பிறந்த நாளை மிஸ் பண்ணுவேனா..”
“நீ வாங்கிக் கொடுத்த புடவைதான் இது.. எப்படியிருக்கு..”
“தேவதை மாதிரி இருக்கே..” என்றான் காதலுடன்.
இருவரும் பேசிக்கொண்டே அம்பலத்திற்குள் இருந்த மணல்பரப்பை வந்தடைந்தனர். “உத்ஸவத்தின் போது இங்க கதகளி நடக்கும்.. நான் பார்த்திருக்கேன்..” என்றாள். “அது சரி.. உன் கம்பெனி ஆளுங்களுக்கு ரக்த தானம் எல்லாம் செஞ்சியே.. என்னடா ஆச்சு..”
“ரெண்டு பேரும் பிழைச்சுட்டாங்க.. ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சுது..”
“அப்பறம் ஏன்டா சோகமா இருக்கே..”
“அவங்களுக்கு உதவி பண்ணதால.. யூனியன்ல எனக்குக் கெட்ட பேரு.. ‘கரிங்காலி’னு கூப்பிடறாங்க..” என்றவாறே ஆலய தரிசனத்திற்காகக் கழற்றி வைத்திருந்த டி-ஷர்ட்டை அணிந்து கொண்டான். வெளியே வந்து தர்பார் ஹால் சாலையில் நடக்க ஆரம்பித்தனர்.
“எதுக்காக அப்படி சொல்றாங்க..”
“நான் ஆர்ப்பாட்டத்துல கலந்துண்டது.. ஆஸ்பத்திரிக்குப் போய் அடிபட்டவங்களைப் பார்த்தது.. ‘ப்ளட் டொனேஷன்’ செஞ்சது.. இறந்தவங்களோட அஞ்சலிக் கூட்டத்துக்கு போனது.. எதுவுமே எங்க லீடர்ஸ்க்குப் பிடிக்கலையாம்..”
“எல்லாம் உங்க சகாக்கள் தானேடா..”
“விபத்துல செத்துப்போன அஞ்சு பேரு.. காயமடைஞ்சவங்க.. எல்லாருமே வேற சங்கத்து ஆளுங்க.. எங்களோட செகரட்டரி தீவிரமா கேன்வாஸ் பண்ணியும் அவங்க எங்க யூனியன்ல சேரலை.. அந்தக் கடுப்பு இவங்களுக்கு..” என்றான். “அன்னிக்கு வாசல்ல கோஷம் போட்டதும் அவங்க மெம்பர்ஸ்தான்.. எங்க தலைவர் அனுதாபம் தெரிவிச்சு சர்க்குலர் மட்டும் விட்டாரு..”
“இதுல இவ்ளோ பாலிடிக்ஸ் இருக்கா..”
“போன வருஷம் எங்களுடைய கம்பெனி ஷேர்ஸை தனியாருக்கு விக்கணும்னு அரசாங்கம் முடிவு பண்ணப்போ.. அதை எதிர்த்து குரல் கொடுத்ததும் அந்தச் சங்கம்தான்.. எங்காளுங்க ஒப்புக்கு தர்ணாவுல மட்டும் கலந்துட்டாங்க..”
அருகிலிருந்த சுபாஷ் போஸ் பூங்காவுக்குள் நுழைந்த இருவரும் அரபிக்கடலைப் பார்த்தவாறே ஓர் இருக்கையில் உட்கார்ந்தனர். சீனத்து மீன்பிடி வலைகளும், இயந்திரப் படகுகளும் தொலைவில் தீவுகளும் தென்பட்டன.
“எதுக்கு இப்ப பார்க்குக்கு கூட்டிட்டு வந்தே..” என்றான் பரசுராம்.
நீத்து கைப்பையிலிருந்த டிபன் பாக்ஸைத் திறந்து “இதுக்காகதான்.. ஒனக்குப் பிடிச்ச புட்டும் கடலைக் கறியும் செஞ்சுட்டு வந்திருக்கேன்.. தின்னுடா..” என்றாள். “இன்னிக்கு எங்கயாவது ‘அவுட்டிங்’ போலாமா பரசு.. மூணார்.. இல்லேன்னா.. அதிரப்பள்ளி ஃபால்ஸ்.. “
“என்ன விளையாடறியா.. ரெண்டுமே ரொம்ப தூரம்.. ராத்திரிக்குள்ள திரும்ப முடியாது.. நாளைக்கு காலையில எனக்கு ஷிஃப்ட் வேற இருக்கு…” என்றான் சாப்பிட்டுக்கொண்டே. “ஏப்ரல் மாசம் ‘விஷு’ பண்டிகை சனிக்கிழமை அன்னிக்கி வருது. அந்த ‘வீக்எண்ட்’ல போலாம் நீத்து..”
“இல்லடா.. புதிய வருஷத்தன்னிக்கு ஞான் கோழிக்கோடு போகுன்னு.. அச்சனை பார்த்து ரொம்ப நாளாச்சு.. ரெண்டு வாரம் அவரோட இருந்துட்டு வரலாம்னு நெனைக்கிறேன்..”
“அப்படியே உங்கப்பாகிட்ட நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிடு.. எங்க அம்மா எப்பவோ சரின்னு சொல்லிட்டாங்க..”
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்.. அவரை எப்படி மயக்கணும்னு இந்த மோளுக்கு தெரியும்..” என்றாள் நீத்து. “சரி வா.. பக்கத்துல இருக்கற எல்லாத் தீவுக்கும் ஒரு ரவுண்ட் அடிப்போம்.. வெல்லிங்டன்.. போல்காட்டி..”
“முதல்ல.. மட்டான்சேரி ஐலேண்ட்டுக்கு போலாம்.. அங்க யூதர்களோட கோவிலைப் பார்க்கணும்னு ரொம்ப நாளா ஆசை.. எல்லா சாமியும் ஒண்ணுதானே..” என்றான் பரசுராம்.
இருவரும் பூங்காவை விட்டு வெளியேறி ஷண்முகம் ரோடில் படகுத் துறையை நோக்கிச் சென்றனர்.
***********************
கார்ல் மார்க்ஸ், லெனின், ஃபிடல் காஸ்ட்ரோ முதலான புரட்சியாளர்களின் உருவப்படங்களை ஏந்தியபடி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பானர்ஜி சாலையில் ‘மே தின பேரணி’ ஊர்ந்த வண்ணமிருந்தது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் ‘சுத்தியல்-அரிவாள்’ சின்னம் பதித்த ‘பேனர்’களைப் பிடித்தவாறே சென்று கொண்டிருந்தனர். பரசுராம் கையில் சிவப்புக் கொடியுடன் கப்பல் நிறுவனத் தோழர்களோடு நடந்து வந்தான்.
“உழைப்பாளர் ஒற்றுமை ஓங்குக.. தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக..” போன்ற கோஷங்கள் மலையாளத்தில் ஒலித்தன.
சரிதா திரையரங்கத்தைக் கடக்கும் போது ‘அங்கிள்’ படத்தின் சுவரொட்டியில் மம்முட்டி பிரதானமாகத் தெரிந்தார். ‘நீத்துவின் ஆதர்ச நாயகன்.. ‘மம்மூக்கா’ பற்றி அடிக்கடி உருகுவாளே…’ என்று நினைத்துக் கொண்டான். கோழிக்கோட்டில் இருந்து திரும்பியதும் அவளை இந்தச் சினிமாவுக்கு அழைத்துப் போகத் தீர்மானித்தான்.
முந்தின நாள் பரசுராம் தேர்தல் பணிகளுக்காக யூனியன் ஆபீசுக்குச் சென்றிருந்தபோது, யாருமே அவனுடன் சுமுகமாகப் பேசாதது வருத்தமளித்தது. ஓவர்டைம் பிரச்னையில் எப்படியாவது அவனைச் சிக்கவைத்து, நிர்வாகத்திடமிருந்து ‘மெமோ’ கிடைக்குமாறு செய்ய உப தலைவர் திட்டமிட்டிருப்பதை நண்பன் மூலம் கேள்விப்பட்டான். யூனியனின் நிலைப்பாட்டை மீறி மாற்றுச் சங்கத்தினருக்கு தான் உதவியதே அவர்களுடைய வன்மத்திற்குக் காரணம் என்பதை அறிந்து மனம் குமைந்தான். மிகவும் விரக்தியடைந்த நிலையில் தொழிற்சங்கத்திலிருந்து விலகி, இனிமேல் எந்தவொரு போராட்ட நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை என்று தீர்மானித்து, ஒரு வடிகாலாக நீத்துவிடம் பேசிவிட்டு முடிவெடுக்கக் காத்திருந்தான்..
ஊர்வலம் எர்ணாகுளம் டவுன் ரயில் நிலையத்தின் மீதான மேம்பாலத்தை நெருங்கும் போது செல்ஃபோனில் அழைத்தாள் நீத்து. பேரணியிலிருந்து பிரிந்து சாலையோரமாக ஒதுங்கினான் பரசுராம்.
“டேய்.. ஒரு ஹேப்பி நியூஸ்..” என்று ஆனந்தக் கூச்சலிட்டாள். “அச்சன் நம்ம விவாஹத்துக்கு சம்மதிச்சிட்டார்..”
“சூப்பர் நீத்து.. உடனே எங்க அம்மாகிட்ட சொல்லணும்..” என்று பரபரத்தான்.
“ஓணம் கழிச்சு.. முஹூர்த்த நாள் பார்த்து சோட்டாணிக்கரா கோவில்ல கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணலாம்னு சொல்லியிருக்கார் பரசு.. அங்க பகவதி அம்மனுக்கு ஏதோ பிரார்த்தனையாம்..” என்று குதூகலித்தாள். “நாம கொச்சியில ரிஸப்ஷன் வெச்சுடுவோம்..”
“அவர் எப்படி மேரேஜுக்கு ஒத்துகிட்டார்..”
“எங்க அப்பாவோட தாத்தா அந்தக் காலத்துல வைக்கம் போராட்டத்துல கலந்துண்டவராம்.. அவங்க குடும்பத்துல நிறைய பேர் பிரிட்டிஷ்காரங்களை எதிர்த்து ஜெயிலுக்கு போயிருக்காங்க.. அச்சன் அந்தக் கதையெல்லாம் உணர்ச்சிகரமா பேசிட்டிருந்தாரு..” என்றாள் நீத்து. “அப்போ.. உன்னோட யூனியன் நடவடிக்கைகள் பத்தி சொன்னேன்.. அதே போராட்டக் குணம்.. தீவிரவாதம் உன்கிட்டயும் இருக்குன்னு அவருக்குப் புரிய வெச்சேன்..”
“அப்படியா…”
“ஜாதி மதம் பார்க்காம.. வேற சங்கத்து ஆளுங்களுக்கும்.. வலியப் போய் நீ செஞ்ச உதவிகளை எல்லாம் அவர்கிட்ட பெருமையா பேசினேன்.. அப்பா ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டார்டா..” என்றாள். “ஃபேக்டரியில எட்டு மணி நேரம் கூட வேலை பார்க்கறவங்க மேலே இவ்வளவு அன்பும் அக்கறையும் காட்டக் கூடிய ஒரு மனுஷன்.. கட்டின பொண்டாட்டியை இன்னும் அதிகமான பாசத்தோட கண்கலங்காம வெச்சு காப்பாத்துவான்பா.. அப்படின்னு சொல்லி அவர் மனசைக் கரைச்சுட்டேன்.. வைப்பின் தீவுல எடுத்த உன் ஃபோட்டோவையும் காண்பிச்சேன்..”
நீத்து பேசிக்கொண்டே போக, தன் கையிலிருந்து நழுவிய செங்கொடியை மீண்டும் இறுகப் பற்றிக்கொண்டான் பரசுராம்.
*************************

அருமையான படைப்பு.
LikeLike
மிக்க நன்றி.
LikeLike
அருமையான கதை ஆசிரியருக்குப் பாராட்டுகள்
இன்னும் நிறைய எழுத வேண்டும்
ஒற்றுமை ஓங்கட்டும்
பிரிவினை நீங்கட்டும்
விவாஹம் வழி வகுக்கட்டும்
சிநேகம் இதமாய் வளரட்டும்
வேறுபாடுகள் ஒழியட்டும்
சமுதாயம் தலை நிமிரட்டும்
வழித்தோன்றல்கள் வாழ்க
இரு சமுதாய மரபுகளையும் அறியட்டும்
உள்ளம் விசாலமாகட்டும்
உணர்ச்சிகள் பொதுவாகட்டும்
LikeLike
மிக்க நன்றி
LikeLike
சில சமயங்களில் நம் முடிவை நாம் தீர்மானிப்பதில்லை. நம் விருப்பங்கள் மாற்றப்படுகின்றன. ஆனால் அதையும் விரும்பியே மாறுவோம். ஆமாம், அதென்ன, எல்லோருக்கும் புட்டு கடலைக்கறிதான் பிடிக்கிறது!
எங்கள் பிளாக் ஸ்ரீராம்
LikeLike
கதையைப் படித்து, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. எர்ணாகுளத்தில் நடக்கும் கதை என்பதால் கேரளாவில் பிரபலமான அந்த உணவு வகைகளைப் பற்றி எழுதினேன்..
LikeLike
அருமை.
LikeLike
மிக்க நன்றி
LikeLike
கதை நன்றாக இருந்தது. நமது அக்காலத்து தொழிற்சங்க நாட்கள் நினைவுக்கு வந்தது. எல்லா தொழிற் சங்கங்களின் நோக்கம் ஒன்றென்றாலும் மனிதர்களின் பதவி, அதிகாரம் மற்றும் பணம் சக தொழிலாளர்களையும் விரோதிக்க செய்கிறது. தொழிற் சங்க யதார்த்தங்களை ஆழமாக இல்லாவிட்டாலும் அழகாக காட்டியுள்ளீர்கள்.
LikeLike
மிக்க நன்றி பாலாஜி
LikeLike